முழுமையான விமரிசனம் ( கலியன் மதவு - சமூக நாவல் )
மூத்த
எழுத்தாளர்களான திரு சின்னஞ்சிறு கோபு சார் மற்றும் ஹரிகோபி சார் இருவரும் கலியன்
மதவு நாவல் விகடனில் தொடராக வந்தபோது வாரா வாரம் படித்துவிட்டு எழுதிய விமர்சனங்களின்
தொகுப்பு.
மூத்த எழுத்தாளர்களான திரு
சின்னஞ்சிறு கோபு அவர்கள் சிகாகோவிலிருந்தும் மற்றும் திரு ஹரிகோபி அவர்கள் புதுடெல்லியிலிருந்தும்
, கலியன் மதவு நாவல் விகடன் இணையத்தில், தொடராக வந்தபோதே படித்துவிட்டு எழுதிய புலன
விமர்சனங்களின் தொகுப்பு.
எஎனது பார்வையில்... ஜூனியர் தேஜ்’ன் கலியன் மதவு
(சின்னஞ்சிறு கோபு)
அத்தியாயங்கள் 1 முதல் 6 முடிய
நமது நண்பர் ‘ஜூனியர் தேஜ்’
அவர்கள் எழுதும் ‘கலியன் மதவு’ தொடர் கதையை நமது அமைப்பில் எத்தனை பேர் படிக்கிறீர்கள்
என்று எனக்குத் தெரியாது. ஆனால், ஒன்று சொல்வேன். படிக்க ஆரம்பித்தால் நீங்கள் ஒரு
தமிழகக் கிராமத்திற்குச் சென்று அங்கேயே வாழ்ந்து வருவதைப் போன்ற ஒரு உணர்வை நிச்சயம்
பெறுவீர்கள்.
மிகவும் நுணுக்கமான எழுத்து.
கதா பாத்திரங்களைக் கண்முன் அப்படியே உலாவ விடும் தன்னிகரற்ற எழுத்து. கிராமத்து மண்ணின்
மணம் அப்படியே இந்த நாவலில் இருக்கிறது.
வயல் வெளிகள், விவசாயம்,
விவசாயம் சார்ந்த காளவா போன்ற தொழில்கள், தெருக்கள், வீடுகள், மாடு கன்றுகள், சிறுவர்களின்
விளையாட்டுக்கள், அவர்களின் மன உணர்வுகள், பண்டிகைகள், ஊர் திருவிழாக்கள், என்று ஜூனியர்
தேஜ் அசத்துகிறார்.
ஆழ்ந்த வாழ்க்கை அனுபவங்கள்
இல்லாமல் இப்படியெல்லாம் எழுத முடியாது. இப்படி ஒரு கிராமத்தின் அழகியலை அப்படியேக்
கொண்டு வரும் நாவல் எதையும் நான் சமீப காலத்தில் படித்ததில்லை.
ஜூனியர் தேஜ், ஒரு தனித்துவம்
மிக்க ஓவியராகவும் இருப்பதால், இந்த நாவலுக்குப் படங்கள் சேர்ப்பதிலும் தனிக் கவனம்
செலுத்தி வருகிறார். அது இந்த நாவலில் மனம் ஒன்றித் திளைப்பதற்கு இந்தப் படங்கள் மேன்மேலும்
உதவுகிறது.
இந்த நாவல் இதுவரை ஆறு அத்தியாயங்கள் வெளிவந்திருக்கிறது. இந்த
ஆறு அத்தியாங்களைப் படித்ததிலிருந்து நான் அசந்து போய் ஆயிரமாயிரம் மலரும் நினைவுகளில்
முகிழ்ந்திருக்கிறேன். நீங்களும் நம்ம ஜூனியர் தேஜ் அவர்களின் கலியன் மதவு என்ற இந்தத்
தொடர் நாவலைப் படித்துப் பாருங்களேன்.
அத்தியாயம் 7
இந்த அத்தியாயத்தின் அழகும்,
விறுவிறுப்பும் மனதை அப்படியே அள்ளுகிறது. காட்சிகளும், அதற்குஅ ஜூனியர் தேஜ் வரைந்திருக்கும் ஓவியங்களும் கண்முன்
அப்படியே உண்மை போலவே விரிந்து, நம்மையும் சம்பவ இடத்துக்குக் கொண்டு செல்கிறது. இந்த
அத்தியாயத்தின் அழகும், விறுவிறுப்பும் மனதை அப்படியே அள்ளுகிறது. ஆழ்ந்த கூர்மையான
அனுபவமும், எழுத்தாளுமையும், துள்ளிச் செல்லும் நடையும் ஒவ்வொரு வரியிலும் பிரதிபலிக்கிறது.
கதை கொஞ்சம் திக்.. திக்.. திக்.. என்று அடுத்தது என்ன நடக்கப் போகிறதோ என்று மனக்
கவலையையும் எற்படுத்துகிறது.
இந்த நாவலை எத்தனை பேர்
படிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இது அனைவரும் படிக்க வேண்டிய அற்புதம்
என்பதை மட்டும் நான் உறுதியாகச் சொல்வேன்.
அத்தியாயம் 8
கலியன் மதவு நாவலின் எட்டாவது
அத்தியாயத்தைப் படித்துவிட்டுத் திக்பிரமைப் பிடித்தது போல நிற்கிறேன். அப்படியே அந்த
அகண்ட காவிரி ஆறு கண் முன் ஓடுகிறது.
இறந்து போன காதல் ஜோடியின்
உடல்கள், அதை எடுத்து வரும் விதம், பிரச்சனைகள் என்று கிராம மக்கள் உணர்வு பூர்வமாக
மனதில் நடமாடுகின்றனர். கதையைச் சீக்கிரம் முடித்து விடுவீர்களோ என்று தோன்றுகிறது.
அப்படிச் செய்யாதீர்கள் ஜூனியர் தேஜ் சார்..
அத்தியாயம் 9
முத்தனூர் எல்லையில் பிரேதம்
மறிக்கப்படுவது, மாதய்யா முத்தனூர் ஆட்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் பிரேதத்தைத்
திருப்பிக் கொண்டு வந்து தனது வயல் வழியாக எடுத்துச் செல்வது, அதைப் பற்றி அந்தனூர்
மக்களின் பேச்சுக்கள் என்று எல்லாமே, கண்முன் நிகழ்ச்சியாக உண்மைபோல் ஓடுகிறது.
அது போல வயல்களில் இரண்டாம்
பாட்டம் அறுப்பு வேலைகள் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் படிக்கும்போது, நாமும் அங்கே அந்த
பூவரசுக் களத்திலிருந்து, அதையெல்லாம் பார்த்துக்
கொண்டே இருப்பது போல் உணர முடிகிறது. வயல்வெளி
அறுவடைக் காட்சியை இவ்வளவு உயிரோட்டமாக நேரில் கூடப் பார்த்து உணர்ந்ததில்லை.
மாதய்யா, வண்டியிலிருந்து
தடுமாறிக் கீழே விழுந்து, அவர் காலில் வண்டிச் சக்கரம் ஏறி இறங்கியதை உணரும்போது, மனதில்
ஒரு இனம்புரியாத சோகம் ஏற்படுகிறது.
ஐயா, ஜூனியர் தேஜ் சார்,
நீங்கள் அற்புதம் செய்கிறீர்கள். கலியன் மதவு என்ற தங்களது நாவலின் இந்த அத்தியாயத்தைப்
படித்துவிட்டு அசந்துபோய் நிற்கிறேன்.
அத்தியாயம் 10
நான் இப்போதுத் தொடராகப்
படித்து வரும் ஒரே நாவல் ‘கலியன் மதவு’ என்ற ஜூனியர் தேஜ் அவர்களின் நாவல் மட்டுமே.
இதைப் படிக்கும்போது ஏதோ அறுபது எழுபது காலக்கட்டத்தில் கிராமத்தில் வசிப்பதைப் போன்ற
ஒரு உணர்வும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
மாதய்யா காலில் மாவுக்
கட்டுப் போட்டுக் கொண்டு, இரண்டரை மாதங்களைக் கடப்பதைப் பார்க்கும்போது, ஏதோ நமக்கே
அடிபட்டுக் கால் கட்டுடன் சிரமப் படுவதைப் போன்ற ஒரு வலி கலந்த உணர்வு ஏற்படுகிறது.
விரிவான சிறப்பான அற்புதமான விவரிப்பு.
கணேசப் பிள்ளை மாதய்யாவைப்
பார்க்க வீட்டுக்கு வரும் நிகழ்ச்சியைப் படிக்கும்போது, ஏதோ, நாமே கணேசப் பிள்ளையாகவே
மாறி குந்தலாம்பாள் பரிமாற, தலை வழை இலையில் வடை பாயசத்துடன் விருந்துண்பது போலவே உணர்கிறேன்.
குந்தலாம்பாள் கை-மிஷினில்
காப்பிக்-கொட்டை அரைக்கும் ஓசையை மட்டுமல்ல, அந்த ஃபீப்ரிக் காப்பிப் பொடியின் மணத்தையும்
உணர முடிகிறது.
அது மட்டுமா, அறுவடைக்
காட்சிகள், குதிர்கள், பத்தாயங்கள் எல்லாம் கண்களை விட்டு அகலவே அகலாத காட்சி அமைப்புகள்.
இந்த நாவலுக்கு ஜூனியர்
தேஜ் அவர்களே வரையும் படங்கள் அதி அற்புதமாக நாவலில் உயிரோட்டத்திற்கு சிறப்பாக உதவி
செய்கின்றன.
கலியன் மதவு தொடர்கதையைப்
படிப்பவர்கள், ஒரு மறக்க முடியாத சூழ்நிலையில் வாழ்ந்து வருவார்கள் என்பது மட்டும்
நிச்சயம்.
அத்தியாயம் 11
இந்தச் சமூகத் தொடர்கதை,
கிட்டத்தட்ட ஒரு ஐம்பது வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தை அப்படியேக் கண் முன் கொண்டுவந்து
நிறுத்துகிறது. ஜூனியர் தேஜ் அவர்கள் கதை சொல்லும் பாணி, மனதில் அப்படியேக் காட்சிகளாகப்
படம் போல ஓடி, நாமும் அந்தந்த இடங்களில் அவர்களுடன் வாழ்வதைப் போலவே இருக்கிறது.
இப்போது இந்த நாவலில்
11வது அத்தியாயத்தைப் படிக்கிறபோது, ஒரு பள்ளிச் சிறுவனாக, அந்தக் காலத் திருச்சி நகரத்தில்
அலைந்து திரிவதைப் போல உணர முடிந்தது.
மாதய்யாவின் செயல்பாடுகளைப்
படிக்கப் படிக்க, அந்தக் காலத்து நாட்டு ஓடு வேயப்பட்ட வீட்டை நானே கிட்டேயிருந்து
பழுது பார்ப்பதைப் போன்ற அனுபவமும், என் காலில் அடிபட்டுக் கை வைத்தியம் பலிக்காமல்,
டாக்டரிடம் சென்று மருத்துவம் பார்த்துக் கொண்டதைப் போன்ற உணர்வும் ஏற்பட்டது. நீங்கள்
படித்தால் உங்களுக்கும் அந்த உணர்வுகளை நீங்கள் நிச்சயம் அனுபவிப்பீர்கள்.
ஏதோ 1960 காலகட்ட சுதேசமித்திரன்
வாரப்பதிப்பில் ஒரு நல்ல சமூகக் கதையைப் படிப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது சார்.
பாராட்டுக்கள். சார்.
அத்தியாயம் 12
கலியன் மதவு’ என்ற ஜூனியர்
தேஜின் அழகோவியமான கிராமத்து நாவலில் 12 ம் அத்தியாயத்தை இன்று படித்தேன். நான் இப்படி
தன்னிகரற்ற நாவலை சமீபத்தில் படித்ததில்லை. ஒரே வரியில் சொல்லப் போனால் ‘இது ஒரு கிராமத்து
ஓவியம்.
இது மர்ம நாவல்கள் போல
அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று மனதில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையான நாவலல்ல என்றாலும்,
ஆங்காங்கே எதிர்பார்ப்பும் பரபரப்பும் கொள்ளும் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. மிக நேர்த்தியான,
நுணுக்கமான, காட்சி அமைப்புகளும், சொல்லடல்களும் நிரம்பிய இந்த நாவலை வாசிக்கும் வாசகர்களாகிய
நாமும், அந்தப் பாத்திரமாகவே உருமாறி, அந்தச் சூழலிலேயே வாழ ஆரம்பித்து விடுகிறோம்.
மாதய்யாவையும் அவர் குடும்பத்தையும்
மையமாகக் கொண்டுச் சுற்றி வரும் இந்த நாவலின் அமைப்பே ஒரு தனி அழகு. குந்தலாம்பாளுக்கும்,
துரைராமனக்கும் இடையே நடை பெறும் உரையாடல்கள், ஏதோ நாமும் அந்த வீட்டில் மோகனாவிற்கு
அருகே நின்று பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்ததைப் போல உணர்வு ஏற்படுகிறது.
கிட்டா என்ற கிருஷ்ணசாமியைச்
சந்திக்கும்போது, ‘அட, இவனைப் போன்ற எத்தர்களை நம்ம ஊரிலும் சந்தித்திருக்கிறோமே..
என்று தோன்றுகிறது. அதுவும் கிட்டா மாட்டுத் தரகில் செய்யும் தகிடு தத்தம், கில்லாடி
வேலைகள், தலையைக் கிறுகிறுக்க வைக்கிறது. இவனைப் போன்ற எத்தர்களிடம் மாட்டினால் தப்புவது
தம்பிரான் புண்ணியம் என்பதை உணரவைக்கக்கூடிய இடம் இது.
சும்மாச் சொல்லக் கூடாது.
கலியன் மதவு நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் கிராமத்துக் காற்றாக மனதில் சலசலத்துக் குதூகலிக்கிறது
. பாராட்டுக்கள் சார்.
அத்தியாயம் 13
கலியன் மதவு நாவலை நான்
மிகவும் விரும்பி ஈடுபாட்டுடன் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயத்தின்
காட்சிகளும், கண் எதிரே காட்சிகளாக நிற்க, அடுத்ததை எதிர்பார்த்துக் காத்திருக்க வைக்கும்
நாவலல்லவா..,,
‘பூசர களம்’ என்ற களத்தை
அறிமுகப்படுத்தும் நாவலாசிரியரின் திறமை கண்டு வியக்காமல் இருக்க முடியாது. பூசரக்
களம் என்ற பெயர் எப்படி வந்தது என்பதை விளக்கும் இந்தப் 13-ம் அத்தியாயம் மனதைக் கொள்ளை
கொள்கிறது.
பூமிநாத உடையார் பற்றியும்,
அவர் வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கைப் பற்றியும் படிக்கும்போதே ஒருவிதவியப்பும், ஆச்சரியமும்
ஏற்படுகிறது. அவரது வாழ்க்கையில் நுழைந்த கருப்பழகி முனியம்மாள், என் முன்னும் நடமாடுகிறாள்.
அதோடு உடையார் காளவாய்த்
தொழிலுக்கு வந்த விதம், அவரது திறமையான, சமயோசிதச் செயலை உணர்த்திய விதம் அசர வைக்கிறது.
கல்லறுக்கத் தோண்டிய பள்ளம்
எப்படித் தாமரைக் குளமாக மாறியது என்ற தகவல் மிகச் சுவையான ஒன்று.
எழுத்தும் ஓவியமும் போட்டி
போட்டுக்கொண்டு மனதைக் கவரும் இந்தச் சமூக நாவல் தமிழ் இலக்கிய உலகில் ஒரு குறிப்பிடத்
தக்க அற்புதமாகும்.
அத்தியாயம் 14
இந்த வார கலியன் மதவு நாவல்,
நம்மை ஊர் திருவிழாவுக்கு அழைத்துச் செல்கிறது.
பராமரிப்பின்றி சிதைந்த எல்லையம்மன் கோவிலை பொறுப்புக் கட்டிக் கொண்டு புதுப்பித்த
மாதய்யாவை நினைக்கும்போது பிரமிப்பே ஏற்படுகிறது. கட்டம் கட்டமாக, பல்வேறு மன நிலைகளிலும்,
எண்ணங்களிலும் இருக்கும் ஒன்பது தெரு வாசிகளையும் ஒன்று கூட்டிய அந்தப் பொறுமை வியக்க
வைக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் வாசகன், மாதய்யாவோடு தம்மை ஒப்பிட்டுட்கொள்ள வைக்கும்
ரசவாதம் இயல்பாய் நிகழ்ந்துவிடுகிறது.
கோவில் புதுப்பித்த பின்
காப்புக் கட்டு, ஒன்பது நாள் திருவிழாக்கள், பல்வேறு வாகனங்கள், வாகன ஜோடிப்புகள்,
பல்வேறு வாத்தியங்கள், அதன் தாக்கங்கள், பச்சைக் காளி, பவளக் காளி, தீமிதி இப்படி அனைத்தையும்
அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் பிரித்து விவரித்ததைப் பார்க்கும் போது, எழுத்தாளரின்
கூரிய நோக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. குறிப்பாகப் பல சமூக உளவியல் கோட்பாடுகளை
உள்ளடக்கிள பகுதி இது.
அத்தியாயம் 15
அத்தியாயத்தின் ஆரம்பம்
முதலே மனது பதைப்பதைக்கிறது. ஊர்த்திருவிழாவை ஒருவாறு இறுதி நிலைக்குக் கொண்டு வந்த
பிறகு, கையில் கட்டியிருந்த காப்பை அவிழ்த்ததும் வீட்டில் வந்து படுத்தவர்தான்.. படிப்படியாக
உடல் நலம் கெடும் மாதய்யாவை நினைத்துக் கவலை வருகிறது.
ஜீவபுரம் டாக்டர் அருணகிரி,
தன் வகுப்புத் தோழனான மாதய்யாவை எப்படியேனும் காப்பாற்றிவிடவேண்டும் என்று படும் பாடுகள்,
உண்மையான நட்பை பிரதிபலிக்கிறது.
கடைசியில் மாதய்யா காலமாகிவிட்ட
செய்தி அறிந்தபின் உண்மையிலேயே நம் குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டதைப் போல வருத்தம்
ஏற்பட்டுவிடுகிறது என்றால், அந்த எழுத்தின் கனம் எத்தனை என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
கலியன் மதவு நாவல் காலம்
கடந்து நிற்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
அத்தியாயம் 16
இந்த வார ‘கலியன் மதவு
நாவல், ‘பாவம் புஷ்பா..’ என்று தொடங்கி, அந்தக் காலத்தில் நடைபெற்ற ‘பால்ய விவாகம்’
என்ற கொடுமைகளை நெஞ்சம் பதற வைக்கும் அளவிற்கு சம்பவம் சம்பவமாகச் சொல்லைக் கண் கலங்க
வைத்துவிட்டார் ஜூ தேஜ்.
என்ன கொடுமையிது என்று
மனம் இன்னும் கூட அந்தக் கொடுமைகளை நினைத்துப் பதறுகிறது. அந்தப் பிஞ்சு நெஞ்சங்களின்
பரிதவிப்புகள் சோகத்தின் உச்சமாக இருக்கிறது. இதையெல்லாம் தனது வாழ்க்கையில் முறியடித்து
உயர்ந்த, குந்தலாம்பாளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இது வரை இந்த நாவலைப் படிக்காதவர்கள்
கூட, இந்த 16 ஆம் அத்தியாயத்தை மட்டும் படித்தாலேப் போதும். அது அவர்களுக்கு அந்தக்
கால பால்ய விவாகக் கொடுமைகளைப் பற்றி ஆயிரமாயிரம் சோக சம்பவங்களை, கண்களால் பார்த்தத்
துயர அனுபவத்தைத் தந்துச் சிந்திக்க வைக்கும். இது ஒரு மிகச் சிறப்பான நாவல்.
அத்தியாயம் 17
நான் இப்போது தொடர்ந்து
விரும்பி ஆர்வத்துடன் படிப்பது 'கலியன் மதவு' என்ற ஜூனியர் தேஜ் சாரின் சமூக
நாவலைதான். இந்த நாவலில் மாதய்யாவே இறந்த பிறகு என் மனதில் ஒரு சோகமும் வெறுமையும்
சூழ்ந்துக்கொண்டது. 'இனி நடப்பதற்கு என்னதான் இருக்கு' என்று வருத்தத்துடன்
படிக்க ஆரம்பித்தேன். குந்தலாம்பாள் இப்படி ரௌத்திரமாக அதிரடியாய் பேச ஆரம்பிப்பார்
என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
சடங்கு, சம்பிரதாயங்கள்
என்று தை கண்முன் காட்சியாக விரிந்து, படிக்கப் படிக்க அந்த நாவலிலே நாமும் கலந்துவிடுகிறோம்.
உயிரோட்டத்துடன் பல்வேறு மனிதர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் இந்த நாவல் மிகச் சிறப்பானது.
தனித்துவம் மிக்கது.
அத்தியாயம் 18
18-வது அத்தியாயத்தில்,
மாதய்யாவின் நிறேவேறாதக் கனவுகளைக் கலியன் துணையோடு, திட்டமிட்டு, நிதானமாகவும், அதே
சமயத்தில் வைராக்கியமாகவும் நிறைவேற்றும் குந்தலாம்பாளின் நிர்வாகத்திறன்
வியப்பில் ஆழ்த்துகிறது.
பாரதி கண்ட புதுமைப் பெண்ணின்
ஓர் அம்சமாய் மிளிர்கிறாள் குந்தலாம்பாள். வயலில் இறங்கி அறுப்பாட்களோடு அறுப்பறுக்கும்
சமத்துவ வாதியாக குந்தலாம்பாளைப் படைத்துள்ள கதாசிரியர் உண்மையிலேயே பெண்ணீயத்தை மதிப்பவராகத்தான்
பளிச்சிடுகிறார்.
அத்தியாயம் 19
கிராமத்தைப் பற்றிய, விவசாயத்தைப்
பற்றிய துரைராமனின் எதிர்மறை எண்ணங்களையும், ஒரு தவறாம மனிதருடன் இணைந்து, அவன் செய்தும்
தவறான செயல்களைப் பார்க்கும்போது சமுதாயத்தில் விரவிக்கிடக்கும் இப்படிப்பட்ட இளைஞர்களை
மனம் எண்ணிப் பார்க்கிறது.
உண்மையிலேயே மிகச் சிறந்த
நாவல் சார் கலியன் மதவு. நாவல் நிறைவு பெற்றதும் ஒரு முழுமையான பதிவு வேண்டும் சார்.
என்னால் மறக்க முடியாத நாவலாகத் திகழ்கிறது.
ஒரு ஆதங்கம்! எனக்கொரு
வருத்தம் உண்டு. 'கலியன் மதவு' நாவலில் ஒரு அந்தக் கால கிராமத்தை, அதன்
மக்களை, சூழ்நிலைகளை இவ்வளவு இயல்பாக, சிறப்பாக எந்த எழுத்தாளரும் சொல்லமுடியாத
அனுபவ அழகுடன் சொல்லும் கதையை யாரும் அதிகம்பேர் படிக்கவில்லையே, தங்கள் எண்ணங்களை
பகிர்ந்துக் கொள்ளவில்லையே என்ற வருத்தம் எனக்கு ஏற்படுகிறது சார்.
இதைப்போன்ற நல்ல இலக்கிய
நாவலை படிக்காமல் ஏதேதோ மேலோட்டமாக எப்போதும் சிந்தித்துக் கொண்டும், எழுதிக்
கொண்டுமிருப்பது வருத்தத்தைத் தருகிறது.
அத்தியாயம் 20
உயிரோட்டமாகச் செல்லும்
கலியன் மதவு நாவலைப் படிக்கும்போது கதை படிக்கிறோம் என்ற எண்ணமே எழவில்லை. துரைராமன்
அந்தனூரில் காளவாய் போடத் திட்டமிடுவதும், அதற்காக வைத்தீஸ்வரன் கோவிலுக்குச்
சென்று அவன் நாடி ஜோதிடம் பார்ப்பதும் அப்படியே கண்முன் காட்சியாகிறது. மிகவும் நுணுக்கமான
சிறப்பான படைப்பு.
துரைராமன் காளவாய் வேலைகளில்
இறங்குவதும், கிட்டய்யா மற்றும் அந்த காளவாய் மேஸ்திரி ஆகியோரிடம் அவர் மாட்டிக்கொண்டு
திண்டாட ஆரம்பித்திருப்பதும், மனதை சோகத்தில் ஆழ்த்துகிறது. மாதவய்யாவுக்கு இப்படி
ஒரு மகனா என்று மனது ஆயாசப்படுகிறது. உயிரோட்டமான சித்திரங்கள் உன்னதமான அழகை தருகிறது.
அடுத்த அத்தியாயத்திற்காக நான் அந்தனூரிலேயேக் காத்திருக்கிறேன்.
அத்தியாயம் 21
கலியன் மதவு நாவலின் 21-ஆம்
அத்தியாயத்தைப் படித்து அரண்டு விட்டேன். அப்படியே அந்த 1977-ம் வருட கோரப் புயலை
கண்முன் வீச வைத்துக், கலங்கடித்து விட்டீர்கள். கிராமம், கிராமத்து வேலைகள், அதன்
பல்வேறு பணியாட்கள் என்று அந்தகால கிராமத்தின் தன்மையைக் கொஞ்சம்கூட மாறாமல் உணர்த்தியிருத்த
விதம் தங்களுடைய அசாத்தியமான எழுத்தாற்றலுக்கு ஒரு உதாரணம்.
புயல், அதன் பாதிப்புகள், அந்தக்
காலச் சூழ்நிலை, மனிதர்களின் அல்லல்கள் , அவர்களது வாழ்க்கை, மன வெளிப்பாடுகள்
என்று எல்லாவற்றையும் படிப்பவர்களின் கண்முன் கொண்டு வந்தவிதம் தங்கள் எழுத்துக்கு
கிடைத்திருக்கும் வெற்றி.
உயிரோட்டமான இந்த நாவலை
நான் மிகவும் விரும்புகிறேன். தொடர்ந்து ஆர்வத்துடன் படிக்கிறேன். தங்களுக்கு எனது
பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்தியாயம் 22
‘ஜூனியர் தேஜ்' சார், தங்களது 'கலியன்
மதவு' என்ற ஈடு இணையில்லாத சமூக நாவலின் 22-வது அத்தியாயத்தை படித்தேன்.
தங்களது விரிவான இயல்பான எழுத்து நடை உயிரோவியமாக இடங்களையும், மனிதர்களையும்
வழக்கம்போல கண்முன் காட்டியது.
மாதய்யாவின் சம்பாக்காணி
மலையும்-மடுவுமாகக் காட்சியளிப்பதை மனக்கண்ணால் உணரும்போதே, கண்கள் கலங்குகின்றன.
அந்த எல்லையம்மன் கோவில்
திடலில் வாழைத்தார்களை வெட்டிக் கொண்டு வந்து, தரம் பிரித்து லாரிகளில் லோடு ஏற்றுவதை
அப்படியே நேரில் பார்ப்பதைப்போல இருக்கிறது. லாரிகள், டிரைவர்கள், கிளீனர்கள்
என்று ஆரம்பித்து வாழைப் பயிரிடுவதிலிருந்து, அதை லாரியில் ஏற்றுவது, தரம்
பிரிப்பது, விலை பேசுவது என்று ஏராளமான நுணுக்கமான விபரங்கள் அசர வைக்கின்றன.
நேரில் பார்த்தாலும் உணரமுடியாத நுணுக்கங்கள் அவை.
சின்னப்பொண்ணும் அவளது
நினைவுகளும் நம்மையும் மாதய்யா காலத்துக்கேக் கொண்டு செல்கிறது.
இந்த நாவல்களுக்கான
ஓவியம் கலந்த புகைப்படங்கள் ஒரு புது அழகைத் தருகின்றன. அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கும்
இந்த நேரத்தில் நானும் அந்த அந்தனூரிலேயே இருப்பதை போலவே உணருகிறேன்.
அத்தியாயம் 23
'கலியன் மதவு' என்ற
தங்களது சிறப்பான சமூக நாவலின் 23-ம் அத்தியாயத்தை படித்தேன். எப்போதும் போல ஏக
சிறப்பாக உயிரோட்டமாக இருந்ததால், வழக்கம்போல கதையோடு நானும் ஒன்றிவிட்டேன்.
கலியன் மாதய்யாவை நெஞ்சுக்குள்
மட்டுமின்றி, நெஞ்சுக்கு வெளியேயும் விசுவாசத்துடன் சுமக்க ஆரம்பித்திருப்பது, கலியனின்
உண்மையான விசுவாசத்தையும், அன்பையும் உணர்த்தியது.
மாதய்யாக் காலப்
பொங்கல் கொண்டாட்டத்தை நினைத்துப் பார்ப்பது, மாதய்யாவே மீண்டும் வந்துவிட்டதைப் போன்ற
உணர்வை ஏற்படுத்தியது. அவரது பரந்த மனப்பான்மையையும், அறிவையும், நிர்வாக
திறமையையும் அது மேலும் நினைவூட்டியது. ஆனால் மாதய்யாவுக்கு நேர்மாறாக இருக்கும் துரைராமன்
இனியாவது திருந்தி, சிந்தித்து நடந்தால் தேவலாம் என்று தோன்றுகிறது.
இந்த நாவல்களுடன் ஓவியமும்
புகைப்படமும் கலந்த ஒவ்வொரு சித்திரமும் , நாவலுடன் நம்மை மேன்மேலும் ஒன்றை வைக்கிறது.
பாராட்டுகள் சார்.
அத்தியாயம் 24
நாவலின் 24-வது அத்தியாயத்தை
படித்தேன். எப்போதும் போல நாவலின் சிறப்பை உணர்ந்தேன். கலியன் மீது காரணமேயில்லாமல்
ஒரு வெறுப்பை ஏற்படுத்திக்கொண்டு துரைராமன் அட்வகேட்டைச் சந்தித்து ஆலோசனைக் கேட்பது, அங்கே
நடக்கும் உரையாடல்கள் என்று எல்லாமே மிகவும் யதார்த்தமாக இருக்கிறது. அந்த வக்கீலின்
அலுவலக அறையை விவரித்திருந்த விதம் ஒரு நுணுக்கமான எழுத்துத் திறனுடன், நம்மையும்
துரைராமனுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பதை போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.
துரைராமனின் மோசமான எண்ணங்களையும், அதை
அவன் செயல்படுத்தச் செய்யும் சூழ்ச்சிகளையும் விரிவாக விளக்கும் இந்த அத்தியாயம் அடுத்து
என்ன நடக்கப் போகிறது என்ற ஆவலை ஏற்படுத்துகிறது.
அத்தியாயம் 25
'கலியன் மதவு' நாவலின் 25-வது
அத்தியாயம் அந்த காலத்து சங்க கால பொங்கலிருந்து, இந்த காலத்துப் பொங்கல்வரை அந்த
கிராம திருவிழாவின் அழகை, சிறப்பை மிக அழகாகக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது. அதைப்
போல ஜல்லிக்கட்டு, தமிழர்களின் மரபு, காதல், கலியாட்டமென்று எல்லாமே நினைவுக்கு
வந்தது.
கலியன் என்ற நல்ல விசுவாசியான
சேவகனுக்கும், கள்ளமும் கபடுமான துரைராமன் என்ற புது எஜமானனுக்கும் நடக்கும் மனப்போராட்டமும்
சம்பவங்களும் சிந்திக்க வைப்பன.
கலியன் மதவு எல்லாவகையிலும்
விரிவாகவும் சிறப்பாகவும் தனித்தன்மையுடன் உயர்ந்த நாவலாக மனதில் நிற்கிறது. ஜூனியர்
தேஜ் சார், இந்த நாவல் காலாகாலத்துக்கும் தங்கள் பெயரைச் சொல்லும்.
அத்தியாயம் 26
ஒரு நாவலோ சிறுகதையோ; கதாபாத்திரங்களுடன்
சுற்றுச் சூழல்களும் ஒன்றிணைந்து அவர்களின் உணர்வுகளையும் சரியானபடி வெளிப்படுத்தினால்
அது உண்மைப் போல் வாசகனைத் தனக்குள் இழுத்துக் கொள்ளும். ஜூனியர் தேஜின் 'கலியன் மதவு' நாவலின்
வெற்றிக்கு இதுதான் காரணம்.
தமிழர் திருநாள் சமயத்தில்
கலியன், துரை, குந்தலாம்பாள் ஆகியோருக்கு இடையே நடக்கும் சம்பவங்களும் உரையாடல்களும்
நாவலைச் சிறப்பாகக் கொண்டுச் செல்கின்றன. இந்த நாவலில் கலியன் மட்டும் அந்தக் கிராமத்தில்
நடந்து சென்றால் கூட அவனோடு வாசகர்களும் ஒன்றிணைந்துக் கூடவே செல்ல முடியும். அதுதான்
அந்த நாவலின் வெற்றியே.
எப்போதும் சொல்வதைத் தான்
இப்போதும் சொல்கிறேன் இந்த நாவலுக்கு மேன்மேலும் அழகு சேர்ப்பது இதற்கான ஓவியம் கலந்த
புகைப்படங்களே. இதுவும் இந்த நாவலாசிரியரின் ஓவியத் திறமையையும் அதிக அக்கறையையும்
உணர்த்துகிறது. பாராட்டுக்குரிய நாவல்.
அத்தியாயம் 27
ஜூனியர் தேஜ் சார், தங்களது
கலியன் மதவு நாவலை வழக்கம்போல ஆர்வத்துடன் விரும்பிப் படித்தேன். இந்த நாவல் முடியப்போகிறது
என்பதை நினைக்கும்போதே மனதில் இனம்புரியாத வருத்தம் ஏற்படுகிறது.
அந்தனூர் அக்ரஹாரத் தெருவில்
தனது பூர்விக வீட்டை இன்சினியர் திருநாவுக்கரசு வாங்கியதால் அவர் கிராமத்தில் பேசுபொருளானார்.
அவர் அந்த வீட்டை வாங்கிய பிறகு வந்துப் பார்த்துக் குடியேறுவது வரை, அந்த வீடு
அந்த காலத்திலிருந்து அந்த கதை நிகழும் இந்தக் காலம்வரை இருந்த சூழ்நிலையெல்லாம் விவரித்திருக்கும்
விதம் அந்த சூழ்நிலையை நம் கண்ணுக்கு முன் கொண்டு வருகிறது.
இடமும் சூழ்நிலைகளும் காலவெள்ளத்தில்
எப்படியெல்லாம் மாற்றமடைகின்றன என்பதை மிகச் சிறப்பாக இந்த நாவல் உணர்த்துகிறது.
கலியன் வாழ்க்கையில்
ஏற்படும் மாற்றங்களுடன், ஊரில் ஏற்படும் மாற்றங்களையும் நினைக்கும்போது மனதில்
ஆயிரமாயிரம் என்ன ஓட்டங்கள். அதுவும் அந்த ஊரிலிருந்த செக்கு வைத்து எண்ணெய் வியாபாரம்
செய்தவர்களைப் பற்றியும், அந்த எண்ணெய் வியாபாரத்தைப் பற்றியும் படிக்கும்போதே,
எண்ணெய் வாசத்தை நம்மாலும் உணர முடியம்.
ஊர், வீடு, மனிதன்
என்று ஒவ்வொன்றைப் பற்றியும் அதன்தன்மை மாறாமல், மாறியதையும் மாறாததையும் அப்படியே
நாவல் உணர்த்துகிறது. தனித்தன்மையுடன் தமிழில் ஒரு குறிப்பிட தகுந்த நாவலாக திகழ்கிறது
கலியன் மதவு. இந்த நாவல் புத்தகமாக வெளிவரும்போது இதன் சிறப்பை பலரும் உணர்வார்கள்.
பாராட்டுகள் சார்.
அத்யாயம் 28
இப்போதுதான் சார் படித்தேன்.
மனம் அந்தனூரின் அந்த கால சூழலையும் சம்பகோர்வைகளையும் நினைத்து ஆழ்ந்த சிந்தனையில்
ஆழ்ந்தது. மனதில் என்ன என்னவோ நினைவுகள். அந்தனூர் கிராமத்தின் சூழ்நிலை மாற்றங்கள், மறைந்த
மனிதர்கள் என்று எவ்வளவோ நினைவுகள் வந்தது.
மாதய்யா, குந்தலாம்பாள்,
கலியன் போன்ற பாத்திரப் படைப்புகள் மிகவும் உயிரோட்டமானவை. கலியன் மதவு என்ற
நாவலின் பெயர் மிகவும் பொருத்தமாக மனதோடு ஒன்றிப் போகிறது.
இந்த இறுதி அத்தியாயமும்
மிகவும் விஸ்தாரமாக நீண்டு செல்கிறது. ஜூனியர் தேஜ் அவர்களின் 'கலியன் மதவு' என்ற
சமூகநாவல், அந்தனூர் என்ற கிராமத்தின் கதையை அதன் மண்வாசனையுடன், அதன் மக்கள், அவர்களது
குணங்கள், வாழ்க்கை என்று சொல்லிக்கொண்டே போவது நாமும் அந்த ஊரில் ஒரு வீட்டில்
வசித்து வருவதைப்போன்ற, அது ஏதோ நம் பூர்விக கிராமம் என்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.
மாதய்யா, குந்தலாம்பாள், கலியன்
என்று இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரங்களுடன், மற்றைய கதாபாத்திரங்களும் அதனதன்
தன்மை மாறாமல் உயிரோட்டத்துடன் உலாவுவது இந்த நாவலின் மிகச் சிறப்பான அம்சமாகும்.
கூலித்தொழிலாளியான கலியன்
என்பவனின் தியாக வாழ்க்கையைச் சொல்லும் 'கலியன் மதவு' என்ற இந்த நாவல், மல்லிகை
வாசத்தை, வீட்டுத் திண்ணைக்குகேக் கடத்தி வரும் தென்றல்போல இயல்பாய் சொல்லப்பட்டிருக்கிறது.
அதனால் நாமும் இந்த நாவலைப்
படிக்கும்போது, நம் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைக்கும் மலரும் நினைவுகளாய்
இந்த நாவலை உணர முடிகிறது.
இது நாவலாசிரியரின் முதல்
நாவல் என்றாலும், பல நாவல்களை எழுதிய எழுத்தாளர்களைப் போல முதல் நாவலிலேயே அற்புதங்கள்
செய்திருக்கிறார் ஜூ தேஜ்.
அனுபவித்து உணர வேண்டிய
இந்த நாவலில் புகைப்படமும் ஓவியமும் கலந்து இந்த ஆசிரியரே தந்திருக்கும் சித்திரங்கள்
இந்த நாவலுக்கு ஒரு மணிமகுடமாகும்.
தனித்துவம் மிகுந்த தன்னிகரற்ற
கலியன் மதவு என்ற இந்த நாவல் புத்தகமாக வெளிவரும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இந்த நாவலாசிரியர் ஜூனியர் தேஜ் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சின்னஞ்சிறு கோபு - சிகாகோ
*********
கலியன் மதவு நாவல் பற்றி
மூத்த எழுத்தாளர்
திரு டெல்லி ஹரிகோபி சார்
அவர்கள்
மத்திய ஆயுத காவல்படையிலிருந்து
ஓய்வு பெற்ற சிவில் அதிகாரி , புதுடெல்லி
அத்தியாயம்-1
கலியன் மதவு நாவல் முதல்
அத்தியாயமே நல்ல விறுவிறுப்புடன் நகர்கிறது. முதல் அத்தியாயத்தின் ஹைலைட்டான அகிலாண்டக்
கிழவியின் ஆளுமையை சிறுசிறு சம்பவங்களால் இணைத்து கண்முன்னே கொண்டு வந்திருப்பதும்,
வட்டார வழக்கிலேயே கதாபாத்திரங்களை பேச வைத்திருப்பதும் வாசகனை சம்பவ இடத்துக்கே அழைத்துச்
சென்று கதையோடு ஒன்றச் செய்து விடுகிறது. படித்து முடித்தபின்னும், அந்த கிராம சூழ்நிலையிலிருந்து
வெளியே வர வெகு நேரமாகிறது, இது கதாசிரியரின் வெற்றி.
அத்தியாயம்-2
‘ஒவ்வொரு பசுவையும் தனிக்
கொட்டகையில் கட்டித்தான் கறக்கவேண்டும் என்பது மாதய்யாவின் சித்தாந்தம். கன்றுகளும்
குழந்தைகள்தான். ஒரு கன்று தாய் மடியில் பால் ஊட்டும்போது மற்ற கன்றுகள் அதைப் பார்த்து
ஏங்கக்கூடாது...’ என்று நினைப்பவர் அவர். ‘ஒவ்வொரு பசுவையும் தனிக் கொட்டகையில் கட்டித்தான்
கறக்கவேண்டும் என்பது மாதய்யாவின் சித்தாந்தம். கன்றுகளும் குழந்தைகள்தான். ஒரு கன்று
தாய் மடியில் பால் ஊட்டும்போது மற்ற கன்றுகள் அதைப் பார்த்து ஏங்கக்கூடாது...’ என்ற
வரிகளின் மூலம் மாதய்யாவின் தயையும், அவர் வாயில்லா ஜீவன்களையும் தம் மக்கள்
என்றே எண்ணுவது அவரது உயர்ந்த குணத்தையும் எடுத்துக்காட்டுகிறது. கிராமிய நடையிலேயே
கதையை நகர்த்துவது படிப்பதற்கு சுவாரசியமாக உள்ளது
அத்தியாயம்-3
தொப்ளான் என்ற மனிதரை
தெய்வ நிலைக்கு உயர்த்திய மாதய்யாவின் சிந்தனைகள் மனதை நெகிழ வைக்கிறது. மரணத்திற்கு
பின் கிராமங்களில் கடைபிடிக்கப்படும் சம்பிரதாய சாங்கியங்களை விரிவாகவும் ஊடே பெரும்பாலான
கிராமங்களில் இப்போதும் அனுபவித்து வரும் வழிப்பிரச்சினையையும் கண்முன்னே கொண்டு
வந்தது.
அத்தியாயம்-4
மாதய்யாவின் மனதை உறுத்திக்கொண்டிருந்த
புடல்கொல்லை ரகசியத்தின் விடை கிடைத்ததும் முன்பை விட அதிகமாக சஞ்சலம் அடையத் தொடங்கிவிட்டார்.
இடையிடையே ஊடாடும் மகனைப்
பற்றிய நினைவுகளும் அதை விட அதிகமாக மண்ணின் மகத்துவம் அறியாமல் தொலைதூரத்தில் வேலை
செய்யும் மகன் மீது கொண்டுள்ள கோபத்தையும் நன்கு உணரமுடிகிறது.
அத்தியாயம்-5
மாதய்யாவின் மனைவி குந்தாலம்மாவை
சிலாகித்து ஒரு லக்ஷ்மிகரமான உணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள். மகன் தொலைவில் இருந்தாலும்
அவன்மேல் உள்ள பரிவை தனது வாக்குகளாலும், செயல்களாலும் அடிக்கடி நினைவு கூர்வது
தாய்மைக்கே உரிய குணமாகும்
ராமுவுக்கும்
சாவித்திரிக்கும் உண்டான காதலின் நதிமூலத்தையும் ரிஷிமூலத்தையும் இந்த அத்தியாயத்தில்
அலசியிருக்கிறீர்கள். அமரர் தேஜ் அவர்களின் சித்திரங்கள் பிரமைக்க வைப்பதோடல்லாமல்
கதைக் களத்தை கண்முன்னை நிழலாடவிடுகிறது
அத்தியாயம்-6
ராமு-சாவித்திரி
காதல் வெளியுலகிற்கு தெரியவந்ததும் நாவல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்து என்ன
என்ற ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது.
கதையின் நடையையும்,
சம்பவங்களின் சீரான கட்டமைப்பையும் பார்க்கும்போது ஒரு கைதேர்ந்த எழுத்தாளரின் படைப்பை
அனுபவித்து படிக்கும் சுகம் ஏற்படுகிறது
அக்கிரகாரத்தின்
பழக்க வழக்கங்களை மீண்டும் படிக்கும்போது பழைய கால நினைவுகள் கண்முன்னே வந்து போகின்றன.
கதையின் இடையிடைய காட்டப்படும் ஆங்கில நாவல்களின் மேற்கோள்கள், கதை ஓட்டத்தை குறைப்பதாக
எனக்குப் படுகிறது. படிக்கும் வாசகர்கள் அனைவரும் ஆங்கில நூல்களை படித்திருந்தால் மட்டுமே
அதில் லயிக்க முடியும்.
சில விஸ்தாரணமான வர்ணனைகளையும் தவிர்க்கலாம். நான் கூறிய இந்த குறிப்புகள்
எல்லாம் முதல் சில அத்தியாயங்களில்தான் காணமுடிந்தது. ஆறாவது அத்தியாயம் இந்த குறைகள்
ஏதுமின்றி To the Point ஆக இருப்பதைப் பார்க்கும்போது இதை நீங்களும் உணர்ந்து அவைகளை
களைந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
இந்த நாவல் முடிந்தவுடன் புத்தகமாக பிரசுரிக்க வேண்டும். உங்களை சிறந்த
நாவலாசிரயராக அடையாளம் காட்டக்கூடிய எல்லா அம்சங்களும் நிறைந்த ஒரு நல்ல சமூக நாவல்
இதுவாக இருக்கும்.
ஜூனியர் தேஜ் சார், ராமுவும்
சாவித்திரியும் காவிரியில் மூழ்கினாலும், அவர்கள் இறந்திருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு
அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கிறேன்.
அத்தியாயம் - 7
வீரமுத்துவின் அட்டூழியங்களுக்கு
இராணுவ மிடுக்கோடு மாதய்யா கொடுத்த மிரட்டல் சபாஷ் ரகம்
அத்தியாயம்-8
ராமு-சாவித்திரியின் அவசரமான
முடிவு பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது. நிகழப்போகும் பின்விளைவுகளை எண்ணி மனம் பதைபதைக்கிறது
அத்தியாயம்-9
இறுதி ஊர்வலத்திற்காக தனது
காணியையே தியாகம் செய்த மாதய்யாவின் செயல் மூட நம்பிக்கைகளை வேறோடு அறுத்தெறியும்
புரட்சிகரமான செயல்.
மாதய்யாவின் வயல் அறுப்பு
நிகழ்வுகள் எங்களை அந்த கிராமங்களுக்கே நேரடியாக கொண்டு சென்றதைப் போல உணரவைத்தது.
அத்தியாயம்-10
அறுவடைக்குப் பிறகு தானியத்தை
சேமித்துவைக்கும் முறைகளையும், பழக்கவழக்கங்களையும் ரசித்து விளக்கியிருக்கிறார் கதாசிரியர்.
நகரங்களில் வாழும் எங்களுக்கு இது புதுசு.
அத்தியாயம் - 11
ப்ளாஷ்பேக்காக துரை ராமனின்
பால்ய காலத்தையும், தந்தை மகனுக்கு இடையிலான மன விரிசலின் சம்பவத் தொகுப்புகள், மாதய்யா-அருணகிரியின்
நட்பின் ஆழத்தையும் சிறுசிறு சம்பவங்கள் மூலம் அருமையான நடையில் தந்திருக்கிறார் ஆசிரியர்
திரு ஜூனியர் தேஜ்.
கிராம வீடுகளை செப்பனிடும்
பணிகளை மிகவும் ரசித்து விளக்கியிருக்கிறார்.
அத்தியாயம் - 12
சொத்து விஷயத்தில் துரைராமனுக்கு
இருக்கும் அறைகுறை விவரங்களால் ஏற்படும் வாக்குத் தர்க்கங்களை சம்மட்டியால் அடித்து
நேர் செய்ததைப்போல குந்தலாம்பாள் ஒரு தேர்ந்த வக்கீலின் மிடுக்கோடு வாதங்களை எடுத்து
வைப்பது சபாஷ் ரகம்.
கிராம பழக்க வழக்கங்கள்,
கால்நடைகளை அரவணைப்போடு குடும்ப உறுப்பினராக எண்ணும் மனநிலை, வயலில் வேலைபார்ப்பவர்களை
உடன்பிறந்தவர்களாக நினைக்கும் அணுகுமுறை இவை எல்லாம் ஆழ்மனதில் பதியும் வண்ணம் கதாசிரியர்
திரு ஜூனியர் தேஜ் அவர்கள் அழகாக கூறியுள்ளார்
அத்தியாயம் - 13
வீடிழந்தவர்களுக்கு தனது
நிலத்திலேய வீடு அமைத்து சாசனம் செய்து தருவதாக கூறும் மாதய்யாவின் தாராள குணம் மகான்களுக்கு
மட்டுமே உரியதாகும். மாதய்யாவை தெய்வத்திற்கு இணையாக கருத வைக்கும் நிகழ்வு இது.
அத்தியாயம் - 14
மாதய்யாவின் ஆன்மிக ஈடுபாட்டையும்
ஓரிரு சம்பவங்கள் மூலம் விவரித்திருப்பது சிறப்பு. ஊர்த் திருவிழாவினை மிகவும் விரிவாக
கண்முன்னே கொணர்ந்தது ரம்மியமாக அதனுடன் ஒன்றி அருள் பெற முடிந்தது
அத்தியாயம் - 15
மாதய்யாவின் அந்திம நிமிடங்கள்
மனதை கனக்க வைத்தது. ஒரு சகாப்தம் ஆடி அடங்கிய வேதனை. கிராம மக்களின் நண்பனாய், மகனாய்,
சகோதரனாய், தந்தையாய், உறவினனாய் வாழ்வாங்கு வாழ்ந்த மனித நேயம் மிக்க மகாத்மாவாய்
எல்லோர் மனங்களிலும் நிறைந்து மறைந்த மாமனிதராய் இருந்த மாதய்யா இன்று இறைவனுக்கு
வேண்டியவராய் ஐக்கியமாகிவிட்ட தருணம். மற்ற எல்லாரையும் விட மாதய்யாவின் நிழலாய் இருந்த
கலியனுக்கு இது ஈடுசெய்யமுடியாத ஒரு பேரிழப்பு.
அத்தியாயம் - 16
கணவனின் ஈமக்கிரியைகள்
எவ்வாறு நடக்க வேண்டம் என்று குந்தலாம்பாய் உறுதியோடு ஆணையிடும் சம்பவம் அவரை பாரதியாரின்
புதுமைப் பெண்ணாக எண்ணத் தோன்றுகிறது. துக்கம் ஒரு புறம் இருந்தாலும் ஆகவேண்டிய காரியங்களை
கம்பீரத்தோடு முன்னின்று நடத்தும் அவரது துணிச்சல் பாராட்டத் தகுந்தது.
அத்தியாயம் - 17
குந்தலாம்பாவின் மூத்த
சகோதரி புஷ்பாவிற்கு இழைக்கப்பட்ட சமூக அநீதியை எண்ணிக் குமுறுவதும், அத்தகைய நிலை
தனக்கு வரக்கூடாது என்று தீர்க்கமாக எதிர்ப்பதும், பெண்ணினத்திற்கு முன்மாதிரியாயும்,
வருங்காலப் பெண்களின் வழிகாட்டியாகவும் நிற்பதாக காட்டியிருப்பது கதாசிரியர் திரு ஜூனியர்
தேஜ் அவர்களின் புரட்சி சிந்தனையைக் காட்டுகிறது.
அத்தியாயம் - 18
கணவனின் நிறேவேறாத கனவுகளை
கலியன் துணையோடு அவனை ஒரு குடும்பங்கமாக எண்ணி முன் நின்று நடத்த முற்படுவது அவரது
நிர்வாகத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு. பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் ஓர் அம்சமே
இது. மேற்பார்வையோடு நிற்காமல் குந்தலாம்பாள் வயலில் இறங்கி வேலை பார்த்தது அவருள்
உள்ள ஒரு சமத்துவவாதியை கதாசிரியர் வெளிக்கொணர்ந்துள்ளார். குந்தலாம்பாள் அய்யாம்மாவாக
பரிமளித்து வேலையாட்களுடன் சகோதரத்துவத்தோடு வேலைவாங்கும் பாங்கு இவை எல்லாம்
She is not only a Boss, she is also a good administrator என்று உணரவைத்தது.
அத்தியாயம் - 19
நிலபுலன்களின் மீதுள்ள
துரை ராமனின் எதிர்மறையான கண்ணோட்டத்தையும், அவனது வியாபார மூளையில் தோன்றப் போகும்
எண்ணங்களையும் கோடிட்டு காட்டியுள்ளார் ஆசிரியர்.
அத்தியாயம் - 20
துரையின் புதிய வியாபாரத்தின்
வீரியம் ஒரு சில நாட்களிலேயே வெளுக்கத் தொடங்கி தான் தவறான வழியில் செல்கிறோமோ என்ற
ஐயத்தின் விதையை மெல்ல விதைக்கத் தொடங்கியுள்ளது தெளிவாக தெரிகிறது
அத்தியாயம் - 21
திடீர் வெள்ளப் பெருக்கால்
விளையும் நஷ்டங்கள், கஷ்டங்கள் துரை ராமனுக்கு பாடம் புகட்டிவிட்டது. கிட்டாவய்யாவின்
சுயரூபத்தை மெல்லமெல்ல உணரத் தொடங்கியதும், கலியன் பால் ஈர்க்கப்படும் துரை ராமனின்
மன ஓட்டம் நன்கு காட்டப்பட்டுள்ளது.
அத்தியாயம் - 22
மாதய்யாவின் பழைய நினைவுகளை
கிளறிவிட்டதால், அவரின் மறைவு மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. கிராமத்தினுள், மாதய்யாவுடன்
நாமும் பயணிக்கிறோம்.
அத்தியாயம் - 23
அகிலாண்டக் கிழவியின் திருத்தப்பட்ட
அறிவுறுத்தலின்படி மாதய்யாவின் சேஷிப்புகளை கலியன் தாயத்தாக கட்டிக்கொண்டது கண்களை
பனிக்கச் செய்தது. 'அந்தக்கனம் முதல் மாதய்யாவை நெஞ்சுக்குள் மட்டுமின்றி நெஞ்சுக்கு
வெளியேயும் விசுவாசத்துடன் சுமக்கத் தொடங்கினான் கலியன்' என்ற வரிகள் நெஞ்சை கனக்க
வைத்தது
அத்தியாயம் - 24
வக்கீல் வாதிராஜனின் யதார்த்தனமான
நடைமுறை வியாக்கியானங்கள் தொய்ந்து போயிருந்த துரை ராமனை மேலும் துவண்டுபோக வைப்பதாக
கதாசிரியர் கூறுவது நூறு சதவிகிதம் சரி. சாட்சிக் காரனின் காலில் விழுவதைவிட சண்டைக்காரனின்
காலில் விழுவதே நலம் என்பதை மறுப்பதற்கில்லை.
அத்தியாயம் - 25
குந்தலாம்பாளின் காய் நகர்த்தல்களில்
ஒரு சாணக்கியத்தனத்தை காண முடிகிறது. தனது பதியின் கடைசிகால ஆசையான கலியனுக்கு நல்லது
செய்யவேண்டும் என்பதை நனவாக்க முயல்வது அவரது உதார குணத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
அத்தியாயம் - 26
கலியனுக்கு நல்லது செய்யவேண்டும்
என்ற நோக்கில் குந்தலாம்பாள் சாதுர்யமாக களத்தை அமைத்துக் கொடுக்க கலியனும் அதில்
கச்சிதமாக விளையாடி எதிர்பார்த்தபடியே கோலடித்துவிட்டான்.
அத்தியாயம் - 27
கலியன் தனக்குக் கிடைத்த
காணியை பொதுச்சொத்தாக்கி தனது கிராம மக்களுக்கு செய்த நன்மை பாராட்டுக்குரியது. பணம்
படைத்தவர்கள் சுயநலம் மிக்கவர்களாகவும், ஏழைகள் பொதுநலம் பேணுபவர்களாகவும் இருப்பதால்தான்
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்கள்.
CONCLUSION
கலியன் மதவு என்ற சமூக
நாவலை படைத்த திரு ஜூனியர் தேஜ் அவர்களின் பல்வேறு துறைகளிலும், களங்களிலும் அவருக்குள்ள
நுண்ணறிவை கதை முழுவதும் விதைத்திருக்கிறார். ஒரே சமயத்தில் மூன்று நான்கு நாவல்களை
படித்த திருப்தி.
அத்தியாயங்கள் நீண்டு பல்வேறு
நிகழ்வுகளுக்குள் செல்வதால் படிப்பவருக்கு அயற்சியை ஏற்படுத்துகிறது. எனவே சிறுசிறு
அத்தியாயங்களாகப் பிரித்து கதையை திருத்தியமைத்து புத்தகமாக வெளியிடலாம்.
சித்திரங்களை தானே வரைந்தும்,
போதிய நிழற்படங்களையும் உள்ளடக்கி ஒரு வண்ணமயமான, உணர்வுபூர்வமான, காலத்தை வெல்லும்
சமூக நாவலை படைத்த திரு ஜூனியர் தேஜ் அவர்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துகள்.
ஆர். ஹரிகோபி, புது டெல்லி
Comments
Post a Comment