171. வானப்ரஸ்தம் (பேசும் புதிய சக்தி – ஜூன் 2025)
தெரு சொறி நாய், திட்டுத் திட்டாய் முடியுதிர்ந்து,
அவலட்சணமான தோற்றத்துடன், குடிசை முகப்பில் நின்று, தலையைப் பலமாய் ஆட்டிப் படபடவெனக்
கன்னத்தில் காதுகள் அடிபடும் ஓசை கேட்டு ‘விருட்’டென விழித்தார் உருலாசு.
குப்’பென்ற காந்தல் வாடை சுவாசத்தைத் தாக்க, கைத்தடியை
ஊன்றியெழுந்து, முக்கலும் முனகலும் அனிச்சையாய் வெளிப்பட, மெதுவாக, கவனமாக விந்தி விந்தி
நடந்து குமுட்டியடுப்பை நெருங்கினார் உருலாசு.
***
பஞ்சடைத்த கண்கள்;
‘மொச மொச’வென நெஞ்சிலும், முகத்திலும், கைகளிலும் சுருண்டு கிடக்கும் வெள்ளை ரோமங்கள்;
அரையில், ஆங்காங்கே திட்டுத் திட்டாய்க் கரைப்
பிடித்த ஏற்றலும், தாழ்த்தலுமாய்க் கட்டிய செங்காவி ஏறிய நாலு முழ வேட்டி; தலையில்
அழுக்குப் பச்சை நிறத்தில், சுற்றப்பட்ட முண்டாசு;
நீர்க் கோர்வையால் சுரந்திருக்கும் பாதங்கள்;
குதிகாலில் வெடித்துப் பிளந்த பித்த வெடிப்புகள்;
வைராக்கியத்துக்கு மட்டும் குறைவே இல்லை உருலாசுவுக்கு.
***
நேற்று முதல் உடம்புக்குச் சுகமில்லாமையால்.
குளிர்ந்துக் குளிர்ந்து வருகிறது உருலாசுவுக்கு.
இரண்டு நாட்களுக்கு முன் தேவைக்கு அதிகமாகவே
தோண்டிக்கொண்டு வந்து போட்ட நீர்ச்சாமைக் கிழங்குகள் கிடக்க, அதைத்தான் இன்று அரிசியோடு
கலந்து வேக வைத்திருந்தார். கண் அசந்து விட்டதால் அதிகச் சூட்டில் சட்டி கருகி வழக்கத்தை
விட வெஞ்சனம் அதிகமாகவேக் காந்திவிட்டது.
கீரைக் காந்தல் கூடப் பொறுத்துக் கொள்ளலாம்;
சாமைக் காந்தல் வயிற்றைப் புரட்டிக் கொண்டு வரும்;
சமையல் மணம், காந்தல் வாடை என்ற வித்தியாசமெல்லாம்
மற்றவர்களுக்குத்தான். உருலாசுக் கிழவரைப் பொறுத்தமட்டிலும், ‘சட்டியை இறக்கலாம்...’ -
என்பதற்கான அலாரம்தான் ‘காந்தல் வாடை’.
குக்கர் விசில் சத்தம் கேட்டதும் அடுப்பை நிறுத்தும்
பெண்டுகள் போல, காந்தல் வாடை மூக்கில் ஏறியதும் சட்டியை இறக்குவார் உருலாசு. இன்று
வழக்கத்துக் மாறாகச், சற்றே அதிகம் காந்தி விட்டது. வாடை அதிகமாய் வந்தது.
***
இருந்தாலும், சிறிதும் பரபரக்கவில்லை உருலாசுக்
கிழவர்.
‘தலைக்கு மேல் போயாச்சு, ஜான் என்ன முழம் என்ன?’
என்ற எண்ணமோ...?; அரக்கப் பரக்க நடந்து, எக்குத் தப்பாய்க் கீழே விழுந்து, எவருக்கும்
பாரமாகிவிடக்கூடாது..!’ என்கிற தற்காப்பு உணர்வோ...?; அல்லது வேறு
ஏதாவது காரணமாகக் கூட இருக்கலாம்.
நிலைமையின் தீவிரத்தை அறிந்தாலும், நிதானமாய்
உருண்டு ஒருக்களித்து வலது காலை தரையில் ஊன்றி, கைகளைக் கட்டில் சட்டத்தில் அழுத்தமாய்த்
தாங்கி எழுந்து , எட்டும் தூரத்தில், சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஊன்றுகோலையும்
கால்களையும் நன்கு ஊன்றி நிதானமாக நெருங்கினார் குமுட்டியடுப்பை.
***
பிடிதுணியைப் பிடித்தபடி, குனிந்து குமுட்டியிலிருந்து
சட்டியை இறக்க உருலாசுவின் உடல்நிலை இடம் கொடுக்கவில்லை. கைத்தடியின் மையப் பகுதி வரை
கையை லாகவமாய் தேய்த்து இறக்கி, தரையில் அமர்ந்தார். ஒரு கால் நீட்டியும், மறுகாலைக்
குத்திட்டும் வைத்து உறுதிச் சமநிலையை உறுதி செய்துகொண்டார். தடியைத் தள்ளி வைத்தார்.
சிக்குப் பிடித்தப் பிடித்துணியின் உதவியோடு,
அடுப்பிலிருந்து சட்டியை இறக்கினார்.
இறக்கி வைத்த சட்டியை, இடது கை பிடி துணியால்
அழுத்தமாய்ப் பிடித்துக் கொண்டு, , மண் சட்டியினுள் செருகி நிற்கும் அகப்பையை நடுக்கமெடுக்கும்
வலது கையால் பிடித்து, அசைக்க முயற்சி செய்தார்.
முற்றிலும் தண்ணீர் வற்றிவிட்டதால், அகப்கை,
அடிக் காந்தலோடு வஜ்ரப் பசைபோல் பிடித்துக் கொண்டுவிட்டதை உணர்ந்தார்.
தெம்பற்ற கையால் அகப்பையை அசைக்க முடியவில்லை.
***
குடிசையின் உட்பரப்பு பத்தடிக்குப் பனிரெண்டடிதான்
இருக்கும்.
மேலண்டை ஓரத்தில், கையில் கிடைத்த காட்டன்
அட்டைகள், சாக்குகள், பழைய துணிகள் எல்லாம் பரத்தப்பட்ட நைந்துபோன கயிற்றுக் கட்டில்தான்
உருலாசுவுக்கு அஸ்மானகிரி மஞ்சம்.
கீழண்டை ஓரம் துருப்பிடித்த அரிசி டின், உப்பு
ஜாடி இரண்டும் ஓர் ஓரமாகவும், மண் பானைகள், மண் தட்டுகள், இத்யாதிகள், கவிழ்க்கப்பட்டுமிருக்கும்.
இதுதான் உருசாலுக்கிழவரின் சமையல்கட்டு.
வைக்கோலால் சுற்றப்பட்ட கலவடை வளையத்தின்மேல்
இருந்தது தண்ணீர் பானை. இடது கை பானையைப் பிடித்திருக்க, வலதுகையால் லோட்டாவை எடுத்து,
பானையின் அடிப்பாத்தில் கிடந்த நீரைக் கொஞ்சம் மொண்டு சோற்றுப் பானைக்குள் ஊற்றினார்.
கொதிக்கும் சோற்றுப் பானைக்குள் தண்ணீர் பட்டதும்,
‘ஸ்..’ என்ற ஓசையுடன், ஆவி புறப்பட்டது. காந்தல்
வேகம் ‘குப்’பென முகத்திலடித்தது.
தண்ணீரின் சேர்மானத்தால் இளகி, அகப்பை அசைந்து
கொடுத்தது. அகப்பையால் கிண்ட முடிந்தது இப்போது. வெந்த, வெண்மையான மேற்சோறும், கருப்பு
அடிக்காந்தலும், கக்கலும் கழிசலுமாகக் கலந்தன.
வழக்கமாக காலை வேளையில், கன்னி கோவில் வாசலில்
வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் டாங்கிலிருந்து சின்னக் கலயத்தில் நான்கைந்து முறை தண்ணீர் பிடித்துக்
கொண்டு வந்து அந்தப் பானையை நிரப்புவார். தேய்த்துப் பல வாரங்கள் ஆகியதற்குச் சாட்சியாய்த்
தெரிந்தது, பானைக்குள் வளர்ந்து நின்றப் பச்சைப் பாசி.
அவ்வப்போது, பொறம்போக்குகளில், காட்டுக் கருவை
கொளுத்தும்போது, வெந்து தணிந்த காட்டில், வேகாமல் கிடக்கும் கரித்துண்டுகளைக் கூட்டி
அள்ளிக் கொண்டு வந்து கட்டி வைத்த கரிமூட்டை ஒருபுறம் கிடந்தது.
***
குடிசை முகப்பைக் கண் குறுக்கிப் பார்த்தார்
உருலாசு. விளக்கு மாடத்தின் உயரத்தை எட்டவில்லை வெயில். மாடத்தைச் சூரியன் தொடும் நேரம்தான்
உருலாசுக் கிழவருக்குச் சாப்பாட்டு நேரம்.
தன் கட்டிலில் வந்து உட்கார்ந்தார். உட்கார்ந்தவர்,
சற்றே சாய்ந்தார். குடிசைக்குள் சோறு காந்திய வாடை சுற்றிக் கொண்டே இருந்தது.
வாயிற்படியில் சொறிநாய், இப்படியுமப்படியும்
திரும்பித் திரும்பி நாக்கு எட்டுமிடமெல்லாம் உடம்பில் ஈரப்படுத்திக் கொண்டது.
‘ஹிஸ் மாஸ்ட்டர்ஸ் வாய்ஸ்’
நாய்ப் போல பின்னங்கால்களால் அமர்ந்து, நாக்கை தழைய நீட்டியபடி, ‘புஸ்... புஸ்...’
என்று மூச்சு விட்டது.
***
உருலாசுக் கிழவருக்கு வயது எழுபதுதான். பார்க்க
என்னமோ தொண்ணூரு போல இருந்தார். அறுபது வயது வரைக்கும் வயற்காட்டில் கூலி வேலைச் செய்தவர்தான்
அவர். அவரும் அவர் மனைவி அரசாயியும் நல்ல உழைப்பாளிகள். பாலு பாலு என்று, ஒரு மகன்
உண்டு அவர்களுக்கு.
பாலுவைப் பார்த்துப் பார்த்துப் போர்த்திப்
போர்த்தி வளர்த்தார்கள் இருவரும். வீட்டு வேலை விவசாய வேலை எதுவும் செய்ய மாட்டான்
பாலு. ஒரு துரும்புக்கூட அசைக்கமாட்டான்.
உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் சுமாராகத்தான்
படித்தான். பத்தாம் க்ளாஸ் முடித்ததும், ‘ஐ டி ஐ’ ல் சேருகிறேன் என்றான். மோட்டார் மெக்கானிக்
முடித்தான்.
பட்டணத்தில் ‘ஹோண்டா’
கம்பெனியில் வேலை என்று போனவன்தான். கம்பெனி முதலாளியோடு நெருக்கம் வந்துவிட, பெற்றவர்களை
கை கழுவினான்.
பணக்காரப் பட்டணவாசியாய் ஆகிவிட்டான் பாலு.
***
“மலையா
நம்பியிருந்த மவன் இப்படிப் பண்ணிப்போட்டானே...!” - மாய்ந்து மாய்ந்துப் போனாள் உருலாசுவின்
சம்சாரம் அரசாயி. அந்த ஏக்கத்திலேயே உடம்பு இளைத்தது. டிபி நோயால் ஈளையும், இருமலுமாய்
அவஸ்தைப்பட்டாள்.
தரும ஆஸ்பத்திரியில் கொடுத்த மருந்து மாத்திரைகளுடன்
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தபோது, அக்கம் பக்கத்து ஜனங்கள், “மகனை வரச் சொல்லி
தந்தி தரலாமா?” - என்றுக் கேட்டார்கள்.
‘இத்தனை வருசத்தில், அப்பா அம்மாவை விசாரிச்சுப்
பதினைந்து பைசா போஸ்ட் கார்டு எழுதி போட்டதில்லை அவன். அவன் வந்து என்ன செய்யப்போகிறான்..?’ -
என்று நினைத்தாளோ என்னவோ..?
மனசை கல்லாக்கிக் கொண்டு, வைராக்யமாக, “யாரும்
வரவேண்டாம்.” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாள் அரசாயி.
அரசாயிக்குக் கொள்ளி போட மகன் பாலு மட்டுமே
வந்தான். நகரத்தில் மாடி வீட்டில் இருக்கும் அவனுக்கு இந்த ஓட்டை ஓலைக் குடிசை ஒட்டவில்லை.
“இரவோடு இரவாக ஊருக்குப் போகணும்..”
என்றான். மறுநாள் ‘பால்’தெளி
பற்றிக் கூடக் கவலைப்படவில்லை ‘பாலு’.
“அப்பா, என் கூட வந்துடறீங்களா?” - அக்கம்
பக்கத்தார் தொல்லை தாங்காமல், கடனேயென்று அப்பன் உருலாசுவை ஒரு பேச்சுக்காகக் கேட்டான்
பாலு.
“இங்கியே சமாளிச்சிக்கறேன்...!”
மகன் எதிர்பார்த்த பதிலை உறுதியாகச் சொல்லிவிட்டார் உருலாசு..
“சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீகளாம்...?”
- எதிர் குடிசை அரும்பா, நீட்டி முழக்கிக் கிழவனை உரிமையோடுத்தான் கேட்டாள்; அப்பாவையும்,
மகனையும் சேர்த்துவைத்துவிடவேண்டும் என்றுதான் அப்படிக் கேட்டாள்.
“நானே சமாளிச்சுக்குவேன்...!”
- உருலாசுவிடமிருந்து ‘சுருக்’கென பதில் வந்தது.
நொந்து போனாள் அரும்பா.
***
மனைவி சுடுகாட்டில் வெந்து கொண்டிருந்த நேரத்தில்,
மகன் பாலு குளிரூட்டப்பட்ட, மோட்டார் காரில் சென்னை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான்.
உருலாசு, குடிசைக்கு வெளியேக் கிடந்த கட்டிலில்
உட்கார்ந்தபடி, தலையை நட்டுக் கொண்டிருந்தார்.
அப்போதுதான், தெரு நாய் ஒன்று அவர் காலடியில்
வந்து தஞ்சம் புகுந்தது.
விடிய விடிய அந்த நாயின் தலையைத் தடவிக் கொடுத்தபடியே
உட்கார்ந்திருந்தார் கிழவர். எப்போது கண் அயர்ந்தாரோ அவருக்கே தெரியாது. விடிகாலையில்
முழிப்புத் தட்டிவிட்டது.
எழுந்து தலை முழுகி, ஈரத் தலையுடனும், துணியுடனும்,
தன் வாழ்நாளில் முதல் முறையாக உலையை அடுப்பிலேற்றினார் கிழவர்.
காலையில், எதிர்க் குடிசை அரும்பா, சோற்றுத்
தூக்குடன் வந்து, “அண்ணே...!” - என்று உருலாசு முன்
நின்றாள்.
“பொங்கிட்டேன், சோறு வேண்டாம்...!”
– என்றார் உருலாசு உறுதியாக. அரும்பா, என்ன செய்வதெனத் தெரியாமல் நின்றாள்.
மனைவியின் புடவைக் கிழிசல் ஒன்றை மஞ்சள் நீரில்
நனைத்துத் தரையில் விரித்தார் உருலாசு. தான் முதல் முதலில் பொங்கியச் சோற்றுப் பானையை
அதில் வைத்துக் கட்டினார். சுடுகாடு நோக்கிச் சென்றார். தெருச் சொறி நாயும் அவருடன்
வந்தது.
சாகும் வரை தனக்குப் பொங்கிப் போட்ட மனைவியின்
அஸ்திக்குப் படைத்துப், பால் தெளிச் சடங்கை முடித்து, அரசாயியின்
ஆன்மாவைச் சாந்தப்படுத்தினார். அன்று தொடங்கியது கைப்பாகம்.
இன்று வரை, கல்யாணம்-கருமாதி, நல்லது-கெட்டது
என வெளியில் ஒரு பருக்கைக் கூட சாப்பிடவில்லை உருலாசு.
***
சாயங்கால நேரம் புறம்போக்கு நிலத்திலும், வாய்கால்,
குளக்கரையிலும் உலாவுவார்.
கானான் வாழை, அம்மான் பச்சரிசி, கோவைக்காய்,
கோவையிலை, மணத்தக்காளி, நீர்ச்சாமைக் கிழங்கு, இப்படி ஆங்காங்கே மானாவாரியாய் தழைத்துக்
கிடப்பதிலிருந்து ஒரு பிடி கொண்டு வருவார்.
பானையில், ஒரு ஆழாக்கு அரிசியும் கொஞ்சம் உப்புமிட்டு,
அதோடு, கானான் வாழையோ, நீர்சாமையோ ஏதோ ஒன்றைப் போட்டுத் தண்ணீர் ஊற்றி, உப்புச் சேர்த்துக்
குமுட்டியில் வைத்துவிடுவார்.
அடிப்பிடித்து, காந்தல் வேகம் வரும்போது இறக்கி
வைப்பார்.
***
சூரியன் விளக்கு மாடத்தை எட்டும் நேரம்தான் சாப்பாட்டு
நேரம் அவருக்கு. அவருக்கு மட்டுமில்லை, அவரோடு அண்டி வாழும் அந்தத் தெரு நாய்க்கும்தான்.
அவர் சாப்பிடுவது ஒரு யக்ஞம் போல இருக்கும்.
பானையில் இருப்பதை மொத்தமாக மண் மடக்கில் கொட்டிக்
கொள்வார். அதில், அடிப்பிடித்தது, காந்தியது எல்லாம் ஒதுக்கி, நன்றாக இருக்கும் ‘ஹவிர்
பாகத்தை’ எடுத்து அகப்பையில் வைத்து, வெளியே காத்திருக்கும்
நாய்க்கு அதன் சட்டியில் போடுவார். எஞ்சியதை இவர் சாப்பிடுவார்.
***
வழக்கமாக, உருலாசுவின் சாப்பாட்டிற்காகக் காத்திருந்த
நாய், வழக்கத்துக்கு மாறாக இன்று ஊளையிட்டது.
“நாயி ஊளையிடுதே...!”
ஏதோ கெட்ட சகுனம் தோன்ற எதிர்க் குடிசையிலிருந்து,
அரும்பா வந்தாள். நாயின் சட்டி காலியாகக் கிடந்தது.
‘என்னாச்சு அண்ணனுக்கு. நாயிக்கு சோறு போட
மறந்துட்டாரா ?’ - யோசித்தபடியே “அண்ணே” -
என்று பாசமாகவும் பரபரப்பாகவும் அழைத்தபடி குடிசைக்குள் சென்றாள் அவள். அரும்பாவின்
குரலை கேட்பதற்கு உருலாசு உயிரோடு இல்லை.
ஒரு குரல் கூவி அழுதாள் அரும்பா.
காந்திப்போன சோற்றுப் பானையைப் பார்த்துப்
பார்த்துத் தேம்பினாள். அதைக் கொண்டுவந்து வாசலில் நாய்த் தட்டில் கொட்டினாள். நாய்
அந்தச் சாப்பாட்டில் வாய் வைக்கவேயில்லை.
***
தபால் அலுவலகத்திற்குச் சென்று, உருலாசு மகனுக்குத்
தந்தி கொடுத்தார் ஊர் கணக்கப்பிள்ளை. மற்ற இறுதியாத்திரைக்கான ஏற்பாடுகளையும் கவனித்தார்.
உருலாசுவின் மருமகள் தொலைப் பேசியில் கறாராய்ச்
சொன்னபடி, செய்தச் செலவினங்களையெல்லாம் கைச்சாத்து நோட்டில் கணக்கும் எழுதினார் கணக்கப்பிள்ளை.
மனைவியோடு வந்தான் பாலு.
கணக்குப்பிள்ளையின் கைச்சாத்து நோட்டை ஒரு
முறைக்கு இரு முறை கூட்டிக் கழித்துப் பார்த்து, கணக்கைத் தீர்த்தாள் மருமகள்.
அப்பனை கொளுத்த ஆயத்தமானான் மகன்.
அதே நேரத்தில், மருமகள், குடிசை வீடுள்ள, தன்
கணவனுக்குச் சேரவேண்டிய அந்தப் பதினைந்து செண்ட் நிலத்தை கிரயம் செய்துதரத் தெருத்
தலையாரியிடம் தரகு பேசிக்கொண்டிருந்தாள்.
பாடையேறிவிட்டார் உருலாசு. மீளாப்பயணம் புறப்பட்டுவிட்டார்.
பின்னாலேயே சென்றது சொறி நாய்.
சிதையேறிவிட்டார் உருலாசு.
பண்டாரம் வழிநடத்த, இறுதிச் சடங்கு முடிந்தது.
கொள்ளிப் போட்டான் மகன் பாலு. திரும்பிப் பாராமல்
திரும்பினான்.
திரும்பவேயில்லை; சொறிநாய்.
***
Comments
Post a Comment