157. அனிச்சம் (காற்று வெளி – புரட்டாசி 2024)

 157. அனிச்சம்       (சிறுகதை)

       ஜூனியர் தேஜ்  

                 
(காற்று வெளி – புரட்டாசி 2024)

னக்கு இப்படியொரு நிலை வருமெனக் கனவிலும் நினைத்தவரில்லை குருசாமி. 

இரவு, சயனத்துக்குப் போகும்போது கூட திடமாகத்தானிருந்தார்; வழக்கம்போலப் படுக்கையில் வஜ்ராசனத்தில் அமர்ந்து, கண்மூடி, கவனம் குவித்து மனம் ஒருமுகப்படுத்திக்கொண்டுதான் படுத்தார்.

விடிகாலை துயிலெழுந்தபோதே, தலைச்சுற்றல் தடுமாற்றம் ஏற்படுத்த, சுதாரிப்பதற்குள் தாறுமாறாய் சுவற்றில் சாய்ந்துவிட்டார்; 

சற்றே சுதாரித்து, சுவற்றைத் தாங்கி எழுந்து நிற்க முயன்றபோது, மீண்டும் தலைக் கிறுகிறுக்க, கைகள் துவள, வேரற்ற மரம்போல, எக்குத்தப்பாய்ச் சாய்ந்து தரையில் விழுந்து விட்டார். சாயும்போது, இரும்புக் கட்டிலின் விளிம்பில் கொசு வலையைக் கோர்க்கப் பொருத்தப் பட்ட தகரக்குழல் பின்மண்டையைத் தாக்கிவிட்டது.

ரத்தக் கசிவு கண்டதும், பயந்து அடித்துக் கொண்டு, ஏற்பாடு செய்த 108ல் கொண்டுபோன குருசாமியை, அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தார்கள். 

சில பல ‘டெஸ்ட்டு’களின் ரிசல்ட் பார்த்து “ஸ்ட்ரோக்” என, உறுதிப்படுத்தினார் மருத்துவர். 

ஒருவாரம் மருத்துவமனைச் கண்காணிப்பில் வைத்திருந்து, நேற்றிரவுதான் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

***

ஊசி-மருந்தில், செடேஷன் கலந்திருந்ததால் அயர்ந்துத் தூங்கிவிட்டார் குருசாமி. கண்விழித்தபோதுக் காலை மணி எட்டு; எழ முயன்றார், முடியவில்லை; உடம்பு அழுத்தியது. தன் உடம்பே தனக்கு பாரமாக இருந்தது.

மகன் குமாரும், மருமகள் செல்வியும் அலுவலகம் புறப்படும் நேரம்; 

அலுவலகச் சீருடை அணிந்திருந்த குமார், அறையைத் திறந்துப் பார்த்தான்; 

double quotion starts “அப்பா கண் விழிச்சிட்டாங்க...!”-  கதவை திறந்து பிடித்த நிலையிலேயே நின்று, என்று மனைவிக்குத் தகவல் தந்தான்.

எதிர்வினையேதுமாற்றாமல் அமைதி காத்தாள் செல்வி. 

***

 ‘தான் மருத்துவமனைச் சிகிச்சையிலிருந்த ஒரு வாரக் காலத்தில், வீட்டு நடைமுறைகளில் ஏற்பட்டத் தலைகீழ் மாற்றங்களையும், அலுவலக நெருக்கடிகளையும் சமாளித்துச் சமாளித்துத் தளர்வுற்றுத் தவிக்கிறாள் மருமகள் செல்வி…!’ என்று நினைத்துக் கொண்டார் குருசாமி. 

இருந்தாலும், “மாமா…! கண்ணு முழிச்சிட்டியளா…?”- என்று ஆர்வமாய் ஓடிவந்து, அன்பாய் விசாரிக்கும் மனப்பான்மை உள்ள மருமகள், அமைதியாய் ஒளிந்துகொள்வது வருத்தமளித்தது அவருக்கு.

‘எதிர்காலத்தை, எப்படிச் சமாளிக்கப் போகிறோம்…?’ - என்கிற மன உளைச்சலில் தவிக்கும் மருமகளின் நிலையையும் உணரமுடிந்தது குருசாமியால். 


துள்ளலோடு எழுந்து, ஆர்வத்தோடு அருகே வந்து, என்ன? ஏது? – என விசாரித்துப் பணிவிடை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை குருசாமி. 

 ‘தேறி வந்துட்டியளா மாமா.. ரொம்பச் சந்தோஷம்…!” என்று சொல்லி முகத்தில்  ஒரு சின்னச் சந்தோஷ ரேகையைப் படறவிட முடியாத அளவுக்கு சோர்ந்துவிட்டாளே செல்வி…?’ மனசு மருகிற்று குருசாமிக்கு.

“நான் ஆபீஸ் புறப்படறேன்ம்ப்பா…!”- அப்பாவின் முகத்தைக்கூடப் பார்க்காமல், கைக்கடிகாரத்தைப் பார்த்தபடியே உத்தரவு வாங்கிக்கொண்டு, அரைகுறையாய்த் திறந்தபடிப் பிடித்திருந்தக் கதவை விட, அது மெதுவாகச் சார்த்திக் கொண்டது.

 “நீ லீவு போட்டுக்கச் செல்வி...வேற வழியில்ல !”- என்று குமார் சுரத்தின்றிச் சொன்னதும் மூடிய கதவைக் கடந்து உள்ளே புகுந்து (வந்து)  குருசாமியின் காதில் புகுந்தது. 

***

ரெவின்யூத் துறையில், 36 வருடங்கள் பணிபுரிந்தவர் குருசாமி. 

பல நிலைகளில் நேர்மையாகப் பணியாற்றிப், படிப்படியாகப் பதவி உயர்வுப் பெற்று, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகப் பணி ஓய்வு பெற்றவர். 

 ‘எந்த நாளும் காப்போம்...!’ - என்ற வைராக்கத்தோடு இனி ஒரு விதி செய்யும் கர்மயோகி அவர். 

ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பு ‘மாசிவ் அட்டாக்’கில் மனைவியை இழந்தபின். யதார்த்தம் உணர்ந்து, மகனையும் மருமகளையும் சார்ந்து வாழத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். 

மாவட்ட நிர்வாகத்தையேத் திறம்பட நிர்வாகித்த குருசாமிக்குச் சில பிரத்யேகமான உயர்-குணங்கள் ரத்தத்திலேயே ஊறியிருந்தன. 

சரியானத் திட்டமிடுதலுக்குத் தேவையான உளவுறுதியும், நுண்ணறிவும், கருத்துருத் திறனும், பட்டனுபவமும்  உள்ள குருசாமி,. தன் சுயத்துக்குக் குந்தகம் வராத வகையில் திட்டங்களை வகுத்தார்.

***

 ‘முதுமை என்பது காலம் அனைவருக்கும் கொடுக்கும் தீர்ப்பு, அதைப் பரிசாய் எண்ணி மகிழ்ந்து ஏற்றலும், தண்டணையாய் எண்ணி வருந்தி நிராகரித்தலும் தனி மனிதனின் மனோபாவத்தைப் பொறுத்தது..’ என்பது அவர் கருத்து.

பணி ஓய்வுக்குப் பின் வந்தப் பணப்பலன்களை மகன் குமார் பெயரிலும், மருமகள் செல்வி பெயரிலும், வங்கியில் நிரந்தர வைப்பு நிதி ஏற்படுத்தினார்.

மரியாதையென்பது , பணத்தாலோ, பதவியாலோ, பொருட்களாலோ வருவதல்ல, அது நடத்தையால் வருவது. 

‘பாஸிடிவ் சைக்காலஜி’ சொல்வதைப் போல மற்றவருக்குப் பயனுள்ள வகையில், (Meaningful life) ‘பொருள் பொதிந்த வாழ்க்கை’ வாழவேண்டும் என்ற வைராக்யத்துடன் வாழ்ந்தார் குருசாமி.

மகன் மற்றும் மருமகளின் ‘பிரைவசி’க்கு எந்த வகையிலும் இடையூராகிவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்.

***

 “ரெண்டு பேரும் ஒரு பத்து நிமிஷம் எனக்காக நேரம் ஒதுக்க முடியுமா?” பணி ஓய்வு பெற்று ஒரு வாரம் கடந்து, ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று, மகன், மருமகளிடமும் ஒரு சேரக் கேட்டுக் கொண்டார்.

“வான்னா வரோம்? ஏன் மாமா ஃபார்மலாப் பேசறீங்க?” - என்றாள் செல்வி.

“சிலபல விஷயங்களைச் சொல்றேன் கவனமாக் கேட்டுக்கோங்க...?” – என்றுத் தொடங்கினார் குருசாமி.

“நீங்க ‘ஃப்ரீயா’ இருங்க மாமா? எதையாவது மனசுல போட்டுக் குழப்பிக்காதீங்க மாமா?”- வார்த்தைக்கு வார்த்தை ‘மாமா’ என விளித்துக் கரிசனமாகத்தான் பேசினாள் செல்வி.

‘இந்த அன்பு நிரந்தரமாக இருக்கவேண்டும் என்றால் வெளிப்படையாகப் பேசித்தான் ஆகவேண்டும்...!’ முடிவெடுத்தார் குருசாமி.

“ஃப்ரீயாத்தான் இருக்கேன்ம்மா...! என்னோட எதிர்கால நடைமுறைகளை உங்களுக்குத் தெளிவாச்(space)சொல்லப்போறேன்மா.”

“ஓ கே மாமா...! உங்கத் திருப்திக்காகக் கேட்டுக்கறோம். சொல்லுங்க…!”

 சொன்னார்…! சொன்னதோடு நிறுத்தவில்லை. செயல் வீரராகத்தான் இத்தனைக் காலமும் நடந்து கொண்டார் .

***

காலை 5 மணிக்குத் துயிலெழுவார் குருசாமி. காலைக் கடன்களை முடித்துக் கொண்டு, சமையலரையில் நுழைந்து, ‘ஃபில்டரில்’ காப்பித்தூள் போட்டு, கொதிநீர் விடுவார். 

ஹால் மேசையில் செல்வி வைத்திருக்கும் காய்கறி ‘லிஸ்ட்’டையும் ‘பர்ஸை’யும் எடுத்துக் கொண்டு, மார்கெட்டிலிருந்து பால், காய்கறிகள் வாங்கிவருவார். வந்தபிறகு மீண்டும் காபி ஃபில்டரில் இன்னொரு முறை கொதிநீர் ஊற்றுவார்.

பால் காய்ச்சிக், காபித் தயாரித்து அருந்துவார்.

ஆறரைக்கு மகனும் மருமகளும் படுக்கையறையிருந்து வெளியே வரும் முன் முதல்நாளே தீர்மானித்து வைத்த மெனுப்படிக் ‘காய் கறிகளை அரிந்தும், கீரை ஆய்ந்தும், புளிக் கரைத்தும், தேங்காய்த் துருவியும் வைத்து மூடிவிட்டு, மாடியேறிவிடுவார். 

மொட்டை மாடியில், தொட்டிகளில் வளர்ந்திருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுதல், களையெடுத்தல், பழுத்து உதிர்ந்த இலைகளைக் கூட்டிச் சுத்தம் செய்தல் என்று ‘பிஸி’யாக இருப்பார்.

***

ஷெட்யூல்படி, “நாங்க ஆபீஸ் புறப்படறோம் மாமா...!”  என்ற மருமகளின் குரல் எட்டு மணிக்கு  வரும். மகனும் மருமகளும் அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்றபின், வாசல் ‘கிரில்’ கதவைச் சார்த்தி உள்ளேப் பூட்டிக்கொண்டு வீட்டுக்குள் வருவார்.

சமையலறை ‘ஸிங்க்’கில் கிடக்கும் பாத்திரங்களைத் தேய்த்துத் கவிழ்ப்பார்.

துவைத்தும் பிழிந்தும் தன் கடமையைச் செய்துவிட்டு நின்றுபோன ‘வாஷிங்மிஷினின் வயிற்றிலிருந்துத் துணிகளை எடுத்து உதறி பிளாஸ்டிக் வாளியில் போட்டு, மொட்டைமாடிக் கொடிக் கம்பியில் உதறி உதறிக் காயவைத்துக் ‘க்ளிப்’ போடுவார்.

மறுபடியும் சமையல் கட்டில் நுழைந்துத் தேய்த்து வைத்தப் பாத்திரங்களை, அதற்கென ஒதுக்கப்பட்டத் தேங்காய்ப்பூத் துவாலையால் துடைத்து, அதனதன் இடத்தில் நேர்த்தியாய்க் கவிழ்ப்பார்.

மாலை நான்கு மணிக்கெல்லாம் காய்ந்த துணிகளை நேர்த்தியாக மடித்து பீரோவுக்கு முன் வைத்துவிடுவார்.

நித்தியப்படி வேலைகள் தவிர, ‘ஹவுஸ் கீப்பிங் மெயிண்டனனன்ஸ் வேலைகளையும் சீராகச் செய்வார் அவர். 

’வீட்டில் எந்த மூலை முடுக்கிலும் ஒரு சிறு ஒட்டடை பார்க்க முடியாது. ஜன்னல்கள், மின்விசிறிகள், பல்புகள் என ஒரு நாளைக்கு ஒன்றாகத் துடைத்துப் பளிச் என வைத்திருப்பார்.

பார்த்துப் பார்த்து வீட்டை தூய்மையாக வைத்திருப்பதில் குருசாமிக்கு நிகர் குருசாமிதான்.

***

துணியைக் காயவைத்தலுக்கும், எடுத்து மடித்து வைத்தலுக்கும் நடுவே குளித்தல்; வீட்டை பூட்டிக்கொண்டு அருகாமை நூலகத்தில் செய்தித்தாள் வாசித்தல்,  அனுமன்கோவிலுக்கும், ராகவேந்திரர் மடத்திற்கும் சென்று வழிபட்டு வருதல்; சாப்பிடுதல் ; சாப்பிட்டபின் விழும் பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவித் துடைத்து அதனதன் இடத்தில் கவிழ்த்து வைத்தல்; இப்படி எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்து முடிப்பார்.

மாலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பினால், ஏழு மணி வரை ஏரிக்கரையைச் சுற்றி நடைப் பயிற்சி. ஏழரைக்கு வந்துக் குளித்துவிட்டு, அரை மணி நேரம் தியானம். 

மருமகள் ‘ஹாட்பேக்’ல் வைத்துள்ள ‘டிஃபனை’ உண்டபின், சற்று நேரம் மொட்டை மாடியில் காற்றோட்டமாக உலாத்துவார். ஒன்பது மணிக்கெல்லாம் படுத்துவிடுவார்.

***

இந்த ‘சிஸ்டமெல்லாம்’ சில வருடங்கள், குருசாமிக்குப் பேரன் பிறக்கும் வரை நீடித்தன. பிறகு, பேரனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதிலும், திரும்ப அழைத்துவருவதிலும், அவனோடு உட்கார்ந்து பாடங்களை சொல்லித்தரும் பணியும் சேர்ந்துகொண்டன குருசாமிக்கு.

பேரன் நன்கு படித்தான். தாத்தாவின் பராமரிப்பால் நற்பண்புகளும், நல்லொழுக்கங்களும் பேரனுக்கு வசமாகின. பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதலிடம் வந்தான். ‘எம் ஈ’ படித்தான். கேம்பஸில் தேர்வாகி, தற்போது ‘யு எஸ்’ ல் செட்டிலாகிவிட்டான்.

***

பேரன் ‘யு எஸ்’ சென்றபின், பழைய நடைமுறைத் தொடங்கித் தொடர்ந்தது. 

திடீரென ‘ஸ்ட்ரோக்’ வந்து குருசாமியின் நடைமுறை எல்லாவற்றையும் தாறுமாறாய்ப் புரட்டிப் போட்டுவிட்டது.

 ‘பாவம்… செல்வி…! அலுவலகத்துக்கு விடுப்புச் சொல்லிவிட்டு, குடும்பத்தைச் சமாளிக்கிறாள். இந்தக் கஷ்டமெல்லாம் என்னால்தானே?’ கழிவிரக்ததில் கலங்கினார்;

பாத்திரம் கழுவுறது…, துணி துவைச்சு, உலர்த்தி, மீண்டும் எடுத்து வந்து மடிச்சி வைக்கறது… இஸ்திரிப் போடக் கொடுத்து வாங்கறது…!’ - இப்படி நான் செய்துக்கிட்டிருந்த எல்லா வேலைகளையும் இப்போ செல்வி மட்டுமே சமாளிக்கறதுன்னா கஷ்டம்தானே..?;

இத்தனை வேலைகளையும் மாங்கு மாங்குனு முடிச்சிட்டு, அரக்கப் பரக்க ஆபீஸுக்கும் போய் உழைச்சிட்டும் வரணுமே…!’; 

வீட்டிலே சர்வெண்ட் மெய்டும் இல்லாம, ஒண்டியா கிடந்து திண்டாடறாளே…!, செல்விக்கும் வயசு கொஞ்சமாவா ஆகுது...?” - மருமகள் செல்விமேல் பச்சாத்தாபப்பட்டார் குருசாமி.

***

மருந்து மாத்திரைகளின் வீரியத்தாலும், சுயப் பச்சாத்தாபத்தாலும், பசியாலும் குருசாமியின், வயிற்றில் அமிலம் சுரந்து எரிச்சலெடுத்தது. 

எதிர்ச் சுவற்றில் வாடிக் காய்ந்துத் தொங்கும் நிர்மால்ய நீள் வளையத்தின் நடுவே அவர் மனையின் புகைப்படம் மங்கலாகத் தெரிந்தது. பஞ்சடைத்துப் போனக் குருசாமியின் கண்களிலிருந்து உருண்டு வழிந்த கண்ணீர் தலையணையை நனைத்தது.

***


அலுவலகத்துக்கு ஃபோன் செய்து, தற்செயல் விடுப்புச் சொன்னாள் செல்வி. மாமனாருக்குப் புழுங்கலரிச் கஞ்சிக் காய்ச்சினாள். நன்கு வெந்ததற்கான வாசனை ஆவியோடு சேர்ந்துspaceவந்தவுடன், கரண்டியால், ஒரு கிளறுக் கிளறிவிட்டு அடுப்பை அமர்த்தி,னாள் டப்’ என மூடிவைத்துவிட்டுச் சில நிமிடங்கள் கடத்தினாள். 

இப்போது, நன்கு பக்குவமடைந்தக் கஞ்சியை இரண்டுத் தட்டுக்களில் கொட்டி, மின்விசியின் அடியில் வைத்து ஆற வைத்தாள். ஆறுவதற்குள் ஒரு டம்ளர் ஹார்லிக்ஸ் கலந்து குடித்தாள். கொஞ்சம் தெம்பு வந்தது செல்விக்கு. 

ஆள்காட்டி விரலை முக்கி ‘கஞ்சி ஆறிவிட்டதா...?’ என்றுப் பார்த்தாள். 

***

‘இன்னும் எத்தனை நாள் இப்படிச் செய்யணுமோ? தாவு அறப்போவுது...!’ – முதல் முதலாகச் செல்வியின் உள் மனசுக் கூவியது.

ரசம், மோர் கலந்த கஞ்சியை இரண்டு லோட்டாக்களில் தனித்தனியாக எடுத்துக் கொண்டு குருசாமியின் அறையைத் திறந்தாள். 

பஞ்சடைத்த கண்கள் அவளைப் பார்த்தன. 

“கஞ்சி எடுத்துக்கங்க...!” – குரலில் மருமகள் என்ற உரிமையோ பாசமோ இல்லை. 

குருசாமியின் கண்கள் மூடிக்கொண்டன.

“கஞ்சி குடிச்சி, மாத்திரை முழுங்கிட்டுக் கண்ணை மூடுங்க...!” - செவிலியின் அந்நியத்தன்மையோடு அதட்டலாய்ச் சொன்னாள் செல்வி. 

அதைத் தொடர்ந்து, நெற்றியில் கை வைத்துத் திருப்ப, தொய்ந்து ஒடிந்து திரும்பியது தலை. 

***

“எப்பவும் ‘சுறு-சுறு’னு செயலா இருந்த நீங்க, இப்படிப் நிமிஷமாப் போயிட்டீங்களே மாமா…! எப்படி எல்லாத்தையும் சமாளிச்சி உங்களைக் கரையேத்தப்போறேனோ’ங்கற என் கவலைய முகத்துலப் பாத்துட்டுத்தான் நீங்க போய்ச் சேந்துட்டீங்களோ மாமா…! கடைசீயா என் கையால ஒரு வாய் கஞ்சிக் கூட முளுங்காம போயிட்டீங்களே….!” - கதறினாள் செல்வி. 

கணவனுக்குச் சேதி சொல்லச் ‘செல்’லை எடுத்தாள். “க்ளிங்… க்ளிங்…” வாட்ஸப் மெசேஜ் வந்தது. 

அய்யன் வாட்ஸ்ஸப் குழுமத்தில் வழக்கம்போல, அன்றைய திருக்குறளும், அதற்கான சிறு பொழிப்புரையும், வந்திருந்தது.,

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து. 

***


Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

162. ஆயக்கால் (தினமணி கதிர் (24.11.24)

153. மனிதம் (காற்றுவெளி - ஆடி 2024)