175. உறவுப் பாலங்கள் ( காற்று வெளி -ஆடி 2025)
உறவுப் பாலங்கள் - ஜூனியர் தேஜ்
தேஜ் வித்யா மந்திர், மெட்ரிக்
பள்ளியில், கீழ் நிலை வகுப்பில் படித்து வரும் மகேஷ், உரத்த குரலில், தன்னை மறந்து,
“London Bridge is Falling
Down…! Falling Down…!! Falling Down…!!!”
என்று வெவ்வேறுத் தாள கதியில்,
குரலை உயர்த்தியும் தாழ்த்தியும் ராகம் போட்டுப் பாடிக் கொண்டிருந்தான்.
‘நைட் ஷிப்ட்’டில் வேலை பார்த்துவிட்டு,
விடிகாலை ஐந்து மணிக்குதான் வீட்டிற்கு வந்து படுத்த கருணாகரனுக்கு தூக்கம் கலைந்துவிட்டது.
கண் பிட்டுக்கொண்டது. மணலை அள்ளிக் கொட்டியது போல உறுத்தின கண்கள். மிளகாய்த் தூள்
கொட்டியது போல எரிச்சல் மூண்டது.
கண்களை மீண்டும் மூட முயற்சித்தான்.
நெற்றி நரம்புகள் ‘வெடுக்... வெடுக்...’ என இழுத்து, கண்களுக்குள் குத்து வலி எடுத்துக்
கண்ணீர் பிதுங்கி வெளியேறியது.
கண்களை அழுத்தித் துடைத்துக்
கொண்டான்.
மீண்டும் கண்களை மூடி, தூங்க
முயன்றான்.
‘London Bridge is... என்று தொடர்ந்து
ரெய்ம் பாடினான் மகன்.
நேற்றைக்கு முதல்நாளும் இதையேதான்
பாடினான். நேற்று பாடியதும் இதே ரெய்ம்தான்.
நேற்றும் அதற்கு முந்தைய
நாளும் கருணாகரனுக்கு பகல் ஷிஃப்ட். இரவு நன்கு தூங்கி எழுந்து விட்டதால், கண்களில்
இந்த ரண வேதனைகள் எதுவும் இல்லை. மகனின் ரெய்மும் அவனை பாதிக்கவில்லை.
இன்று அவனை பாதித்துவிட்டது.
காரணம், விடிய விடியக் கண் விழித்து கம்பெனியில் நைட் ஷிப்ட் வேலை செய்துவிட்டு வந்திருப்பதால்,
தூக்கம் கலைந்து கண் ஏகமாய் எறிய கஷ்டப்படுகிறான். எனவே மகன் பாடும் ரெய்ம் கர்ண கடூரமாக
ஒலித்தது அவன் காதுகளில்.
***
சமையல் அறையில், மணக்க மணக்க
காலைச் சிற்றுண்டி தயார் செய்து கொண்டிருந்தாள் கௌசல்யா.
மகன் பல்வேறு டெஸிபிள்களில்,
பலமாய்ப் படித்துக் கொண்டிருந்த அந்த ‘நர்ஸரி ரெய்ம்’ கௌசல்யாவின் காதுகளைக் குளிர்வித்தன.
காரணம், கௌசல்யா, ஆங்கில
இலக்கியம் படித்தவள்.
இளங்கலை மற்றும் முதுகலை
ஆங்கில இலக்கியத்தில் தங்கப் பதக்கம் பெற்றவள் கௌசல்யா.
பல்கலைக் கழகத்தின் ஆங்கிலத்துறை,
‘ஸ்காலர்ஷிப்’ வழங்கி கௌசல்யாவை ‘எம் ஃபில்’ இள முனைவர் ஆராய்ச்சி மாணவியாக்கியது.
கவிதைக்காக இலக்கியத்துறையின்
நோபல் பரிசு பெற்ற டி எஸ் இலியட் என்ற நிகரற்ற எழுத்தாளரின் Waste Land (களர் நிலம்)
என்ற அற்புதமான கவிதையின் உட்பொருளை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரை தயாரித்தாள் கௌசல்யா.
ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த
அந்த நாள், கௌசல்யாவின் வாழ்வில் ஒரு பொன்னாள்.
***
ஆய்வுக் கட்டுரையின் நான்கு
படிகளை, தேர்வுக்குழுவினர் நால்வரிடமும் சமர்ப்பித்துவிட்டு, அவர்களின் வாய்மொழித்
தேர்வினை எதிர் கொள்ளத் தயாராக எதிரில் நின்றாள்.
“இந்திய உபநிடதங்களிலிருந்து,
கணிசமான மேற்கோள்களைக் குறிப்பிட்டு, இலியட் அவர்களின் கவிதையோடு ஒப்பாய்வு செய்து
மிகத் தெளிவாக ஒப்புமைப் படுத்தியிருக்கிறீர்கள். அது எவ்வாறு சாத்தியமாயிற்று...!”
–
‘வைவா ஓசி’ எனப்படும் வாய்மொழித்
தேர்வில், தேர்வுக் குழு உறுப்பினர்களின் சீனியர் ப்ரொபசர், ஆச்சரியம் முகத்தில் பிரதிபலிக்க,
கௌசல்யாவிடம் கேட்டார்.
“பற்பலப் பண்டிதர்களிடம்
கேட்டு அறிந்து கொண்டேன். அந்தப் பண்டிதர்களின் பெயர்களை ”பார்வை நூல்கள் பகுதியில்
குறிப்பிட்டிருக்கிறேன் ஐயா..” என்று பணிந்து பதிலளித்தாள் கௌசல்யா.
“ஓ..! முன்பே உபநிடதங்களில்
போதிய பரிச்சயம் இருந்ததால்தான், தாங்கள் இலியட்டின் இந்தக் கவிதையை ஆய்வுக்காக எடுத்துக்
கொண்டீர்களோ?”
இயல்பாகக் கேட்டார் மற்றொரு
ப்ரொபசர்.
“மன்னிக்க வேண்டும், இந்திய
உபநிடதங்களின் சாராம்சங்களை வேத விற்பன்னர்களிடம் சென்று அறிந்துத் தெளிய வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டதே, டி எஸ் இலியட் அவர்களின்
‘களர் நிலம்’ என்ற உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசு பெற்ற கவிதையின் முடிவில் அவர் வைக்கும்
முத்தாய்ப்பின் விளைவால்தான் ஐயா..”
இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத
தேர்வுக்குழு கௌசல்யாவை மிக்க மரியாதையுடன் பார்த்தது. கற்றவருக்கு சென்ற இடம் எல்லாம்
சிறப்பல்லவா...!
***
16ம் நூற்றாண்டில். எந்த இடத்தில்
எடுத்து ஆராய்ந்தாலும், நூறு விழுக்காடு தூய்மையாக இருந்த இருந்த தேம்ஸ் நதி நீரின்
தன்மையை எட்மண்ட் ஸ்பென்ஸர் ‘ப்ரொதாலமியன்’ என்ற கவிதையில் Sweet Thames
மற்றும்
Crystal
Clear Water என்று வர்ணிப்பதற்கும்;
17ம் நூற்றாண்டில் மாசுபட்டுக்
கிடக்கும் நிலையை டி எஸ் இலியட் வர்ணிப்பதற்கும் உள்ள தலைகீழ் மாறுதலை மிகச் சிறப்பாகக்
கையாண்டிருந்ததை குறிப்பிட்டு, தேர்வுக் குழுவினர் அனைவருமே கௌசல்யாவைப் பாராட்டியதும்
இப்போது நினைவில் வந்து இடறிற்று கௌசல்யாவிற்கு.
***
தூக்கம் கலைந்து, தவியாய் தவித்த
கருணாகரன், ஆத்திரத்தோடு எழுந்து, “ப..டார்...” என்று ஓசையெழக் கதவைத் திறந்து கொண்டு
வேகு வேகுவென்று ஹாலுக்கு வந்தான்.
திடீரென்று அறைக்கதவின் பலமான
மோதல் சத்தத்தை எதிரே பார்க்காத குழந்தை மகேஷ், ரெய்ம் வாசிப்பதை படாரென்று நிறுத்திவிட்டு
பயத்தினால் விழித்தான். அவன் முகம் வெளிறியது.
‘என்னமோ ஏதோ...!’ என்று,
பதறி அடித்துக் கொண்டு, அடுப்பை தற்காலிகமாய் நிறுத்திவிட்டு சமையலறையை விட்டு அவசரமாய்,
ஓட்டமும் நடையுமாக, கூடத்துக்கு பாய்ந்தோடி வந்தாள் கௌசல்யா.
முகத்தில் ரௌத்ரம் அப்பியிருக்க,
“Falling Down.. Falling
Down..”னு இது என்னடா காலங்கார்த்தால... எதிர்மறையாக் கூச்சல் போட்டுக்கிட்டு...!”
என்று காட்டுக் கத்தலாய்
கத்தியபடியே, மகேஷின் கையில் இருந்த ரெய்ம்ஸ் புத்தகத்தைப் பிடுங்கி வீசி எறிந்தான்.
‘கணவன் கோபம் கொண்டு புத்தகத்தைப்
பறித்து எறிவதற்கு முன் சென்றிருந்தால், இந்தச் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம். சம்பவம்
நடந்து முடிந்தவின், எதிர் வார்த்தையாடல் எந்த வகையிலும் பயன் தராது’ என்று கருதினாளோ
என்னவோ..., கௌசல்யா, நாகரீகம் சிறிதும் இன்றி முரட்டுத் தனமாக, நடந்கொண்ட கணவனின் செயல்களுக்காக,
எதிர் வினை ஏதும் ஆற்றவில்லை.
தன் அவஸ்தைகளை அமிலம் தோய்த்த
வார்த்தைகளால் அடுக்கி, ஆத்திரமாய்க் கொட்டிவிட்டு, தட தடவெனத் திரும்பி மீண்டும் படுக்கை
அறைக் கதவை அடைத்துக் கொண்டு படுத்தான் கருணாகரன்.
கண் உறுத்தலோடு, ஆத்திரத்தில்
சுய கட்டுப்பாட்டை இழந்த குற்ற உணர்வும் இணைந்து கழிவிரக்கம் மேலிட, இப்போது மொத்தமாய்த்
தூக்கம் தொலைந்துவிட்டது கருணாகரனுக்கு.
***
அடுத்து என்ன செய்வது என்பதை
அறியாமல், எட்டத்தில் கவிழ்ந்து கிடந்த புத்தகத்தை, குனிந்து எடுத்துக் கொண்டு வந்தான்
மகேஷ்.
தகப்பனின் திடீர் கத்தலாலும்,
காட்டுமிராண்டிச் செயலாலும், கலங்கி இருந்த மகன் மகேஷ் அருகில் சென்றாள் கௌசல்யா. ஆறுதலாக
மகேஷின் தோளில் கை வைத்தாள். அன்போடு உச்சி முகர்ந்தாள்.
“அம்மா...”
“ம்...”
“இந்த ரெய்ம் எதிர்மறையாம்மா...?”
“எதிர் மறை இல்லடாக் கண்ணா...
If க்ளாஸ்’னு சொல்லுவாங்க... இப்படியெல்லாம் இருந்தா, இப்படி
ஆயிடும்னு பொருள் பட உபயோகிக்கற ஒரு முறை அது.”
“புரியலைம்மா... “
“மகேஷ், நான் சொல்றதை கதை
மாதிரி கேட்டுக்கோ.. புரியற வயசு வரும்போது புரியும்.” என்றாள் தாய்.
***
ஆறேழு வயசுலயே கொண்டு போய்
குழந்தைகளை பாடசாலைல சேர்த்து ஏழு வருஷ காலம் பூரணமா வேத அத்யயனம் செய்யச் சொல்றாளே...!
வேதத்துல உள்ள சூட்சுமங்கள் எல்லாம் அந்தக் குழந்தைகளுக்கு எப்படிப் புரியும்...?”
ஒரு சமயம், காஞ்சி மகா பெரியவா
அவர்களிடம் ஒரு அணுக்கத் தொண்டர் கேட்டாராம். உடனே,
அந்த வயசுல குரு சொல்றதை
அப்படியே கேட்டுக் கேட்டு, திருவை சொல்லிச் சொல்லி, மனனம் பண்ணி வெச்சிட்டா, புரியற
வயசு வரும்போது சூட்சுமம் சுலபமாப் புரிஞ்சிடும்...” என்றாராம் பெரியவர்...
அது போல இருந்தது கௌசல்யா
சொன்னது.
***
தூக்கம் வராமல்,
கண் வாதனையோடும், மன வேதனையோடும் புரண்டுப் புரண்டு படுத்துக் கொண்டிருந்த கருணாகரனின்
காதுகளில், ஹாலில் அம்மாவுக்கும் மகனுக்கும் நடைபெற்ற உரையாடல்கள் காதில் விழுந்தன.
‘மெல்லத் தமிழ் இனி சாகும்...”
னு பாரதியாரே சொல்லிட்டார்...னு சில பேர் பேசுவாங்க. அதைக் கேட்கும்போது,
‘ஏன் இப்படி பாரதியார் சொன்னார்...?’
னு கூடத் தோணும்.
பாரதியார் என்ன சொன்னார்
தெரியுமோ..?
“...................”
அம்மா சொல்வதை அமைதியாய்
கூர்ந்து கவனித்தான் மகேஷ்
புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள்
மெத்த வளருது மேற்கே – அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில்
இல்லை
சொல்லவும் கூடுவ தில்லை
– அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக்
கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும்
–
அந்த மேற்கு மொழிகள் புவிமிசை
யோங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான்
– ஆ
இந்த வசையெனக் கெய்திடலாமோ
சென்றிடுவீர் எட்டுத்திக்கும்
– கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு
சேர்ப்பீர்.
கிணத்துத் தவளையா இல்லாம,
பரந்த மனசோட இருக்கணும்.. அப்பத்தான் தமிழ் மொழி மேலே மேலே உயரும்னு சொல்ல வந்தார்
பாரதியார். பாரதியார் பாடியிருக்கற நோக்கம் எவ்வளவு உயர்வா இருக்கு பார்த்தியா மகேஷ்...
அதே போலத்தான்.. டி எஸ் இலியட்
என்ற மேற்கத்திய இலக்கிய கர்த்தா, களர் நிலம்ங்கற நோபல் பரிசு வாங்கின கவிதைல ஒரு குறியீடாப்
பயன்படுத்தின வரிகளைத்தான் நர்ஸரி ரெய்மா வெச்சிருக்காங்க.
கேட்டுக் கொண்டிருந்த மகேஷின்
கண்கள் வியப்பால் விரிந்தன.
***
“Da Datta.,, !
Da Davadhvam... !!
Da Damyata ... !!!
இந்திய உபநிடதங்களோட சாரம்தான்
இந்த மூணும்.”
“................” அம்மா
என்ன சொல்லப்போவதைக் கேட்க மகன் மட்டுமல்ல, படுக்கை அறையில தன்னிரக்கத்தோடு தவித்துக்
கொண்டிருந்த கருணாகரனும் காதுகளை தீட்டிக் கொண்டு காத்திருந்தான்.
Da Datta... ! ன்னா, வட மொழில
‘தத்தம்’னு அர்த்தம். அதாவது கொடுத்தல்.
நம்மகிட்டே எது இருந்தாலும்
அதுல ஒரு பகுதியை மத்தவர்களுக்குக் கொடுக்கறது.
‘தர்மோ ரஷதி ரஷிதஹ’ என்கிறது உபநிஷத்.
இறைக்கற கேணிதான் ஊறும்னு
சொல்லுவாங்க. அது போல கொடுக்கக் கொடுக்கத்தான் வளரும்;
Da Davadhvam... !! ன்னா,
‘இரக்கப்படுதல்’னு வடமொழி அர்த்தம். அனைத்தின் மீதும் இரக்கம் காட்டுதல்’னு அர்த்தம்.
விட்டுக் கொடுத்தவன் கெட்டுப்போவதில்லைனு
சொல்வாங்க;
Da Damyata ... !!! சுயக்
கட்டுப்பாடுங்கறதுதான் இந்த வட மொழிப் பதத்துக்குப் பொருள்;
கொடுக்கறதானாலும், இரக்கப்படறதானாலும்,
சுயப் கட்டுப்பாட்டோடச் செய்யணும்.
தனக்கு மிஞ்சித்தான் தானமும்
தர்மமும்னு சொல்வாங்கதானே.. அதைத்தான் உபநிஷதம் Da Damyata …!!! ன்னு சொல்லுது;
இந்திய உபநிஷத்துகளின் சாரமான
இந்த மூணும் இங்கிலாந்து தேசத்துக்குள்ளே இறங்கினால்தான், இங்கிலாந்தோட உலக நாடுகளின்
உறவுப் பாலம் நிலைத்து நிற்கும்.
இல்லேன்னா London Bridge
னு அவர் சொல்ற உறவுப் பாலம் Falling Down! Falling Down!! Falling Down!! னு மூணு முறை
சொல்றார்;
இந்த ரெய்ம் ஒரு IF
Clause ரெய்ம். நெகடிவ் இல்லே.
அம்மா சொன்னதையெல்லாம் கேட்டவுடன்
மகேஷ்க்குள் ஒரு தெளிவு வந்தது.
“மகேஷ்...!”
”ம்...!”
“அப்பா நைட் முழுக்க கண்
முழிச்சி, டூட்டி பாத்துட்டு வந்து இப்பதான் வந்து படுத்தாங்க. அதனால சத்தம் போட்டுப்
பலமாப் படிக்காம அமைதியா சைலண்ட் ரீடிங் பண்ணு மகேஷ்.” என்றாள் கௌசல்யா.
***
மகன் சத்தம் போட்டுப்
படிக்காமல் அமைதியாகப் படித்த காரணத்தாலோ;
ஆங்கில இலக்கியத்தில் கரை
கண்ட தன் மனைவி கௌசல்யா சொன்ன விளக்கங்களாலோ...;
அல்லது இரண்டின் விளைவுகளாலோ,
உண்மைகளை உணர்ந்தபின் உட்புழுக்கம்
குளிர்ந்து, மெதுவாகக் கண் அசந்தான் கருணாகரன்.
***
Comments
Post a Comment