174. விஷன் ...! (கொலுசு – ஜூலை 2025)

 


174. விஷன் ...! 

(கொலுசு – ஜூலை 2025)

ள்ளி முதல்வரின் அறைக்குள் பிரவேசித்தார் டிரில் மாஸ்டர்.

“வணக்கம் சார்...!” - கைக் கூப்பினார். 

பதிலுக்கு வணங்கி, எதிர் இருக்கையைக் காட்டினார் முதல்வர்.

டிரில் மாஸ்டர் அமர்ந்தார்..

‘க்க்ஹூம்... க்ஹூம்...”

வழக்கம் போல பேசுவதற்கு முன் செருமினார். 

“கரஸ்பாண்டண்ட், என்ன சார் சொன்னாரு..?”

சம்பிரதாயமாகக் கேட்டார். குரலில் சுரத்து இல்லை.

“ஆண்டு விழா நடத்துறதுல ஆட்சேபணையில்லை. நான் சொல்ற விதிமுறைகளை மீறாம நடத்தணும்னு உத்தரவு போட்டுட்டாரு...!”-

முதல்வரின் குரலில் ஜீவன் இல்லை.

“அப்டியா…!”

முகவாயில் மூண்ட ஏமாற்ற முடிச்சின் இறுக்கத்தைத் தளர்த்த, தாடையைத் தாங்கித், தடவி விட்டபடி சிந்தனை வயப்பட்டார் ட்ரில் மாஸ்டர்.

***

சின்னதும் பெரிதுமாக, ஆறு மெட்ரிக் பள்ளிகள் இயங்கும் சிறு நகரம் அது.

ஏழாவதாக ‘மணிவாசகர் மெட்ரிக் பள்ளி’ என்ற நிறுவனம் உருவானது.

நோ டொனோஷன்;

மற்ற மற்றப் பள்ளிகளை விட. பல மடங்குக் குறைவான பள்ளிக் கட்டணம்;

குழந்தைகள் ஷூ, டை போன்றவை அணியத் தேவையில்லை; போன்ற நிபந்தனைகளின் பேரில், 

கல்விச் சேவை ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அறக்கட்டளையால் நிறுவப்பட்ட ‘மணிவாசகர் மெட்ரிக் பள்ளி’க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

தரமான உள்-கட்டமைப்புகள்; கல்வி இணைச் செயல்பாடுகள்; ஸ்மார்ட் வகுப்பறைகள்;

என் சி சி, ஜூனியர் ரெட் க்ராஸ், சாரணர் இயக்கம், பசுமைப் படை போன்ற பல்வேறு இயக்கச் செயல்பாடுகள்;

சதுரங்கம், டேபிள் டென்னிஸ், கேரம் போன்ற உள்ளரங்க விளையாட்டுகள்;

இப்படி, அனைத்திலும் உரிய கவனம் செலுத்தியதால், சாதனை மேல் சாதனை படைத்து, மாவட்டத்தில் மிகச் சிறந்த மாதிரிக் கல்வி நிறுவனமாக புகழ் பெற்றுவிட்டது மணிவாசகர் மெட்ரிக் பள்ளி. 

ஸ்தாபிதப்படுத்தப்பட்ட எதுவும் பிராபல்யத்தின் மூலம் சிதையும் என்ற கருத்தும் கால ஓட்டத்தில், காட்சியானது அந்த நிறுவனத்தில்...!

***

பொதுவாக, தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்கள் ரிஸைன் செய்து விட்டுப் போவதும், புது ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதும் தவிர்க்க முடியாதவை.

டிரில் மாஸ்டர் மனோகரன். பள்ளியில் வேலைக்குச் சேர்ந்த ஐந்து வருடங்கள் முடியப் போகிறது. வந்ததிலிருந்து, ஆர்வமுள்ள மாணவர்களை, தயார்செய்து, உள்ளரங்க, விளையாட்டுப் போட்டிகளில், மாவட்ட, மாநில அளவில் சாதனை புரியவைத்ததால், பள்ளி மேலும் பிரபலமாகியது. 

பள்ளி அனைத்துத் துறைகளிலும் பிரபலமாகப் பிரபலமாக, ‘தன் குழந்தை இந்தப் பள்ளியில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான பெற்றோர்க்கும் பாதுகாவலர்களுக்கம் ஏற்பட, டிமாண்ட் அதிகமானது,

டிமாண்ட் அதிகமானதால், பல, ஸ்தாபன நோக்கங்கள் மறைமுகமாகச் சிதைந்தன. 

‘நோ டொனேஷன்’ கொள்கை முற்றிலும் காலாவதியானது.

மாணவர் சேர்க்கையின்போது, பள்ளி வளர்ச்சி நிதி, கட்டட நிதி, நூலக நிதி, பரிசோதனைக் கூட நிதி என்றெல்லாம் வாய்மூலமாகச் சொல்லி, ரசீது இல்லாமல் பெற்றோரிடம், வசூல் செய்யும் பாரம்பரியம் தொடங்கித் தொடர்ந்தது. 

தான் படிக்காவிட்டாலும் வரும் தலைமுறையினர் நல்ல கல்வியறிவைப் பெறவேண்டும் என்ற ஆசை பெற்றோர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இருப்பது இயல்பல்லவா..?

அதைத் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் இரண்டாண்டுகளுக்கு முன் பொறுப்பேற்ற பள்ளி முதல்வரும், ஐந்து வருடம் சர்வீஸ் போட்ட டிரில் மாஸ்ட்டரும்.

நகர மக்கள் மட்டுமல்லாது, சுற்றுப்புற கிராமங்களில், கூலி வேலை செய்வோர் உட்பட, கடன் வாங்கியாவது, டொனேஷன் செலுத்தி, தங்கள் குழந்தைகளை அந்தப் பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டனர். 

பணம் வசூல் குறித்துத் தாளாளருக்கு மொட்டைக் கடிதம் எழுதவும் செய்தனர் சிலர்.

அந்தக் கடிதங்களைத் தாளாளர் காட்டிக் கேட்டபோது, அது ‘ஆதாரமற்ற குற்றச்சாட்டு..’ என பள்ளி முதல்வரும் டிரில் மாஸ்டரும் சமாளித்தனர்.   

***

தொடங்கிப், பத்து வருடங்களாக பள்ளியை நிர்வகித்த தாளாளர், வயது முதிர்வின் காரணமாக, சென்னையில் வசிக்கும் தன் மகன் குடும்பத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு, புலம் பெயர்ந்துவிட்டார்.

அங்கிருந்து பள்ளிச் செயல்பாடுகளை நுணுக்கமாகக் கண்காணிப்பதற்குச் சிரமமாக இருக்கும் என்பதால், தாளாளர் பதவியை ராஜினாமா செய்தார்.,

உள்ளூரிலேயே இருக்கும், தன் தம்பியின் மகனிடம் தாளாளர்ப் பொறுப்பை ஒப்படைத்தார். கமிட்டி மெம்பர்களும் அதை ஆமோதித்தனர்.

புதுத் தாளாளர், முன்னாள் ராணுவத்தினர். 

இரட்டை நாடி. மிடுக்கான ஆஜானுபாஹுவான தோற்றம்;

நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் அவர் கம்பீரத்தைப் பன்மடங்குப் பெருக்கிக் காட்டியது.  

‘நிதானித்து, யோசித்து, மிக மிக ஜாக்கிரதையாகத்தான் பேசவேண்டும் இவரிடம்...!’ – என்று,

எதிராளியை யோசிக்க வைக்கும் அழுத்தமான தோற்றம்.

ராணுவ ‘டிஸிப்ளினில் ஊறியவராதலால்,

நாட்டுப் பற்றும்,  மனித நேயமும் இரு கண்களாக இருந்தன அவருக்கு. 

***

மே மாதம் முதல் வாரத்தில், பள்ளித் தாளாளராக பொறுப்பை ஏற்ற பின்.

புதுத் தாளாளரின் நேரடிப் பார்வையில். அந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.

விண்ணப்பங்களை, சேர்க்கைக் குழுவினர் பரிசீலித்த பிறகு, பெற்றோர் மூலமே அந்த விண்ணப்பத்தை தன்னிடம் அனுப்பவேண்டும் என்று உத்தரவிட்டார் தாளாளர்.

பள்ளியில் தங்கள் செல்வங்களை சேர்க்க வந்த பெற்றோர்களிடம் வெளிப்படையாகப் பேசினார்.

இடைக்காலத்தில் சிதைந்து விட்ட,

பள்ளியைத் தோற்றுவித்ததன் நோக்கங்களை, மீட்டெடுக்கும் வகையில் மற்ற நடைமுறைகளையும் மாற்றியமைத்தார்.

தாளாளரே, நேரடியாக மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டதால், பண முதலைகளால் எந்த வரம்பையும் மீற வாய்ப்பில்லாமல் போனது. 

எந்த டொனேஷனும் இல்லாமல், அட்மிஷன் செய்ய வேண்டியதாகிவிட்டது.

புதுத் தாளாளரின் நிர்வாகம், ‘ பெற்றோர்-தோழைமை’ யுடன் கல்வி, விளையாட்டு, இணைச் செயல்பாடுகள் என அனைத்திலும் மேலோங்கிப் பிரகாசித்தது. 

அந்தப் பள்ளியை, மாதிரிப் பள்ளியெனப் போற்றியது பள்ளிக் கல்வித்துறை.

***

ள்ளி முதல்வர் கொடுத்த, ஆண்டுவிழா நிகழ்ச்சிப் பட்டியலைக்  கூர்ந்து பார்த்தார் தாளாளர்.

“எதுக்கு நாலு மணி நேரம் விழாங்கறேன்...?; 

பத்து சினிமா பாடல்களுக்கு குரூப் டான்ஸ் தேவையா..?; 

ஜெனரேட்டர் எதுக்கு..? ;

ராக்கூத்து அடிக்காம விழா நடத்த முடியாதா?”

இப்படி நிறைய நிறையக் கேட்டார். 

தாளாளரிடமிருந்து வார்த்தைகள், நிதானமாகவும், தெளிவாகவும், உறுதியாகவும், அழுத்தமாகவும் வெளிப்பட்டன.

பள்ளி முதல்வருக்குத் தலை சூடாகியது. நெற்றிப் பொட்டில் வலி கிளம்பியது.

“இதையெல்லாம் பேரண்ட்ஸ், குழந்தைகள், பொதுமக்கள் எல்லாரும் விரும்பறாங்க அய்யா? ”

நிதானமாகவும் பணிவாகவும் நடித்தார் முதல்வர். 

நடிப்பை கூர்ந்து கவனித்தார் தாளாளர். 

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, மனிதநேயம், ஒழுக்கம், உண்மை போன்ற ராணுவ விழுமியங்களால் உயர்ந்து நின்ற, கர்மயோகியின் முன் பொய்மை நிமிர்ந்து நிற்க முடியுமா என்ன?

துளைத்து எடுக்கும் தாளாளரின் உஷ்ணப் பார்வையை நேர் கொள்ள முடியவில்லை பள்ளி முதல்வரால். அவர் கண்கள் தானாகத் தரை தாழ்ந்தன. 

 “ஜனங்கள், எதையும் தனியா விரும்பறதில்லை. அவங்க விரும்பறாங்க!,  இவங்க ஆசைப்படறாங்க! ன்னு  சொல்லிச் சொல்லி நாமதான் இதையெல்லாம் பழக்கப்படுத்தறோம். என்றார் தாளாளர் உறுதியாக. 

அதோடு, ஆண்டு விழாவுக்கான நிகழ்ச்சி நிரலை தாளாளரே தயாரித்துக் கொடுத்தார்.

***

புதுத் தாளாளர் அமைத்துக் கொடுத்த நிகழ்ச்சி நிரலின்படி,

பள்ளியின் ஆண்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் பிற்பகல் மூன்று மணிக்குத் துவங்கிவிட்டது. எனவே,  குழல் விளக்குகள், ஃபோக்கஸ் ‘லைட்டுகள், சீரியல் லைட்டுகள் , அவைகளை உயிர்ப்பிக்கும், ஜெனரேட்டர்கள் என எதுவும் தேவையற்றதாகின.

சினிமா ஹிட் பாடல்களுக்குக் குழுநடனங்களும், குத்துப் பாட்டுகளும் தடை செய்யப்பட்டு விட்டதால், சென்ற சில ஆண்டுகளைப் போலப் பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவில் மேடை அமைப்பும் அலங்காரங்களும் இல்லை.

முக்கியமாக, குத்துப்பாட்டுக்கு ஒத்திகை, என்று பல நாட்கள், பல மணி நேரங்கள் விரயமாகவில்லை.

ஒலிமாசுக்கு வித்திடும் ஸ்பீக்கர்களை ஆங்காங்கே பொருத்தி, ஊரெல்லாம் அலறவிட்டுப் பள்ளி விழாவை கேலிக் கூத்தாக்கவில்லை.

எனவே, ஆண்டு விழாச் செலவு எனக் கணக்கெழுதி, எந்தப் பெற்றோரும் ஆயிரக் கணக்கில் தொகை தரவேண்டிய அவசியம் இருக்கவில்லை.

***

மாணவர்களின் பெற்றோரும் பாதுகாவலர்களும் மட்டுமே அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டதால்,  ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் எளிமையாகவும் இனிமையாகவும் நிறைவு பெற்றன.

தங்கள் மழலை மொழியில் மேடைப் பேச்சு பேசியும், பாட்டுப் பாடியும், எளிய உடைகளில் மாறு வேடமணிந்தும் மகிழ்ச்சியூட்டினர் குழந்தைகள். 

தலைமை தாங்கிய புதுத் தாளாளர் குழந்தைகளின் பல்வேறு திறமைகளை ரசித்துப் பாராட்டினார். கற்றல் சாதனைகளுக்குத் தன் கையால் பரிசளித்து மகிழ்ந்தார்.

சரியாக ஐந்து மணிக்கெல்லாம் தேசீய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.

***

 “வழக்கமா, ஐந்து மணிக்கு மேலேத் தொடங்கி, பாட்டும் கூத்துமா விழா முடிய ராத்திரி ஒன்பது தாண்டிரும். அதுக்கு அப்பால கடைசீ பஸ் பிடிச்சி கிராமத்துக்குப் போகங்காட்டியும் தாவு அறுந்துரும்..”

“முன்னெல்லாம், அதுக்கு இவ்வளவு, இதுக்கு அவ்வளவுனு பணம் கறப்பாங்க. இந்த வருஷம் அந்தச் செலவெல்லாம் இல்லேங்கறது நிம்மதியா இருக்குது!”

“டப்பாங்குத்து, ரெக்கார்டு டான்ஸ் இதெல்லாம் இல்லாம, கச்சிதமா இருந்துச்சு விழா.!”

“ஆண்டு விழான்னா இப்படித்தான் நடத்தணும். முன்னெல்லாம் நடக்குமே, ‘கன்னாபின்னானு...!”

விழா முடிந்து, பெற்றோர்களும் பொது மக்களும் இப்படியெல்லாம் பேசிக் கொண்டே சென்றனர்.

***

“ஏழைப் பெற்றோர்களிடம் டொனேஷன் உட்பட எந்தக் கட்டணமும் வசூலிக்காமல், மாணவர் சேர்க்கையைத் தொடங்கிய தாளாளர், தொடர்ந்து, கல்வியியல் வல்லுனர்களைப் பள்ளிக்கே வரவழைத்து ஆசிரியர்களுக்கெல்லாம் புத்தாக்கப் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்தார். 

வெறும் கல்வி மட்டுமல்லாது, குழந்தைகளுக்கு கணிப்பொறிக் கல்வி, வாழ்க்கைக் கல்வி என அளித்து,

அறிவை விரிவு செய்து அகண்டமாக்கத் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தினார்.

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தில் வாக்குக் கொடுத்தபடி, குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் கொடுப்பதை அறவே நிறுத்தியது நிர்வாகம். 

இடைப்பட்டக் காலத்தில் குடோனாக மாற்றப்பட்டிருந்த நூலகம், புத்துயிர்ப்புப் பெற்றது. தினமும் நாளிதழ்கள், வார இதழ்கள், நூலகப் புத்தகங்கள் எல்லாம், வாசிப்பதற்குக் கட்டாய நூலகப்-பிரிவேளை ஒதுக்கியிருந்தார்கள்., 

கருவேல வனமாய்க் கிடந்த விசாலமான விளையாட்டு மைதானத்தைச் சீர்படுத்தி, மாணவர்களுக்குக் கட்டாய விளையாட்டையும் செயல் முறைப்படுத்தியதில், குழந்தைகள் குதூகலமாகவும் மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடனும் மிளிர்ந்தார்கள். 

குழந்தைகளின் சமச்சீர் வளர்ச்சியை மனதில் கொண்டு, தாளாளர் கேட்டுக்கொண்டபடி, பள்ளியிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் குடியேறினார்கள் பெற்றோர்கள். 

நடந்தும், மிதிவண்டியிலும் பள்ளிக்கு வந்து சென்ற, மாணவர்க்கு தேக ஆரோக்கியமும் தன்னம்பிக்கையும், தைரியமும் வளர்ந்தன. 

பெரும்பாலோர், தங்கள் குழந்தைகளை, கல்வியோடு, சுயஒழுக்கத்தையும், சமூக விழுமியங்களையும் மனதில் படியவைக்கும், பள்ளி விடுதியில் சேர்த்தார்கள்.

*** 

நிர்வாகம் அறிவுறுத்தியபடி, குழந்தைகள், ஏவா மக்களாக, தங்கள் உடையை தாங்களே துவைத்துக்கொள்வதற்கும், தன் படிப்பறை, சுற்றுப் புறத் தூய்மைப் பராமரிப்பிற்கும் பயிற்சியளித்தார்கள்.

வீட்டில் சமையல், விவசாய வேலைகள், மாடுகன்று பராமரித்தல் போன்ற பெற்றோர் செய்யும் வேலைகளுக்கு தங்கள் குழந்தைகள் உதவுவதையே ‘ப்ராஜக்ட்’ களாக அறிவித்து, மதிப்பெண் அளித்ததால் தனது குடும்பம், தனது பெருமை என்ற நிலையில் குழந்தைகள் வளர்ந்தார்கள்.

கல்வியாண்டின் துவக்கத்தில் காண்டீபத்தைக் கையில் எடுத்த புதுத் தாளாளர்,

கல்வியாண்டின் இறுதி முடிய தொடர்ந்துப் பொழிந்த அம்புகளின் பொழிவால், அக்கிரமங்கள் அழிந்தன. 

களைகளைக் களைந்த பின் பயிர் செழித்து வளர்வதைப்போல,

பள்ளி, அனைத்துப் பரிமாணங்களிலும் சமச்சீராய் உயர்ந்து, தாகூரின் சாந்திநிகேதனுக்கு இணையான வளர்ச்சியை நோக்கி வேகமாய் நகர்ந்தது.

***

ல்வியாண்டின் தொடக்கத்தில், மாணவர் சேர்க்கையின்போது சம்பாதிக்க முடியாமல் இழந்துவிட்டத் தொகையை  ‘ஆண்டு விழா வசூலில் வட்டியும் முதலுமாக அள்ளிவிடுவோம்,

என்று போட்ட திட்டங்கன் அனைத்தையும் இந்தப் புதுப் பள்ளித் தாளாளர் சிதைந்துவிட்டாரே!’ -  என்ற ஏமாற்றம் தலையை இறுக்க,

தன்னுடைய இருக்கையில் பள்ளி முதல்வரும், எதிர் இருக்கையில் டிரில் மாஸ்டரும் அமர்ந்து,

முகவாயிலும், முன்னந்-தலையிலுமாகக் கைத்தாங்கி, இறுக்கத்தைத் தளர்த்தியபடி, ஒருவருக்காருவர், வெறுமையான, வரண்ட, ஏமாற்றப்  பார்வைகளைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.

***


Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்