165. பத்து லட்சம் ரூபாய் ( (அன்னை குரு பாக்கியம் நினைவு சிறுகதை போட்டி)

165. பத்து லட்சம் ரூபாய் 

                 ஜூனியர் தேஜ்

 (அன்னை குரு பாக்கியம் நினைவு சிறுகதை போட்டியில் சிறப்புப் பரிசு பெற்ற சிறுகதை)




"கள்ளச் சாராயம் குடித்து 30 பேர் பலி, 20 பேர் கவலைக்கிடம்." எடிட் செய்யப்பட்ட தெளிவற்ற காட்சிகளின் பின்னணியில் செய்தி வாசிபாளர் சோகமான குரலில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்.

சாவு எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் எகிறிக் கொண்டிருந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகங்கள் துல்லியமாக அறிவித்துக் கொண்டே இருந்தன. 

ஒரு மணி நேரத்திற்கு முன்  15 பேர் பலி என்ற எண்ணிக்கை, இப்போது இரு மடங்காகி விட்டது. எத்தனை எண்ணிக்கையில் போய் நிற்குமோ? அனைத்து முகங்களிலும் அப்பிக் கொண்டிருந்தது சமூகக் கவலை. 

***

ஓய்வு ஒழிசல் இல்லாமல் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்தது 108.

பாதிக்கப்பட்டோரின் ஓலங்கள், ஒப்பாரிகள், பெருமூச்சுகள், முக்கல் முனகல்கள், கேவல்கள் என உணர்ச்சிக் கொந்தளிப்புகளுகளின் பின்னணியில், ‘டாஸ்மாக்’கை சாடியபடியும், அரசாங்கத்தை விமர்சித்தபடியும், குடிகாரர்களை ஏசியபடியும் களேயபரமாக இருந்தது அரசினர் மருத்துவமனை வளாகம்.

அரசு மருத்துவமனையின் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்த பிரேத பரிசோதனைக் கூடத்தில் கிடத்தப்பட்ட பிரேதங்களைக் கூர்ந்தாய்வதும், அறிக்கை எழுதுவதுமாக அரசு மருத்துவர்கள் தங்கள் கடமையை செய்துகொண்டிருந்தார்கள். அது மட்டுமா... 

தகவல் அறிய அவ்வப்போது , அங்கு வந்து போகும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் போன்ற அரசு அதிகாரிகளுக்கும்; அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற அரசியல் பிரமுகர்களுக்கும்; பத்திரிகைத் தொலைக்காட்சி நிருபர்கள் போன்ற ஊடகவியலாளர்களுக்கும், சாரை சாரையாக வரும் சமூக ஆர்வலர்களுக்கும் உரிய தகவல்களையும் அளித்துக் கொண்டிருந்தார்கள் மருத்துவர்கள். 

ஆம்புலன்ஸோ, ‘விஐபி’ க்களின் வாகனங்களோ வரமுடியாத அளவுக்கு நிரம்பி வழிந்தது ஜி ஹெச் வளாகம். கூட்டத்தைக் கட்டுப்படுத்தப் போலீசார் திணறினர்.

இந்த கள்ளச் சாராயச் சாவுகளைத் தொடர்ந்து, அரசாங்கம் அறிவித்திருக்கும் 10 லட்சம் இழப்பீடு அநியாயமா? நியாயமா? என்ற பட்டிமன்றத்தையும் வழக்காடு மன்றத்தையும் ஒளிபரப்பி மீடியாக்களும் சமூக ஊடகங்களும் டிரண்டியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தன. 

 ***

 தொடர்ந்து ஏறுமுகமாகவே உயர்ந்து கொண்டிருந்த களச் சாராயச் சாவுப் பட்டியலில் கதிர்வேலுவின் பெயரும் ஏறிவிட்டது.

கதிர்வேலு. 

அரசாங்கத்தின் பார்வையில் கதிர்வேலு ஒரு மது பிரியன்.

கதிர்வேலுவுக்கு ஒரு மகன் ஒருமகள். 

அரசுப் பள்ளியில் +1 படிக்கிறான் மகன் மோகன். அரசுக் கல்லூரியில் முதுகலை இறுதியாண்டு படிக்கிறாள் மகள் செல்வி.

குடிகாரக் கணவனோடு குடித்தனம் நடத்தி, குழந்தைகளை வளர்க்கப் படாத பாடு பட்டாள் கதிர்வேலுவின் மனைவி பார்வதி. 

கூலி வேலை செய்துச் சம்பாதித்து, குழந்தைகளைப் படிக்கவைத்த தாய் பார்வதியின், இருபுறமும் அமர்ந்து கொண்டு ஆறுதல் சொன்னார்கள் பெற்றெடுத்த குழந்தைகள் இருவரும். மூவரின் முகங்களிலும் சோகத்தை விட வெறுப்பின் விழுக்காடுதான் அதிகமாய் அப்பியிருந்தது. 

***

துக்கம் விசாரிக்க உறவினர்களும் நண்பர்களும் கூடிவிட்டனர். ஆங்காங்கே கும்பல் கும்பலாக நின்று  இந்த மூவரையும் காட்டிக் காட்டி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். 

குத்திக் காட்டி இடித்துப் பேசுகிறார்களா?, பழிக்கிறார்களா?, அரசாங்கப் பணம் 10 லட்சம் வரப்போகிறதே என்று பொறாமைப் படுகிறார்களா..? - ஆண்டவனுக்கே வெளிச்சம்.

பள்ளியில் மோகனோடு கூடப்படிக்கும் நண்பர்கள் சிலரும், செல்வியின் கல்லூரித் தோழிகள் சிலரும்கூட துக்கம் விசாரிக்க வந்திருந்தார்கள். 

அரசியல்வாதிகள் எழுந்தருளினார்கள். 

அதிகாரிகள் வந்து விசாரித்தார்கள். 

‘ம்ஹூம்’ எவரிடமும் ஏதும் பேசவோ, புலம்பவோ, பகிரவோச் செய்யவில்லை அவர்கள் மூவரும்.

காமிராக்களின் முன் நின்ற அரசு அதிகாரிகளிடம் கதறி அழவில்லை. அரசியல் வாதிகளின் கால்தொட்டுக் கும்பிடவில்லை அவர்கள். சென்சேஷனாக எதுவுமில்லை என்பதால் அடுத்த சாராயச்சாவு வீடு தேடிச் சென்றார்கள்.  

சுவாரசியமாய் எதுவுமில்லை என்ற காரணத்தாலோ என்னவோ, எந்தச் சேனலும் கதிர்வேலுவின் வீட்டில் எடுக்கப்பட்டக் காட்சியை ஒளிபரப்பவில்லை.

***

மாநில முதல்வர் அறிவித்தபடி, பத்து லட்சத்துக்கான காசோலையை வட்டாட்சியர் அளிக்கப் பெற்றுக் கொண்டாள் செல்வி. 

“இந்த வருஷம் கல்லூரிப் படிப்பை முடிக்கப்போறா உன் மக, அடுத்த வருசம் இந்தப் பத்து லட்சத்தை செலவு பண்ணி, செல்விக்கு கல்யாணம் முடிச்சி வெச்சிரு..!” என்று ஐடியா கொடுத்தார்கள் சிலர்.

இந்த கூரை வீட்டைப் பிச்சிக் கடாசிட்டு, இந்தப் பத்து லட்சம் போட்டு கல்லுக் கட்டடம் கட்டு..” என்று யோசனை சொன்னவர்களும் உண்டு. 

பையன் பேருக்கும் பொண்ணு பேருக்கும் பிரிச்சி அஞ்சு அஞ்சு லட்சம் “ஃபிக்சட்ல போடு” என்றும் சிலர் வழிநடத்தினார்கள்.

***

நாற்று நடவு, களை எடுத்தல், கட்டடித்தல் சீசன்களில் விவசாயக் கூலியாக, கட்டுமான மேஸ்திரியிடம் சித்தாள் வேலை, சமையல் கோஷ்டியில், இலை எடுத்துச் சுத்தம் செய்யும் வேலை, பாத்திரம் பண்டம் கழுவும் வேலை என வருடம் பூராவும்  கிடைக்கிற வேலைகளை சுத்தமாகவும், ஈடுபாட்டுடனும் செய்து, நியாயமாய்ச் சம்பாதித்து, மகளையும், மகனையும் இந்த அளவுக்குப் படிக்க வைத்தவள் பார்வதி.  

தன் உழைப்பின் மீது அபார நம்பிக்கை கொண்ட பார்வதிக்கு, குடிகாரக் கணவனின் சாவுக்காகக் கொடுத்த பத்து லட்சம் ரூபாயை வைத்துக் கல் வீடு கட்டிக் கொள்வதில் அறவே விரும்பமில்லை.

“அம்மா.. இந்தப் பத்து லட்சம் ரூபாய்லேர்ந்து தன் திருமணச் செலவுக்கு ஒரு நயா பைசாக் கூடத் தேவையில்லை என்று உறுதியாக இருந்தாள் மகள் செல்வி. 

மகன் மோகன் ஒரு யோசனை சொன்னான். அந்த யோசனை அம்மா பார்வதிக்கும், அக்கா செல்விக்கும் பிடித்திருந்தது.

***

பள்ளி நேரம் முடிந்த பின் ஏகாந்தமாக இருந்தபோது, தன் அம்மா , அக்கா இருவரோடும் பள்ளிக்குச் சென்றான் மோகன்.

வராண்டாவில் நின்று கொண்டு யாரிடமோ கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர், மோகனை அவன் குடும்பத்தாரோடு  பார்த்ததும் அவர்களை நோக்கி வந்து கைக் கூப்பினார் பண்பாடு  மிக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்.

துக்கம் விசாரித்தார. 

ஆறுதல் சொன்னார். 

“அரசாங்கம் அறிவித்தபடி, நிவாரணம் வந்துதா?” – என்று ஆதரவாகக் கேட்டார்.

“வந்துருச்சு சார்..!” என்றான் மோகன்.

***

“காசை ஆழும்-பாழும் பண்ணிராதீங்க. அரசாங்கம் தந்த அந்த நிதி அர்த்தமுள்ள வகைல செலவாகணும். ‘ஃபிக்சட் டெபாசீட்’ல போட்ருங்க. அதுலேர்ந்து வர்ற வட்டிய செலவு பண்ணுங்க..” என்று அறிவுறை சொன்னார் தலைமை ஆசிரியர். 

“வைப்புநிதி சம்பந்தமா பேசத்தான் வந்திருக்கோம்..” என்றாள் செல்வி.

“அப்படியா? எந்த ‘ஸ்கீம்’ல போடலாம்னு யோசனை கேட்க வந்தீங்களா?” இயல்பாகக் கேட்டார் தலைமை ஆசிரியர்.

***

இப்போது மோகன் பேசினான். “சார் நம்ம பள்ளி அளவுல, வருஷா வருஷம் குடிப்பழக்கத்தினால் வரும் தீமைகள் பற்றி கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டியெல்லாம் நடத்துவோம்தாமே..?”

“ஆமாம்...!”

 ‘என்ன சொல்ல வருகிறான்?’ என்று புரியாமல் தலைமை ஆசிரியர் அவனைப் பார்க்க.. மோகனே தொடர்ந்தான்.

“சார். இந்தப் பத்துலட்சத்தை நம்ம பள்ளில வைப்பு நிதியா ஃபிக்சட் டெபாசீட்  வெச்சி, அதுலேர்ந்து வர்ற வட்டிப் பணத்துல, போதைப் பொருள் விழிப்புணர்வு சம்பந்தமா வருஷா வருஷம் வட்ட அளவுல போட்டி நடத்தி, ஜெயிக்கறவங்களுக்குப் பரிசு கொடுக்கணும்னு விரும்பறோம் சார்..” என்று தன் தாயையும் தமக்கையையும் காட்டி ஒன்றாகச் சொன்னபோது, தலைமை ஆசிரியரின் கண்கள் பனித்தன. 

வறுமையிலும் செம்மையான அந்தக் குடும்பத்தைப் பார்த்த தலைமை ஆசிரியர் உரைந்துபோய் நின்றார்.

***

அனுப்புதல் 

வரதராஜன் A,  @ ஜூனியர் தே‌ஜ்,

11B/32, திருமஞ்சன வீதி, 

சீர்காழி – 609110 , மயிலாடுதுறை மாவட்டம்

கைப்பேசி 6381377969 (Opposite to professional courier)




Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)