159. வாரிசு ( தமிழ் நெஞ்சம் - செப்டம்பர் 2024)

 

159 வாரிசு (சிறுகதை)

                                      -ஜூனியர் தேஜ்

தமிழ் நெஞ்சம் – (செப்டம்பர் 2024)



      “ருவரிடமும் குறையில்லை. குழந்தை பிறக்கும். அதிகாலை வேளையில் அரச மரத்தைச் சுற்றி வந்து அந்தக் காற்றை சுவாசிக்கும் பெண்களுக்குப் பல சுரப்பிகள் தூண்டப்பட்டு, கருப்பை பிரச்னைகள் சீரடையும், கருவுறும் வாய்ப்புகள் நிறைய இருக்கு. இது விஞ்ஞானபூர்வமா நிரூபிக்கப்பட்ட உண்மை. என்ற மருத்துவர் சற்றே நிறுத்தினார்.

“.....................

“அதே சமயம் ஆன்மீகத்தில் நம்பிக்கையே இல்லாத உங்க மனைவியை அரசமரம் சுற்றச் சொன்னால் கேட்கவா போறாங்க? என்று பெருமூச்சோடு சொன்னார், பிரபல மகப்பேறு மருத்துவரும், நண்பருமான டாக்டர் சொக்கலிங்கம்.

***

“.................

சிறிது நேரம் இருவரும் பேசவில்லை.

ஒரு கனத்த மௌனம் நிலவியது அங்கே.

“எனக்கு ஒரு ஐடியா தோணுது, சரிவருமா யோசிங்க பிரசாத்..என்றார் மருத்துவர்; முகத்தில் ஒளிர்ந்த புன்னகையுடன்

சொல்லுங்க டாக்டர்…!

ஐடியாவைச் சொல்லச் சொல்ல,பிரசாத்தின் முகத்திலும் நம்பிக்கை ரேகைகள் கிளைத்தன.

தொழில் சார்ந்த பேச்சுக்கள் முடித்தபின், சாதாரணமான குசல விசாரிப்புகள் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பிரசாத்தும் டாக்டர் சொக்கலிங்கமும்.

தற்போது குடி இருக்கும் வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீடு மாறுமாறு சொன்னதோடு, அவருக்குத் தெரிந்த ஒரு வீட்டு ஓனர் விலாசமும் தந்து, “போகிற வழிலதான் இருக்கு வீடு, பார்த்துட்டுப் போயிடுங்க.. என்றும் ஊக்கப்படுத்தினார் மருத்துவர்..

டாக்டர் சொக்கலிங்கம் பரிந்துரைத்த அந்தப் புது வீடு, அது இருந்த சூழல் அனைத்தும் பிரசாத்தின்  மனசுக்குப் பிடித்திருந்தது.

***

“ஏங்க இவ்ளோ லேட்..? டாக்டர் என்ன சொன்னாங்க?ஆர்வமாகக் கேட்டாள் பிரசாத்தின் மனைவி நந்தினி.

“நம்ம ரெண்டு பேருக்கும் குறையேதும் இல்லைனு சொல்லிட்டாரு.

“அப்படியா.. ரொம்ப சந்தோஷம்.. குறை ஏதும் இல்லைன்னா ஏன் பூச்சி வைக்க மாட்டேங்குது. ஏதாவது டிரீட்மெண்ட் சொன்னாரா? மருந்து மாத்திரை எழுதித் தந்தாரா..?

“இப்போது மருந்து மாத்திரை எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டாரு. விடி காலைல குறைந்தபட்சம், ஒரு முக்கால் மணி நேரம் வாக் போகச் சொன்னாரு. வெளீல போக முடியலைன்னா வீட்டு மொட்டை மாடீல வாக் போனாலும் போதும்னு சொன்னாரு..

“அப்பறம் வேற என்ன சொன்னாரு?

“ரெண்டு சைக்கிள் பாருங்க. அதுக்குப் பிறகும் கன்சீவ் ஆகலைன்னா ரெண்டு பேரும் வாங்கனு சொன்னாரு.. டாக்டர்..

“அடடே.. நம்ம ஃப்ளாட் ஓனர், மொட்டை மாடீல தகரக் கூரை போட்டு அடைச்சி, குடோனுக்கு வாடகைக்கு விட்டுட்டாரே...? உரத்த முணுமுணுப்புடன் கவலைப் பட்டாள் நந்தினி.

“அதையெல்லாம் மனசுல வெச்சித்தான் நான் ஒரு வீடு பாத்தேன் டார்லிங். முதல் ஃப்ளோர்ல வீடு. சூப்பர் மொட்டை மாடி...

 +***

ந்தினிக்கும் வீடு பிடித்துவிட்டது .

புது வீட்டு மொட்டைமாடியில் விடிகாலை நடைப் பயிற்சி இருவருக்கும் உற்சாகத்தைத் தந்தது.

ஒரு மாதம் விட்டு, அடுத்த மாதம் நாள் தள்ளிப் போக, ப்ரக்னென்சி டெஸ்டில் பாஸிடிவ் வந்தது.

வீட்டின் முன் பிரம்மாண்டமாகக் கிளைபரப்பி நிற்கும் பிரும்மாண்டமான அரசமரத்தடி வினாயகருக்குத் தன் மனைவிக்குத் தெரியாமல் வந்து சிதறுகாய் போட்டான் பிரசாத்.

***

 

Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

162. ஆயக்கால் (தினமணி கதிர் (24.11.24)

153. மனிதம் (காற்றுவெளி - ஆடி 2024)