160 . சுயரசனை ( கொலுசு - அக்டோபர் 2024)
160. சுயரசனை
(மனநலம் சார்ந்த சிறுகதை)
-ஜூனியர்தேஜ்
( கொலுசு - அக்டோபர் 2024)
ஆரவல்லி,
அளவான ஒப்பனையோடு, தோளில் கைக்குழந்தையைத் சாய்த்துக்கொண்டு, கணவன் விமலாதித்தனைப்
பின்தொடர்ந்து ‘பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள் விழா’ அரங்கினுள் நுழைந்தாள்.
பொறுமைதான்
உன்றன் உடைமை!
அதைப் போற்றலே
கடமை
பொறுமையாற்
கழியும் நாளிலே
புதுவன்மை
சேருமுன் தோளிலே!
பொறுமைதான்
உன்றன் உடைமை! - என்று உரத்து ஒலித்தவன்தான், பாவேந்தர் பாரதிதாசனின் தாசன் விமலாதித்தன்.
யதார்த்த
வாழ்வில் ஏட்டுச் சுரையாய் ஆகிப் போனது விமலாதித்தன் கற்ற கல்வி.
அழுக்காறு
அவா வெகுளி இன்னாச்சொல் எல்லாம் விமலாதித்தனை ஆட்கொண்டன.
ஒருக் கட்டத்தில்
ஆரவல்லியின் மீது கடுஞ்சினமும், வருத்தமும் வளர்ந்து, ‘வெறுப்பாக’ உருமாறி, பொறுமை
முற்றிலும் விட்டுப்போய், அவளை அறுத்துக் கட்ட முடிவு செய்தான்.
விவாகரத்துக்குகாக,
அட்வகேட் மோகன சுந்தரத்திடம் சென்ற, கடந்த காலக் கருப்பு நாட்கள் விமலாதித்தனை குற்ற
உணர்விற்கு உட்படுத்தின.
குற்ற உணர்வில்
புழுங்குவதை விட, பாரதிதாசன் சொல்வதைப் போல,
‘நல்லறிவை நாளும்
உயர்த்தி உயர்த்தியேப்
புல்லறிவைப்
போக்கிப் புதுநிலை தேடல் வேண்டும்.’
என்ற முடிவுக்கு
வந்தான் விமலாதித்தன்.
***
கருவிழிகளிரண்டும்,
நிலைக்கண்ணாடியில் நிலைத்திருக்கச் சிலைபோல அமர்ந்திருந்தாள் ஆரவல்லி.
360 பாகைக்
கோணத்தில் அவள் முகத்தை அவளே கண்ணிமைக்காமல் பார்த்து இரசித்துக்கொண்டிருந்தாள். பார்வை
நரம்புகளின் தூண்டுதலுக்குத் தக்கவாறு துலங்கினாள்;
க்ரீமோ,
பவுடரோ, லோஷனோ.. ஏதோ ஒன்றை - வலது கை ஆள்காட்டி விரலால் தொட்டோ - கட்டைவிரலோடு ஒட்டிக்
கிள்ளியெடுத்து, மற்றவிரல்களிலும் பரவவிட்டோ - முகத்தில் பூசிக்கொண்டாள்;
குவிந்து
கிடக்கும் ‘புருசு’களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து - ஒரு தேர்ந்த ஓவியனின் லாகவத்துடன்
- மேல் கீழாகவும், பக்கவாட்டிலும் தேய்த்துத் தேய்த்து நெற்றியையும், கன்னக் கதுப்புக்களையும்
பளப்பளப்பேற்றிக் கொண்டேயிருந்தாள் அவள்.
அவளுக்கு
முன்னே நிமிர்ந்து நின்றுப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடியைத் தவிர, கையகல முகம் பார்க்கும்
கண்ணாடியாலும் அவ்வப்போது முகத்தை ‘ஸூம்’ - செய்தும் பார்த்துக் கொண்டாள்.
முகம் பார்க்கும்
கண்ணாடிக்கு மட்டும் கை கால்கள் இருந்து, ஓடும் திறமையும் பெற்றிருந்தால் எப்போதோ அந்த
அறையை விட்டுக் கண்காணாது ஓடியிருக்கும்.
மனநல மருத்துவரையோ,
ஆலோசகரையோ அணுகினால், அவளுக்கு ‘நார்சிச ஆளுமைக் குறைபாடு’ என்று தீர்மானிப்பார்கள்.
அழகு நிலையம்
போலத், தன்னைச் சுற்றிலும் பவுடரும், பசையும், புருசும், சீப்புமாய் எதையெதையோப் பரத்தி
வைத்துக்கொண்டு, முகத்தில் மாற்றி மாற்றிப் பூசுவதும், துடைப்பதுமாக, விருதாவாய்ப்
பொழுதைப் போக்கும் அவளை முதற்பார்வையிலேயேக் கண்டு அருவருத்தான் விமலாதித்தன்.
***
சிலநேரங்களில்
O.C.D என்று சொல்லக்கூடிய ‘அப்ஸஸிவ் கம்பல்ஸிவ் கோளாறு’ போலக் காணப்படும் அவள் செயல்பாடுகள்.
தலையாட்டி
பொம்மையை எந்தக் கோணத்தில் சாய்த்து வைத்தாலும் விட்டவுடன், தன் உறுதிச் சமநிலையில்
வந்து நிற்குமல்லவா...
அதுபோல,
ஆரவல்லி, முக அலங்காரத்தை முடித்துக் கண்ணாடியை விட்டு எப்போதாவது விலகியும் வருவாள்.
ஆனால் அப்படி வந்துவிட்ட ஒரு சில கணங்களில், அதே வேகத்தில், உடனேக் கண்ணாடி முன் சென்று
நிற்றுவிடுவாள்.
கொஞ்சம்
கூட அலுப்புச் சலிப்பில்லாமல் இதை அவள் தொடர்ந்து
செய்துக் கொண்டே இருப்பது, பார்ப்பவர்களுக்கு பெரு வியப்பை அளிக்கும்.
உயர்தரமான,
அலங்காரப் பொருட்களைத் தரமானக் கடைகளில் சென்று
வாங்கும் ரகமுமில்லை அவள்.
சாலைகளைக்
கடக்க உதவும் சுரங்கப் பாதைகள், திரையரங்கங்கள், பேருந்து நிலையம், ரயிலடி, கோயில்,
தேவாலய வளாகங்கள் என, எங்கு எது விற்பனை செய்யப்பட்டாலும், தரமானாதா, தரமற்றதா, காலாவதியான
பொருளா என்பதையெல்லாம் கூடப் பார்க்காமல், வாங்கி ஒப்பனை செய்துகொள்ளும் ரகம் ஆரவல்லி.
***
அப்பா,
அம்மா, மாமா, அத்தை, பாட்டி அனைவரோடும், ஆரவல்லியைப் பெண்பார்க்கச் சென்றான் விமலாதித்தன்.
‘இதோ வந்துருவா...!
இதோ வந்துருவா...!”- என்று ஆரவல்லியின் அம்மா, அப்பா, பாட்டி, தம்பி என மாறி மாறிக்
கட்டியம் கூறுவதும், உள்ளும் புறமுமாய் அலைவதுமாய் இருந்தார்கள்.
ஒரு வழியாக,
எல்லோருடைய பொறுமையையும் சோதித்தபின் வந்தாள் ஆரவல்லி.
இப்போதெல்லாம்,
தொடர்வண்டி நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையம், திருமணக்கூடம், கருமாதிக்கட்டகம்,
பூங்காக்கள்... இப்படி எங்கெங்கு காணினும், அக்கம் பக்கம் இடியே விழுந்தால் கூடச் சிறிதும்
கவனமேச் சிதறாமல் கைப்பேசியையேப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களல்லவா...?
அதுபோல,
பெண் பார்க்க வந்தவர்களையோ, மற்ற மற்ற ஏற்பாடுகைளையோ சிறிதும் கவனிக்காமல் கையில் வைத்திருந்த
கையகலக் கண்ணாடியில், தன் முகத்தையேப் பார்த்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்
ஆரவல்லி.
“இது சரியா வருமாடா?”- அம்மா ரகசியமாக விமலாதித்தனின்
காது கடித்தாள்.
***
பழமைவாதங்களில்
ஊறியவள் அம்மா.
பல ஆண்டுகளாகப்
பலப்பலக் காரணங்களுக்காகப் பலப் பெண்களை தவிர்த்துவிட்ட பிறகு, முதன்முதலில் சாதகக்
கட்டங்கள் சரியாக உள்ளதென ஆரவல்லியை அங்கீகரித்திருக்கிறாள் அம்மா. இவளைத் தவிர்த்தால்,
அடுத்து எப்போது இது போலக் கூடி வருமோ?;
‘அம்மா
மிகவும் சோர்ந்துவிடுவாள், நம்பிக்கை இழந்துவிடுவாள்..’ என்று ஒரு புறம் நினைத்தான்.
அது மட்டுமல்லாமல்,
ஆரவல்லியின் இதுபோன்ற செயல்களுக்குக் காரணம் ‘வயசுக் கோளாறுதான். திருமணம் குதிர்ந்தபின்
ஆரவல்லியின் இந்தச் சிறுபிள்ளைத் தனங்களெல்லாம் மாறிவிடும்...!’ – என்று முழுமையாக
நம்பினான் விமலாதித்தன்.
“தன் அழகையேப்
பார்த்து ரசிக்கற வயசும்மா...! போகப் போக மாறிடும்...!” - அம்மாவுக்கு மட்டும் கேட்கும்
குரலில் ஆரவல்லியை விட்டுக் கொடுக்காமல்தான் சொன்னான் விமலாதித்தன்.
***
இருபுறமும்
மனமொத்துவிட்ட பிறகு, ‘வருங்கால மனைவியை பார்த்து வரலாமே...!’ - என்கிற வேட்கையில்
ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை, எதிர்பாராத விதமாக அவள் வீட்டுக்குச் சென்றான் விமலாதித்தன்.
வாங்க என்று
வரவேற்று, ஆள்காட்டி விரலை, அவளிருக்கும் அறை நோக்கிக் காட்டி, ‘அங்கே சென்று பாருங்கள்’
என்று ஜாடையில் சொன்னாள் அவள் தாய்.
அணிகலன்களைக்
தன் முன் குவித்து வைத்துக்கொண்டிருந்தாள் அவள்.
அவள் முன்
குவிந்திருந்த அணிமணிகளில், ஒன்று கூடத் தங்கமில்லை. எல்லாமேப் போலி நகைகள்தான்.
வெளுத்துப்
போய் பல்லிளித்த உறுப்படிகள் கூட அந்தக் குவியலில் கிடந்தன.
ஒவ்வொன்றாய்
மாட்டுவதும் கழற்றுவதுமாகவிருந்த ஆரவல்லியைப் பார்த்தான் விமலாதித்தன்.
வருங்காலக்
கணவனான விமலாதித்தன் தன் அருகில் வந்து நிற்பதைக் கூடக் கவனிக்கவில்லை ஆரவல்லி. கண்ணாடியில்
தன் பிம்பத்தையேப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
“ம்..க்..கும்...!
ம்..க்..கும்...!” - இரண்டு மூன்று முறைக் கனைத்தான் விமலாதித்தன்.
அதற்கும்
அவள் கவனம் திரும்பாததால் ‘ஆரவல்லி..’ என்று பலமாகவே அழைத்தான்.
குரல் கேட்டதும்
அவள் கவனம் திரும்பியது.
தரையில்
விழுந்ததும் துள்ளி எழும் பந்து போலச், ‘சடா’ ரென எழுந்தாள் ஆரவல்லி.
“எப்ப வந்தீங்க...?
எப்ப வந்தீங்க...?”- இரண்டு மூன்று முறை கேட்டாள்.
“மன்னிச்சிக்கங்க...!
உங்களை கவனிக்கலை...! தயவு செஞ்சி மன்னிச்சிக்கங்க...! கவனிக்கலை...!” - மீண்டும் மீண்டும்
நிறுத்தாமல் கீரல் விழுந்த இடத்தில் ஆணி நின்றுவிட்ட இசைச்தட்டைப் போலச் சொல்லிக்கொண்டே
இருந்தாள்.
***
தாய்க்கு
ஒரே மகன் விமலாதித்தன்.
ஐந்திலக்கத்தில்
ஊதியம் பெறும் பன்னாட்டு மென்பொருள் நிறுவன உயரதிகாரி.
ஒழுக்கமாக
வளர்க்கப்பட்டவன். எவரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்ற பண்பு அவன் உள்ளத்தில்
குழந்தைப் பருவம் முதலே அவன் தாயாரால் ஏற்றப்பட்டிருந்தது.
சூதுவாதுகளற்ற
வெள்ளந்தியான மனத்தினன் விமலாதித்தன். எல்லாவற்றிற்கும் மேலாக பெண்ணீயத்தைப் போற்றுபவன், பெண்ணினத்தை மதிப்பவன்.
“பரவாயில்லை
ஆரவல்லி...!” - என்றுப் பொறுமையாக, சமாதானம் செய்யச் செய்ய மீண்டும் மீண்டும் மன்னிப்புக்
கேட்டாள்.
ஒரு முறையல்ல
இரு முறையல்ல... நிச்சயதார்த்தத்திற்கு முன் நான்கு முறை அவள் வீட்டுக்குச் சென்றிருக்கிறான்
விமலாதித்தன்.
நான்கு
முறையும் இதே ‘Action Replay’ ‘செயல் பிரதிபலிப்பை’தான் தந்தாள் அவள்.
இது அவள்
கேரக்டர் என்றுத் தெரியாமல், முட்டாளாக இருந்ததற்குப் பிற்காலங்களில் பலமுறை வருந்தியுமிருக்கிறான்
விமலாதித்தன்.
***
நிச்சயதார்த்தத்திற்கு
இரண்டு நாட்களுக்கு முன் ஆரவல்லியைப் பார்க்க ஆசையாகவும் ஆவலாதியுடனும் சென்றான்.
‘இந்த நிலையிலாவது
ஆரவல்லியிடம் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமோ?’ – என எதிர்பார்த்தான். ஊஹூம்... ஏமாற்றம்தான்
மிஞ்சியது.
‘நார்ஸிஸின்’
பிரதிநிதியாகத்தான் இருந்தாள் அவள்.
பொறுமைதான்
உன்றன் உடைமை ! என்னும் புரட்சிக் கவிஞரின் வாக்கைச் சிக்கெனப் பிடித்தான்.
இதுவும்
கடந்து போகும் என்ற நம்பிக்கையுடனிருந்த விமலாதித்தனுக்கு அன்று நிகழ்ந்த ஒரு கேவலமான
சம்பவம் மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. உள்ளுக்குள் உடைந்துச் சங்கடப்பட்டான்.
ஆரவல்லியின்
மாமன் மகள், பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி. அழுது கொண்டே ஆரவல்லியின் அறையிலிருந்து
வெளிவந்தாள்.
“என்னடீ..?
ஏன் அழுவுற...?" - ஆரவல்லியின் அம்மா கேட்டாள்.
தன் புதுக்
கம்மலை ஆரவல்லி, திருடிக்கொண்டு, அதற்குப் பதிலாக ஒரு பல்லிளித்தக் கம்மலை வைத்துவிட்டதாக,
அடையாளங்களையெல்லாம் சொல்லி முறையிட்டு அழுதாள் சிறுமி.
குழந்தையின்
கம்மல்கள் என்றில்லை, எவருடையதாக இருந்தாலும், மாற்றியிருப்பாள் ஆரவல்லி. தனக்கு வேண்டும்
என்ற சிக்மன்ட் ப்ராய்ட்’ன் “Ed’ ‘இச்சை உணர்வு
மிக்க’ நிலையில் இருப்பவள் அவள்.
ஆரவல்லியின்
மூலம் கிடைத்த இப்படிப்பட்டக் கசப்பான அனுபவங்களில்
ஒன்றைக் கூட அம்மாவிடம் ‘மூச்சு’ விடவில்லை விமலாதித்தன்.
***
பரிசம்
போடும் நாளில், இரண்டு கைகளிலும் முடியகற்றும் களிம்புகளைத் தடவித் தடவித் துடைத்துப்
புசுபுசுவென தங்க நிறத்தில் தகதகக்கும் அடர்த்தியான பூனை முடியினை அரையும் குறையுமாக
வழித்தெடுத்துக் கொண்டிருந்தாள் ஆரவல்லி. அருகில்
அமர்ந்து அவளுக்கு உதவிக் கொண்டிருந்தாள் பெற்றவள்.
“அதற்கென
பயிற்சி பெற்றிருக்கும் அழகு நிபுணர்களை அழைத்து, முறைப்படி அலங்காரம் செய்யச் சொல்லியிருக்கலாமே..?
- என்று விமலாதித்தன் இயல்பாகக் கருத்துக் கூறியதுதான் தாமதம்.
“அவங்களும்
சிரைக்கத்தானே போறாங்க வேற எதுனா அதிசயமா பண்ணுவாங்களோ....?” என்றெல்லாம் தாயும் மகளுமாக,
மாறி மாறி நாகரீகமற்ற வார்த்தைகளைக் கோர்த்துக் கொட்டினார்கள்.
அவர்கள்
செய்கையை நியாயப்படுத்தினார்கள். பேச்சையும், இளிப்பையும், அவர்கள் நிறுத்தினால் போதும்
என்றாகிவிட்டது விமலாதித்தனுக்கு.
***
‘திருமணம்
முடித்து, புகுந்த வீட்டுக்கு வந்தபிறகு அவளை மெருகேற்றுவோம்…!’ - என்று பொறுமை காத்த
விமலாதித்தனுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது.
சாம, தான,
பேத தண்டம் என்று சொல்லப்படுகிற (சாம) சமாதானப் பேச்சு, (தான) பரிசுப் பொருட்கள் அளித்தல்,
(பேதம்) புறக்கணிப்பு, (தண்டம்) அகிம்சை வழி எனும் நான்கு வழிமுறைகளையும் கடைப்பிடித்துப்
பார்த்தாகிவிட்டது. மாற்றம் ஏதும் நிகழவில்லை.
விதவிதமாகச்
சாப்பிடுதலிலோ, சினிமா, நாடகம், கடற்கரை, பூங்கா, மிருகக் காட்சி சாலை... என வெளியே
ஊர் சுற்ற வேண்டும் என்பதிலோ, தாம்பத்தியத்திலோக் கூட ஆர்வமற்றிருந்தாள் ஆரவல்லி.
அவள் அலங்காரத்தைப்
பற்றி எவரேனும் எதிர்மறை விமரிசனம் செய்தாலோ, அவ்வளவுதான். சோறு தண்ணீர் எதுவும் எடுத்துக்
கொள்ளாமல், நாள் முழுவதும் கண்களைக் கசக்கிக்கொண்டு தர்ணா செய்வாள்.
***
ஒரு கட்டத்தில்,
வேறு வழியின்றி, வீட்டின் கீழ்ப் பகுதியில் அம்மாவை குடியமர்த்திவிட்டு, விமலாதித்தன்
மாடிப் பகுதியில் குடும்பம் நடத்தினான்.
மகன் வாழ்க்கை
சீராகவேண்டும் என்ற எண்ணத்தோடும், சீராகும் என்ற நம்பிக்கையோடும், இட்டு நிரப்பிக் கொண்டும், சப்பைக் கட்டிக்கொண்டும்
தன் தாய் இருந்தது மட்டும்தான், விமலாதித்தனுக்கு ஓர் வகையில் ஆறுதலாக இருந்தது.
ஆரவல்லி
இம்மியேனும் மாறவில்லை. மாறுவாள் என்ற நம்பிக்கையும் அற்றுப் போய்விட்டது விமலாதித்தனுக்கு.
பொறுமைக்கும்
ஓர் எல்லை உண்டல்லவா..?
ஒரு முடிவுக்கு
வந்தான் விமலாதித்தான். விவாகரத்து செய்ய முடிவெடுத்து, வக்கீலைச் சந்தித்தான் .
“இத்தனை
நாள் பொறுத்துக்கிட்டு ஓட்டிட்டீங்க. கடைசீயா
மனநல ஆலோசகர் மூலம் முயற்சி பண்ணுங்களேன். அதுலயும் தோல்வின்னா, விவாகரத்து பற்றி யோசிப்போம்
– மடைமாற்றி விட்டார் வக்கீல் மோகன சுந்தரம்.
***
விமலாதித்தனும்
அவன் தாயும் மனநல ஆலோசகரைச் சந்தித்தனர், அனைத்தையும் விவரமாகச் சொன்னார்கள்.
“நீங்கள்
சொல்வதை வைத்துப் பார்க்கும்போது இது ‘நார்ஸிஸிஸ் கோளாறு போலத்தான் தெரியுது. குணப்படுத்திடலாம்.”
என்றார் சைக்காலஜிஸ்ட்.
நம்ம நாட்டுல
சிவன், விஷ்ணு, முருகன், வினாயகர்னு நிறையப் புராண கேரக்டர் இருக்கறமாதிரி, நார்ஸிஸிஸ்’
ங்கறது கிரேக்கப் புராணக் கதைகள்ல வர்ற ஒரு கதாபாத்திரம். பிறந்ததிலிருந்து காட்டிலேயே
வளர்ந்தவன் நார்ஸிஸிஸ். மிருகங்களை வேட்டையாடி உயிர்த்தான். மனிதர் முகத்தை அவன் பார்த்ததேயில்லை.;
இப்படி
இருக்கும்போது, ஒரு நாள் வேட்டையாடப்பட்ட ஒரு பறவை, பள்ளத்தில் தேங்கியிருந்த குட்டையில்
விழ, அதை எடுக்கக் குட்டையின் கரையில் படுத்துக் குனிந்தான் நார்ஸிஸிஸ்.
குட்டையில்
பிரதிபலித்த அவன் பிம்பம் அவனை ஈர்த்தது. தன் முகத்தின் பிம்பம்தான் அது என்று தெரியாமல்,
அதன் அழகையேக் காலங்காலமாக ரசிக்கிறான். என்று ஒரு கிரேக்கப் புராணக் கதை உண்டு.
‘நார்ஸிஸிஸ்’
என்ற கதாபாத்திரத்தைப் போலத் தன்னையே ரசிக்கும்
குணம் அளவுக்கு அதிகமாகிவிட்டால், அதை ‘நார்சிஸிஸ் கோளாறு’ என்று காரணப்பெயராக வைத்திருக்கிறார்கள்
மனவியல் வல்லுநர்கள்.” – என்று நீண்ட விளக்கமும் அளித்தார் ஆலோசகர்.
***
“எதனால
வருது சார் இது?”
“வம்சாவழியா
வரலாம். மேலும் பல காரணங்களும் இருக்கு;
பொதுவா,
தன் அழகுலயோ, தன் குரல் வளத்துலயோத் தானே மயங்குறது மனித இயல்புதானே;
உதாரணமா,
நாமே கல்யாணம், காட்சினு போகும்போது, உடைக்கு, அலங்காரத்துக்கெல்லாம் முக்கியத்தும்
கொடுக்கறோம்ல..;
அளவுக்கு
மிஞ்சினா அமுதமும் நஞ்சுனு சொல்வதைப் போலத், தற்பெருமையோட அளவு, அதிகமாகும்போது அது
மனநோயா மாறிடுது;
வேற வேற
பொறுப்புகளைச் சாதுர்யமாப் புகுத்தி, மடைமாற்றுதலே இதை குணமாக்கும் வழி” – நம்பிக்கையோடு
சொன்னார் மனநல ஆலோசகர்..
என்ன செய்யணும்
டாக்டர். அவங்களை அழைச்சி வரணும்ங்களா..?
கொஞ்ச நாள்,
நான் சொல்றபடி அவங்ககிட்டே நடந்துக்கங்க மாற்றம் தெரியும். பிறகு நான் சொல்லும்போது
நேர்ல வரலாம். நேர்ல வராமலே மனநோயாளி சமநிலைக்கு வந்துட்டா ‘மிக்க மகிழ்ச்சி’ – என்றார்
ஆலோசகர்.
***
“அற்புதமா
இருக்கு அத்தை.....!” - முதன் முதலாக கணவனும், மாமியாரும் சில ஆபரணங்களை வாங்கிப்போய்
அவள் கையில் கொடுத்தபோது மகிழ்ச்சியில் கூவினாள் ஆரவல்லி.
“இதைப்
போட்டுக் காட்றியா ஆரவல்லி…!” – மனநல ஆலோசகர் சொன்னதைப் போல அன்பாகக் கேட்டான் விமலாதித்தன்.
அவள் அணிந்து
கொண்டபிறகு, விமலாதித்தனே, கண்ணாடியை அவள் முகத்தின் முன் பிடித்துக் காட்டினான்.
இப்படியே
ஒவ்வொரு நாளும் ஒரு புது அலங்காரப் பொருள், என்று வகை வகையாக. ஆரவல்லிக்கு வாங்கிக்
கொடுப்பதும், அதை அணியச் சொல்லி வற்புறுத்துவதுமாய்த் தொடர்ந்தார்கள்.
மன நல ஆலோசகர்
சொன்னதைப் போல, ஓரிரு வாரங்களில் ‘பிறர் சொல்வதைச் செய்யும்’ குணம் ஆரவல்லிக்குள் உருவாக்கிவிட்டது.
***
இது ரொம்ப
பழசாயிருச்சு ஆரவல்லி, தூக்கிக் குப்பைல போட்றலாமா?” - என்று அவ்வப்போது, அன்பாய்ச்
சொல்லச் சொல்ல தேவையற்றவைகளை அகற்றும் பழக்கமும் அவளுக்குள் ஊறிவிட்டது.
அடுத்தாற்போல்,
ஒரு ஆபரணத்தைக் கண்ணில் காட்டிவிட்டு, “சமையல் முடிச்சிட்டு அப்பறமா போட்டுக் காட்டறியா?”;
“தூங்கி
முழிச்சப்பறம் போட்டுக்கலாமா?” என்றெல்லாம் ஆலோசனைகள் சொல்லி, மனம் போன போக்கில் போய்க்கொண்டிருந்த
ஆரவல்லிக்கு சுயக்கட்டுப்பாட்டுப் பயிற்சிகளை அளித்தார்கள் தாயும் மகனுமாக.
***
மனநல ஆலோசகரின்
ஆலோசனைப்படி, சீரான, முறையான, பயிற்சிகளின் விளைவால், ஆரவல்லியின் ஆபரணம் அணியும் வெறி’,
மற்றவர்களுக்காக ஆபரணம் அணியும் ஆசை’யாக மாறியது.
ஒரு கட்டத்தில்,
தேவையான நேரத்தில் அணிவதும், அலங்கரித்துக் கொள்வதுமான சாதாரண இச்சையாகிவிட்டது ஆரவல்லிக்கு.
கடைசீக்
கட்டமாக மனநல ஆலோசகர் முன் அமர்ந்து Talk Therapy (பேச்சுச் சிகிச்சை) பெற்று, ஆரவல்லி
பூரணமாக குணமாகி விட்டாள்.
***
இன்று
அளவான ஒப்பனையோடு, கைக்குழந்தையைத் தோளில் சாய்த்தபடி பாவேந்தர் பாரதிதாசனின் நினைவுநாள்
அரங்கினுள் நுழையும்போதுத் தற்செயலாக வக்கீல் மோகன சுந்தரம் அரங்கில் எதிர்பட்டார்..
”ஆரவல்லி
உன்னை விவாகரத்து பண்ணிட்டாங்களா விமலாதித்தா? என்று மோகன சுந்தரம் கேட்க தலை குனிந்தான்
விமலாதித்தன்.
‘தோளில்
சாய்திருக்கிற குட்டி விமலாதித்தனை’விட்டு ஆரவல்லி கண்ணையே எடுக்கக் காணமேனு கேட்டேன்.!” என்றுக் கலாய்த்துப் பேசியபோது, மிகவும் நன்றியோடு
அவரைப் பார்த்தான் விமலாதித்தன்.
“என் வாழ்க்கைப்
பயிர் செழிக்க வந்த வான்மழை அவளே.! இன்பத் தேன் மழை அவளே..” என்று மேடையில் முழங்கிய
பாரதிதாசனின் கவிதை வரிகள் ஒலிப் பெருக்கியின் மூலம் காற்றோடு கலந்தன.
***
Comments
Post a Comment