163. தோழர் (தமிழ்ப் பல்லவி 2023))
தோழர் (சிறுகதை)
ஜூனியர்தேஜ்
(தமிழ்ப் பல்லவி
2023 கவிஞர் கார்முகிலோன் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை)
“டொக்... டொக்... டொக்... டொக்......;
தட்... தட்... தட்... தட்... தட்... தட்... தட்...;
ச்ஸ்... ச்ஸ்... ச்ஸ்... ச்ஸ்... ச்ஸ்... ச்ஸ்....;
ர்...ர்ர்...ர்ர்ர்... ர்...ர்ர்...ர்ர்ர்... ர்...ர்ர்...ர்ர்ர்........”
ஆணி அடிப்பது;
‘சன்-மைக்கா’ ஒட்டிய பின், அதன் மேல் கையால் தட்டிப் படிமானம்
பார்ப்பது;
வட்ட வடிவிலானப் பட்டைச்-சீலையை, இயந்திரத்தில் பொறுத்திப் பல்வேறு
கோணங்களில் அழுத்தங்கள் கொடுத்துத் தேய்த்துத்
தேய்த்து ஓரம் மழுக்குவது; வழுவழுப்பாக்குவது;
மின் வாளால் அறுத்துத் துண்டிப்பது...;
ட்ரில்லரால் துளை போடுவது...;
இப்படிச் சத்தங்கள், தனித்தனியாகவோ, ஒன்றிணைந்தோ தொடர்ந்து மாடியிலிருந்து
கேட்டுக் கொண்டேயிருந்தன.
‘கண்காணிக்க ஆட்கள் இல்லை!’, என்பதால், உட்கார்ந்துக்கொண்டுக் கதை பேசுவது;
வெற்றிலை, புகையிலை, மாவா என எதையாவது மென்று கொண்டும் துப்பிக்கொண்டும்
பொழுது போக்குவது;
செல்போன் பேசிப் பொழுதைப் போக்குவது;
இன்னும் வேறுவேறு விதங்களில் வேலையை வளர்ப்பது,
இப்படியெல்லாம் இல்லாமல், அர்ப்பணிப்புடன் வேலை செய்யும் தச்சர்கள்
குழு அது.
அந்தக் குழுவின் மேஸ்திரி ஜீவானந்தம்.
நேர்மையாகவும், திறமையாகவும் வேலை செய்து, ஊர் மக்கள் மத்தியில்
நல்ல பெயர் சம்பாதித்து வைத்திருந்தார் அவர்.
பாதி வேலையில் சம்பளம் அதிகம் கேட்டு வேலை நிறுத்தம் செய்வது;
சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று நடந்து கொள்வது;
தரம் குறைத்துப் பொருள் வாங்கிக் கமிஷன் அடிப்பது;
இப்படி, ‘அகா-சுகா’ வேலையெல்லாம் செய்யவே மாட்டார் மேஸ்திரி
ஜீவானந்தம்.
தாயைப் போல்
பிள்ளை என்பதைப் போல், மேஸ்திரியைப் போலவே அவர் குழுவினரும்.
‘நேர்மைக்கு எப்போதுமே சமுதாயத்தில் வரவேற்பு இருக்குமல்லவா..!’
ஊரில் எத்தனை எத்தனையோ தச்சர் குழுக்கள் இருந்தாலும், ‘ஜீவானந்தம்
வரும்போது செய்து கொள்ளலாம்’ என்று வேலையைப்‘ போட்டுவைத்த’ கஸ்டமர்கள் நிறைய உண்டுஅந்த
ஊரில்.
ஜீவானந்தம் ‘குரூப்’க்கு என்றுமே ஏக‘டிமாண்ட்’தான்.
ஷோகேஸ் அமைத்தல்; லாஃப்ட்டுகளுக்குக் கதவு போடுதல்; சுவற்றோடு
இருக்கும் அலமாரிகளுக்குக் கதவுகள் ஆடவிடுதல், மாடூலர் கிச்சன் அமைத்தல், வரவேற்பறைக்கும்,
படிப்பறைக்கும் மேசை-நாற்காலிகள், டீப்பாய் , போன்றவை செய்தல்; பர்மா தேக்குப் பலகையில்
ஊஞ்சல் ஆடவிடுதல்.......... இப்படி நிறையவேலைகள் இருந்தன ‘கௌசிகா இல்லத்தில்’.
முக்கியஸ்தர்களிடமெல்லாம் சொல்லி வைத்து, எப்படியோ ஜீவானந்தம்
கோஷ்டியைப் பிடித்துவிட்டாள் கௌசிகா.
குறிப்பிட்ட நாளில் தச்சுவேலைத் தொடங்கித், தொடர்ந்தது.
அர்ப்பணிப்புணர்வுடன், வித்துமுளைக்கும் தன்மைப் போல, ஒவ்வொன்றாகச்
செய்து, எல்லாவேலைகளையும் நெருக்கிவிட்டார் ஜீவானந்தம்;
கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த வேலை;
இன்றோடு முடிவுக்கு வருகிறது.
‘தொழில் முறையில், தச்சுவேலை உறவு, இன்றோடு முடிந்துவிட்டாலும்,
தோழர் ‘கௌசிகா’வின் தோழமையைத் தொடரவேண்டும்.!’
மனதில் நினைத்துக் கொண்டார் மேஸ்திரி ஜீவானந்தம்.
அந்த அளவுக்கு கௌசிகாவின் மீது ஒரு ஈடுபாடு வந்துவிட்டது மேஸ்திரிக்கு.
கௌசிகா, தன்னை நடத்திய விதத்தில் மிகவும் ‘இம்ப்ரஸ்’ ஆகிவிட்டார்
அவர்.
விவரம் தெரிந்த
நாள் முதல், தச்சுவேலைச் செய்து வருபவர் ஜீவானந்தம்.
தந்தையிடம்தொழில்கற்றவர்;
தொழில்மீதுபக்தியும், மரியாதையும்உள்ளவர்;
ஓரிரு மாதங்கள் ஆசாரியோடு போய்விட்டுத், தன்னை மேஸ்திரி என்று
பிரகடனப் படுத்திக் கொண்டு தொழில் செய்யும் மேஸ்திரிகளைப் போன்றவரல்ல ஜீவானந்தம்.
வருடக் கணக்கில் தந்தையிடம் தொழில் கற்றபிறகு, திறமை மிக்க வேறு
சில ஆசாரிகளிடமும், சித்தாளாகப் சிலவருடங்கள் வேலை செய்துத் தொழில் நுணுக்கங்களைக்
கவனமாகக் கற்றுக் கொண்டவர்;
வாய்ப்பு வந்த போதெல்லாம் தன் திறமையை நிரூபித்து, மெல்ல மெல்ல
உயர்ந்து, ஆசாரியாகி, நிபுணத்துவம் பெற்றுத், தொடர்ந்து, நேர்மையான உழைப்பால், படிப்படியாக
மேஸ்திரி நிலைக்கு உயர்ந்தவர் ஜீவானந்தம்.
‘ஸ்கில்டு’ ஒர்க்கர் அவர்.
தன் கீழ் வேலைப் பார்க்கும், பத்துப் பதினைந்து ஆசாரி, சிற்றாள்களுக்குச்
சம்பளம் கொடுக்கும் தொழிலதிபர் நிலைக்கு உயர்ந்துவிட்டார் ஜீவானந்தம் மேஸ்திரி; என்றாலும்,
ஆசாரிகளோடு ஆசாரியாக உட்கார்ந்து தினமும் தச்சு வேலைகளைச் செய்வார்.
“பழக்கம் விட்டுட்டா துல்லியம் போயிரும் தோழரே…!” என்பார் அடிக்கடி.
அரை மணி நேர வேலையானாலும் , ஒரு மணி நேரம் உட்கார்ந்து உளி தீட்ட
வேண்டும் என்பது அவர் சித்தாந்தம்.!
‘உளி, மரத்தைக் கொத்தும்போது, நறுக்குத் தெறிக்கணும் தோழரே!”.
வாய்க்கு வாய் சொல்வார் ஜீவானந்தம்.
“வாங்க...;
தோழர் ஜீவானந்தம்..!” வாய் நிறைய அழைத்தார் கௌசிகா.
‘நாம் காண்பது கனவா, நனவா?’ சந்தேகம் வந்தது ஜீவானந்தத்துக்கு.
இது வரை எந்த ‘ஹவுஸ்-ஓனரும்’ தன்னை இப்படி விளித்ததில்லை.
மகிழ்ச்சியாக இருந்தது அவருக்கு.
‘தோழர்!’ என்றழைத்த கௌசிகா ‘மேடம்’மிடம் மரியாதை அதிகரித்தது
அவருக்கு.
ஒருவர் மீது மரியாதை வந்து விட்டால், பற்றும் பாசமும் உயர்வது
மனித இயல்பாயிற்றே.
தோழர் கௌசிகாவின் வீட்டு வேலைகளை இருநூறு சதவிகித ஈடுபாட்டோடு
கவனித்தார் ஜீவானந்தம்.
ஒரு நாள் கூட இடைவெளி விடாமல், தொடர்ந்து வேலைகளைச் செய்துத்
தந்தார்.
பலகைகள், சட்டங்கள், ஃப்ளைவுட் ஷீட்கள், சன்மைக்கா, நிலைக் கண்ணாடிகள்,
போன்ற பொருட்களையெல்லாம் ‘ஹோல்சேல்’ விலையில் தரமாக வாங்கிப் போட்டுக் கவனமாகச் செய்ததால்
ஒவ்வொரு வேலையும் கண்ணைக் கவரும் ஃபினிஷிங்’ கோடுஅமைந்திருந்தது.
செலவுகளைக் குறைத்தும், தரமாகவும், நேர்த்தியாகவும், பார்த்துப்
பார்த்து வேலை செய்துத் தந்தார்.
மேஸ்திரியை மட்டுமல்ல, அனைதுத் தொழிலாளர்களையும், ‘தோழரே!’ என்றுதான்
அழைத்தாள் கௌசிகா;
அதுமட்டுமில்லை;
வேலை செய்பவர்களுக்குத் தினமும் ‘ஸ்நாக்ஸ், டீ’ இதெல்லாம், தன்
செலவில் பிடிவாதமாக வாங்கித்தந்தாள்;
மேஸ்திரியைப் போலவேத் தொழிலாளர்களுக்கும் கௌசிகாவின்மீது மரியாதை
அதிகரிக்கத்தான் செய்தது.
இன்றோடு ‘கௌசிகாஇல்லத்தில்’, வேலைமுடிவுக்கு வருகிறது.
‘ஃபினிஷிங் டச்’ செய்துக் கொண்டிருந்தார்கள் தொழிலாளர்கள்.
வேறு இரண்டு ‘சைட்’ களில் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்ததால்
அதையெல்லாம் பார்வையிட்டு, வேலைகளை முறைப்படுத்திக் கொடுத்து விட்டு, ஜீவானந்தம் ‘கௌசிகா
இல்லத்திற்கு’ வரும்போது வழக்கத்தை விட சற்றே அதிக நேரமாகிவிட்டது.
வழக்கமாக, “தோழர் ஜீவா, வாங்க” என்று வாயிற்படியிலேயே நின்று,
வாய் நிறைய வரவேற்பாள் கௌசிகா;
சற்றேக் காலம் தாழ்த்தி வந்ததால், இன்று வீட்டு முகப்பில் மேஸ்திரியைச்
சந்திக்கவில்லை கௌசிகா.
வாயிற்படி அருகே மூன்று நான்கு ஜதைச் செருப்புகள் கிடந்தன;
வழக்கமாக வரும் ‘தோழர் கௌசிகா’ வின் அப்பா, அம்மா, மாமா இவர்கள்தான்
வந்திருக்கிறார்கள்.’ என்பதை அனுமானித்தார் ஜீவா.
மெதுவாக அடிப்பதும், லேசாகத்தட்டுவதும், கவனமாகத் தேய்ப்பதுமாகச்
சின்னச் சின்னச் ஓசைகள் வீட்டு மாடி போர்ஷனிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்தன.
போர்ட்டிகோகடந்தார்.
பக்கவாட்டில் இருந்த மாடிப் படியில் ஏறினார் ஜீவா.
வீட்டுக்குள்ளே, உரத்து ஒலித்த, உரையாடல் தெளிவாய்க் காதில்
விழுந்தது.
ஆசாரி வேலைச் சம்பந்தமாகப் பேச்சு இருந்ததால், ‘என்னதான் பேசுகிறார்கள்’
என்பதைக், கவனமாகக் காதில் வாங்கினார் ஜீவா.
“கௌசி...”
“என்னப்பா?”
“இதென்ன ஆவடையார் கோவில் திருப்பணிப் போல மாசக்கணக்குல நடக்குது?”
சிரித்துக் கொண்டே கேட்டார், அப்பா.
பதிலுக்குச் கலகல வெனச் சிரித்தாள் கௌசிகா.
“என்னடி சிரிக்கறே? நானும் உன் அம்மாவும் தினமும் உன் ஏமாளித்தனத்தைப்
பத்திப் பேசிப் பேசி, நினைச்சி நினைச்சிச் சிரிப்போம்!”
கௌசிகாவின் வாயைப் பிடுங்கினார் அப்பா.
“எதுல ஏமாளித்தனத்தைக் கண்டீங்க?”
“ஆசாரிவேலை, பெயிண்ட்வேலை செய்யறவங்களுக்கெல்லாம், தினமும் பட்சணம்
என்ன? டீ என்ன?....”
அபிநயத்துடன் ராகம் இழுத்தாள் அம்மா.
இப்போது, முன்னிலும் பெரிதாகச் சிரித்தாள் கௌசிகா.
“அப்பா, இது ஏமாளித்தனம் இல்லே. சாமர்த்தியம்…!”
“என்னடீ சொல்றே?”
“மேஸ்திரி கூட, டீ காபி எதுவும் வேண்டாம்னுதான் சொன்னாரு; நான்தான்
பிடிவாதமாத் தருவேன்’னு சொன்னேன்;
ரெண்டு வேளையும் டீயும், ஸ்நாக்ஸும் தர்றதுக்கு ஒரு காரணம் இருக்குப்பா!”
“காரணம் இருக்கா? நல்லாச்சமாளிக்கறே நீ! என்னதான் காரணம் சொல்லேன்?”
நான் கொடுக்கறதை சாப்பிடறதுனால, சாப்பிட்ட நன்றிக்காக அதிகமா
வேலை செய்யறாங்க; மூணு ஆள் வேலைய ரெண்டு ஆள் செய்யறாங்கப்பா…”
கௌசிகாவின்
உள்ளொலியைக் காதில் வாங்கிய ஜீவானந்தத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது.
‘தொழிலாளர்களின் நன்றியறிதலைத் தனக்குச்சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும்
சாதாரண முதலாளிவர்க்கத்தவரைப் போய் நான் எப்படியெல்லாமோ உயர்வாய் நினைத்து விட்டேனே!’
கழிவிரக்கம் வந்தது ஜீவானந்தத்துக்கு.
“சின்ன மீனைப் போட்டு பெரியமீனை எடுக்கறே’னு சொல்லு..!” சிரித்துக்கொண்டே
கேட்டார் அப்பா.
“எக்ஸாட்லி..”– இது கௌசிகா.
“ஏண்டீ கௌசி, அதென்ன மேஸ்திரிய, ஆசாரிய, பெயிண்டர் கோஷ்டிய,
சித்தாள்களெ, பால்காரனெ, அயர்ன்காரன, இப்படி எல்லாரையும் ‘தோழரே’னு அழைக்கறே..? இதென்னப்
புதுப்பழக்கம்?”
அம்மா கேட்டாள் இயல்பாக.
“அதுவா...?” சிரித்துக் கொண்டேச் சொல்லத் தொடங்கினாள் கௌசிகா.
மாடிப்படிக்கட்டில்
காதைத் தீட்டிக் கொண்டார், மேஸ்திரி ஜீவானந்தம்.
“‘தோழர்’ங்கற வார்த்தையை உணர்வுபூர்வமா நேசிக்கற இடது சாரிச்
சிந்தனைக்காரர்ம்மா இந்த மேஸ்திரி;
அவர் மட்டுமில்ல, அவர் கோஷ்டில இருக்கற எல்லாருமே அந்த எண்ணம்
உடையவாதான்;
,இடதுசாரிச் சிந்தனைக்காரா ‘தோழர்’ங்கறதை வெறும் சொல்லாப் பாக்க
மாட்டாங்க.. மனிஷாளோட அடையாளக் குறியீடாப் கொண்டாடுவாங்க அதை.”
கௌசிகாவின் பேச்சைக் காதில் வாங்கியபோது மனசுக்கு இதமாக இருந்தது
ஜீவாவுக்கு.
‘எவ்வளவுத் தெளிவாக, இடது சாரிகளின் இயல்பைத் தெரிந்து வைத்திருக்கிறார்
இந்தப் பெண்..!’
ஆச்சரியத்தில் உரைந்தார் ஜீவானந்தம். தொடர்ந்துப் பேச்சைக் காதில்
வாங்கினார்.
“இன்டீரியர் டெக்கர்ஸ் ஆபீஸ்ல, இந்த மேஸ்திரியப் பத்தியும்,
டீம் பத்தியும் விசாரிச்சு, இவங்களோட இடதுசாரி நேச்சர் பத்தியும் தெரிஞ்சிக்கிட்டேன்;
ஒரு திட்டம் போட்டேன்; வேலைக்கு உள்ளே நுழைஞ்ச நேரத்துலேந்து
‘தோழரே’னு அழைச்சேன். எல்லாரையும் அசத்தினேன்;
கிட்டத்தட்ட ரெண்டு மாசத்து வேலை. ஒண்ணரை மாசத்துல முடிஞ்சிருக்கு…!”
சொல்லிவிட்டுச் சிரித்தாள்.
ஒரு சித்தாந்தத்தை
சிறுமைப்படுத்திவிட்டதற்கான வெளிப்பாடாய் இருந்தது அந்தச் சிரிப்பு.
“சாமர்த்தியசாலிடீ நீனு.!” அம்மா புகழ்ந்தாள்.
தோழர்’னு கூப்பிட்டதெல்லாம், நேத்தோட சரி. இனிமே யாரையும் அப்படிக்
கூப்பிட மாட்டேன்!” சொல்லிச் சிரித்துக் கொண்டே வெளியே வந்தாள் கௌசிகா.
ஜீவானந்தத்துக்கு மனசு கஷ்டமாக இருந்தது.
இந்தியாவில் முதல் தொழிற்சங்கங்கத்தை உருவாக்கி, அதன் தலைவரா
இருந்து ‘காம்ரேட்’டுங்கற ரஷ்யப் பதத்தை, ‘தோழர்’னு விளித்த ‘திரு வி க’ வின் நோக்கத்தைச்
சிதைத்தக் கௌசிகாவின் மீது வருத்தம் வந்தது;
‘ஸ்ரீ, ஸ்ரீமதி, திரு, திருமதி, செல்வி, கனம்,மகா கனம், மஹோபாத்யாய,
தவத்திரு, திருவாளர், தலைவர், பெரியார், ஸ்ரீஜத்’, இப்படிப்பட்டஅடைமொழிகளைத் தவிர்த்து, அனைவரையும்
‘தோழர்’ என்று விளிக்கச் சொல்லி மேடையில் பேசியும், குடியரசு இதழில் எழுதியும், ‘தோழர்
காந்தியார்’ என்று மகாத்மாவை விளித்தும் எழுதியத் தந்தைப் பெரியாரின் கனவைச் சிதைத்துவிட்ட
கௌசிகாவின் மீது ஆத்திரம் வந்தது;
‘தோழர்’னு கூப்பிட்டதெல்லாம் நேத்தோட சரி. இனிமே யாரையும் அப்படிக்
கூப்பிட மாட்டேன்!’ என்றாரே முதளாளியம்மா. அது எப்படிச்சாத்தியம்?;
கிட்டத்தட்ட ஒண்ணரை மாசமா, ஒரு நடிப்புக்காக அழைக்கத் தொடங்கி,
எங்கேயும் ‘ஸ்லிப்’ஆகாமலிருக்கப், பால்காரர், காய்கறிக் கடைக்காரர், பேப்பர் போடுபவர்,
அயர்ன் கடைக்காரர், துப்புறவுப் பணியாளர்’ன்னு, எல்லாரையும் ‘தோழர்’ தோழர்னு அழைச்சிட்டு
திடீரென்று எப்படி இன்றுமுதல் மாத்திக்க முடியும்?;
நாற்பது நாற்பத்தைந்து நாள், அதாவது ஒரு மண்டலம் ஒரு விஷயத்தைப்
பயிற்சி செய்தா, அது வாழ்க்கையோடப் படிஞ்சிடும்னு சொல்லுதே மனநூல்.!’
இப்படிச் சிந்தனைகளுடன், வருத்தத்துடனும் மாடி ஏறி, நடைபெறக்கூடிய
‘ஃபினிஷிங்’ வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தார் ஜீவானந்தம்.
மேஸ்திரி வந்ததை அறிந்த கௌசிகா படியேறி வந்தாள்.
“தோழர் ஜீவா
”வாங்க!” அவளின் வாய் அழைத்தது அனிச்சையாக.
‘சித்தாந்தத்தின் வலுவையும், மனவியல் கோட்பாட்டின் உறுதியையும்
எண்ணித் தனக்குள் முறுவலித்தார் ஜீவானந்தம்.
தன்னை அறியாமலேத் தனக்குள், இடதுசாரிக் கோட்பாடுகள் உருவாகி
இறுகி, இணைந்துவிட்டதை உணர்ந்தாள் கௌசிகா.
அந்தக் கணத்தில், மேஸ்திரியின் செல் ஃபோனிலிருந்து
‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்... இங்கு இல்லாமை இல்லாத
நிலை வேண்டும்...’ என்று உரத்து ஒலித்தது ரிங்
டோன்.
అఅఅఅఅఅఅఅఅ
யதார்த்தம். இப்படியும் சிலர் இருக்கிறார்களே…அருமை வாழ்த்துகள் சார்🤝💐
ReplyDelete🙏
ReplyDelete