177. ஆண்மை தவறேல் (தேன்சிட்டு தீபாவளி மலர் 2025)

 

177. ஆண்மை தவறேல்

(தேன்சிட்டு தீபாவளி மலர் 2025)


       
சென்னை விமான நிலையம்.

வரவேற்பு வளாகக் காத்திருப்போர் கூட்டத்தில் பாண்டியனும் நின்றிருந்தான். அவன் கையில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் ‘பூங்குன்றன்’ என்று எழுதப்பட்ட வரவேற்பு அட்டை பளபளத்தது.

சிறிய முதுகுப் பை மட்டுமே இருந்ததால், விமான நிலையச் சோதனைச் சரகத்தில் நுழைந்து, வெகு விரைவில் வெளியே வந்துவிட்டான்.  

முகத்தில் செயற்கை மலச்சியோடு, பூங்குன்றனை உதட்டால் வாழ்த்தி, தொன் மரபாய் அணைத்து,  வாகன நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்றான் பாண்டியன்.

குளிரூட்டப்பட்ட உயர்தரமான காரை நெருங்கினர் இருவரும்.

“நான் ஓட்டட்டுமா காரை ?” இயல்பாய்க் கேட்டான் பூங்குன்றன்.

“வேண்டாம் வேண்டாம். நீ தொழிலதிபர்.  உனக்குக் காரோட்டி நான்..” என்றான் பாண்டியன், முகத்தில் செயற்கையான முறுவலைப் பூசிக்கொண்டு.

“காரோட்டி என்றெல்லாம் சொல்லாதே. நீ என் உயிர் நண்பன்.” உண்மையான முறுவலோடு சொன்னான் பூங்குன்றன்.

ந்தப் பெரிய நட்சத்திர விடுதியின் முன் மோட்டாரை நிறுத்தினான் பாண்டியன்.

“எதற்கு விடுதி? நேராக இல்லத்திற்கே போய்விடலாமே..?” வினவினான் பூங்குன்றன்

“வேண்டாம் நண்பா! வீட்டையும் உன் தொழிற்-கூடத்தையும் அலங்கரிக்க வேண்டியுள்ளது. மேலும், சில ஆவணங்களைப் பதிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளேன். அனைத்தையும் நிறைவேற்றிய பின் உன்னை அங்கே அழைத்துச் செல்கிறேன் என்றான்.

பிறகு, தன் பெட்டியைத் திறந்து, ஒரு கோப்பு எடுத்து, அதிலிருந்த சில பல ஆவணங்களையும், பத்திரங்களையும் வெளியே எடுத்தான் பாண்டியன். அதில் பலவற்றில், ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டும், சில எதுவும் எழுதப்படாமல் வெற்று ஆவணங்களாகவும் இருந்தன.

“இது... தடையில்லாச் சான்றுக்காக..; 

“இது வரி விதிப்புக்காக .......................;

“இது...; என்று ஒவ்வொரு ஆவணத்தின் நோக்கத்தையும் சொல்லிச் சொல்லிக் கையொப்பம் இடப் பணித்தான் பாண்டியன்.

“இப்படியெல்லாம் எதுவும் சொல்லத் தேவையில்லை நண்பா. உன் பேரில் எனக்குப் முழு நம்பிக்கை உள்ளது.” என்று முழுமனத்தோடு சொன்ன பூங்குன்றன், பாண்டியன் காட்டிய இடங்களிலெல்லாம் கூடிய விரைவில் கையொப்பமிட்டு முடித்தான்.

பொய்யிடை ஒருவன் சொல்வன்மை யினால் மெய் போலும்மே! மெய் போலும்மே!’ என்ற அதிவீரராம பாண்டியனாரின் வெற்றி-வேற்கை’க் கருத்துருவின் காட்சி வடிவம் இங்கே அரங்கேறியது.

கைச் செலவுகளுக்காக சொற்பமான துகையை மட்டும், தன் கைவசம் ரொக்கமாக வைத்திருந்த பூங்குன்றன், அதையும் எடுத்துப்  பாண்டியன் கையில் கொடுத்தான்.

“அனைத்து முன்னேற்பாடுகளையும் முடித்து விட்டு, இன்று இரவு வந்து அழைத்துச் செல்கிறேன். ஓய்வெடு..!” என்று கூறிவிட்டு பூங்குன்றன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு அனைத்து ஆவணங்களோடும் புறப்பட்டான் பாண்டியன்.

பாண்டியனின் வரவை எதிர்நோக்கி எதிர்பார்ப்புகளோடு காத்திருந்த பூங்குன்றன் ஏமாற்றமடைந்தான். காரணம், சொன்ன நேரத்தில் பாண்டியன் வரவில்லை.

பாண்டியனைத் தொடர்ப்பு கொள்ள எண்ணி, அவன் கைப்பேசிக்கு அழைத்தான். இயக்கம் நிறுத்தப்பட்டிருந்தது.

பொறுமையாய்க் காத்திருந்தான் பூங்குன்றன்.

மறு நாளும் வரவில்லை. அதற்கடுத்த நாளும் வரவில்லை. கைப்பேசியும் நிரந்தரமாக முடக்கப்பட்டிருந்தது.

விடுதி மேலாளரை அணுகினான்.

“விடுதிப் பதிவேட்டில் பாண்டியன் என்ற பெயரில் அந்த அறை, பதிவு செய்யப் படவில்லை.” என்றார் மேலாளர்.

அதிர்ந்தான் பூங்குன்றன்.

பதிவேட்டிலிருந்த கைப்பேசி எண்ணும், அதில் எழுதப்பட்டிருந்த முகவரியும் கூட  போலி என்பது நிரூபணமானது.

அபுதாபியிலிருந்து, மாதம் தவறாமல், வருடக் கணக்கில், பணம் அனுப்பிய வங்கியைத் தொடர்பு கொண்டு, வங்கிக் கணக்கு எண் கூறி, கணக்காளரின் விபரங்களைக் கோரினான்.

‘கடுமந்தனம்’ என்று சொல்லி விபரம் தர மறுத்துவிட்டது வங்கி நிர்வாகம்.

நிலை குலைந்து போனான் பூங்குன்றன்.

“இன்று மாலை முடிய, தங்குவதற்காகவும், உணவுக்காகவும், கட்டணம் செலுத்தப்பட்டுவிட்டது.. தொடர்ந்து, தங்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கான கட்டணம் செலுத்திப் புதுப்பித்துக் கொள்ளலாம்..” என்றார் விடுதிக் காப்பாளர்.

அவர் செலுத்தச் சொன்ன அளவுக்கு பெரிய தொகை பூங்குன்றனிடம் இல்லை.

காவல் நிலையத்தில் பிராது பதியும் அளவிற்கு, எந்தத் துருப்பும் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்தான் பூங்குன்றன்.

‘நம்மை திட்டமிட்டு மொத்தமாக ஏமாற்றிவிட்டான் பாண்டியன்’ என்பதை உணர்ந்த பூங்குன்றன், உடனடியாக விடுதியைக் காலி செய்தான். முதுகில் பையை மாட்டிக் கொண்டு இலக்கில்லாமல் நடக்கத் தொடங்கினான்.

பூங்குன்றன்.................! பூங்குன்றன்.................!”

யாரோ அழைக்கும் குரல் கேட்டு வியப்புற்றான். அந்தக் குரல் பாண்டியனுடையதல்ல என்பதை உணர்ந்தான்.

“வேறு யாராக இருக்கும்..?; யோசித்தான்.

***

‘சிறு வயது முதல் பாண்டியன் ஒருவனையே, உயிர்த் தோழனாக ஏற்றவன் பூங்குன்றன்.

சிங்காரச் சென்னையில் தனக்காக ஒரு வீடும், சுயதொழில் செய்யப் பணிமனையும் அமைத்துத் தருவதாகப் பாண்டியன் சொன்னதை நம்பி, பல ஆண்டுகள் அபுதாபியில் கடின உழைப்பின் மூலம் பெற்ற கூலியை, மாதம் தவறாது, அவனுக்கு அனுப்பி வைத்தான் பாண்டியன்.

வீடும், பணிமனையும் தயார் என்பதையறிந்து, மிகுந்த மகிழ்ச்சியோடும் தன்னம்பிக்கையோடும் சென்னை திரும்பினான் பூங்குன்றன்.

நட்சத்திர விடுதியில் வைத்து, ஆங்கிலத்தில் தட்டச்சுச் செய்யப்பட்ட ஆவணங்களிலும், வெற்று ஆவணங்களிலும் கையொப்பம் பெற்று, நம்பிக்கை துரோகம் செய்துவிட்டான்..’ என்பதை அறிந்து, அதிர்ந்து, மனம் நொந்து முதுகில் மாட்டிய பையுடன், இலக்கின்றி நடந்துக் கொண்டிருந்த பூங்குன்றனுக்கு, ‘இங்கே நம்மை யார் அழைக்கிறார்கள்.?’ என்று மனம் குழம்பியது.

திரும்பிப் பார்த்தான்.

அவனை நோக்கி, ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தான் ஓர் இளைஞன்.

தன் வயதொத்த அவனை யாரென அவதானிக்க இயலவில்லை பூங்குன்றனால்.

‘வரட்டும் பார்க்கலாம்..’ என்றெண்ணி அமைதியாய் நின்றான்.

“பூங்குன்றன், என்னை நினைவில்லையா நண்பா..?”

“மன்னிக்கவும், நினைவில்லை. ஏதேனும் துருப்புச் சொன்னால், நினைவில் மீளக் கொணர்வேன்.”

“பள்ளி நாட்களை நினைத்துப் பார்..?”

“................”

பின்-தலையைக் கீரிக்கொண்டும், நெற்றி பொட்டில் தடவியபடியும் தீவிரமாய் யோசித்தான் பூங்குன்றன். பயனில்லை.

மிகவும் சோகமாகயும், களைப்பாகவும் காணப்பட்ட பூங்குன்றனை அதற்கு மேல் சோதிக்காமல்,  “நான் பகலவன்”. எனப் பகன்றதும், பள்ளிப் பருவத்தில், மின்னல் போல வந்து போன பகலவனின் மிகக் குறுகியகால நட்பு, நினைவில் உதித்தது பூங்குன்றனுக்கு.

***

கவலவனின் தந்தை ஒரு தேசீய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளர்.

அவருக்கு இந்த ஊர் வங்கிக் கிளையில் பணிமாறுதல் வந்திருந்ததால். பூங்குன்றன் படிக்கும் பள்ளியில் 11 ஆம் வகுப்பில் தன் மகன் பகலவனைச் சேர்த்தார்.

பகலவனின் நட்பை பூங்குன்றன் விரும்பினாலும், கெழுதகை நண்பண் பாண்டியன் அந்த நட்பை அங்கீகரிக்கவில்லை.

ஒழுங்கீனச் செயல்களின் கருவூலமாக இருந்தபோதிலும், பாண்டியன், ஒரு செல்வந்தரின் மகன் என்பதால்,  பாண்டியன் சொல்லை மீற முடியவில்லை பூங்குன்றனால்.

பூங்குன்றனின் பெற்றோரோ ஏழ்மையில் தத்தளிப்பவர்கள். பூங்குன்றன் படித்து உயர்ந்தால்தான் வருமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அவன் குடும்பம் உயரும் என்கிற நிலை.

தீப்பேற்றின் திறனோ, ஊழின் பெருவலியோ, தீயச் சேர்க்கையின் திண்மையோ. மதுப் பிரியரான பூங்குன்றனின் தந்தை, மதுவடிமையாகிச் சமூகத்தில் சிறுமைப் பட்டார். உழைத்துப் பொருளீட்டாமல், சோம்பித் திதிந்து, குடும்பத்தைத் தவிக்க விட்டிருந்தார்.

குடும்பத்தின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற, அவ்வப்போது, சிற்றாள் வேலை, விவசாய வேலை என்று செல்வதைத் தவிர்க்கவியலவில்லை பூங்குன்றனுக்கு. விளைவு. படிப்பில் நாட்டம் குறைந்தது.

அதே நேரத்தில், படிப்பில் போதிய கவனம் செலுத்திய பகலவன் அனைத்துப் பாடங்களிலும், நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களிடம் நற்பெயர் பெற்றுயர்ந்தான்.

“பூங்குன்றனுக்குப், பாடங்களைச் சொல்லிக் கொடுத்து, அவன் தரத்தை உயர்த்து பகலவா..?” என்று வேண்டுகோள் விடுத்தார் ஆசிரியர்.

“சரி அய்யா..” என்ற பகலவன், பூங்குன்றனிடம் நட்பு பாராட்டி, உதவி வரைத்தன்று’ என்ற குறளுக்கு ஒப்ப, இரண்டு நாட்கள் பாடம் சொல்லித் தந்தான்.

தீய நண்பன் பாண்டியனின் தூண்டுதலால், படிக்கும் உபகரணங்கள் எதுவுமே இல்லாமல் மூன்றாவது நாள் பகலவன் வீட்டிற்கு வந்தான் பூங்குன்றன்.

“நூல்கள் எதுவுமின்றி வந்திருக்கிறாயே..? என்னுடைய நூல்களைத் தரட்டுமா பூங்குன்றன்..” என்று உண்மை நட்போடு கேட்டான் பகலவன்.

“எனக்கு உன் நூல்களும் தேவையில்லை, உன் உதவியும் தேலையில்லை பகலவா. நான் தேர்வரையில் துண்டுச் சீட்டு வைத்துத், தேர்வெழுதி மதிப்பெண் பெற்றுவிடுவேன்..” என்று கூறியபோது, தீயில் கை வைத்தாற்போல் துடித்தான் பகலவன்.

“அதெல்லாம் தவறான செயல்..” என்று பலமுறைச் சொல்லியும் பூங்குன்றன் திருந்துவதாக இல்லை. பகலவனின் நட்பை முற்றிலும், துண்டித்துக் கொண்டான் பூங்குன்றன்.

பள்ளிக் கால நினைவுகள் வரக் கண்கள் பனித்தன பூங்குன்றனுக்கு.

“என்னை மன்னித்துவிடு பகலவா..” நா தழுதழுத்தது  பூங்குன்றனுக்கு.

“நீ என்ன தவறு செய்தாய் , மன்னிப்புக் கேட்க ..? முதலில் கண்ணீரைத் துடை. உன் பிரச்சனை என்ன சொல்.?” நட்போடு விசாரித்தான் பகலவன்.

“என் பள்ளி இறுதி நாட்களில், தாயும் தந்தையும் விபத்தில் சிக்கிப், படுத்த படுக்கையாகக் கிடந்தார்கள். படிப்பைப் பாதியில் விட்டு, பெற்றோர்களைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டேன். அவர்கள் அடுத்தடுத்து ஒவ்வொருவராய், மாண்டுவிட,  அனாதையானேன்;

“வயிற்றைக் கழுவ உள்ளூரில், மோட்டார் பழுது பார்க்கும் கடையில் சிறிது காலம் உதவியாளனாக இருந்தேன். அப்போதுதான் , அபுதாபியில் இதே போல மோட்டார் பழுது பார்க்கும் கடைக்கு உதவியாளர் தேவைப்படுவதாக அறிந்து  நான் அனுப்பப்பட்டேன்.” ;

“கல்லூரிப் படிப்பிற்காக சென்னைக்குப் புலம் பெயர்ந்து விட்ட, உயிர்த் தோழனாக இருந்த பாண்டியன், என் கைப்பேசி எண்ணைத் அறிந்து கொண்டு அடிக்கடித் தொலைப் பேசினான்.” ;

“என் வாழ்க்கையை திட்டமிட்டுக் கொடுத்தான். சம்பாதிக்கும் பணத்தை, அனுப்பச் சொல்லி வங்கிக் கணக்கு ஒன்றை அளித்தான்.”;

“வாராவாரம் மணிக்கணக்கில் என்னுடன் பேசுவான். பாண்டியனுடன் பேசிக் கொண்டிருந்தால் கடின உழைப்பினால் பெற்ற உடல் வலியெல்லாம்  பறந்தோடிவிடும் பகலவா..” என்று சொல்லி ஒரு ஏமாற்றப் பெருமூச்சு விட்டான்.  

“அப்படியா..! இப்போது பாண்டியனைத் தேடித்தான் போகிறாயா..?”

“இல்லை.. அது ஒரு பெரிய சோகம்..”

“ என்னிடம் சொல் பூங்குன்றா.. சோகத்தை நண்பரோடு பகிர்ந்தால் மனதின் அழுத்தம் குறையும்..” சொல்..

 கலவா, நான் இத்தனை ஆண்டுகளாகச் சம்பாதித்து ஒரு ரூபாய் கூட நான் வைத்துக் கொள்ளாமல், அனைத்தையும் அவன் சொன்ன எண்ணுக்கு அனுப்பினேன்.  கடைசியில், மொத்தமாய் என்னை நம்பிக்கை துரோகம் செய்துவிட்டான்.”

“அடடே.. என்ன சொல்கிறாய் நண்பா..”

“ஆம் நண்பா, இரவு பகல் பாரது கடினமாய் உழைத்த உழைப்பெல்லாம் ஒட்டு மொத்தமாய் வீணாகிவிட்டது இன்று. சொந்தப் பணிமனையில் தொழில் நடத்தும் கனவுடன், அபுதாபியிலிருந்து நிரந்தரமாக வந்த நான் முற்றிலும் மோசம் போனேன் பகலவா.”

“மோசம் போனாயா? எப்படி?”  

“ஆங்கில அறிவின்மை என்ற என் பலவீனத்தைச் சாதகமாக்கிக் கொண்டு,  பத்திரங்களிலும், வெற்றுப் பத்திரங்களிலும் தன்னிடம் கையொப்பம் பெற்றதையும், நட்சத்திர விடுதியில் நிராதரவாக விட்டுச் சென்றுவிட்ட பாண்டியனின் நம்பிக்கை துரோகத்தைச் சொல்லி அழுதான். மெரீனா கடலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வதுதான் என் முடிவு..” என்று உடைந்து கதறினான்.

 “பூங்குன்றா.. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது ஒரு கோழைத்தனமான எண்ணம். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவரும் இருப்பார்கள் என்பதற்கு உதாரணம் நீயும், பாண்டியனும்.;

“காவல் துறையில் பிராது கொடுத்து, அந்தப் பாண்டியனுக்குத் தக்க தண்டனை வாங்கித் தந்துவிடலாம். ஆனால் அதெற்கெல்லாம் நிறைய சாட்சியங்கள் தேவைப்படும்.”;

அது தவிர, நீ கையொப்பமிட்ட வெற்றுப் பத்திரங்களை வைத்து  வழக்கு சோடித்து, பாண்டியன் உன்னை எழ முடியாமல் அமுக்கி விடவும் வாய்ப்பு உண்டு உண்மையான வழக்கை விட, சாட்சிகளையும், சம்பவங்களையும் கற்பிதமாய் வைத்துச் சோடிக்கப்பட்ட வழக்கிற்கு திறண் அதிகம் அதை உடைப்பது மிகக் கடினம். நீ இந்தச் சென்னையில் சொந்தக் காலில் நிற்க வேண்டியதுதான் உன் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும். புரிகிறதா? ”

“அபுதாபியிலிருந்து மொத்தமாக வந்துவிட்டேன் பகலவா. கையறு நிலையில்  இப்போது போக்கிடமில்லாமல் நிற்கிறேன்..” சோகமாய்ச் சொன்னான் பூங்குன்றன்.

“யார் சொன்னது உனக்குப் போக்கிடமில்லையென்று.?” வினவினான் பகலவன்.

“என்ன சொல்கிறாய் பகலவா..?” வியந்தான்  பூங்குன்றன்.

நான் தற்போது அலுவலகம் முடிந்து இல்லம் திரும்ப, பேருந்து நிலையம் சென்று கொண்டிருக்கிறேன். பேருந்து வரும் நேரம் இது. நீயும் என்னுடன் வீட்டுக்கு வா.  என் வீட்டின் மாடிப் பகுதி காலியாகத்தான் உள்ளது. அதில் நீ தங்கிக் கொள்.”

“................”

இதெல்லாம் கனவா நனவா எனத்தோன்றியது பூங்குன்றனுக்கு.

நான் வங்கி அதிகாரியகப் பணிபுரிந்த போதிலும், சொந்தமாகக் கார் வைத்துக் கொள்ளவில்லை. அரசுப் பேருந்தில்தான் பயணிக்கிறேன். இருந்தபோதிலும், கார் நிறுத்தகம் வைத்து சொந்த வீடு கட்டியுள்ளேன். அந்தக் கார் நிறுத்தகத்தில் மோட்டார் பழுது பார்க்கும் நிலையத்தை அமைத்துக் கொள்.  தொழில் தொடங்க என் பொறுப்பில் எங்கள் வங்கி மூலம், உனக்கு தொழிற்கடன் பெற்றுத் தருகிறேன்.”

பகலவன் சொல்லச் சொல்ல, பூங்குன்றன் திகைப்பில் திணறினான்.

“ப்..பா..ம்ம்.. ப் பா ம்ம்..” என்று நகரப் பேருந்து ஒலி எழுப்பியது.

நகரப் பேருந்தில் ஏறிய பகலவனும், பூங்குன்றனும்..  ஓட்டுநர் இருக்கைக்குப் பின் இருக்கும், இருவர் இருக்கையில் அமர்ந்தனர். எதிரே, முதலுதவிப் பெட்டிக்குக் கீழே,

திருவள்ளுவர் படம்,     

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே                                               இடுக்கண் களைவதாம் நட்பு. என்ற திருக்குறள்  

தன் அருகே அமர்ந்திருந்த உண்மை நண்பன் பகலவன் 

மூவரையும் மாறி மாறிப் பார்த்த பூங்குன்றனின் கண்கள் பனித்தன.

ఆఆఆఆఆఆఆఆఆఅ

Comments

Popular posts from this blog

மயூரி... என் உயிர் நீ... (கண்மணி 09.03.25) (முழு நீள நாவல்)

அடங்க மறு... !( முழு நாவல் (கண்மணி 23.07.25)

உலகளாவிய திறனாய்வுப் போட்டி 4 வது இடம்