178. வாழ்க்கை படிப்பு - ஒரு பக்கக் கதை அனிச்சம் - பிப்ரவரி 2026
178. வாழ்க்கை படிப்பு - ஒரு பக்கக் கதை அனிச்சம் - பிப்ரவரி 2026
வாழ்க்கைப் படிப்பு
பரிசு பெற்ற ஒரு பக்கக் கதை
அனிச்சம்
பிப்ரவரி 2026
-ஜூனியர்தேஜ்
பிரபல ஒப்பனைப் பொருள் நிறுவனத்தின் மாநிலக் கண்காணிப்பாளர் நவிஷ்னி, ஒரு புத்தகப்-புழு. புத்தகம் இருந்துவிட்டால் போதும், சாப்பாடு-தண்ணீர்கூட வேண்டாம் அவளுக்கு. பணிநிமித்தம் எப்போதும் பயணத்திலேயே இருப்பதால், ஒவ்வொரு ரயில் பிரயாணத்திலும் ஒரு புத்தகத்தையாவது படித்து முடித்துவிடுவாள்.
“பொழுதுக்கும் கதைப் புத்தகத்தை படிச்சிக்கிட்டே கற்பனைல மிதக்காதே... மனிதர்களைப் படி. நம்மை சுத்தி நடக்கற யதார்தத்தை கவனி.” தந்தை அடிக்கடிக் கூறும் அறிவுறையை இன்று நடைமுறைப்படுத்தினாள், நவிஷ்னி.
முதன்முறையாக, புத்தகமேதுமில்லாமல், ரயில்வே சந்திப்பில் அமர்ந்திருந்தாள்.
"................... விரைவு வண்டி; சில நிமிடங்களில் வந்து சேரும்...” மும்மொழிகளில் அறிவிப்பு ஒலித்தது.
இரண்டு ட்ராக்குகளுக்கு அப்பால், எதிர் நடைமேடையில் ஒருவர் டிபன்-பார்சல் கேட்க, ‘ரயில் வருவதற்கு முன், ஒரு பாக்கெட் வியாபாரமாகுமே...!’ என்ற நியாயமான ஆசையில், வியாபாரி, அவசரமாக எடுத்தபோது கைதவறிப் பார்சல் கீழே விழுந்து, இட்லிகள் பிளாட்பாரத்தில் சிதறின...
அவற்றைப் பொறுக்கியெடுத்து. நடைமேடைக் குழாய் நீரில் அலம்பி, பார்சல் செய்து, தன்-பைக்குள் வைத்துக் கொண்டதை கவனித்துக் கொண்டிருந்த நவிஷ்னியிடம் வந்தார், வியாபாரி.
“சந்தேகப்படாதீங்க மேடம். இதை யாருக்கும் விற்க மாட்டேன். இதுக்கும், காசு கொடுத்துத்தான் ஆகணும். அதனால, மதியம் சாப்பிட்டுருவேன்.”
வியாபாரியின் வறுமை, மனதை பிசைய...,
“அந்தப் பார்சலை என்கிட்டே கொடுங்க...!” என்று பிடிவாதமாக காசு கொடுத்து வாங்கி; ரயிலேறியதும், கூபேயிலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு; ஆத்ம திருப்தியடைந்தாள், நவிஷ்னி.
அப்பா அடிக்கடிச் சொல்லும் மனிதப்படிப்பின் மகத்துவம் நன்கு புரிந்தது நவிஷ்னிக்கு.





எதார்த்தமான கதை அம்சத்தில் பொருளீட்டும் ஒரு ஆணின் நேர்மையையும் ஒரு பெண்ணின் இரக்க குணத்தையும் மனிதாபிமானத்தையும் ஆழமாக பதிய வைக்கிறது
ReplyDeleteதங்கள் அன்பான விமரிசனத்துக்கு மனப்பூர்வமான நன்றி சார். ஜூனியர் தேஜ்
Delete