172. ஒரு திருத்தம் (கொலுசு – ஜூன் 2025)


172. ஒரு திருத்தம்.

                                     (கொலுசு – ஜூன் 2025)

         பவழ மல்லி, பாரிஜாதம், சரக்கொன்றை போன்ற மரங்களும்;

பொன்னரளி, இருவாட்சி, செவ்வரளி, மனோரஞ்சிதம், விருட்சி போன்ற குத்துத்துச் செடிகளும்;

குத்துச் செடிகளைப் பற்றிப் படர்ந்து, பூத்துக் குலுங்கி மணம் பரப்பும் சந்தன முல்லை, மல்லிகை, ஜாதி முல்லை, சம்பங்கி என கொடிகளும்;

வண்ண வண்ணமாய் மலர்களைப் புஷ்பித்திருந்தன.

பச்சைப் பசேல் என்ற புல்வெளிகள் பராமரிக்கப் பட்டிருக்கும், நறுமணம் சூழ்ந்த, அந்த வீடு ஒரு ஆஸ்ரமம் போல தெய்வீகமாகக் காட்சியளித்தது.

***

புத்தம் புது ஹூண்டாய் காரில் வந்திறங்கினார் அவர்.

இறங்கிவர், வீட்டின் இயற்கையான பின்னணியை ரசித்தபடியே நடந்து வந்து, வாசல் கிரில் கதவின் தாழ் நீக்கினார்.

கதவுக் கீல்களில் கிரீஸ் வைத்து முறையாகப் பராமரிக்கப்ட்டிருந்ததால் கிரில் கதவு ஓசையின்றி விரைவாய் விரிந்துத் திறந்து கொண்டது. உள்ளே சென்று, மீண்டும் கதவை மூடித் தாழிட்டார்.

பசுமையான லான் தரையில் நடந்தார்.

பஞ்சு மெத்தை மேல் நடப்பதைப் போன்ற சுகத்தை அவர் முகம் பிரதிபலித்தது.

படியேறினார். போர்டிகோவில் கால் பதித்தார்.

பல்வகை மலர்கள் கலந்து வீசும் நறுமணம் அவரின் நாசியை நிரப்பிப் புத்துணர்ச்சியை புதுப்பித்தது. ஆழமாய்ச் சுவாசித்து சூழலை அனுபவித்தபடியே, அழைப்பு மணியை அழுத்தினார்.

***

அந்த நபருக்கு சுமார் ஐம்பது வயதிருக்கும்.

காட்டன் குர்தா, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வயதைக் குறைத்துக் காட்ட முயற்சித்தாலும் இடுப்பைவிட்டு சுமார் நான்கு அங்குலம் வளர்ந்திருந்த தொப்பையும், முன் வழுக்கையும் அவரது வயதை அதிகரித்தே காட்டின.

அவரது தோற்றம், உடல்மொழிகள் அனைத்தும், ஒரு அதிகாரியின் தோரணையில் இருந்தன.

“டிங்க்...!” ”டிங்க்...!”  உள்ளே ஒலித்த அழைப்பு மணியின் ஓசை வெளியே நின்று பொத்தானை அமுக்கியவர் காதிலும் விழுந்தது.

சில நொடிக் காத்திருப்பிற்குப் பின் , கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தார் ஒரு முதியவர்.  முழுக்கைப் பனியனும் வேட்டியும் அணிந்திருந்த அவருக்கு சுமார் 65 வயதிருக்கலாம். 

வழுக்கை விழுந்த முன் நெற்றியைச் சுருக்கியபடி யாரு வேணும்?” என்று வினவினார் அந்த முதியவர்.

“இது மிஸ்டர் சங்கர் வீடுதானே?”

 ‘கேட்கிறவர் யாராக இருக்கும்...?’ நெற்றி சுருக்கி யோசித்தபடியே “ஆமாம்..” என்றார் முதியவர்.

“இருக்காரா... ?”.

“இருக்காரே...” நீங்க...?”

இப்போது அவரது வலது கை மற்றொரு கதவின் மேல் இருக்கும் நாதாங்கியை கீழிறக்கிக் கதவை திறக்க ஆயத்தமாகியது.

 “என் பேரு பாண்டியன்! சங்கரோட மேலதிகாரி..”

“அப்படியா..? நான் சங்கரோட தகப்பனார்... வெல்கம்..!” வாய் நிறைய அழைத்தபடியே கதவை விரியத் திறந்தார்.

“ஆபீஸ் வேலை சம்பந்தமா சங்கரோட கான்ஃபிடன்ஷியலாப் பேசணும்." அதான் அவசரமாப் புறப்பட்டு வந்தேன்.”

சொல்லிக் கொண்டே வீட்டின் உள்ளே அடியெடுத்து வைத்தார் வந்தவர்.

"ஓ! அப்படியா..! சங்கர் பின் கட்டுல அவரோட ஆபீஸ் ரூம்ல இருக்கார், தகவல் சொல்லி வரச் சொல்றேன்; உட்காருங்க ப்ளீஸ் " என்றவர், வரவேற்பறையில் நின்ற ஒற்றைக்கால் மேஜைக்கு முன் போடப்பட்டிருந்த நாற்காலியில் அவரை அமரச் செய்தார்.

ரேழி வழியாகப் பின் கட்டுக்குச் சென்றார் சங்கரின் அப்பா.

‘தன்னைப் போலவே தாய் தகப்பனை வைத்துப் பராமரிக்கிறாரே...!’ சங்கரை நினைத்துப் பெருமிதப் பட்டார் அதிகாரி.

***

சமையல்கட்டில் பலகாரம் செய்யும் வாசனை அதிகாரியின் நாசியை எட்ட, கண் கிறங்க  அதை அனுபவித்தார்.

அந்த வீட்டின் சமையல் கட்டுக்கு இரண்டு வாயிற்படிகள்.

ஹால் பக்கம் ஒன்று.

பக்கவாட்டில் ரேழிப் பக்கம் மற்றொன்று.   

பெரியவர், ஹாலில் யாரையோ உட்காரச் சொன்னதை ஹால் பக்க நுழைவாயில் மூலம் பார்த்துவிட்டு, ரேழிப்பக்க வாசல்படிக்கு வந்து, தன் கணவரை நிறுத்தி, “யாரு வந்துருக்கா?" என்று கேட்டாள் சங்கரின் அம்மா, அதாவது  பெரியவரின் மனைவி..

“நம்ம சங்கரோட மேலதிகாரி அவர்! ஏதோ ஆபீஸ் விஷயமா அவசரமா சங்கர் கிட்டே பேசணுமாம்... நான் பின்கட்டுக்குப்  போய் சங்கரை வரச் சொல்றேன்!” 

அவசரமாய்ச் சொல்லிவிட்டுப் பின் கட்டுக்கு நகர்ந்தார் பெரியவர்.

***

“சங்கர்..!”

மடி கணிணியில் பிஸியாக இருந்த மகன், அப்பாவின் குரலைக் காதில் வாங்கியதும் அவன் கண்கள், கணிணித்திறைக்கு மேல் ஏறி, அறையின் நுழை வாயிலைக் கூர்ந்தன.

“சங்கர், உன் ஹையர் ஆபீஸர் மிஸ்டர் பாண்டியன் வந்திருக்கார்! உன்கிட்டே ஆபீஸ் விஷயமா ஏதோ பேசணுமாம். ஹால்லே உட்கார வைச்சிருக்கேன்.”

செய்தி அறிந்ததும், சங்கரின் முகத்தில் ஒரு மரியாதை கலந்த பயம் தொற்றியது.

மடி கணினியை இறக்கி வைத்துவிட்டு, அவசரமாய் வரவேற்பறைக்கு வந்தான்.

“வாட் எ சர்ப்ரைஸ் சார்!”

கை கூப்பினான்.

"வெல்கம் சார்...! வெல்கம் சார்...!"

வாய் நிறைய தன் அதிகாரியை வரவேற்றான்.

எழுந்து கைக் கூப்பிய அதிரிகாரியை, ப்ளீஸ்... உட்காருங்க...”

நாற்காலியைக் காட்டி உபசரித்தான்.

ஒரு தட்டில் தேன்குழலும், அதிரசமும்   கொண்டு வந்து ஆபீஸர் முன்பு மேசையில் வைத்துவிட்டுப் புன்னகைத்தாள் சங்கரின் அம்மா.

"இவங்க என் அம்மா... ரங்கநாயகி..."

அதிகாரியிடம் அறிமுகப்படுத்தனான் சங்கர். 

“அப்பாவை ஏற்கெனவே பார்த்திட்டிருப்பீங்க உங்களுக்கு கதவைத் திறந்துவிட்டதே அவர்தான்...”

“வணக்கம் மா!”

அம்மாவைப் பார்த்துக் கைக் கூப்பினார் பாண்டியன்.

பதிலுக்கு வணக்கம் சொன்ன ரங்கநாயகி, 

“எடுத்துக்கோங்க. சார்; காபி கொண்டு வரேன்..”

சொல்லிவிட்டு சமையலறை நோக்கிச் சென்றாள்.

“ஸ்நாக்ஸ் எடுத்துக்கோங்க சார்.,.”

தன் பங்குக்கு ஒரு முறை சொன்னான் சங்கர்...

“நீங்களும் எடுத்துக்கோங்க சங்கர்...”

“இருக்கட்டும் சார்! நான் இப்பத்தான் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு, டீ குடிச்சேன் . நீங்க எடுத்துக்கங்க...”

லேசாக அவர் முன் தட்டை நகர்த்தினான்.

“அப்பா, பின் கட்டுல, ஒரு சின்ன வேலையை முடிச்சிட்டு இதோ இப்ப வந்துடுவார். நீங்க வந்த விஷயத்தை சொல்லுங்க சார்.”

“உங்க அப்பா ரொம்ப ஆக்டிவ்வா இருக்கார்!”

 ஆபிஸர் சொல்ல,

“அவர் எப்பவும் சுறுசுறுப்பாத்தான் இருப்பார்..” என்றான் சங்கர் பெருமையோடு. 

***

சொல்லவேண்டிய அலுவலக விஷயங்களைச் சுருக்கமாகச் சொன்னார் அதிகாரி.

அவர் சொல்லச் சொல்ல கவனமாகக் கேட்டுக் கொண்டான் சங்கர்.

மறந்துவிடாமலிருக்க கைப் பேசியில், மின்னஞ்சல் கோப்பை விரித்து, கம்போஸ் பக்கம் திறந்து, சங்கேத மொழியில், குறிப்பும் எடுத்துக் சேவ் செய்து, டிராஃப்ட் பகுதியில் ஆவணப்படுத்தினான்.

“எல்லா மேட்டரும் ஓகேதானே சங்கர்?”

வலது கைக் கட்டை விரலை உயர்த்தி தம்ஸ் அப் காட்டினான் சங்கர்.

“நீங்க வயசுல ரொம்பவே சின்னவர்ன்னாலும், ஆபீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் விஷயத்திலே பெரிய  திறமைசாலி! அதனாலத்தான் இந்த விஷயங்களை நீங்கதான் செய்யணும்னு நான் முடிவு பண்ணினேன் மிஸ்டர் சங்கர். அதுவுமில்லாம இது ரொம்ப ரொம்ப கான்ஃபிடன்ஷியல் மேட்டர்! அதான் போன்லயோ, மெசேஜ்லயோ சொல்லாம நேர்ல வந்தேன்.”

 “இட்ஸ் ஓகே சார்! நான் பார்த்துக்கிறேன்!”

”நான் சொன்ன முக்கிய விஷயங்களை கவனத்துலே வைச்சுக்கோங்க மறந்துறாதீங்க!”

“நோடட் ஸார்...”

புன்னகைத்தான் சங்கர்.

அலுவலக உரையாடல்கள் முடித்ததும், புறப்பட ஆயத்தமானார் அதிகாரி.

 ***

“அம்மா.. சார் புறப்படறாங்க.,.”

சங்கர் குரல் கொடுத்தான்.

“இந்தாங்கோ.,. சார்... ! வீட்ல குழந்தைகளுக்குத் தாங்கோ...!”

அதிரசமும், தேன்குழலும் போடப்பட்ட இரண்டு பாக்கிங் டப்பாக்களை ஒரு பையில் போட்டு, அதிகாரி முன் வைத்தாள் சங்கரின் அம்மா ரங்கநாயகி!

அதே நேரம் பின் கட்டிலிருந்து வந்தார் சங்கரின் அப்பா.

அவர் கையில் ஒரு கனமான பை இருந்தது. பை உயரத்தை விட இரண்டு மடங்கு உயரமுள்ள முருங்கைக் காய்கள் அதில் நீட்டிக் கொண்டிருந்தன.

“என்ன சார் புறப்பட்டுட்டீங்களா? இதை பிடிங்கோ!”

அதிகாரியின் முன்னால் அதைக் கொண்டு போனார்.

“இதெல்லாம்...” என்று ஏதோ பேச வாயெடுத்தார் அதிகாரி.

“எதுவும் சொல்லப்படாது. வீட்ல காய்ச்ச நெல்லிக்கா கொஞ்சம், கொய்யா ஏழெட்டு வெச்சிருக்கேன்.. ஒட்டு மாங்கா ரெண்டு இருக்கு. வீட்டுக்கு எடுத்துண்டு போங்க..!”

சொல்லியவாறு அதிகாரி முன் பையை வைத்துவிட்டு இங்கிதம் கருதி அப்பால் போய்விட்டார் சங்கரின் அப்பா.

***

“சங்கர்..”

விருந்தோம்பலின் நெகிழ்ச்சி அதிகாரியின் குரலில் பிரதிபலித்தது.

“சொல்லுங்க சார்...”

“உங்களை நினைச்சாப் பெருமையா இருக்கு சங்கர்...”

“என்ன சார் சொல்றீங்க...?”

“நீங்க உன் பேரண்ட்ஸ்க்கு நீங்க ஒரே பையனா, சிப்ளிங்க்ஸ் இருக்காங்களா சங்கர்...”

“நான் ஒரே பையன்தான் சார்...”

“அப்படியா...? எனக்கு இரண்டு அண்ணன்மார்கள் இருக்காங்க.” என்றார் அதிகாரி .

“ஓ...! அப்படியா?”

“நாங்க மூணு சன்ஸ் இருந்தாலும், நான்தான் என் அப்பா அம்மாவை  வெச்சிப் பாதுகாக்கறேன்.”

“அப்படியா சார்...?”.

“ஆமாம்; அவங்களை ஒரு குறையுமில்லாம நான்தான் கவனிச்சுக்கறேன்.”

“ஓ... க்ரேட்?”

“பெத்தவங்களை பாரமா நினைக்கற இந்தக் காலத்துல  வயதான பெற்றோர் உங்க பராமரிப்புல இருக்கறதும். அவர்களை நீங்க ரொம்ப நல்லாப் பார்த்துக்கறதையும் பார்த்தாப் பெருமையா இருக்கு மிஸ்டர் சங்கர்..!”

உணர்சி வசப்பட்டுக் சொன்னார் அதிகாரி. 

“சார்...! சார்...! நீங்க சொன்னதுல ஒரு திருத்தம்...! " என்றான் சங்கர்.

***

"என்ன? என்ன திருத்தம்?"

கேட்டன அதிகாரியின் கண்களும் உடல் மொழிகளும்.

"நீங்க சொல்றது போல, என் வயதான பெற்றோர் என்னோட பராமரிப்புல இல்லை சார். ”

“என்ன சங்கர் சொல்றீங்க...?”

அதிர்ந்தார் அதிகாரி.

“நான் அவங்களை சிறப்பா கவனிச்சிக்கவும் இல்லை...!”

மேலும் அதிர்ந்த அதிகாரி,

"சங்கர்... உங்க பேரண்ட்ஸ் உங்களோட மகிழ்ச்சியா, நிறைவா, ஆரோக்கியமா இருக்கறதை நானே நேர்ல பார்க்கறேனே அதைத்தானே சொல்றேன்?”

அதிகாரியின் குரலில் அதிர்ச்சியின் உச்சம் தெரிந்தது.

"என் பெற்றோர் கூடத்தான் நான் இருக்கேன் சார்...” என்ற சங்கர் தொடர்ந்தான்.

“மனசு, மற்றும் தேக ஆரோக்கியத்தோட இருக்கற என் பெற்றோர்தான், என்னை வழி நடத்திக்கிட்டிருக்காங்க ;

சின்ன வயசுல என்னை எப்படியெப்படியெல்லாம் கவனமாப் பார்த்துக்கிட்டாங்களோ, அதேபோலத்தான் இப்பவும் என்னைப் பார்த்துக்கிறாங்க! ;

வீட்டு நிர்வாகம் மட்டுமில்லே. என்னை நிர்வகிக்கிறதும் அவங்கதான்! அப்போ எனக்கு சிறுவயசு. இப்போ வளர்ந்திருக்கேன்! அவ்வளவுதான் வித்தியாசம்;

பாசமும், நேசமும், பரிவும் காட்டி ஆரோக்கியமா வளர்த்து, ஆளாக்கி, படிக்க வைச்சு, நம்மை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்த பெற்றோர்களை நாம பார்த்துக்கிறதாவும், பராமரிக்கறதாவும் சொல்லிக்கறது அவங்களை இழிவுப்படுத்தற மாதிரிங்கறது என் தாழ்மையான அபிப்ராயம்...! ;

வீட்டுலே பெரியவங்க காட்டற வழீல போறதுதானே இளைய தலைமுறைக்குப் பாதுகாப்பு. ‘என் பெற்றோரை நான் பராமரிக்கிறேன்’கறதை விட ‘என் பெற்றோரோட பாதுகாப்பிலே நான் இருக்கேன்’னு சொல்றதுதான் சரினு எனக்குப் படுது..!” என்றான் சங்கர்.

***

‘நீ எங்கே அவர்களைப் பார்த்துக் கொள்கிறாய்? அவர்கள்தானே உனக்கு உதவியாக இருக்கிறார்கள்? உன் பெற்றோர்களின் இருப்பால்தானே உன்னாலும், உன் மனைவியாலும் அலுவலக வேலைகளில் முழுக்கவனம் செலுத்த முடிகிறது...?’

அதிகாரியினுடைய ‘மனதில் குரல்’ உரத்து ஒலிக்க, உண்மை சுட்டது அவருக்கு.

அவரின் தன் முனைப்புத் தகர்ந்து சரிந்தது.

‘உண்மைதானே!

பெற்றெடுத்தக் குழந்தைகளைப் ஆரோக்கியமான உடல் வளர்ச்சி பற்றியும் அவர்களின் கல்வி, ஒழுக்கம் போன்ற உள்ள வளர்ச்சி பற்றியும், பன்முக வளர்ச்சிகளைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் அலுவலகக் கடமைகளில் நானும் என் மனையும் முழுமையாக மூழ்கி இருக்க, கொஞ்சம் கூட முகம் கோணாமல் பேரக் குழந்தைகளைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொள்ளும் பெற்றோர்களை ஒரு நொடி நினைத்துப் பார்த்தார் அதிகாரி.

”மிஸ்டர் சங்கர் நீங்க சொன்னது நூறுசதவீதம் சரிதான்!

பெற்றோரின் பாதுகாப்புலதான் நாம இருக்கோம்!”

மனதார, சங்கருக்குக் ஷேகைக் கொடுத்துவிட்டு;

ஒரு புது மனிதராய் சங்கரின் வீட்டிலிருந்து வெளியே வந்தார், ‘தானே தம் பெற்றோர்களை பராமரிப்பதாக’ இது நாள் வரை மாயையில் இருந்த அந்த அதிகாரி.

***


Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்