162. ஆயக்கால் (தினமணி கதிர் (24.11.24)

 


ஆயக்கால் (சிறுகதை)

ஜூனியர் தேஜ்

கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகளுக்கு முன் வியலூர் கிராமத்திலிருந்தப் பூர்வீக வீட்டை விற்றுவிட்டுச் சென்னையில் செட்டிலாகிவிட்டப் பாண்டுரங்கன், ஒரு கட்டத்தில் தன் அண்ணன் குழந்தைகளுக்குச் செய்யவேண்டியப் கடமைகளைச் செய்துவிட்டு, காஞ்சீபுரத்தில் ஒரு ஆன்மீக அறக்கட்டளையில் சேவை செய்துகொண்டிருக்கிறார்.

உலகம் பூராவும் கிளைப் பரப்பி நின்ற அந்த அறக்கட்டளையின் கும்பகோணம் கிளையில் உருவாகியிருந்த ஒரு சட்டச் சிக்கலுக்குப் பரிகாரம் காண அனுபவமிக்கப் பாண்டுரங்கனை அனுப்பியது தலைமை நிர்வாகம்.

கும்பகோணம் வந்த பாண்டுரங்கனுக்கு,அங்கிருந்து எட்டாவது கிலோமீட்டரில் இருக்கும் தன் பூர்வீக ஊரான வியலூருக்குச் சென்று வரவேண்டும் என்ற இயல்பான ஆசை எழுந்தது.

‘காமாட்சி-ஜோசியர்-தெருவில் இயங்கி வந்த அறக்கட்டளைக் கட்டடத்தில் தங்கியிருந்த பாண்டுரங்கன், கால் நடையாகப் புறப்பட்டுக், பாலக்கரை காவிரிப் பாலத்துக்கு மேற்கே, வடகரையில் பழைய நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டே நடந்தார்.

அப்பப்பா.. இந்தப் பத்து வருடங்களில்தான் எத்தனையெத்தனை மாற்றங்கள்.

అఅఅ

ரசுக் கலைக் கல்லூரிக்குள் செல்லும், ரமணி ராமய்யர் பாலம் தாண்டி, பக்தபுரித் தெருவையும் கடந்து, நீதிமன்ற வளாகத்தில் போய் நின்றார்.

‘டாக்குமெண்ட் ரைட்டராகஆயிரக் கணக்கில் பிராதுகள், மத்யஸ்தங்கள், மனுக்கள், பிரமாணப் பத்திரங்கள், வில்லங்கச் சான்று,  தஸ்தாவேஜுகள்.. எனத் தன் கையால் எழுதித்தந்து – சம்பாத்தியம் நடந்திய, காலங்கள் கண்முன் விரிந்தன.

நீதி மன்ற நடைமுறைகளை நன்கு அறிந்திருந்த பாண்டுரங்கன், முறையாக, தான் சார்ந்திருக்கும் அறக்கட்டளையின் தற்போதைய சட்டச் சிக்கலைத் தீர்ப்பதற்கான செயல்முறைகளை முறையாகச் செய்தார். மனுவோடு, பணம் கட்டிய ரசீதுகளின் செராக்ஸ் இணைத்து, உரிய இடத்தில் ஒப்படைத்தார். மனு முறையாகப் பதிவு செய்யப்பட்டபின், நீதி மன்ற முத்திரை பதித்த ஒப்புகைச் சீட்டைப் பெற்றுக் கொண்டார்..

வேலையின் தன்மையும், வழிமுறைகளும் தெரிந்திருந்ததால், சுலபமாக வேலையை முடிக்க முடிந்தது  பாண்டுவால்.

అఅఅ

வியலூரில், பாண்டுரங்கன் குடும்பத்தை, ‘கோர்ட்டார் வீடுஎன்றுதான் சொல்வார்கள். காரணம், பாண்டுரங்கனின் அப்பாவும் டாக்குமெண்ட்- ரைட்டர்தான்.

தகப்பன் கலையை நன்கு அறித்த பாண்டுரங்கன், ஒரு காலத்தில் இதே கோர்ட் வளாகத்தில், போடு போடென்று போட்டவர்தான். காசும் புகழும், நிறைய சம்பாதித்தவர்தான். அதெல்லாம் ஒரு காலம்.

பாண்டுரங்கனுக்கு ஒரு அண்ணன். ராமானுஜன் என்று பெயர். கும்பகோணம் கல்லூரியில்தான் படித்தார். ‘ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் எழுதித் தேறியதால், அரசுப் பணி கிடைத்தது அவருக்கு.

‘பதவீ பூர்வ புண்யாணாம், லிகிதே ஜன்ம பத்ரிகா என்று சொல்வதைப்போல, பூர்வ ஜன்மப் பலனாக, நல்ல பதவி கிடைத்ததும், கையோடு வலங்கைமான் தேசிகாச்சாரி மகளைத் அவனுக்குத் திருமணமும் செய்துவைத்தார் அப்பா.

திருமணமான அடுத்த வருஷமே ராம-லெக்‌ஷ்மணர்கள்போல இரண்டுஆண்குழந்தைகளை, இரட்டையராகப் பெற்றுப் போட்டுவிட்டுக் காலமாகிவிட்டாள் ராமானுஜத்தின் மனைவி.

అఅఅ

ருமகள் இறந்த துக்கத்தில், ஏக்கம் பிடித்து ஒரு மாதத்திற்குள் அப்பா காலமாகிவிட, அடுத்த மூன்றாவது மாதத்தில், நடை பிணமாக நடமாடிக் கொண்டிருந்த பாண்டுரங்கனின் அண்ணன் ராமானுஜமும், இரண்டு மகன்களையும் அனாதையாக்கிவிட்டு ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார்.

கோர்ட் வளாகத்தில் நிற்கும்போது, தன் அண்ணன் ராமானுஜம் படித்தக் கல்லூரியும், அண்ணனின் பிரேத பரிசோதனை நடைபெற்ற அரசினர் மருத்துவமனையையும் பார்த்துப் பார்த்துக் கண்கலங்கினார் பாண்டுரங்கன்..

అఅఅ

ண்ணன் காலமானமின், பச்சை மண்ணாகப் பரிதவித்த இரண்டு குழந்தைகளையும் பராமரிப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் பாண்டு.

திருமணம் செய்துகொண்டால் இந்தக் குழந்தைகளுக்குப் பங்கம் வந்துவிடுமோ என்று பயந்து, திருமணம் என்ற பேச்சுக்கே முற்றுப் புள்ளி வைத்துவிட்டார்.

ஆனால், பிழைப்பு என்று ஒன்று இருக்கிறதே.. என்ன செய்வது என்று யோசித்து, ‘கோர்ட் வளாகத்துக்குத் தொழிலுக்குப் போகும் நேரத்தில், குழந்தைகளை யாரு பார்த்துப்பா..? என்று உரிமையாகக் கேட்டு, வியலூர் வேத காவ்ய பாடசாலையில் சமையல் வேலை செய்து வயிற்றைக் கழுவிவந்தலட்சுமியை ஏற்பாடு செய்துவிட்டாள் பண்டரிபாய். ‘ப்ராப்தம் இருந்தா ரெண்டு பேரும் சேர்ந்து வாழட்டுமே..!’- என்கிற எண்ணமும் இருந்தது பண்டரிபாய்க்கு.

అఅఅ

வீட்டில் சமையல் முடித்து, மதியத்திற்கு டப்பாவில் கட்டிக்கொண்டுத் தொழில் செய்ய பாண்டு, கோர்ட் வளாகத்திற்குச் சைக்கிளில் புறப்படும் நேரத்தில், பாடசாலையில் சமையலை முடித்துவைத்துவிட்டு வந்துவிடுவாள் லட்சுமி.

வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெற்றக் குழந்தையாகப் பாசத்துடன் குழந்தைகளைப் பராமரித்தாள் லட்சுமி.

குழந்தைகளை மட்டுமல்ல, பாண்டுவையும் நன்கு கவனித்துப் பார்த்துக் கொண்டாள் லட்சுமி. எந்த இடத்திலும் இரட்டையர்கள் என்று காட்சிப் படுத்தாமல், இயல்பாக இருவரையும் வளர்த்தார்கள் இருவரும்.

அந்தி மயங்கும் வேளையில் கோர்ட்டிலிருந்து சைக்கிளை மிதித்துக் கொண்டு, வீட்டை வந்து அடையும் பாண்டுவிற்கு, சுடச்சுடக் காப்பி ஃப்ளாஸ்கில் இருக்கும். இரவு டிபன், ஹாட்பாக்கில் இருக்கும்.

கோர்ட் இல்லாத நாட்களில், “நான் வீட்லதானே இருக்கேன் பாத்துக்கறேன். நீ வர வேண்டாம் லட்சுமி.. என்றுவிடுவார்.

‘தடுமாறிவிடுவோமோ என்று அஞ்சி, தரையைப் பார்த்துக்கொண்டு, எச்சரிக்கையாய்த் தன்னைத் தவிர்ப்பதை பார்த்து, மூக்கும் முழியுமாக விண்ணென்று இருக்கும் லட்சுமி தனக்குள் ஒரு வெட்கச் சிரிப்புச் சிரித்துக் கொள்வாள்.

అఅఅ

குழந்தைகளுக்கு ஐந்து வயதானதும் உள்ளூர் போர்டு பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் கொண்டு போய்ச் சேர்த்தான் பாண்டு.

“இந்த கிராமத்துல உனக்கு என்ன வெச்சிருக்கு பாண்டு, வீட்டையும் தோப்பையும் கிரயம் பண்ணிட்டு, கும்பகோணத்தோடப் போயிடேன்..- என்று உறவுகளும், நட்பும் யோசனையும் சொன்னார்கள்.

“இது மைனர் சொத்து, குழந்தைகள் மேஜர் ஆகும் வரை இதை விற்க முடியாதாக்கும்..!- என்று அவர்களுக்கு சட்ட பாய்ண்ட்டோடு, விளக்கம் சொன்னார் பாண்டு.

“குழந்தைகள்தான் வளர்ந்துடுத்தே... ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கோயேன்...!”;

தாலி கட்டிண்டவதான், கடைசீ நேரத்துல ஒரு லோட்டாக் கஞ்சி வைச்சிக் கொடுப்பாளாக்கும்...!”;

எங்கேயும் பொண்ணு தேடிண்டுப் போக வேண்டாம். கையிலேயே வெண்ணையை வெச்சிக்கிட்டு நெய்க்கு அலைவாங்களா...?”;

என்றெல்லாம் ஆத்மார்த்தமாய் நிறைய நிறைய யோசனைகளும் சொன்னார்கள் அனுபவஸ்தர்கள்.

எந்தக் கருத்துக்கும் எதிர்வினையாற்றவில்லை பாண்டு.

అఅఅ

ள்ளுரில் எலிமெண்டரிப் படிப்பு முடித்தபிறகு, கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் +2 வரைப் படித்தார்கள் குழந்தைகள்.

அவர்களின் அப்பா ராமானுஜம், படித்த கும்பகோணம் கல்லூரியில் ஒருவன் ஆர்ட் பிரிவும், மற்றவன் சயன்ஸ் பிரிவும் எடுத்துப் படித்தார்கள்.

கல்லூரிப் படிப்போடு, டைப்பிங், ஷார்ட் ஹாண்ட் என்று கும்பகோணம் டெக்னிகல் இன்ஸ்டிடியூட், ஜெயராமன் சாரிடம் சொல்லி ஏற்பாடு செய்துகொடுத்தார் பாண்டு. கிராமத்திலிருந்து வந்து போக, அவர்களுக்கு மோட்டார் பைக்கும் வாங்கித் தந்தார்.

అఅఅ

குழந்தைகளுக்குச் சென்னையில் இரு வேறு கம்பெனிகளில் வேலை வந்தது..

தன் அண்ணன் மகன்கள், மேஜர் ஆகிவிட்டதால், அவர்களிடம் நிலைமையை விளக்கி, அவர்களின் பூர்ண சம்மதத்துடன், வீடு உட்பட கிராமத்துச் சொத்துக்களை கிரயம் செய்துவிட்டு, சென்னைவாசியானார் பாண்டு.

இத்தனை வருஷம் தாயாய் இருந்து வளர்த்த லட்சுமியிடம், “உனக்குப் பாடசாலை வேலை இருக்கு.. உன்னால மெட்ராசுக்கு வரமுடியாதே..! என்று ஆறுதல் சொல்லிக் கொண்டார்.

லட்சுமிக்கு பாண்டுவின் தவிப்புப் புரியாமல் இல்லை.

అఅఅ

சென்னையில் ஒரு வீடு வாங்க அலையாய் அலைந்தார் பாண்டு. அந்த நேரத்தில், புரோக்கர்களிடம், குழந்தைகளின் ஜாதகங்களைக் காட்டி ஆங்காங்கே சொல்லி வைத்ததில், வரன்கள் குவிந்தன.

ஜாதகம், குடும்பப் பின்னணி அனைத்தையும் விசாரித்து, ஒரே மூகூர்த்தத்தில் ஆடம்பரமில்லாமல் கல்யாணம் செய்துவைத்தார்.

சென்னையில் திருவல்லிக்கேணி, சுங்குவார் தெருவில் ஒரு சிறிய ஓட்டு வீடு வாங்கி பத்திரப் பதிவு செய்த அதே நாளில், தங்கள் இரண்டு குழந்தைகளின் திருமணத்தையும் பதிவு செய்தார் பாண்டு.

ஒரு நாள் எதேர்ச்சையாக, சாட்டை வெங்கடாசலத்தை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகில் பார்த்தார் பாண்டு. வியலூர் பற்றி விசாரித்தார். வியலூர் வேதகாவ்ய பாடசாலையை இழுத்து மூடிவிட்டதாகச் சொன்னான் வெங்கடாசலம்.

‘பாவம்.. லட்சுமி.. இப்போ எங்கே இருக்காளோ..? என்ன பண்றாளோ..?– என்று நினைத்துக் கொண்டார் பாண்டு.

అఅఅ

“திருவல்லிக் கேணி சுங்குவார் தெருவில் வாங்கிய ஓட்டுவீட்டில் சரியாக ஒன்றரை வருடங்கள்  அனைவரும் சேர்ந்து ஒன்றாக இருந்தார்கள்.

மூத்த மருமகள் உண்டாகியிருந்த நேரத்தில், “தனி வீடா இருந்தாக்க, எல்லாருக்குமே வசதியா இருக்கும் சித்தப்பா.. என்று ஒருநாள் காது கடித்தான் மூத்தவன்.

ஒரு கணம் நிலைகுலைந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், நிலைமையைப் புரிந்து கொண்டார் பாண்டு.

சுங்குவார் வீட்டை விற்று, ஒரே அடுக்ககத்தில், இரண்டு ஃப்ளாட் வாங்குவோமா..?-என இருவரையும் ஜோடிகளாக நிற்கவைத்து அபிப்ராயம் கேட்டார் பாண்டு.

“எட்டி இருந்தாத்தான் உறவு நிலைக்கும்..! என்றான் மூத்தவன்.

இது, கூடப்பிறந்தவனுக்கு மட்டுமில்லை,, தனக்கும்தான் என்பதை முதல் முதலில், உணர்ந்தவர் பாண்டு.

இருவேறு இடங்களில் குழந்தைகள் பெயரில் ‘ஃப்ளாட்வாங்கிக் குடிவைத்தார்.

అఅఅ

ன்னை ஏலம் போடுமுன் சுதாரித்தார் பாண்டு.

“வீட்ல கொட்டுக் கொட்டுன்னு உட்கார்ந்துப் பொழுது போகலை, அதனால ‘ட்ரஸ்ட்ல சேவை செய்யலாம்னு இருக்கேன்..! என்று அறிவித்துவிட்டுக் கிளம்பிக் காஞ்சீபுரம் வந்தவர்தான்.

அதன்பின் நாள் கிழமை, நல்லது கெட்டது என்று எதற்கும் அவர்களும் அழைக்கவில்லை. இவரும் போகவில்லை.

காஞ்சீபுரத்தில், ட்ரஸ்ட் கட்டடத்துக்கு அருகாமையில் ஒரு பத்துக்கு பதினைந்து அறையே பாண்டுவுக்கு உலகமானது.

అఅఅ

பாண்டுரங்கன் வியலூர் பஸ்ஸ்டாண்டில் இறங்கினார்.

இன்று, வரதராஜப் பெருமாள் கோவிலில் வசந்த உற்சவத் தொடக்கமென்பதை அங்கே கட்டப்பட்டிருந்த, பிரம்மாண்டமான ‘ஃப்ளக்ஸ் மூலம் அறிந்து மகிழ்ந்தார்.

பத்து ஆண்டுகளுக்கு முன் வியலூர் வாசியாகக் கண்டுகளித்த வசந்த உற்சவத் தொடக்கம் மனதில் விரிந்தது.

உற்சவம் தொடங்கும் நாளில் சேகண்டி, மேளதாளம் முழங்க, பக்தர்களின் கோவிந்தா கோஷத்தின் பின்னணிணில், கைத்தலத்தில் கட்டப்பட்ட உற்சவரை வையாளி போட்டபடிச் சுமந்து வந்து பலிபீடத்தின் முன் ஆயக்கால்களில் வைத்து நிறுத்துவார்கள்.

வாரைக்குத் தோள் தரும் பக்தர்களுக்குத் தோள் தருவதுதானே ஆயக்கால்.

అఅఅ

திர் வேட்டுக்கள் மற்றும் பக்தர்களின் ‘கோவிந்தா... கோஷங்கள் வானைப் பிளக்கக், காவி நிறத்தில் பளிச்செனப் பறக்கும் கருட பகவான் உருவம் வரையப்பட்ட, மஞ்சள் வஸ்திரக் கொடியை, பட்டாச்சாரியார் பறக்கவிடக், கொடியேற்றத்துடன் உற்சவம் துவங்கும்.

அதைத் தொடர்ந்து, நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேருவார் பெருமாள்.

பெருமாளின் ஏகாந்தமான திருமஞ்சனத்துக்காக, பத்தாறு வேட்டிகளையோ, நூல் புடவைகளையோ, அல்லது புடவையும் வேட்டியும் கலந்தோ, கையில் கிடைத்ததைக் எடுத்து, நான்குத் தூண்களையும் இணைத்து, இரண்டு மூன்றுச் சுற்றுக்கள் போட்டு மறைப்புக் கட்டுவார்கள்.

‘ஏன்?, ஒருச் சுற்று மறைப்புப் போதாதா...?’ என்றுக் கூட நீங்கள் நினைக்கலாம்.

சுற்றும்போது நீங்கள் வந்து நேரில் பார்த்தால், இரண்டு மூன்றுச் சுற்றுக்களுக்கானக் காரணம் உங்களுக்கேப் புரிந்துவிடும்.

முதல் சுற்றில் ஆங்காங்கே வாய்த் திறந்து, நாக்கைத் தொங்கவிட்டாற்போல் தெரியும் கிழிசல்களை, அநேகமாக, இரண்டாம் சுற்று மறைக்கும்.அதிலும் மறையாதக் கிழிசல்களை மூன்றாம் சுற்று நிச்சயமாக மறைத்துவிடும் என்பதுதான் ஐதீகம்.

అఅఅ

றைப்புக்குள் வைத்துக் கைத்தலக் கட்டுக்களை அவிழ்த்துப் பெருமாளை, மண்டபத்தின் மையத்தில் கிடத்தப்பட்ட அபிஷேக தாரையின் நடுவில் ஏலச் செய்தபின், மறைப்பைத் தூக்கிப் பிடித்துக்கொண்டுக் கைத்தலத்தை வெளியேற்றுவார்கள்.

அதற்குப் பின் பெருமாளுக்கு ஏகாந்தமாகத் திருமஞ்சனம் நடைபெறும்.

திருமஞ்சனத்தின் போது, வேத கோஷ்டியினர் ஒரு புறம் நின்று புருஷசூக்தம், ஸ்ரீசூக்தம் போன்றவைகளை ஸ்வரத்தோடு முழங்குவார்கள். ஆழ்வார் பாசுரங்களை அதற்கே உரித்தான தொனியில் பாடிப் பரவசப்படுத்துவார்கள் பிரபந்த கோஷ்டியினர்.

திருமஞ்சனம் முடித்த பிறகு மீண்டும் கைத்தலத்தை உள்ளே வாங்கி, அதில் உற்சவரை வைத்துக் கட்டியபின், சுற்றிலும் கட்டியிருந்த மறைப்புகளை அகற்றுவார்கள்.

பட்டாச்சாரியார், சிரத்தையாக சோடச உபசாரங்கள், தீபாராதனை எல்லாம் விசேஷமாக முடித்ததும், கைத்தலப் பெருமாளை நான்கு பேர் தூக்கிக்கொண்டு வாகனம் வைக்கப்பட்டிருக்கும் அலங்கார மண்டபத்துக்குச் செல்வார்கள்.

అఅఅ

லங்கார மண்டபத்தில், வாகன பீடத்தின் கால்களுக்கடியில் கிடத்தப்பட்ட வாரைகளோடுப் பிணைத்து, தாம்புக் கயிற்றால் குறுக்கும் நெடுக்குமாய் இறுக்கமாய் வரியப்பட்டு, அன்றையப் புறப்பாட்டுக்கான வாகனம் தயாராக நிற்கும்.

கைத்தலத்தில் கட்டப்பட்டக் கட்டுக்களை அவிழ்த்து, கனமாய்க் கனக்கும் ஐம்பொன் உற்சவரை மார்போடு சேர்த்து அணைத்துத் தூக்கி வாகனத்தின் மேல் அமர்த்துவார் பட்டாச்சாரியார்.

வாகனத்தில் பெருமாளை ஏற்றியதும், அலங்கார மண்டபத்தின் முகப்பில் ஓர் ஓரமாய் தொங்கிய திரைச் சீலையை இழுத்து விட்டதும், திரைச்சீலையில் வரையப்பட்ட வைணவத் திருச்சின்னங்கள் ஜொலிப்பதைப் பார்க்கலாம். 

சாட்டை மாலை, சரம், கதம்பம், திருத்துழாய் மாலை, வாழை நார்ப் பட்டைகள், வெட்டிவேர்க் கொத்துகள், கருப்பு, சிகப்பு அரணாக்கயிறுகள், மூங்கில் சிம்புகள், துய்யாச் சுருள்கள், ஜிகினாக் காகிதங்கள், கத்தரிக்கோல்கள், கோணூசி, சணல், நூல் கண்டுகள், பளபளக்கும் கவரிங் நகைகள், மூட்டை மூட்டையாகத் மடித்த வாடையோடுக் கூடியப் பழைய வஸ்திரங்கள், திண்டுகள், பட்டுப் பீதாம்பரங்கள், அபயஹஸ்தம், வரதஹஸ்தம், வெண்ணைத்தாழி, சாட்டை, இப்படி அந்தந்த, அலங்காரத்துக்கத் தேவையான, தேவையற்ற அனைத்தும் சிதறிக்கிடக்க, அலங்காரம் அமர்க்களப்படும்.

అఅఅ

“ஏய் இதைப் பிடிச்சிக்கோ...!;

அந்தக் கத்தரிக் கோலை எடு...!;

இன்னும் கொஞ்சம் டைட்டாக் கட்டு...! தொள தொளனு ஆடறது பாரு...!;

“ஏய்... எட்ட நின்னுப் பாத்துச் சொல்லு...!”

“மேலண்டக் கை கொஞ்சம் தூக்குங்கோ...!”

“ரொம்ப தூக்கிட்டேள்...! கொஞ்சம் தாழ்த்துங்கோ...!”

“ம்...!ம்...!ம்...!.. அப்படியே வெச்சிக் கட்டுங்கோ...! கச்சிதமா இருக்கு...?”

“வாரை போட ஆசாமியெல்லாம் வந்துட்டாளா?’

குடைல ரெண்டு கம்பி விட்டுப் போயிருந்துதே, அதை சிம்பு வெச்சிக் கட்டியாச்சா...?”

இப்படி எட்டுகண் விட்டெறிந்துப் பேசியபடி, பட்டாச்சாரியார் அலங்காரத்தை முடிப்பார்.

అఅఅ

லங்காரம் முடியப் போகும் நேரம், வாகன மண்டபத்துக்கு வெளியே, ஒரு எண்ணைப் பிசுக்கு ஏறிய ஸ்டூலில் அடுக்கு தீபாராதனை ஏற்றித் தயாராய் வைத்திருப்பார் திருவிழாவிற்காக வரவழைக்கப்பட்டச் சிறப்பு அர்ச்சகர்.

பக்கத்தில் கிடக்கும் விசிப் பலகையில் , ஈயம் பல்லிளித்த, பித்தளைத்தாம்பாளத்தில் அடுக்கப்பட்டப் பட்டைச் சோறு, ஈரத் துணி போட்டு மூடப்பட்டிருக்கும்.

அந்தத் துணியைப் பார்க்கும் எவருக்கும், ‘அதை வாங்கித் துவைத்துக் காயவைத்துக் கொடுத்துவிட்டு வரலாமா...?’ என்றுதான் தோன்றும்.

பட்டாச்சாரியார் மணி அடிக்கும்போது பிரசாதத் தட்டின் மேல் போர்த்தப்பட்டத் துணியைத் லேசாகத் தூக்கிப் பெருமாளுக்குக் காட்டுவதற்குத் தயாராக நிற்பார் கோவில் பரிசாரகர்.

சற்றுத் தள்ளி தீவட்டி பிடித்து நிற்பான் வெள்ளிங்கிரி.

అఅఅ

ப்படி மலரும்நினைவுகளோடு, கோவிலை வந்தடைந்தார் பாண்டு.

அலங்கார மண்டபத்தில், ஸ்வாமிப் புறப்பாட்டுக்கெனப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட, நான்கு டயர்கள் பொருத்தப்பட்ட வண்டியின் மேல் கருடவாகத்தில் அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருந்தார் பெருமாள்.

எட்ட எட்ட பெயருக்குக் கட்டப்பட்ட ஒரு சாட்டை மாலையும், சில ஆரங்களும் மட்டும் பெருமாள்மேல் தொங்கின.

கோவிந்தா கோஷத்துடன் சுற்றிலும் பக்தர்களின் கூட்டம் இல்லை.

அங்கொருவர் இங்கொருவருமாகத்தான் இருந்தார்கள். பட்டாச்சாரியர் உட்பட தெரிந்த முகம் ஒன்று கூட இல்லை.

అఅఅ

வாகனமண்டபத்தில் வரிசையாகத் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்த அனைத்து வாகனங்களையும் பார்த்தார்.

வாகன மண்டபத்தின் கடைசீ அங்கணத்தில், தற்போது உபயோகத்தில் இல்லாத, ஆயக்கால்கள் பராமரிப்பின்றிக் கிடந்தன பாண்டுரங்கனைப் போலவே.

అఅఅ

ங்கிருந்து நகர்ந்து, தாயார் சந்நதியருகே சென்றார்.

“யாரு..? பாண்டுவா..” – சற்றேக் கூன் விழுந்து விட்டப் பண்டரிபாய் தலையை நிமிர்த்திக் கேட்டாள்..

“பாண்டுவேதான்.. நீங்க எப்படி இருக்கேள்..?

“இருக்கேன்.. அதான் பார்க்கறியே..? என்று சற்றே நிறுத்தினாள்.

“......... – உரையாடல் இன்றிச் சில கனங்கள் நகர்ந்தன.

“ஏண்டாப் பாண்டு, சாட்டை வெங்கடாசலத்தை திருவல்லிக்கேணில பார்த்துப் பேசினதையெல்லாம் சொன்னான். நான் கேக்கறேன்னு தப்பா எண்ணாதே. நீ இப்படிப் பண்ணியிருக்கக் கூடாது.!– பீடிகை பலமாக இருந்தது.

“என்ன பாட்டி சொல்றேள்..?

“சொல்றேன் சொரக்காய்க்கு உப்பில்லேனு..- என்று ஒரு வெட்டு வெட்டியபடியே, உன்னையும் உன் அண்ணன் குழந்தைகளையும் ஆத்மார்த்தமாப் பாத்துண்டாளே, லட்சுமி.. அவளை அம்போனு விட்டுட்டு உன் காரியமாச்சுன்னு போயே போயிட்டயே ஞாயமா?

అఅఅ

திர்ந்தார் பாண்டு. “லட்சுமி இப்போ எங்கே இருக்காப் பாட்டி...

பாடசாலையையும் இழுத்து மூடினதுக்கப்பறம் நிற்கதியா நின்ன அவளை, என் வீட்டு அவுட் ஹவுஸ்ல வந்து இருடீன்னேன். காலத்தை ஓட்டிண்டு என்னோடத்தான் இருக்கா.

இவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, தாயார் சந்நதியில் இருந்து வெளியில் வந்தாள் லட்சுமி.

இடைப்பட்டப் பத்து வருடங்களில் சற்றே தளர்ந்திருந்தாலும், முகத்தில் பழையப் பளபளப்பு இருந்தது.

பாண்டுவைப் பார்த்ததும், “சௌக்யமா..? குழந்தைகள் எப்படி இருக்கா..?– என்று கேட்டாள் லட்சுமி.

ஒரு கனம் இருவர் கண்களும் கலந்தன.

“பத்து மாசம் சுமந்து பெத்தவாளையே, பிழிஞ்ச சக்கையாப் போட்டுடற உலகம்தானே இது. ‘பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுன்னு தெரியாமலாச் சொன்னா..;

 “வேரையே வெட்டி வீசற, உலகத்துல, வேருக்குப் பக்கமாக் கொழுகொம்பா நின்ன உங்களைத் தூக்கி எறிஞ்சது ஒண்ணும் அதிசயமில்ல. இப்பவாவது அதை புரிஞ்சிக்கிட்டுச் ரெண்டுபேரும் சூதானமா நடந்துக்கிட்டாச் சரி.. என்ற பண்டரிபாய், சில கனங்கள் மௌனித்துப் பிறகு தொடர்ந்தாள்.  

பெறாமலே ரெண்டு பிள்ளைகளை வளர்த்த நீங்க ரெண்டுபேரும், கடைசீக் காலத்துல ‘எனக்கு நீ, உனக்கு நான்’னு ஏன் இருக்கப்படாதுங்கறேன்.!

சொல்லிவிட்டு அவர்களின் அந்நியோன்யத்துக்குத் தடையாக இல்லாமல், அப்பால் நகர்ந்தாள் பண்டரிபாய்.

லட்சுமியும், பாண்டுவும், எனக்கு நீ .. உனக்கு நான்.. என்று தங்கள் கண்களால் பேசி உறுதிப்படுத்திக் கொண்டிருந்ததை ஆமோதித்தாற்போல், தாயார் சந்நதியிலிருந்து காண்டாமணி ஒலித்தது.

అఅఅ

 ........
.......... 
.....
.......
24/11/2024
ஜூனியர் தேஜ் சார், வணக்கம். 
தினமணி கதிரில் வெளியான தங்களின் ’ஆயக்கால்’ கதை படித்தேன்…  

அழகான பழைய நினைவுகளுடன்…. தன் அண்ணன் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக தன் ஆசாபாசங்களைத் துறந்து… ஆன்மீக நெறிக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பிரம்மச்சாரியாய் வாழும் பாண்டுரங்கன் கதாபாத்திரமும்…. லட்சுமியின் கதா பாத்திரமும் கனகச்சிதம்.
 அந்தக் கால பெருமாள் புறப்பாடு… இக்காலத்தில் அந்த சுவாசஸ்யமின்மை…. ஏதோ பேருக்கு நடக்கும் உற்சவ புறப்பாடுகள் என்பதையெல்லாம் மிக அழகாக எடுத்துரைத்த விதம் அருமை. அதிலும் சுவாமிக்குப் படையல் வைத்திருக்கும் தட்டின் அலவமும்,அதை மூடியுள்ள அழுக்குத்துணியும் நாம் அன்றாடம் கோவிலில் பார்க்க்க்கூடிய ஏற்றுக் கொள்ள முடியாத நிகழ்வுதான்… 

இதை எப்படி அங்குள்ள அர்ச்சகர்கள் மனசாட்சியில்லாமல்… பக்திஉணர்வில்லாமல்… ஏதோ கடனே… என்று நடந்து கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை… இக்கதையைப் படிக்கும் இறைபணியில் உள்ளவர்கள் தங்களைத் திருத்திக் கொள்வது நல்லது. 

கதையின் முடிவில் தனிமரமாக வாழும் பாண்டுரங்கன், லட்சுமியை ஒருவருக்கொருவராய் வாழ தெய்வ சன்னிதியில் வைத்து மங்கல மணியோசையுடன் வாழ்த்தி ஒரு புதிய வாழ்க்கை ஆரம்பமானது என்பது மகிழ்ச்சியான முடிவு. மொத்தத்தில் இச்சிறுகதை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது… வாழ்த்துகள் சார்…
- க.விஜயபாஸ்கர், திருச்சி. 

(இந்தக் கதை உருவான விதம்… குறித்து எழுதினால் அது பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்… இக்கதையைப் பொறுத்தவரையில் நிறைய தகவல்கள் சேகரித்துள்ளீர்கள்… நேரடியாகப் பார்த்துள்ளீர்கள்… அல்லது படித்துள்ளீர்கள் என்பது புரிகிறது. அந்தக் கதையை சொன்னீர்களானால்.. அதாவது அக்கதைக்கான தங்களது உழைப்பு… மெனக்கெடல்… என்று பலவற்றைப் பகிர்ந்துகொள்ளும் போது, அது நமது எழுத்தாளர் குழுமத்தில் உள்ள என் போன்ற சிலருக்கு  பயனுள்ளதாக இருக்கும் சார்…)
.........

 ஆனந்த் குமார் சார். வேத பாடசாலையில் சமையல் செய்து போடுவது தான் அவள் வாழ்வாதாரம்.


பாண்டுரங்கனுக்கு அவள் மேல் ஒரு மோகம் இருந்தாலும் (கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மனோபாவம் எல்லாம் தெரிந்தால் தான் இந்த இடத்தை ரசிக்க முடியும். ) தடுமாறிவிடக் கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். அவளுடைய நிலையும் அதேதான்.


தன் வீட்டில் குழந்தைகளை பார்த்துக் கொண்ட அவளுக்கு ஏதேனும் அவப்பெயர் வவந்துவிடக்கூடாது என்று கருதுகிறார் பாண்டு.

அண்ணன் குழந்தைகளை தன் குழந்தையாக பாதித்து வளர்ப்போம் பாண்டுக்கு ஏதும் சிக்கல் வந்து விடக்கூடாது என்று நினைக்கிறாள் லட்சுமி.

 

இது ஒரு பரஸ்பர விட்டுக் கொடுத்தல்.

அவளை ஏமாற்றி விட்டோ, துரோகம் செய்துவிட்டோ பாண்டு சென்றுவிடவில்லை. 

லட்சுமியும் பாண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக என்றும் கருதியதே இல்லை.

பத்தாண்டுகள் கழித்து, வயது முதிர்ச்சியம் அனுபவ முயற்சியும், சமுதாய மாற்றங்களினாலும் ஏற்படும் மாற்றங்கள் தான் கதை முடிவு.

இதே சூழல் 10 ஆண்டுகளுக்கு முன் சாத்தியம் இல்லை.

மிக நுட்பமான விஷயங்கள் ..

 நாற்பதாண்டுகளுக்கு முன்னால் மனதை கொண்டு சென்று அன்றைய அக, புறச் சூழ்நிலையின் பின்னணியில் இதைப் படிக்கும் பொழுதுதான் இந்தச் சிறுகதையின் வெளிச்சம் தெளிவாகப் புரியும்.

இன்று, இது போன்ற சம்பவங்கள் மிகவும் சாதாரணமாகத் தெரியலாம். நாற்பது ஆண்டுகளுக்கு முன் இந்த நடைமுறை ஒரு பெரிய புரட்சிகரமான விஷயமாகும்.

ஜூனியர் தேஜ்

.......

........


......





Comments

  1. ஜூனியர் தேஜ் அவர்களின் படைப்பான ஆயக்கால் சிறுகதை மிக அற்புதமான படைப்பு அதில் நீதிமன்ற நடைமுறைகள் பற்றிய ஆழ்ந்த அறிவு புலப்படுகிறது அது மட்டுமல்லாது நிகழ்ந்த சம்பவம் போன்று புனையப்பட்ட கதை அவரது அனுபவத்தை வெளிப்படுத்துகிறது
    மனமார்ந்த வாழ்த்து மற்றும் பாராட்டு
    GSR

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பான விமர்சனத்துக்கு மிக்க நன்றி சார்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

153. மனிதம் (காற்றுவெளி - ஆடி 2024)