173. நம்ம கலாச்சாரம்... ( மக்கள் குரல் - 14.06.2025)

 

நம்ம கலாச்சாரம்.. (சிறுகதை)

                                     - ஜூனியர் தேஜ்

னவரி கடைசியில், கிருஷ்ணனுக்கும், நிருதாவுக்கும் முறைப்படித் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.

நிச்சயதார்த்தப் பரிசாக விலை உயர்ந்த கைப்பேசியை கிருஷ்ணனுக்குப் பரிசாகக் கொடுத்தாள் நிருதா.

கைப்பேசிக்கு ஓய்வே தராமல் நிறை...ய்ய கதைத்துக் கொண்டார்கள். அவ்வப்போது நட்சத்திர ஓட்டல்களிலும் மால்களிலும்  நேரிலும் சந்தித்துக் கொண்டார்கள்.

மார்ச் முதல் வாரத்தில் திருமணம்.

நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும், இருவரும் ஒன்றாய்ச் சென்று  திருமண அழைப்பிதழ் வைக்க முடிவெடுத்தார்கள்.

***

“க்ருஷ்..”

“ம்..”

“ட்ரஸ், பச்சேஸ் பண்ணப் போலாமா கிருஷ்..?”

“ஓகேடா செல்லம்..!”

எந்தக் கடைக்கு, எத்தனை மணிக்கு என்று தீர்மானித்துக் கொண்டு விடை பெற்றார்கள்.

நிருதா வருவதற்கு முன்பே ஜவுளிக் கடைக்கு வந்துவிட்டான் கிருஷ்ணன்.

புடவைகள் பிரிவிற்குள் நுழைந்தான். நிருதாவிற்குப் பொருத்தமாக புடவையை செலக்ட் செய்தான்.

அவனுக்காக வேஷ்டி, ரெடிமேட் கதர் சட்டை எடுத்தான்.

அனைத்தையும் பில்லிங் செக்‌ஷனில் கொண்டுபோய் வைக்கச் சொன்னான் கிருஷ்ணன்.

கடை முகப்பில் வந்து நிருதாவின் வருகைக்காகக் காத்திருந்தான்.

***

வாகனங்கள் நிறுத்தும் வளாகத்தில், காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்தாள் நிருதா.

கிருஷ்ணன் அவளோடு கைக் கோர்த்துக் கொண்டு நடந்தான்.

மின்தூக்கிக்குள் புகுந்தார்கள். அந்த ஜவுளிக்கடையின் நாலாவது தளத்துக்கான பித்தானை அழுத்தினாள் நிருதா.

அதிர்ந்தான் கிருஷ்ணன்.

நான்காவது தளம், அதி நவீன ஆடைகளுக்கானது.

***

திருமணம் நிச்சயமாகிய பின், முதல் முதலாக ‘இந்தியப் பாரம்பரிய உடையான வேட்டி, புடவை சகிதம், இருவரும் ஜோடியாக, வடபழனிக் கோவிலுக்குச் சென்று வரலாம்..’ என்று கிருஷ்ணன் சொன்னதைக் கேட்டு நகைத்தாள் நிருதா.

‘கோவில் குளம்..னு போறது எனக்குப் பிடிக்கலை.” – என்றாள்.

அதிர்ச்சியாக இருந்தது கிருஷ்ணனுக்கு.

நாலாவது தளத்தில் நுழைந்தாள் நிருதா.

பலியாடு போலப் பின்னால் போனான் கிருஷ்ணன்.

நிருதா அவளுக்காகச் சில நவீன ஆடைகளைத் தேர்ந்தெடுத்தாள். அதை அணிந்தால் எப்படி இருக்கும் என்பதற்குச் சாட்சியாகச் சில செல்லுலாய்டு உருவங்கள் நின்றிருந்தன அங்கே.

பார்க்கவே அருவருப்பாக உணர்ந்தான் கிருஷ்ணன்.

அடுத்தபடியாக, ஆங்காங்கே கிழிந்து தொங்கியவாறு சில ஆண் உடைகளையும் கிருஷ்ணனுக்காக எடுத்தாள்  நிருதா.

திருமணத்துக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ஏதும் சிக்கல் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதற்காக, வாயை மூடிக் கொண்டு நிருதா செய்வதையெல்லாம் பொறுத்துக் கொண்டான் கிருஷ்ணன்.

***

மூன்றாவது தளத்திலேயே, ரசீது போட்டு, ஜி பே செய்துவிட்டு கல்லாவிற்கு வந்தார்கள்.

“பிடிக்கலைன்னா மாத்திக்கலாம் மேடம்..” – உடை ‘பாக்கிங்’கைக் கையில் தரும் சமயத்தில், கல்லாவில் அமர்ந்திருந்த ஜவுளிக்கடை முதலாளி வழக்கம் போலச் சொன்னார்.

‘தான் ஆசை ஆசையாக தேர்ந்தெடுத்துவைத்த புடவை, வேஷ்டி இரண்டையும் வாங்கமுடியவில்லையே.. என்ற ஏக்கத்தோடு, கடையை விட்டு நிருதாவோடு வெளியேறினான் கிருஷ்ணன்.

கிருஷ்ணனுக்கு மனதே சரியில்லை.

இந்தியாவின் பாரம்பரிய, உடையை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு, இப்படிப்பட்ட மேற்கத்திய கலாச்சாரத்தை ஒட்டிய அரை குறை ஆடையைத் தேர்வு செய்கிறாளே நிருதா’ - என்கிற வருத்தமும் அவன் மனதில் இருந்தாலும், அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை அவன்.

***

“நிருதா..”

“ம்..”

“ரீ கன்சிடர் பண்ணிப்பாரு ..?” கடையிலிருந்து வெளியே வரும்போது கேட்டுக் கொண்டான் கிருஷ்ணன்.

“எதை?” அலட்சியமாகக் கேட்டாள் நிருதா

“எல்லாத்தையும்தான்..”

“நோ கிருஷ், நீங்க வேட்டி ஜிப்பாவோடவும், நான் புடவை ஜாக்கெட் அணிஞ்சிக்கிட்டும், கோவிலுக்குப் போயிட்டு வருவோம்னு நீ சொல்றதை என்னால ஒத்துக்க முடியாது கிருஷ். ‘தடா’ போறோம். ஜாலியா என்ஜாய் பண்றோம்.” பேச்சில் உறுதி இருந்தது.

“நிருதா...

“சொல்லு கிருஷ்...

“தடாவுல, நாம எடுத்துக்கப் போற செல்ஃபி, வீடியோ கிளிப்புங்களை, உடனுக்குடனே, யு டியூப், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப்னு சமூக வலைதளங்கள்ல வெளியிடணும்னு நீ பிடிவாதமா சொல்றது எனக்குப் பிடிக்கலை நிருதா.. அது மட்டும் வேண்டாமே...!” - கிருஷ்ணன் கெஞ்சுகிறார் போல் கேட்டுக் கொண்டான்.”

“சாரி கிருஷ்ணன். என்னைக் கட்டிக்கப்போற நீங்க இப்படி கன்ஸர்வேடிவ்வா இருக்கறதை நான் அனுமதிக்க மாட்டேன். உங்களுக்காக இல்லைன்னாலும், எனக்காக உங்களை மாடர்னிசத்துக்கு மாத்திக்கங்க..” – என்று தாட்சண்யமே இல்லாமல், உறுதியாகச் சொல்லிவிட்டுக் கார் ஏறிவிட்டாள் நிருதா.

***

வீட்டு வாசலில் கார் நிறுத்திவிட்டு, இறங்கினாள் நிருதா.

போர்ட்டிகோவில் நின்றிருந்தாள் வீட்டு வேலைக்காரி பஞ்சவர்ணம்.

அவளுக்குப் பின்னால் சோகமாக நின்றிருந்தாள் அவள் மகள் தெய்வானை.

தெய்வானை எம் பி ஏ படித்தவள்.

அவளுக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. பிப்ரவரி கடைசீ வாரத்தில் திருமணம்.

‘காரின் பின்சீட்டில் இருந்த புதிய உடைகளை பிறகு எடுத்துக் கொள்ளலாம்.. என்று முடிவு செய்துகொண்டு, போர்ட்டிகோவுக்கு வந்தபடியே, “பஞ்சவர்ணம், முகமே சரியில்லையே? ஏதாவது பிரச்சனையா?” – என்று இயல்பாக் கேட்டாள் நிருதா.

“சின்னம்மா நான் படிக்காதவ...!” – குரலில் ஆற்றாமை இருந்தது.

“சரி நீ படிக்காதவதான். அதுக்கென்ன இப்போ..?”

“இன்னிக்கு பதினைஞ்சாம் நாள் கல்யாணம் தெய்வானைக்கு.”

“ஆமாம். அதுக்கென்ன இப்போ..?”

“இவ கட்டிக்கப் போற மாப்பிள்ளையோட பூம்புகார் போகணும்னு பிடிவாதம் பிடிக்கறா..”

“அதுதானா உன் பிரச்சனை..?” என்று சிரித்தாள் நிருதா. “உங்க காலம் போல இல்லை பஞ்சவர்ணம் இது. இதுபோல கல்யாணத்துக்கு முன்னால பார்க்கு பீச்சு மால் சினிமா இப்படியெல்லாம் போறதுதான் ஃபேஷன்.  தெரிஞ்சிக்கோ. அவங்க புருசம் பொஞ்சாதினு நிச்சயம் பண்ணிப் பத்திரிகையே அடிச்சப்பறம், எதுனா செய்யட்டுமே..!”

“தாரளமாப் போவட்டும் சின்னம்மா. அதில்லே பிரச்சனை..”

“அப்போ வேற என்னத்தான் பிரச்சனை..? சொல்லு..?”

***

“சின்னம்மா நான் படிக்காதவ. புருசனும் பெஞ்சாதியும் நாலு செவுத்துக்குள்ள ஒருத்தரை ஒருத்தர் பார்த்து ரசிக்கவேண்டியதையெல்லாம், வெளிச்சம் போட்டுக் காமிச்சி, வீடியோ எடுத்து, யு டியூப், வாட்ஸ்ஆப் எல்லாத்துலயும் பகிரவிட்டு விளம்பரப்படுத்துவேன்னு சொல்றது எந்த விதத்துலம்மா ஞாயம்.

“...............

நிருதாவால் பதில் சொல்ல முடியவில்லை. அமைதியாய் நின்றாள்.

பஞ்சவர்ணம் தொடர்ந்தாள். “நீங்களே சொல்லுங்க. நீங்க மெத்தப் படிச்சவங்க. நீங்க சரினு ஒரு வார்த்தை சொல்லுங்க. இந்த உடையைக் கட்டிக்கிட்டு, பூம்புகாருக்குப் போவ மவளை அனுமதிக்கறேன்.” – என்று நிருதாவின் முன்னால் அந்த உடையைப் போட்டாள் பஞ்சவர்ணம்.

‘நீதிபதியாய் நிறுத்திக் கேள்வி கேட்கிறாள் பஞ்சவர்ணம். நம்மால் நீதி சொல்ல முடியுமா? - ஒரு கணம் எண்ணிப் பார்த்தாள் நிருதா... காரணம், அச்சு அசலாக நிருதா தனக்கு வாங்கிக் கொண்ட அதே மாடல் உடைதான் அது. வண்ணம்தான் வேறு.

***

“தெய்வானை..”

“ம்...

“அம்மா சொல்றது சரிதானே! ஒரு அறைக்குள்ளே கணவனுக்கும் மனைவிக்கும் பரஸ்பரம் இருக்க வேண்டிய அந்தரங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டறது அவசியமில்லைதானே...!”

“..............”

தெய்வானையின் மௌனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டாள் நிருதா.

“தெய்வானை, நானும் என் ‘வுட் பீ’யும்கூட வடபழனி முருகன் கோவிலுக்குப் போயிட்டு, அப்பறம் சேர்ந்து போய் பத்திரிகை வைக்கத் திட்டம் போட்டிருக்கோம்.

“..............” - இதற்கும் மௌனம்தான் தெய்வானையிடம்.

தெய்வானை வாங்கிய உடையைக் கையில் எடுத்துக் கொண்டாள் நிருதா.

“தெய்வானை, இந்த மெட்டீரியலை ரிடர்ன் பண்ணிட்டு, நானும் என் வுட் பீயும் வாங்கிக்கிட்டதைப் போல நம்ம பாரம்பரிய உடையான வேஷ்டி, கதர் சட்டை, கதர் புடவை வாங்கும்போது உனக்கும் ஒரு செட் வாங்கிக்கிட்டு வரேன். எந்தக் கோவிலுக்குப் போகலாம்னு உன் வுட் பீயை கேட்டுத் தீர்மானம் பண்ணி வை..” - என்று சொல்லிவிட்டு, “உடனே கடைக்கு வரவும்” என்று கிருஷ்ணனுக்கு மெசேஜ் செய்தாள்

ஒரு புதிய நிருதாவாய் காரில் ஜவுளிக்கடைக்குப் பயணப்பட்டாள் நிருதா.

***

Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)