168. விலை (மக்கள் குரல் 20 - 01 - 2025)
விலை (சிறுகதை)
ஜூனியர் தேஜ்
20/01/2025 மக்கள் குரல்
நீங்கள் திருமணலூர் வாசி என்றால், சம்சாரிகள் வீட்டில் கூலி வேலை செய்துகொண்டோ, அப்படி வேலை இல்லாத நாட்களில், ஊரின் பொது இடங்களான, பவுண்டு, மயான வளாகம், வாய்கால், கோவில்வளாகம் என எங்காவதுக் காலை முதல் மாலை வரை உடலுழைப்பைத் தவறாமல் கொடுத்துக் கொண்டோ இருக்கும் மாணிக்கத்தை நீங்கள் கூடப் பார்த்திருப்பீர்கள்.
உடம்பு கொஞ்சம் கச்சலாகத் தோற்றமளிக்கும் தினக் கூலி மாணிக்கத்தைத் தானேச் சொல்கிறீர்கள் என்று யாரோ கேட்பது காதில் விழுகிறது. ஆம் அதே மாணிக்கம்தான். ஒரு தினக் கூலி தொழிலாளி.
ஆமாம். அவரேத்தான். அவருடைய உடம்பு வாகு அது. நல்ல ஆரோக்கயமான மனிதர் அவர். சின்ன வயதில் மாந்தம் வந்து, சூம்பி விட்ட கால்களோடு விந்தி விந்தித்தான் நடப்பதால் அவரைக் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள். உடம்பில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் என்ற எந்த நோயும் கிடையாது இவருக்கு.
***
மாற்றுத் திறனாளிகளை , அவர்களுடைய குறைப்பாட்டை வைத்து கேலி செய்வது குற்றம், மனிதாபிமானமற்ற செயல் என்பதெல்லாம் தெரியாத அறியாமையால், அவன் வயதொத்த சிலர், 16 வயதிலே கமல், கமலஹாசன், நம்மவர், சப்பாணி... இப்படியெல்லாம் கேலியாக அவனை அழைக்கும்போதெல்லாம் கூடச் சிரித்துக் கொண்டே கடந்துவிடுவான் மாணிக்கம்.
போலியோவால் சூம்பிய கால்களை வைத்துக் கொண்டு மரம் ஏறவோ, கல் சுமத்தல், சாரத்தின் மேலே ஏறி கலவை தருதல் போன்ற கடினமான, பெரிய வேலைகளெல்லாம் செய்ய அவருடைய உடம்பு இடம் தரவில்லை என்றாலும் கடுமையான உழைப்பாளி என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.
***
ஓசியில் எதுவும் வாங்கிச் சாப்பிடக் கூடாது என்பதும் பிறரிடம் எந்தச் சூழ்நிலையிலும் கையேந்துவது, சுய மரியாதைக்கு இழுக்கு என்றும் கருதுபவர் மாணிக்கம். அதோடு வேலை செய்து சம்பாதித்துத்தான் சாப்பிட வேண்டும் என்ற வைராக்கியம் உள்ளவர் மாணிக்கம். எனவே தன்னால் முழுமையாகச் செய்ய முடிந்த சின்னச் சின்ன வேலைகளைத் தேர்ந்தெடுத்துத் திறமையாகச் செய்து கொடுப்பார். ஆனால் ஒன்று; நிதானமாகவும் மெதுவாகத்தான் செய்வார்.
எதையும், பாரதியார் சொன்னதைப் போல, காரியத்தில் பதறாமல், வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச் செய்து பயனடையும் ரகம் மாணிக்கம். செய்யும் வேலைகளை முழு ஈடுபாட்டோடு செய்வதால், 'பதறாத காரியம் சிதறாது' என்பதற்கு உதாரணமாய் அவரின் எந்த வேலையும் நேர்த்தியாக நறுக்குத் தெறித்தாற்போல, பளிச் என இருக்கும். முயற்சி, அவர் மெய் வருத்தக் கூலி தந்து கொண்டுதான் இருந்தது.
சின்னச் சின்ன மரங்களைக் கழித்தல், பந்தல் கால் நடுதல், புல் செத்துதல், களை எடுத்தல், கவாத்து செய்தல், ஒட்டடை அடித்தல், வேலிக் கட்ட நீரில் ஊறிய பாளைநார் கிழித்தல், கீற்று முடைதல் போன்ற வேலைகளை இவரிடம்தான் ஒப்படைப்பார்கள் முதலாளிகள். மாணிக்கமும் முதலாளிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத்தான் நடந்து கொள்வார்.
***
என்னதான் இவருடைய வேலை சுத்தமாக இருந்தாலும் முதலாளிகள், ஊரில் மற்ற தொழிலாளிகளுக்குத் தருவதை விடக் குறைவான கூலியே தந்தார்கள் மாணிக்கத்திற்கு.
ஊரில் மற்றக் கூலிகளுக்கு ஐநூறு ரூபாய், தினக்கூலி என்றால், இவருக்கு 300 ரூபாய்த் தருவார்கள்.
காரணம் கேட்டால், மற்றவர்கள் செய்யும் வேலையில் நான்கில் மூன்று பங்குதான் மாணிக்கம் செய்வதாகச் சொல்வார்கள்.
கூலிக் குறைவு என்பதைப் பற்றியெல்லாம் என்றுமே கவலைப் பட்டதில்லை மாணிக்கம். தன்னை அழைத்து வேலை தரும் முதலாளிகளை தெய்வமாக மதிப்பார்.
தன் வேலையை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் கால நேரம் பாராமல் முடித்துவிட்டுத்தான் போவார் மாணிக்கம்.
மனசாட்சிப்படிப் பார்த்தால் அவர் வாங்கும் கூலிக்கு இரண்டு மடங்கு உழைப்பைத் தந்திருப்பது தெரியும். ஆனால் யாரும்தான் அப்படிப் பார்ப்பதில்லையே.!
***
100 நாள் வேலைத் திட்டம் நடைமுறைக்கு வந்தபோது, கிராம நிர்வாக அலுவலர், மாணிக்கத்தை அழைத்து, “பெயரைப் பரிந்துரைக்கட்டுமா?” - என்று கேட்டார். வேண்டாம் என்று தீர்மானமாக மறுத்து விட்டார் மாணிக்கம்.
“பத்து ஆட்கள் செய்யும் வேலைக்கு 20 ஆட்களை விடுவாங்க. நாம உடம்பை அலட்டிக்கிட்டு, வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. நாள் முழுதும் மரத்தடில உட்கார்ந்துக் கதைப் பேசறதும், சும்மா வேலை செய்யறமாதிரி கையைக் காலை ஆட்டிப்புட்டு நோவாம சம்பாரிக்கலாம்; ஜாலியா இருக்கும் வா மாணிக்கம்...!” - என்று பக்கிரி கூட வற்புறுத்தினார்.
“அது நமக்குச் சரிவராது பக்கிரி..! எந்த ஜன்மத்துல பண்ணின பாவமோ, கால் சூம்பி நிக்கறேன். உழைக்காம சம்பாரிச்சி பாவத்தை மூட்டைக் கட்ட நான் தயாரா இல்லை பக்கிரி.” - என்று எடுத்த எடுப்பிலேயே மறுத்துவிட்டார். அதோடு மட்டுமில்லை, உழைக்கத் தயாராக இருப்பவரையும் முழுமையாகத் தன் உழைப்பைத் தரவிடாமல் செய்யப் பல தடைகள் அந்தத் திட்டத்தில் இருப்பதையும் அறிவார் மாணிக்கம்.
***
‘உழைக்காமல் வாங்குகிறக் காசு ஒட்டாது...!’ என்று, சின்ன வயது முதல் சொல்லிச் சொல்லிப் பெற்றோர்கள் வளர்த்தது மாணிக்கத்தின் ரத்தத்தில் ஊறி விட்டது. ‘விதை ஒன்றுப் போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்..!’ என்ற பழமொழிக்கு ஏற்ப கூலி வேலை செய்தாலும் கௌரவமாக வாழ்ந்த தாய் தந்தை இருவரின் உயர்வான குணங்களும் மாணிக்கத்திடம் நிறையவேப் படிந்திருந்தன. கொரோனாவில் தாய் தந்தை இருவரையும் இழந்தபின், நூறு நாள் வேலைத் திட்டத்தையும் வேண்டாம் என்று உதறிவிட்டு கிராமத்தில் சம்சாரிகள் தரும் கூலி வேலைகளை நேர்மையாகச் செய்து கௌரவமாகப் பிழைத்து வருகிறார் மாணிக்கம்.
மாணிக்கத்தின் குணம், நேர்மை அனைத்தும் தெரிந்ததால் வருடம் முழுதும் ஏதாவது வேலை தந்துகொண்டேதான் இருந்தார்கள் ஊரார்.
“செங்கரும்பு, அரிசி, சீனி இவைகளோடு பொங்கல் பரிசாக ரூபாய் 1000 ரொக்கமும் உங்க ரேஷன் கார்டுக்கு உண்டு..” - என்று போன மாதம் ரேஷன் அரிசி வாங்கும்போதே மாணிக்கத்திடம் சொன்னார் ரேஷன் கடை அலுவலர். பொங்கல் நெருங்க நெருங்க பிஸி ஆகிவிடுவார் மாணிக்கம்.
ஒட்டடை அடித்தல், வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்தல், வாசலில் காவிப்பட்டை வெள்ளை பூசுதல், போனது வந்தது பார்த்து, மண் தரை மெழுகுதல், மாடு கன்றுகளுக்கு கொம்பு தேய்த்து வர்ணம் பூசுதல்.. இப்படிப்பட்டப் பொங்கல் வேலைகளுக்கு அழைப்பு வந்துகொண்டே இருக்கும் என்பதால் அந்த அழைப்புகளெல்லாம் வரும் முன், ஒரு முக்கியமானப் பொதுப் பணியைச் செய்யத் திட்டமிட்டார் மாணிக்கம். அரிவாள், மண் வெட்டி, கடப்பாரை, களைக்கொத்து, கூடை அனைத்தையும் தன் சைக்கிள் கேரியரில் வைத்துத் தள்ளிக் கொண்டு, ஊர்க் கோடி மந்தைக் கரைப் பக்கம் போனார்.
வழக்கமாக அந்த மந்தைக் கரையில்தால் ஒவ்வோர் ஆண்டும் மாட்டுப் பொங்கல் களைக் கட்டும்.
வரதராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார். ஊர் மக்கள் தங்கள் மாடு கன்றுகளை மந்தைக் கரைக்குக் கொண்டு வருவார்கள். பெருமாளுக்கு அடுக்கு தீபாராதனை ஆன கையோடு, தலைமைக் கோனார், பட்டி உடைத்துக் கோவில் மாட்டின் தும்பு அவிழ்த்து ஓட்டிவிடுவார். அதைத் தொடர்ந்து சம்சாரிகளும் தாங்கள் கட்டிய பட்டியை உடைத்து தும்பு அவிழ்த்து விடுவதோ, தும்மைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓட்டி வரவோச் செய்வார்கள். தாய் தந்தை இருந்த காலத்திலிருந்தே, மாணிக்கம் குடும்பம்தான் அந்த மந்தைக் கரையைச் சீர்ப் படுத்துவது வழக்கமாக இருந்தது.
***
வழக்கம்போல மந்தைக் கரையில் ஆங்காங்கே முளைத்துக் கிடந்த முட்செடிகளையும் சப்பாத்திக் கள்ளிச் செடிகளையும் எருக்கு, பேயத்தி, ஊமத்தைப் புதர்களையும் சீந்துக் கொடி கோவைக் கொடி, ஓணான் கொடி போன்றவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக் குவித்தார். மூன்று நாட்கள் வெட்டிக் குவித்தவை, நான்காவது நாளில் சற்றே வதங்கியிருக்க அதைக் கொளுத்திவிட்டார்.
எரிந்து சாம்பலானது போக, மீதமுள்ளதையும் சின்னச் சின்னக் கல் கட்டிகளையெல்லாம் அப்புறப்படுத்தி, நன்கு கூட்டிச் சுத்தம் செய்து, மந்தைக்கரையைச் சுந்தமாகத் துடைத்து வைத்தாற்போல் பிரகாசிக்கச் செய்துவிட்டார்.
***
கரும்பு, அரிசி, சீனி போன்ற ரூபாய் 200 மதிப்புள்ள பொருட்களை விலையில்லாமல் தந்த அரசாங்கம், ரூபாய் 1000 ரொக்கத்தையும் சந்தோஷமாக அளித்தது. ரேஷன் அட்டைதாரர்கள் வரிசையில் நின்று தங்களுக்கு அளிக்கப்பட்ட டோக்கனைக் கொடுத்து, விலையில்லாப் பொருட்களைப் பெற்றுச் சென்றனர்.
வழக்கமாக, ஊர் சமுதாயக் கூடம், இடுகாட்டு வளாகம், மயானப் பாதை, ஊர்ப் பூங்கா, இப்படி ஒரு ஊர் பொதுவிடத்தை ஓரிரெண்டு நாட்கள் தன் உழைப்பைக் கொடுத்துச் சுத்தம் செய்துவிட்டுத்தான், ஒவ்வொரு மாதமும் அரசாங்கம் தரும் விலையில்லா அரிசியைக் கூட வாங்குவார் மாணிக்கம். இரவலாக எதை வாங்குவதும் தன்மானத்துக்கு இழுக்கு என்று நினைக்கும் மாணிக்கம், நான்கு நாட்கள் வேலை செய்து, ஊர் மந்தைக் கரையைத் தூய்மை செய்தபின், பொங்கல் தொகுப்புக்கான டோக்கனுடன், ரேஷன் கடைக்குச் சென்றார். அரசாங்கம் பெருந்தன்மையாக விலையில்லாமல் தருவதாகக் கூறினாலும், ‘எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு..!’ என்பதே மாணிக்கத்தின் சித்தாந்தம். மந்தைக் கரையைச் சுத்தம் செய்த வகையில், அரசாங்கம் தரும் கூலியாக பாவித்தே அதைப் பெற்றுக் கொண்டார்..
***
ஒவ்வொரு மாதமும் கடமை உணர்வோடு, மாணிக்கம் சுத்தம் செய்யும் வளாகங்களை, நூறு நாள் வேலைத்திட்டத்தின் மூலமாகச் சுத்தம் செய்ததாகப் பதிவேட்டில் பதிவதைப் போலவே, மாட்டுப் பொங்கலை அனுசரித்து, மந்தைக் கரையைச் சுத்தம் செய்த வகையில் நூறு நாள் வேலைத்திட்டக் கூலிகள் 20 பேர் வேலை செய்த வகையில் - என்று எழுதி, இருபது கையொப்பங்களோடு பேரேட்டில் பதிந்தார், எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு என்பதை அறியாத நூறு நாள் வேலைத்திட்டத்தின் சூப்ரவைசர் வீராச்சாமி.
***
Comments
Post a Comment