158. களவூக்கம் (கொலுசு - செப்டம்பர் - 2024)

 

158. களவூக்கம் (சிறுகதை)

                                ஜூனியர் தேஜ்

(கொலுசு மாத இதழ் – செப்டம்பர் 2024)



றிவானத்தம் ஒரு தொழிலதிபர். கோடீஸ்வரர்.

மனைவி, மகள், மாமனார் மாமியார் நால்வருடன் இனோவாவில், தல யாத்திரை சென்று கொண்டிருந்தார்.

கார் ஓட்டிக் கொண்டிருந்த அறிவானந்தத்திடம் “அப்பா.. லாலி-பப் வாங்கித் தாப்பா! என்று நச்சரித்துக் கொண்டே வந்தாள், அருகாமை இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தை சுமித்ரா.

தெற்கு வீதித் திருப்பத்தில் திறந்திருந்த ஒரு பெட்டிக் கடையின் முன், கார் நிறுத்தினார் அறிவானத்தம்.

***

னைவரும் காரில் அமர்ந்திருக்க அறிவானந்தம் மட்டும் ஓட்டுனர் இருக்கையிலிருந்து இறங்கிக் கடை முகப்புக்கு வந்தார்.

கல்லாவில் யாருமில்லை. கடையின் பின் பகுதியில் கல்லுரலில் “டடக்.. டடக்.. டடக்.. என்று சத்தம் எழும்ப, மாவாட்டிக் கொண்டிருந்தாள் ஒரு நங்கை. இவள்தான் கடை ஓனராக இருக்க வேண்டும் என்று தோன்றியது அறிவானந்தத்துக்கு.

சற்றே மாவாட்டலை நிறுத்தி, “என்னா வேணும் சாரே..? என்று குரல் கொடுத்தாள் அந்தப் பெண்.

லாலி-பப்களும், சாக்லேட்களும் கலந்து கொட்டப்பட்டிருந்த பெரிய பாட்டிலைச் சுட்டிக் காட்டியபடியே “‘லாலி பப் வேணும் என்றார் அறிவானந்தம்.

“எடுத்துக்கங்க சார்..! என்றவள், ஆட்டுக் கல்லை வழித்து விட்டு மீண்டும் மாவாட்டலைத் தொடர்ந்தாள் .

***

ந்த உயரமான பாட்டிலைத் திறந்தார் அறிவானந்தம்.

கையை கை நன்கு உள்ளே செலுத்தி, தனக்குத் தேவையற்ற சாக்லேட்டுகள், டாஃப்பிகள் போன்றவற்றை ஒதுக்கி விட்டபடியே, வழக்கமாகக் குழந்தைக்கு வாங்கும் ‘லாலி-பப்பை ஒன்றுக்கு மூன்றாக கையில் எடுத்துக் கொண்டார். மீண்டும் பாட்டிலை மூடினார்.

“காசை அந்த டப்பாவுல போட்ருங்க சார்.. – மாவு மசியும் ஓசையின் பின்னணியில், தொடர்ந்து வந்தது அந்தப் பெண்ணின் குரல்.

***

கோடீஸ்வரன் அறிவானந்தத்துக்குள் எழும்பியது களவூக்கம் என்னும் அந்த அற்பத்தனம்.

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.

ஒரே ஒரு ‘லாலி-பப்க்கான காசை மட்டும் முதலாளியம்மா குறிப்பிட்ட டப்பாவில் போட்டார். போடுவதற்கு முன் இருந்த உறுத்தல் போட்டபின் அவர் மனதை விட்டுப் போய்விட்டது. இருந்தாலும் சற்றே குற்ற உணர்வு உந்த, அறிவானந்தன் அவசரமாய்க் காரை நெருங்கினார்.

கார் ஏறும் முன் ஒரு லாலிபாப்பின் மேல் சுற்றப்பட்ட நெகிழிக் காகிதத்தை நீங்கி, சன்னல் வழியாகக் குழந்தையிடம் தந்தார்.

நீக்கிய அந்தக் காகிதத்தோடு சேர்ந்து மற்ற இரண்டு லாலிபாப்களையும் அருகாமையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்து கார் ஏறினார்.

***

றிவானந்தம் இப்படிச் செய்வது முதன் முறையல்ல.

மால்கள், பெரிய கடைகள், கல்யாண மண்டபங்கள், போன்ற பல இடங்களிலிருந்தும் இப்படிக் களவாடப்பட்ட , பஞ்சிங் மிஷின், ஸ்பேனர், கார்ட்டர் பின், அட்ஹிசிவ் டேப், இன்ஹெலர், காலண்டர் கேக், டைரிகள்...  இப்படிப் பல பொருட்கள் அறிவானந்தத்தின் அறையில் எந்த உபயோகமும் இல்லாம் கிடக்கின்றன.

இந்தக் களவூக்கத்தை நிறுத்தவே முடியவில்லை அவருக்கு.

மனநல ஆலோசகரை (சைக்காலஜிஸ்ட்) அணுகினார் அறிவானந்தம்.

சமுதாயத்தில் பலர் மதிக்கக்கூடிய இடத்தில் இருக்கும் அறிவானந்தம் என்ற தொழிலதிபரின் குறை என்ன என்பதை அறித்து, அது பற்றி அவருக்கு எடுத்துரைத்தார் ஆலோசகர்.

***

“Kleptomania அதாவது களவூக்கம்னு இதைச் சொல்லுவாங்க. க்ளெப்டோமேனியாங்கறது, ஒரு உந்துவிசைக் கட்டுப்பாட்டுக் கோளாறு;

இது வெறித்தனமான-கட்டாய நிறமாலையின் கீழ் வரும் ஒரு தடுமாற்றம்;

நிதி ஆதாயத்திற்காகவோ, பழி வாங்கவோ, துணிச்சலுக்காகவோ அல்லது கிளர்ச்சிக்காகவோ திருடும் நோக்கம் இதில் கிடையாது;

மாறாக, அற்பமான அல்லது மதிப்பு இல்லாத பொருட்களை திருடணும்கற இச்சை ஏற்படும்போது திருடுவாங்க.

திருடற பொருட்களை இவங்க முழுக்க முழுக்க பயன்படுத்தவும் மாட்டாங்க. எப்பவாவது ஒண்ணு ரெண்டு பொருளை பயன்படுத்துவதும் உண்டு.

வழக்கமா இப்படித் திருடியதைப் பதுக்கி வைப்பாங்க, குப்பையில் தூக்கிப் போடுவாங்க, “இந்தா வெச்சிக்கோ.. என்று வேற யாருக்காவது கொடுப்பாங்க. தன் திருட்டுத்தனத்தை ரகசியமா உரிமையாளர் கிட்டயே ஒத்துக்கிட்டு சரண்டர் ஆகும் கேரக்டரும் ஒரு ரெண்டு சதவீதம் உண்டு.;

இது ஒரு சக்தி வாய்ந்த தூண்டுதல் காரணமா ஏற்படறத் திருடும் பழக்கம். என்றெல்லாம் விளக்கமாகச் சொன்னார் ஆலோசகர்.

அந்தப் பழக்கத்திலிருந்து வெளிவரணும்னா என்ன செய்யணும்..?

“கடைகளுக்குப் பர்ச்சேஸ் செய்யப் போகும்போது, தனியாப் போகலாதீங்க. உடன் யாரையாவது அழைச்சிக்கிட்டுப் போங்க.. என்றார்

“திருடும் மனநிலை வரும்போது, கட்டுப்பாட்டை வளர்க்கும் மூச்சுப் பயிற்சிகள் கற்றுக் கொடுத்தார். இன்னும் சில வழிகாட்டல்களையும் சொல்லித்தந்தார் மன நல ஆலோசகர்.

அப்படியெல்லாம் நடந்து கொண்டபோது கிளிப்த்தோமேனியா கட்டுப்பாட்டில் வந்தாலும், தொடர்ந்து அவைகளைக் கடைப்பிடிக்க முடியவில்லை. அதனால் மீண்டும் அந்த இச்சை அவரைத் தொற்றிக் கொண்டது.

***

தெற்கு வீதியிலிருந்து புறப்பட்டு மேல வீதி சுற்றி, வடக்கு வீதியில் கார் நிறுத்தினார்.

முருகன் சந்நதி, சிவகாமி சந்நதி தரிசனம் முடித்து,  தில்லை அம்பலத்திலாடும் நடராஜா தரிசனம் ஆயிற்று.

திரும்புகாலில் தில்லைக் காளி கோவில் சென்றார்கள்.

வரிசையில் நின்று தரிசனம் காண அரைமணி நேரத்திற்கும் மேல் ஆகியது.

***

டுத்து, புவனகிரி.

ராகவேந்திரர் கோவில் வளாகத்தில், ஓட்டுநர் இறுக்கை விட்டு இறங்கி வெளியே நின்று கார் பார்க்கிங் டோக்கன் வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தார் அறிவானந்தம்.

“மேல் சட்டையைக் கழற்றிவிட்டுதான் பிருந்தாவனத்துக்குள்ள போகமுடியும் சார்..! என்று சொல்லிக் கொண்டே பணத்தை வாங்கிக் கொண்டு சென்றார் வாகனப் பாதுகாவலர்.

“பின் சீட்ல போட்று.. என்று சொல்லியபடியே குனிந்து பின் சீட்டில் இருந்த  மனைவி கையில் கழற்றிய சட்டையைக் கொடுத்த நேரத்தில் “என்னங்க...? என்று பதறினாள் அறிவானந்தனின் மனைவி.

“ஏன்? என்னாச்சு?அறிவானந்தனின் கண்களும், உடல் மொழிகளும் வினவின.

“ப்ரேஸ்லெட் என்னாச்சு..? கதறினாள் அறிவானந்தனின் மனைவி

அப்பொழுதான் கையில் பிரேஸ்லெட் இல்லை என்பதை உணர்ந்தார் அறிவானந்தம். சூழ்நிலை இறுக்கமானது.

பரபரத்தனர். மூடிய கார்க் கதவைத் திறந்து இண்டு இடுக்கு விடாமல் தேடினார் அறிவானந்தம். மனைவியும் சேர்ந்து தேடினாள்.

காரிலிருந்து இறங்கி ராகவேந்திரர் கோவிலுக்குள் செல்ல ஆயத்தமாக நின்ற மாமனாரும் மாமியாரும் பதறினர்.

“வீட்லேந்து கிளம்பும்போது போட்டு வந்தீங்களா மாப்ளே..? மாமியாரும் மாமனாரும் கோரஸாய் கேட்டனர்.

“அதைக் கையை விட்டுக் கழட்டவே மாட்டாரும்மா அவரு.. மகள் பதிலளித்தாள்.

“சிதம்பரம் நடராஜா கோவில்லதான் மிஸ் ஆகியிருக்கணும்...

“காளி கோவில்லதான் கூட்டம் அதிகமா இருந்துச்சு. அங்கேதான் எங்காவது கழண்டு விழுந்திருக்கணும்.

ஆளாளுக்கு தங்கள் ஊகங்களை வெளிப்படுத்தினார்கள்..

“லூசா போடாதீங்கனு சொன்னேனே கேட்டீங்களா..? இப்போ எவ்ளோ நஷ்டம் பாருங்க..

ஆளாளுக்குப் புலம்பினார்கள்.

 “ஆண்டவா..? இப்படி சோதிக்கறியே..? புலம்பினார்கள் மாமனாரும் மாமியாரும்.

***

கார் சிதம்பரம் நோக்கிச் சென்றது.

இந்த அலமலப்பிலெல்லாம் பங்கு பெறாமல் காருக்கு வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தாள் குழந்தை சுமித்ரா.

பச்சையப்பாப் பள்ளித் திருப்பம் திரும்பி, தெற்கு கோபுர வாசல் வரும்போது, பெட்டிக் கடையைப் பார்த்ததும், மீண்டும் சுமித்ரா “லாலி பப்.. வாங்கித் தாப்பா.. எனக் கேட்டாள்.

“குட்டிம்மா, ஒரு அவசர வேலையாப் போறோம். திரும்பி வரும்போது வாங்கிக்கலாண்டா.. என்று சுமித்ராவின் அம்மா சொல்ல, பாட்டியும் தாத்தாவும் அதை ஆமோதிக்க, சுமித்ராவின் முகம் வாடியது.

அறிவானந்தத்திற்கோ, ‘காலையில் இரண்டு லாலி பப் திருடி ஏமாற்றியதற்கு எட்டு லட்சம் மதிப்புள்ள வைரபிரேஸ்லெட் போச்சே.? என்ற கழிவிரக்கம் உந்த கார் நிறுத்தி, மீண்டும் அந்தக் கடைக்குச் சென்றார்.

***

றிவானந்தத்தைப் பார்த்த உடனே “லாலி பாப்புங்களா..? நீங்களே எடுத்துக்கங்க.. என்றாள் கடை முதலாளியம்மா,. இப்போது அவள் கல்லாவில்தான் அமர்ந்திருந்தாள்.

மூடியைத் திறந்து கையை உள்ளே விட்டார் அறிவானந்தம்.

ஒரே ஒரு ஒரு லாலி பப் எடுத்துக் கொண்டார். மூன்று லாலிபப்புக்கான காசு கொடுத்தார்.

“அய்யா, ஒரு ‘லாலிபப்தானே எடுத்தீங்க.?.

“ஆமாம்மா! காலைல, மூணு எடுத்துட்டு, ஒரு லாலிபப்புக்குத்தான் காசு போட்டேன்.. - தவறை ஒத்துக் கொண்டார் அறிவானந்தம்.  மனது லேசானது. கார் நோக்கி நடந்து வந்தார்.

***

காரில் ஏறப் போன அறிவானந்தத்தை “அய்யா ஒரு நிமிசம்.. தொடர்ந்து கார் வரை வந்த கடைக்கார அம்மாவின் குரல் நிறுத்தியது.

அய்யா, எல்லாரு முகத்துலயும் ஏதோ சோகம் தெரியுதே, ஏதாவது பிரச்சனைங்களா..?

“அம்மா, உங்களுக்கு துரோகம் பண்ணினேன். எனக்கு கை மேல பலன் கிடைச்சிருச்சு. வைரம் பதிச்ச எட்டு லட்சம் பெறுமானமுள்ள பிரேஸ்லெட்டை எங்கேயோ தொலைச்சிட்டேன். தவறை உணர்ந்த தொனி அறிவானந்தனின் குரலில் வெளிப்பட்டது.

“கவலைப் படாதீங்கய்யா..? செய்த தப்பை உணர்ந்து, பரிகாரம் பண்ணிட்ட உங்களைத் தில்லைக் காளி கை விடமாட்டா..! என்று சொல்லிக் கொண்டே,  “லாலி பப் பாட்டில்ல கிடந்துச்சு. இதுவா பாருங்க..? இயல்பாகச் சொல்லிக்கொண்டே அவன் கையில் பிரேஸ்லெட்டைத் தந்தாள்.  

“எங்கேயாவது கையும் களவுமா வகையா மாட்டும்போது, கிளிப்டோமேனியாவுலேந்து வெளீல வந்தவங்கதான் அதிகம்.. என்று கவுன்சிலிங்போது, சைக்காலஜிஸ்ட் சொன்னது இப்போது போல காதில் ஒலித்தது அறிவானந்தத்துக்கு.

அந்தப் பெட்டிக்கடை முதலாளியம்மாவை, தன் கிளிப்தோமேனியா என்ற, களவூக்கத்தை அகற்ற வந்த தெய்வமாகப் போற்றிக் கைகூப்பித் தொழுதார் தொழிலதிபரும் லட்சாதிபதியுமான அறிவானந்தம்.

***

 

 

 

 

Comments

Post a Comment

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

162. ஆயக்கால் (தினமணி கதிர் (24.11.24)

153. மனிதம் (காற்றுவெளி - ஆடி 2024)