ஜனனி...! ஜெயம் நீ...!! (நாவல்)
ஜனனி...! ஜெயம் நீ...!!
Janani...! Jayam Nee...!!
நாவல்
Novel
Author:
ஜூனியர் தேஜ்
Junior Tej
For more books
https://www.pustaka.co.in/home/author/junior-tej
பொருளடக்கம்
பெற்றோர்க்குச்
சமர்பணம்
அணிந்துரை
வாழ்த்துரை
குரு வந்தனம்
என்னுரை
நாவல் சுருக்கம்
அத்தியாயம் – 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
பெற்றோர்க்குச்
சமர்ப்பணம்
A ஜானகி V அருணாசலம் (தேஜ்)
குரு வணக்கம்
அணிந்துரை
வானொலி நாடக எழுத்தாளர்,
மணமேல்குடி
படைப்பிலக்கியங்களில் கவிதை, சிறுகதை, நாவல் எனப் பல வடிவங்கள் இருப்பினும், கவிதை மற்றும் சிறுகதை
வடிவங்களைக் காட்டிலும் உயர்வான இடம் நாவலுக்கு உண்டு.
காரணம், நீண்ட, சிக்கலான கதைக்களம், பல்வேறுபட்ட கதாபாத்திரங்கள், மற்றும் ‘தீம்’ என்று சொல்லக்
கூடிய கருப்பொருள் அனைத்தும் நாவல் வடிவத்தில், சரியான விகிதத்தில் கலந்து வருவதால், படிக்கும்போதே வாசகர்களின் கண்
முன் அவரவர்களின் அனுபவத்தை ஒட்டி, நிழலாடுவதைப் போன்ற உணர்வைத்
தூண்டிவிடுகின்றன.
அதோடு, பல
சம்பவங்களையும்,
உரையாடல்களையும்
ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி, காட்சிப்படுத்துவதன்
மூலம், கதையின் போக்கை தங்கள்
வாழ்க்கை அனுபவத்தோடு ஒப்பிட்டவாறு, ஈடுபாட்டோடு வாசிக்கவும் வைத்து விடுகிறது
நாவல் வடிவம்.
ஒரே தளத்தில், பல்வேறு கதாபாத்திரங்களை உயிரோட்டமாகக்
கண்முன் உலாவ விடுகிற சிறப்பம்சம் நாவல் என்கிற இலக்கிய வடிவத்திற்கு மட்டுமே
உண்டு.
அந்த வகையில், நாவலாசிரியர் “ஜூனியர் தேஜ் “அவர்கள்
எழுதிய “ஜனனி... ஜெயம் நீ!” நாவலை படித்து முடித்தபோது, ஒட்டுமொத்தமான நாவல்
வடிவத்தின் சிறப்பை என்னால் உணர முடிந்தது.
ஆடிசம் குறைபாடுள்ள ஒரு பெண், விவசாயத் துறையில் விஞ்ஞானியாகி, சாதனை படைத்த சம்பவத்தை
எதார்த்தமான,
எளிய
நடையோடு மிக அழகான நாவலாகப் படைத்துள்ளார் ஜூனியர் தேஜ்.
ஆடிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவள் ஜனனி. மிகவும் போராடி, ஜனனியின் தாய் வசந்தா மகளை
மனவியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டுகிறாள்.
அவளை சோதித்த மனநல மருத்துவர், ஜனனிக்கு (Little Professor Syndrome) என்கிற ‘சிறிய பேராசிரியர்
அறிகுறி’ இருப்பதாக் கண்டறிகிறார்.
விவசாயத்தில் ஜனனிக்கு இருந்த நாட்டத்தை அறிந்த மனநல
மருத்துவர்,
ஜனனியை
எப்படியெல்லாம் பராமரிக்க வேண்டும், எதையெல்லாம் ஊக்குவிக்க வேண்டும்
என்றெல்லாம் அறிவுரை தருகிறார்.
தன் ஒரே மகள் ஜனனியின் வளர்ச்சிக்காக, மருத்துவரின் அறிவுரைக்கு
ஒத்துழைக்காத கணவனைக் கை கழுவிவிடுகிறாள்.
ஜனனியின் முன்னேற்றத்துக்காக அவள் தாய் வசந்தா செய்யும்
அனைத்துத் திட்டத்திற்கும், செயல்முறைகளுக்கும்
முழு ஒத்துழைப்பு அளித்து,
ஜனனியின்
உயர்வுக்கு ஊன்று கோலாய் நிற்கும் ஜனனியின் பாட்டியும் தாத்தாவும், வெறும் கதாபாத்திரங்களாய்
இல்லாமல் வாழ்வின் யதார்த்தங்களாய்க் காட்சி அளிப்பது மிகவும் அற்புதம்.
ஆட்டிசம் ஸ்பெக்ரம் பற்றி, குறிப்பாக (Asperger’s Syndrome) ஆஸ்பெர்கர் நோய்க்குறி பற்றிய
தெளிவான தகவலை,
அனைவரும்
புரிந்து கொள்ளும் வண்ணம்,
கதாசிரியர்
ஜூனியர் தேஜ் தெளிவாகவும்,
எளிமையாகவும்
குறிப்பிட்ட விதம் சிறப்பினும் சிறப்பு.
விஞ்ஞானி ஐன்ஸ்டின் உட்பட, ஆடிசம் பாதித்த பல சாதனையாளர்களைப்
பற்றியும்,
கதாபாத்திரத்தின்
மூலமாக இயல்பாகச் சொல்ல வைத்து, கதையினைத்
தாண்டி, மனநல ஆலோசகரான ஜூனியர் தேஜ்
அவர்கள் மனநலம் குறித்த பல்வேறு அறிவுசார் தகவல்களை வாசகர்களுக்கு வெளிச்சம்
போட்டுக் காட்டி விழிப்புணர்வை ஊட்டியிருக்கிறார்.
மார்த்தாண்டம் - மிருணாளினி காதல் கதையை, (Flashback) நினைவு மீட்சி வடிவில்
கூறும்போது,
சிதம்பரம்
நடராஜர் கோவிலுக்கு இதுவரை செல்லாதவர்கள் கூட மனக்கண்ணால், பொன்னம்பலத்தை தரிசிக்கும்
வண்ணம், நுட்பமான தகவல்களை
காட்சிப்படுத்திய கதாசிரியர் பாராட்டுக்குரியவர்.
காதலர்களான மார்த்தாண்டமும் மிருணாளினியும், தேர்முட்டியிலும், கோபுர வாயிலிலும், பிரகாரங்களிலும் உலவும் போது
வாசகரும் அவர்களுடன் உலா வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தி, வாசகனை திக்குமுக்காட
வைக்கிறார் ஜூனியர் தேஜ்.
க்ளைமாக்ஸில் கதை முடிச்சை, லாகவமாக அவிழ்க்கிறார் ஜூதேஜ்.
சூழ்நிலைக் கைதியாகி. மார்த்தாண்டத்தின் வளர்ப்புத் தந்தையாக
வாழ்ந்த, ஜனனியின் தந்தை ராஜேந்திரனின் கதாபாத்திரத்தை
சொல்லி, அதுவரை வாசகனின் ஊகமாய் இருந்த
கதை முடிவை,
தலைகீழாய்
மாற்றியமைத்து ரசவாதம் புரிந்திருக்கிறார் நாவலாசிரியர் ஜூனியர் தேஜ்.
* நாவலுக்கு
வேண்டுவது வாழ்வியலோடு இணைந்த தீம் (கதைக் கரு).
* தெளிந்த
நீரோடைபோல் ஆற்றொழுக்காய் கதை சொல்லும் உத்தி.
* கதையினூடே
சொல்லப்படவேண்டிய படிப்பினைகள்.
* கதை
படித்து முடித்த பின்பும் வாசகனோடு ஒன்றி, மனதை விட்டு அகலாத வகையில் ஒன்றிவிடும்
கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள், நடத்தைகள், ஆளுமைப் பண்புகள், பலம், பலவீனம் தனித்துவமான தன்மைகள்.
* குழப்பம்
இல்லாத வகையில் வாசகன் நிச்சயம் எதிர்பார்த்தே இருக்காத கதை முடிவு.
* எல்லாவற்றிற்கும்
மேலாக, ஆட்டிசத்தால்
பாதிக்கப்பட்டவர்கள் முடங்கிக் கிடக்க வேண்டியதுதான் என்கிற அறியாமையை முற்றிலும்
நீக்கும் வகையில்,
அவர்களின்
குறையை நிறையாய் மாற்ற முடியும் என்றம், வாழ்வின் உச்சத்தைத் தொட முடியும் என்றும்; சாதனை புரிய முடியும்
என்பதையெல்லாம்... ஜனனி என்ற கதாபாத்திரத்தின் வாழ்கையின் மூலம் பதிவு
செய்திருக்கிற ஒரு விழிப்புணர்வு சமூக நாவலாகத்தான் இதை பார்க்க முடிகிறது.
இது போன்ற இன்னும் பல நாவல்களை எழுதி ஜூனியர் தேஜ் அவர்கள்
புகழ் பெற வேண்டும் என்ற வாழ்த்தினை இதன்மூலம் பதிவு செய்வதில் மகிழ்ச்சி
அடைகிறேன்.
இப்படிக்கு
தங்கள்
மேல் அன்புள்ள
கவி
வெண்ணிலவன்
எழுத்தாளர், மணமேல்குடி
வாழ்த்துரை
ஜூனியர் தேஜ் அவர்களின் ‘ஜனனி...ஜெயம்
நீ...’ என்ற
பெண்ணீயம் போற்றும் சமூக நாவலை படித்து ரசித்தேன்.
‘பிறப்பிலேயே
ஆடிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஜனனி - எப்படி விவசாயத் துறை விஞ்ஞானியாகி –
சாதித்தாள்.’
என்ற ‘ஒன்லைன்’ கருவை அழகாகவும்,அழுத்தமாகவும்
நாவல் மூலம் பதிவு செய்த விதம் மிகவும் அருமை.
பெர்னாட்ஷா அவர்கள்,
தனது பாத்திரங்களை வெறும் உணர்சிப் பெருக்குள்ள
மனிதர்களாகப் படைக்காமல், பிரத்யேகமான
கடமைகளையும், குறிப்பிட்ட
கருத்துக்களையும், தனித்துவமான
கொள்கைகளையும், கொண்ட
இயல்பு வாழ்க்கையை ஒத்த பிரதிநிதிகளாகத்தான் படைப்பார். குறிப்பாக பெண்கள்
பாத்திரங்களை, குடும்பம்
மற்றும் சமுதாயக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் வலுவான சக்தியாகத்தான் படைப்பார் ஷா.
அதனால்தான், வாழ்வியல்
யதார்த்தத்தை காட்சிப்படுத்தும் அவரது ஒவ்வொரு பாத்திரமும் காலம் காலமாக வாழ்கிறது
என்பர் திறனாய்வாளர்கள்.
அது போல,
இந்த நாவலின் ஒரு குழந்தையின் முன்னேற்றத்துக்கு
முதல் காரணம், பெற்றோர்கள்தான்
என்பதை ஜனனியின் தாய் வசந்தா, தாத்தா-பாட்டி
மூலம் அழுத்தமாகப் பதிவு செய்த ஜூனியர் தேஜ், ஒவ்வொரு
தனி மனிதன் வாழ்விலும் நல்ல நண்பர்களின் பங்கு குறித்த யதார்த்தவாதத்தை மார்த்தாண்டம்
என்ற பாத்திரத்தின் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்த விதம் மிகவும் நேர்த்தி.
ஜனனியின் குறைபாடான,’லிட்டில்
ப்ரொபஸர் சிண்ட்ரோம்’ பற்றிய
ப்ளஸ்-மைனஸ் தகவல்களை மனநல மருத்துவர் நவீனன் விளக்கியவிதம் ரசிக்கும்படியாக
இருந்தது.
டாக்டர் மார்த்தாண்டம் - மிருணாளினி
காதல், ஜனனிக்காக
மார்த்தாண்டம் செய்யும் தியாகங்கள், ஆணாதிக்க
கர்வம் கொண்ட ராஜேந்திரன் என... பல்வேறு பாத்திரங்கள் கதை முழுவதும்
நிறைந்திருந்தாலும்,எனக்கு
மிகவும் பிடித்தது வசந்தா என்ற பாத்திரம்தான். காரணம்,
போர்க்குணம் கொண்ட அந்தப் பாத்திரத்தின் மூலம்
பெண்ணீயத்தின் சக்தியை முழுமையாக வெளிகாட்டியுள்ள விதம் பாராட்டுதலுக்கு உரியது.
க்ளைமாக்ஸ் - ட்விஸ்ட்,ல்
எதிர்பாராத திருப்பம் பிரமிப்பூட்டியது.
‘ஜனனி...!
ஜெயம் நீ...!!’ நாவல் முழுவதும் பாத்திரங்களின் வர்ணனைகள்,
பின்னணி விபரங்கள்,
ஆங்காங்கே விதைத்திருந்த வாழ்வியல் கருத்துக்கள்
என அனைத்து வகையிலும் ரசனைக்குரிய நாவல் இது.
இசைக் கடல் வேலூர் ராம்குமார்
எழுதி இசை அமைத்த ‘ஜனனீ ஜெயம் நீ...’ எனும் பாடல் மேடையில் ஒலிக்க,
மீடியாக்களின் நேரடி ஒளிபரப்பில் உலகெங்கும்
காற்றோடு கலந்து ஒலித்துக் கொண்டிருந்தது... என்ற, நாவல்
முடிவில் வரும் கடைசீ வாக்கியம் மூலம், தங்கள்
அற்புதமான நாவலில், படிப்போர்
மனதில் நீங்கா இடம் பெறும் கதாபாத்திரமாக என்னையும் சேர்த்து கௌரவித்தமைக்கு
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோல,
வாழ்வியல் கலந்து பெண்மையைப் போற்றும் படைப்புகள்
பல படைத்திட வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!
என்றும்
அன்புடன்
வெ.ராம்குமார்,
வேலூர்-632001
என்னுரை
என்னுரை
எனக்கு இலக்கியத்தில் நாட்டத்தை ஊட்டிய என் தகப்பனார் தேஜ்
அவர்களுக்கும்,
என்
தாயாருக்கும்,
இந்த நூலைக்
காணிக்கையாக்குகிறேன்.
‘ஜூனியர்
தேஜ் பேஜ்’ என்று பிரத்யேகமாக ஒரு சொற்றொடர் வடிவமைத்து பக்கம் பக்கமாக என்
படைப்புகளை வெளியிட்டு,
என்னை
ஊக்கப்படுத்திய எழுத்துலக ஜாம்பவான் திரு சாவி அவர்களுக்கும்;
“பற...!
பற...!! மேலே...! மேலே...!” என்று தன் பொற்கரங்களால் எழுதி ஆசீர்வதித்த எழுத்துச்
சித்தர் பாலகுமாரன் அவர்களுக்கும் குரு வந்தனம் செய்து என் நன்றியைக்
காணிக்கையாக்குகிறேன்.
அருமையான அணிந்துரை எழுதி அளித்த நாவலாசிரியர் திரு
கவி-வெண்ணிலவன்,
வானொலி
நாடக எழுத்தாளர்,
மணமேல்குடி
அவர்களுக்கும்,
வாழ்த்துரை வழங்கிய நாவலாசிரியர் வெ இராம்குமார்
அவர்களுக்கும்
என்னுடைய ‘ஜனனி...! ஜெயம் நீ...!!’ என்கிற முழுநாவலை அழகான
புத்தகமாக உருமாற்றி,
ஊக்குவித்த
புஸ்தகா நிறுவனர் திருமிகு ராஜேஷ் அவர்களுக்கும், புஸ்தகா நிறுவனத்துக்கும் என் நெஞ்சார்ந்த
நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
ஜூனியர் தேஜ்
சீர்காழி
***
நாவல் சுருக்கம்
ஆட்டிசம்
குறைபாட்டின் ஒரு வகையான "லிட்டில் ப்ரொஃபஸர் சிண்ட்ரோம்” அதாவது சிறிய
பேராசிரியர் குறைபாட்டால் குழந்தைப் பருவத்திலேயே பாதிக்கப்பட்டவள் ஜனனி.
பற்பல சமுதாயக்
குறுக்கீடுகளையும், இடையூறுகளையும், அழுத்தங்களையும், தடைகளையும் கடந்து, தியாகத் தாயின் வைராக்யத்தாலும், நேர்த்தியான வளர்ப்பு முறையாலும், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் சரியான
வழிகாட்டுதல்களாலும், சில பல தூய நட்புகளாலும் மற்றும் எத்தனை எத்தனையோ நல்லுங்களின் பாசத்தாலும், நேசத்தாலும், உலகே போற்றும் வேளாண் விஞ்ஞானியாக உருவாகிறாள்
ஜனனி.
எக்காலத்திலும்
உயிர்வாழ அத்தியாவசியமான உணவுப் பயிர் குறித்து ஆராய்ச்சி செய்து, எந்த நாட்டிலும், எந்தச் சூழலிலும் குறைந்த நாட்களில் விளையும்
வகையில் வீரிய ஒட்டு ரக நெற்பயிரை உற்பத்தி செய்து, அதை உலகுக்கு அர்ப்பணித்த ஜனனியை உலக நாடுகள்
அனைத்தும் போற்றிப் புகழ்ந்து விருதுகள் அளித்துக் கொண்டாடி மகிழ்ந்தன.
ஜனனிக்கு
தொடக்கக் கல்வி அளித்த சிறுகுடி கிராமத்து அரசுப் பள்ளி வளாகத்தில் அரசுக்
கல்வித்துறை பாராட்டு விழா நடத்திப் பெருமை கொள்கிறது.
இந்த
நிகழ்ச்சிக்காக, பிரத்யேகமாக
இசைக் கடல் வேலூர் ராம்குமார் எழுதி இசை அமைத்த ‘ஜனனீ ஜெயம் நீ...’ எனும் பாடல்
விழா மேடையில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
நிகழ்ச்சியை
மீடியாக்கள் நேரடியாய் ஒளிபரப்ப, ‘ஜனனீ ஜெயம் நீ...’ என உலகெங்கும் காற்றோடு கலந்து ஒலித்துக் கொண்டிருந்தது...
மகிழ்ச்சியின் உச்சத்தில் அனிச்சையாக, ஜனனியின் உப்புக் கடல் பொங்கி, கன்னத்தில் வழிந்து ஓடியபோது, ‘உன்னான் முடியும் ஜனனி...!’ என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆக்கமும் ஊக்கமும் உரமும் தந்து
உயர்த்திய அனைத்து, நல்லுள்ளங்களுக்கும் தான் பெற்ற விருதினைச் மனதார சமர்ப்பித்துத் தன்
நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறாள் ஜனனி.
ஜனனியின் ஆடிசக்
குறைபாட்டை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, விஞ்ஞானிகள் எனும் போர்வையில் ஒளிந்து, அவளின் கண்டுபிடிப்புகளைத் திருட முயற்சித்த
கயவர்களுக்கும், அவர்களுக்குத்
துணை போன சுயநல, வழிகாட்டிகளின்
நம்பிக்கை துரோகங்களையெல்லாம், அறிந்து, சாதுர்யமாக, அறிவியல் பூர்வமாக அவற்றையெல்லாம் முறியடித்து, ஜனனியின் வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து
அவளுக்காகவே வாழ்ந்த ஆய்வு இணையர் Research Associate மார்த்தாண்டத்திற்கு, எதிர்பாராத, மிக உயர்ந்த பரிசு ஒன்றை அளித்து மகிழ்கிறாள்
உலக விஞ்ஞானி ஜனனி. மார்த்தாண்டமும்
அதற்கு ஈடான ஒரு பரிசை வழங்கி ஜனனியை மகிழ்ச்சியிலாழ்த்துகிறார்.
தன்னம்பிக்கையோடு
உழைத்து உயர்ந்த ஜனனியின் கதையை வாசித்து கருத்திடுங்கள் வாசக நண்பர்களே.
கதா பாத்திரங்கள்
1. ஜனனி – கதாநாயகி
2. ராஜேந்திரன் – ஜனனியின் தந்தை
3. வஸந்தா – ஜனனியின் தாய்
4. மார்த்தாண்டம்
(ஜனனியின் Research Associate)
5. ம்ருணாளிணி
(காதல் முறிவு ஏற்பட்டுவிட்ட, மார்த்தாண்டத்தின்
முன்னாள் காதலி)
6. நவீனன் - மனநல
மருத்துவர்
7. வரதராஜன் – மனநல ஆலோசகர்
8. வேலூர்
ராம்குமார் - கவிஞர்
ஜனனி...! ஜெயம் நீ...!
ஜூனியர் தேஜ்
ஆட்டிசம்
குறைபாட்டின் ஒரு வகையான "லிட்டில் ப்ரொஃபஸர் சிண்ட்ரோம்” அதாவது சிறிய
பேராசிரியர் குறைபாட்டால் குழந்தைப் பருவத்திலேயே பாதிக்கப்பட்டவள் ஜனனி.
பற்பல சமுதாயக்
குறுக்கீடுகளையும், இடையூறுகளையும், அழுத்தங்களையும், தடைகளையும் கடந்து, தியாகத் தாயின் வைராக்யத்தாலும், நேர்த்தியான வளர்ப்பு முறையாலும், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களின் சரியான
வழிகாட்டுதல்களாலும், சில பல தூய நட்புகளாலும் மற்றும் எத்தனை எத்தனையோ நல்லுங்களின் பாசத்தாலும், நேசத்தாலும், உலகே போற்றும் வேளாண் விஞ்ஞானியாக உருவாகிறாள்
ஜனனி.
எக்காலத்திலும்
உயிர்வாழ அத்தியாவசியமான உணவுப் பயிர் குறித்து ஆராய்ச்சி செய்து, எந்த நாட்டிலும், எந்தச் சூழலிலும் குறைந்த நாட்களில் விளையும்
வகையில் வீரிய ஒட்டு ரக நெற்பயிரை உற்பத்தி செய்து, அதை உலகுக்கு அர்ப்பணித்த ஜனனியை உலக நாடுகள்
அனைத்தும் போற்றிப் புகழ்ந்து விருதுகள் அளித்துக் கொண்டாடி மகிழ்ந்தன.
ஜனனிக்கு
தொடக்கக் கல்வி அளித்த சிறுகுடி கிராமத்து அரசுப் பள்ளி வளாகத்தில் அரசுக்
கல்வித்துறை பாராட்டு விழா நடத்திப் பெருமை கொள்கிறது.
இந்த
நிகழ்ச்சிக்காக, பிரத்யேகமாக
இசைக் கடல் வேலூர் ராம்குமார் எழுதி இசை அமைத்த ‘ஜனனீ ஜெயம் நீ...’ எனும் பாடல்
விழா மேடையில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.
நிகழ்ச்சியை
மீடியாக்கள் நேரடியாய் ஒளிபரப்ப, ‘ஜனனீ ஜெயம் நீ...’ என உலகெங்கும் காற்றோடு கலந்து ஒலித்துக் கொண்டிருந்தது...
மகிழ்ச்சியின் உச்சத்தில் அனிச்சையாக, ஜனனியின் உப்புக் கடல் பொங்கி, கன்னத்தில் வழிந்து ஓடியபோது, ‘உன்னான் முடியும் ஜனனி...!’ என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆக்கமும் ஊக்கமும் உரமும் தந்து
உயர்த்திய அனைத்து, நல்லுள்ளங்களுக்கும் தான் பெற்ற விருதினைச் மனதார சமர்ப்பித்துத் தன்
நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறாள் ஜனனி.
ஜனனியின் ஆடிசக்
குறைபாட்டை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, விஞ்ஞானிகள் எனும் போர்வையில் ஒளிந்து, அவளின் கண்டுபிடிப்புகளைத் திருட முயற்சித்த
கயவர்களுக்கும், அவர்களுக்குத்
துணை போன சுயநல, வழிகாட்டிகளின்
நம்பிக்கை துரோகங்களையெல்லாம், அறிந்து, சாதுர்யமாக, அறிவியல் பூர்வமாக அவற்றையெல்லாம் முறியடித்து, ஜனனியின் வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து
அவளுக்காகவே வாழ்ந்த ஆய்வு இணையர் Research Associate மார்த்தாண்டத்திற்கு, எதிர்பாராத, மிக உயர்ந்த பரிசு ஒன்றை அளித்து மகிழ்கிறாள்
உலக விஞ்ஞானி ஜனனி. மார்த்தாண்டமும்
அதற்கு ஈடான ஒரு பரிசை வழங்கி ஜனனியை மகிழ்ச்சியிலாழ்த்துகிறார்.
தன்னம்பிக்கையோடு
உழைத்து உயர்ந்த ஜனனியின் கதையை வாசித்து கருத்திடுங்கள் வாசக நண்பர்களே.
கதா பாத்திரங்கள்
1. ஜனனி – கதாநாயகி
2. ராஜேந்திரன் – ஜனனியின் தந்தை
3. வஸந்தா – ஜனனியின் தாய்
4. மார்த்தாண்டம்
(ஜனனியின் Research Associate)
5. ம்ருணாளிணி
(காதல் முறிவு ஏற்பட்டுவிட்ட, மார்த்தாண்டத்தின் முன்னாள் காதலி)
6. நவீனன் - மனநல
மருத்துவர்
7. வரதராஜன் – மனநல ஆலோசகர்
8. வேலூர்
ராம்குமார் - கவிஞர்
ஜனனி...! ஜெயம் நீ...!
ஜூனியர் தேஜ்
அத்தியாயம்
1
“மிஸ் ஜனனி...!”
ஆய்வு இணையர்
(ரிஸர்ச் அஸோஸியேட்) டாக்டர் மார்த்தாண்டம், வழக்கம்போல பாசமும் மரியாதையும் சரி
விகிதத்தில் கலந்த குரலில் அழைத்தார். அவருடைய கையில் தவழ்ந்து கொண்டிருந்தது
அன்றைய தபாலில் வந்து, உடைக்கப்பட்ட தபால் உறை.
“.........................”
அழைப்புக்கு, ஜனனியிடமிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை.
அவள் பார்வை, ஏதோ ஒரு ஆய்வுக் குறிப்பில் நிலைத்திருந்தது.
பச்சைமசிப்
பேனாவால், அடிக்
கோடிட்டபடியும், அம்புக்குறிகளிட்டும், ஆங்காங்கே அடைப்புக் குறிகள் போட்டும், ஸ்டடி செய்து கொண்டிருந்தாள் அவள்.
ஜனனியின் கவனம்
வேறு எதிலோ பதிந்திருப்பதை உணர்ந்த மார்த்தாண்டம் அமைதியாகக் காத்திருந்தார்.
***
இந்தக்
காட்சியைப் புதிதாகப் பார்க்கிறவர்களுக்கு என்ன தோன்றும்?,
அல்லது இந்தச்
சம்பவத்தை மட்டும் பார்த்துவிட்டு, காட்சிப் படிமங்களை உருவகப் படுத்திக்
கொள்பவர்கள் என்ன நினைப்பார்கள்...!
‘உலகமே போற்றும் தமிழக வேளாண் விஞ்ஞானி ஜனனி ‘தான்’ என்ற கர்வம் கொண்டவள். பிறரை மதிக்கத்
தெரியாதவள்... - இப்படியெல்லாம்தானே முடிவுக்கு
வருவார்கள்.
‘தன்னுடைய ஆய்வு
இணையர், டாக்டர் மார்த்தாண்டத்தின்
அழைப்பை அலட்சியப் படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில்தான்... ஏதோ பலமான யோசனையில்
இருப்பதாக நடிக்கிறாளோ...?’ என்று கூட பார்ப்பவர்களுக்கு நினைக்கத் தோன்றும்.
அப்படிப்பட்ட
ஈகோயிஸ்ட்டெல்லாம் இல்லை ஜனனி.
விரிவான
பார்வையும், அகண்டமான அறிவுமே
அவளை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளன.
ஜனனியின் ஓயாத
உழைப்பும், உயர்ந்த
நோக்கங்களும், உலகளாவிய பார்வை
வீச்சும், மேலான
எண்ணங்களும், எளிமையான
குணங்களும், மிதமான பேச்சும், உயிரிரக்கச் சுபாவங்களும் எவரையும் சுலபமாக
ஈர்த்து விடுமே. மார்த்தாண்டம் மட்டும் அதற்கு விதி விலக்கா என்ன?
ஜனனியின் கவனத்தை
உடனடியாக ஈர்ப்பதுதான் தற்போதைய ஒரே நோக்கம் மார்த்தாண்டத்திற்கு. அதற்காக
பக்கவாட்டில் நின்ற அவர், ஓரிரு தப்படிகள் நடந்து, அவளுக்கு முன்புறம் வந்து நின்றார்;
தன் இடது கையில்
வைத்திருந்த தபால் உறையின் விளிம்புகளை நளினமாக அழுத்தி, உறையின் வாய் விரித்தார்;
விரல்களை உள்
செலுத்தி, அழைப்பிதழை
வெளியில் எடுத்துக் கொண்டே, மீண்டும் அழைத்தார்.
“மிஸ் ஜனனி
........................”
முதல் அழைப்பைக்
காட்டிலும் சற்றே டெசிபல் உயர்ந்திருந்தது இரண்டாவது அழைப்பில்.
***
மாநில அறிவியல்
கழகத் தலைமையகத்திலிருந்து, முறைப்படி தபாலில் அனுப்பப்பட்டிருந்த பாராட்டு விழா அழைப்பிதழ்தான்
மார்த்தாண்டத்தின் கையில் இருந்தது.
மறுநாள், அதாவது இன்னும் 20 மணி நேரத்தில், மாநில பள்ளிக் கல்வித் துறையின் சார்பில்
ஜனனிக்கு நிகழவிருக்கும் பாராட்டு நிகழ்வுக்கான அழைப்பிதழ்தான் அது.
அந்த
அழைப்பிதழின் பின்புறமே நிகழ்ச்சி நிரலும் பட்டியலிடப் பட்டிருந்தது.
விழா சம்பந்தமாக, நிகழ்ச்சி நிரல் உட்பட அனைத்து விவரங்களையும்
விழாவின் பிரதான நாயகியான ஜனனிக்கு நினைவூட்ட வேண்டும். அப்-டேட் செய்ய வேண்டும்
என்பதற்காக, மீண்டும் மீண்டும்
அழைப்பிதழை பார்த்துப் பார்த்து மனதில் வாங்கி உறுதி செய்து கொண்டார்
மார்த்தாண்டம்.
ஜனனிக்கு வெறும்
ஆய்வு இணையராக மட்டும் செயலாற்றவில்லை மார்த்தாண்டம். ஒரு சிறந்த வழிகாட்டியாகவும், நேர்முக உதவியாளர் போலவும், இன்னும் சொல்லப் போனால், ஜனனியின் வளர்ச்சி ஒன்றே தன் ஒரே குறிகோளாகக்
கொண்டு, அவளுக்கு வரும்
எந்த இடர்பாடுகளையும் காக்கும் ஓர் அரணாக, நின்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர் அவர்.
ஜனனியும்
மார்த்தாண்டத்தின் மீது மிக உயர்ந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவள்.
‘இன்றைய உலகம்
தழுவிய விஞ்ஞானி, என்கிற தன் அசாதாரண
வளர்ச்சிக்குக் காரணம், எல்லா வகையிலும், தனக்குக் காப்புபோல மார்த்தாண்டம் இருப்பதுதான்...’ என்பதே ஜனனியின் அசைக்க
முடியாத நம்பிக்கை. அதுதான் உண்மையும் கூட.
செங்கல்பட்டுக்கு, எத்தனை மணிக்கு இங்கிருந்து புறப்படவேண்டும்?
பயணியர் விடுதியை
அடையும் உத்தேச நேரம்;
அங்கிருந்து
சிறுகுடி கிராமத்தில் இருக்கும் அவளின் பாட்டி தாத்தாவின் வீட்டிற்குச் செல்வது
எப்போது?;
அங்கே எத்தனை மணி
நேரம் அவளால் செலவழிக்க முடியும்?;
அங்கிருந்து அவள்
பயின்ற துவக்கப் பள்ளியில் தடபுடலாக நடக்க இருக்கும் விழா வளாகத்தை எத்தனை மணிக்குக்
சென்றடைய வேண்டும்...?;
மீடியாவுக்கு
எந்த விதமாக விஷயங்களை பேட்டியின்போது ஃபோக்கஸ் செய்ய வேண்டும்...?
இப்படி, அனைத்துக் கோணங்களிலும், எல்லாவற்றையும், முறையாகப் பட்டியலிட்டு, ஒரு முறைக்குப் பல முறை அதை ஆய்வு செய்து, தெளிவாகத் திட்டமிட்டு வைத்திருந்தார்
மார்த்தாண்டம்.
அது மட்டுமல்ல, எந்தெந்த வாகனத்தில் யார் யார் பயணிக்க
உள்ளோம். என்ற பயணத் திட்டம்;
பயணியர் மாளிகையை
அடைந்தவுடன் அவளுக்குப் பூங்கொத்து கொடுத்தும், மாலை அணிவித்தும், சால்வை போர்த்தியும் மரியாதை செய்ய எந்தெந்த
அதிகாரிகள் பணிக்கப்பட்டு இருக்கிறார்கள். என்ற குறிப்புகள்,
பதில் மரியாதையாக, ஜனனி யார் யாருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்க
வேண்டும்.
இது போன்று, அனைத்தையும் துல்லியமாகத் திட்டமிட்டு, திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தத் தேவையான
அனைத்து முன் ஏற்பாடுகளையும், முறையாக செய்து முடித்துவிட்டார் மார்த்தாண்டம்,
அனைத்துத்
திட்டங்களையும் குறித்து ஜனனியிடம் பேசி முடிவு எடுக்க வேண்டித்தான் பாக்கி. அதன்
பொருட்டு, சந்திக்க வந்த
மார்த்தாண்டம், அவளை
அழைத்துவிட்டு, அவளின்
ரெஸ்பான்ஸ் எதிர்பார்த்து அவள் முன் நிற்கிறார்.
முன் தினமே மின்னஞ்சல்
மூலம் பெறப்பட்ட அழைப்பிதழை, ஹார்டு காப்பி எடுத்து அவளிடம் சமர்ப்பித்துவிட்டார் மார்த்தாண்டம். இப்போது
அவர் கையில் இருப்பதும், அதே அழைப்பிதழ்தான். வடிவத்தில்தான் மாறுதல். அச்சடிக்கப்பட்டு, தபாலில் வந்திருக்கிறது.
மின்னஞ்சல் மூலம்
வந்த அழைப்பிதழை முன்பே பார்த்துவிட்டாள் என்றாலும்; விழாவைப் பற்றிய அனைத்துக் குறிப்புகளும்
ஜனனிக்கு முன்னமேயே சந்தேகமறத் தெரியப்படுத்தப்பட்டிருந்தாலும்;
இறுதி அழைப்பாக, இன்று, துறை மூலம் அஞ்சலில் அனுப்பப்பட்டுப்
பெற்ற அழைப்பிதழை, விழா நாயகியிடம் சமர்ப்பித்து, விளக்கமாய் அப்-டேட் செய்தல்தான் மரியாதை
என்பதை மனதில் கொண்டு, தன் கடமையைச் செய்யத் தயாராக நின்றார் மார்த்தாண்டம்.
“..........................”
இரண்டாவது
அழைப்பின்போது அவர் குரல் சற்றே பலமாகவும் கனமாகவும் இருந்ததால், அனிச்சையாக மார்த்தாண்டத்தின் மீது ஜனனியின்
கவனம் திரும்பியது.
அமர்ந்திருந்த
நாற்காலியில் இருந்து எழுந்தாள். ஜனனியின் கண்கள் மார்த்தாண்டத்தின் முன்னே நிலை
கொண்டாலும், டாக்டர்
மார்த்தாண்டத்தின் கண்களைப் நோக்கவில்லை அந்த நயனங்கள்.
மாறாக, அவள் பார்வை அவர் தலைக்கு மேல் தாண்டி
தொடர்ந்து நேராக வீசியது.
சோதனைச் சாலையின்
எல்லையில் நின்ற கண்ணாடித் தடுப்பை ஊடுறுவி வெளியே தொடுவானத்தை நோக்கி நீண்டது
அந்தப் பார்வை;
***
கண்ணாடித்
தடுப்பு உள்ளது என்று எவரேனும் சொன்னால்தான் தெரியும். அந்த அளவுக்குச் சுத்தமாக, பளிச் என்று துடைக்கப்பட்டிருந்த ஆய்வகத்தின்
பின்புற எல்லைக் கண்ணாடித் தடுப்புகளுக்கு அப்பால் காணப்பட்ட நகரக் காட்சிகள், ‘சட்டமிட்ட நீர்வண்ணச் சித்திரம் போலத்
தோற்றமளித்து.
வானத்தையும், மேகத்தையும், இயற்கையையும், வீடு வாசல்களையும், பார்த்து, ரசித்து உள் வாங்கினாள் ஜனனி.
கண் மட்டத்துக்கு
மேல், தொடுவானத்தில் முட்டி, இடதும் வலதுமாய் அலைந்தன அவள் பார்வை.
மேகங்கள்
பக்கவாட்டில் நகர்வதும், ஏதேதோ உருவங்கள் சிருஷ்டியாவதும், கலைவதும், மீண்டும் புதிய உருவங்கள் தோன்றுவதுமாக
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மேக மண்டலத்தின் நகர்வுகளை கண் கொட்டாமல் பார்த்து
ரசித்தாள் ஜனனி.
அனிச்சையாய், ஜனனியின் பார்வை சற்றே கீழ் நோக்கி இறக்கியது.
இப்போது கண்
மட்டத்தில் இருந்த காட்சிகளில் கவனம் சென்றது...
கண்களை ஜில்
என்று குளிர்விக்கும் மரங்களையும், அடுக்குமாடி வீடுகளின் பல தளங்களையும், தனி வீடுகளின் மேற்கூரைகளையும், தண்ணீர் தொட்டிகளையும், பல்வேறு கோணங்களில் கண்டு களித்தாள்.
விகுவாகவும், தளர்வாகவும் கட்டப்பட்ட கொடிகளில் தொங்கியபடி
காய்ந்து கொண்டிருக்கும் பல விதமான வண்ண வண்ண ஆடைகளையும், டிஷ் ஆண்டெணாக்களையும் பரவசத்துடன் நோக்கினாள்.
ஆங்காங்கே
மகிழ்ச்சியோடு, சிறகடித்துக்
கொண்டு, இங்குமங்கும் அலைந்த
பறவைகளின் சுறுசுறுப்பைப் பார்த்து ஆனந்தித்தாள்.
“அதோ அந்த பறவை
போல வாழ வேண்டும்...” என்ற சினிமாப் பாடல் அப்போது அவள் மனதின் ஒரு மூலையில்
முழக்கமிட்டது.
மேற்கூரை, கைப்பிடிச் சுவர் இவை எல்லாவற்றிலும் இருந்து
படிப்படியாக இறங்கியது அவள் பார்வை.
பால்கணி, வீட்டு முகப்பு, வாயிற்படி, சன்னல்கள், சுற்றுச் சுவர் என, பார்வை இயல்பாக, கண் மட்டத்திற்குக் கீழே சரிந்தன.
கான்ஸன்ட்ரேஷன்.
அதாவது கவனம். அதற்கு அடுத்த நிலை ஃபோக்கஸ். அதாவது கவனத்தை ஓரிடத்தில் குவித்தல்
என்ற இரண்டு வெற்றிப் படி நிலைகளும் ஜனனியிடம் வசப்பட்டிருந்தன.
எழுத்தாளர்கள், ஓவியர்கள், இலக்கியவாதிகள், விஞ்ஞானிகள் என அனைவருமே கவனத்தை ஏதாவது ஒரு
இடத்தில் குவிக்கும்போதுதான் சாதனை புரிகிறார்கள்.
இந்த விஷயம் தெரிந்தவர்கள், கவனம் குவித்து தவம் செய்யும் நிலையில்
உள்ளவர்களைத் தொந்தரவு செய்து கவனச் சிதறலை ஏற்படுத்துவதில்லை. மாறாக, இங்கித்துடன், வந்த சுவடு தெரியாமல் திரும்பிப் போய்
விடுவார்கள்.
இங்கிதம்
தெரிந்தவர் மார்த்தாண்டம்.
ஏதோ ஒன்றில், கவனத்தைக் குவித்து ஆய்வு செய்து
கொண்டிருக்கும் விஞ்ஞானி ஜனனியை தொந்தரவு செய்யாமல், ‘சிறிது நேரம் கழித்து வந்து பேசிக்
கொள்ளலாம்...’ என்று ஓசைப்படாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.’
ஜனனியின் கண்
மட்டத்துக் கீழ் காட்சியளித்தன வீடுகள். வில்லாக்கள். தெருக்கள், சாலைகள்... எல்லாம்.
வீடுகளின்
பின்னணியில், முன்னால் நின்ற
காம்பவுண்ட் சுவரும், பிளாட்பாரத்தில், ஆங்காங்கே வளர்ந்து கிளை பரப்பி நின்ற பல்வேறு விருட்சங்களும் அவள்
கண்களுக்குள் குளிர்ச்சியைப் பாய்ச்சின.
நடைமேடையில்
நின்று கொண்டு அழகு சேர்ப்பதோடு, பிராண வாயுவை உற்பத்தி செய்து விநியோகிக்கும் மரங்கள் ஒவ்வொன்றின்
தனித்தன்மையையும் தனித்தனியாய் ரசித்தாள்.
பளிச் என எண்ணை
தடவி, மஸாஜ் செய்து, பாலிஷ் போட்டு விட்டது போல, தக தக வெனப் பளபளக்கும் இலைகளையும், கிளை நுனியில் இயல்பாய் எழும்பித் துவளும்
கொழுந்துகளையும் அசைத்துக் கொண்டு நின்ற புங்கன் மரம்;
இளஞ்சிகப்பு, இளமஞ்சள், வெள்ளை, பிங்க் என பல்வேறு நிறங்களில் மலர்ந்து
புன்னகைத்து நின்ற போகன் வில்லாக்கள்;
கருப்பு நிற
முருங்கைக் காய்ப் போல வாளிப்பாய்த் தொங்கும் காய்களுடன், தூய மஞ்சள் நிறத்தோடு கொத்துக் கொத்தாய்த்
தொங்கும் சரக் –கொன்றை;
அழுத்தமான
மஞ்சளைப் பூசிக்கொண்டு மலர்ந்து முறுவலிக்கும் மஞ்சள்-பட்டி;
வெள்ளை
நிறத்திலும் மற்றும் இள ஊதா நிறத்திலும் புஷ்பித்திருக்கும் மந்தாரை மரங்கள்;
இப்படியே
பார்த்துக் கொண்டே சென்ற ஜனனியின் பார்வை, உச்சாணியில் பூத்துக் குலுங்கி, ஆகாயத்தை அன்னார்ந்து பார்க்கும் ‘கானகத் தழல்’
மரங்களிள் நெருப்புச் சிகப்புப் புஷ்பங்களின் மேல் நிலைக்க, தீண்டுமின்பம் அனுபவித்தாள் ஜனனி.
ஓங்கி, உயர்ந்து, கிளைப் பரப்பி, வண்ண வண்ணமாய் மலர்ந்து, நறுமணம் வீசுவது மட்டுமல்லாமல், கரு நிழலாய் தரு நிழல் பரத்தி, நின்ற பல்வகை மரங்கள், முக்கியமாக, அந்தச் சாலைக்கு இடப்பட்ட ‘நிழற்சாலை’ என்ற
பெயரையும், நிலை நிறுத்திக்
கொண்டிருந்தன.
தங்களுக்கு
அடைக்கலம் தரும் அந்தப் பரந்து விரிந்த பசுமைத் தாயகத்தைச் சுற்றிச் சுற்றி வந்த
வண்ண வண்ணப் பறவைகள், சந்தோஷமாய் தன் குஞ்சுகளுக்கு இரை ஊட்டும் போது கூவிக் குலாவும் பறவைகளின்
மகிழ்ச்சி ஆரவாரங்கள் கண்ணாடியால் அடைக்கப்பட்ட ஆய்வுக் கூடத்துக்குள்
ஒலிக்கவில்லை என்றாலும், ஜனனியால் அனைத்தையும் முழுமையாக உணர முடிந்தது.
அத்தியாயம் 2
ஆய்வகத்தின்
முதல் தகுதி தூய்மைதானே.
அந்த வகையில், தற்போது ஜனனி தற்காலிகமாகத் தங்கியிருக்கும்
அந்த ஆராய்ச்சிக் கூடமுமே மிகத் தூய்மையாகக் காட்சியளித்தது.
ஆய்வகத்தை
நிர்வகிக்கும் நிர்வாகிகளின் அறைகள், வழிகாட்டி விஞ்ஞானிகளுக்காக ஒதுக்கப்பட்ட
கேபின்கள், கள ஆய்வு
செய்யும் விஞ்ஞானிகளின் ஆய்வுக் கூடங்கள், அனைத்துத் அறைகளிலும், போடப்பட்டுள்ள மேசைகளில் பல்வேறு நீள
அகலங்களில் கம்பீரமாக நிற்கும் கணினிகள், குறிப்பேடுகள், பதிவேடுகள் ஏன் குப்பைத் தொட்டிகள் கூட
தூய்மைப் பணியாளர்களால் நளினமாகத் துடைக்கப்பட்டு பளிச் பளிச் என ஒளிருமாறு
பராமரிக்கப் பட்டிருந்தன.
பல நாட்கள், பல மணி நேரங்கள் பல வாரங்கள் என தேவைக்குத்
தகுந்தாற்போல அப்ஸர்வேஷனில் வைக்கப் படவேண்டிய பல்வேறு ஸ்பெஸிமன்கள், அதாவது வகை மாதிரிகள்;
‘சாம்ப்பிள்ஸ்’ அண்ட் ‘ஸ்பெஸிமன்ஸ்’ என்று எழுதப்பட்டு, முகப்பிலேயே நிறுத்தப்பட்டிருந்த
‘வார்ட்ரோப்’பில், பேட்ச் எண் மற்றும் விவரக் குறிப்புகள் இணைக்கப்பட்டு முறையாகக்
காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பல்விதமான
பரிசோதனைளை நடத்தும்போது, சேர்மங்களை தயாரிப்பதற்காகத் தேவைப்படும் பல்வேறு தனிமங்கள் கரைந்த
சொல்யூஷன்கள்; மற்றும் பல்வேறு
ஆய்வுகளுக்குத் உயிர்நாடியாக விளங்குகிற, உயிர்ப்புடன் கூடிய திரவங்கள்.
அனைத்தும், பல்வேறு வண்ணங்களிலும், வடிவங்களிலும் உருவாக்கப்பட்ட குப்பிகளில், குடுவைகளில், சீசாக்களில், சோதனைக் குழாய்களில் எல்லாம் நிரப்பப்பட்டு
ப்ரதயேகமான ட்ரேயில் வைக்கப்பட்டிருந்தன.
அழியா மை கொண்டு, சங்கேதக் குறியீடுகளால் எழுதப்பட்டு, கழுத்தில் கட்டப்பட்டிருந்த வித விதமான
குறிப்புகளோடு, ட்ரேயினுள்
அடங்கியிருந்த கன்டெய்னர்கள், கன்வேயர் பெல்ட் மூலம் இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கிக் கொண்டே இருந்தன.
தொடர்ந்து, பிராணவாயுவின் அளவைப் பராமரிப்பதற்காக, வைக்கப்பட்ட அனைத்தும், வைப்ரேட்டர் ட்ரேயில் அமர்ந்தபடி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் குதியாட்டம்
போட்டுக் கொண்டிருந்தன.
சில ட்ரேக்கள், ‘ட்ர்டக்... ‘ட்ர்டக்... ‘ட்ர்டக்...’ என்ற
சீரான ஓசையை எழுப்பியபடி ஒரே சீராக ஓடிக் கொண்டிருந்தன. கன்டெய்னருக்குள் முக்கால்
வாசி நிரம்பியிருந்த திரவங்களுக்கு, சீரான அதிர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.
வேறு சில
ட்ரேக்கள், சில சுற்றுகள்
இடப்புறமும், பிறகு, அதே எண்ணிக்கையில் வலப்புறமுமாக... மாறி மாறிச்
சுற்றி திரவங்களை வைபரேட் செய்து கொண்டே இருந்தன.
மற்றும் சில, இடதும் வலதும் மாறி மாறி டடக் டடக் எனத்
திரும்பித் திரும்பி கண்டைனர் திரவத்தை வெகுவாக அதிரவைத்துக் கொண்டே இருந்தன.
இவை எல்லாமே
வருடம் முழுதும் 24/7 நிற்காமல் இயங்க
வேண்டிய இயக்கங்கள்.
இவை தவிர, ஃப்ரீஸரில்தான் இருக்க வேண்டும் என்ற
ஸ்பெஸிமன்களுக்காக எம் டி அறையில் ஆளுயரத்திற்கு மேல் உயரமான குளிர் சாதனப்
பெட்டிகள் இரண்டு கம்பீரமாக நின்று கொண்டிருந்தன.
வேலை நாட்கள்
மட்டுமில்லை. விடுமுறை நாட்களிலும் கூட
அவை இயங்காமல் போனால், ஆராய்ச்சிக்குத் தேவையான உயிர்ச்சத்துக்குத் தடை ஏற்பட்டுவிடும் என்பதால் இந்த
இயக்கத்தில் மட்டும் ஆய்வகங்கள் எப்போதும் மிகவும் கவனமாகத்தான் இருக்கும்.
காரணம் க்வாலிடி
கண்ட்ரோல் அதிகாரிகள் வந்தால் முதலில் இந்த இயக்கங்களைத்தான் ஆய்வ செய்வார்கள் என்பதால்
நிறுவனத் தலைவர்கள் இதற்கு முன்னுரிமை தருவார்கள்.
மின் தடை
வந்தாலும் கூட, பாட்டரிகளின்
துணையோடு அவை இயங்கிக் கொண்டேதான் இருக்க வேண்டும். மிகவும் சென்ஸிடிவ் ஆன பகுதி
என்பதால், பிரத்யேகமாகமான, குளிரூட்டப்பட்ட அந்த அறைக்குள் வழக்கம் போல, ‘அந்நியர்கள் அனுமதி இல்லை’ என்பதை பல்வேறு
மொழிகளில் குறிப்பிட்டு எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டிருந்தது.
ஆங்காங்கே, தேவையான இடங்களில், ரத்தச் சிகப்பு நிறத்தில் இருக்கும், கையடக்கமான உருளைப் பகுதியில், வெள்ளை நிறத்தால் ‘ஃபயர்’ என்று எழுதப்பட்ட ‘தீ
அணைப்பான்’கள் முறையாக மாட்டி வைக்கப்பட்டிருந்தன.
எமர்ஜென்ஸி
எக்ஸிட்’ என்று இரண்டு பாதைகள் உள் புறமாகப் பூட்டப்பட்டு அந்தப் பூட்டின் சாவி, அருகில் இருந்த ஒரு மூடப்பட்ட சிறு பிறைக்குள்
இருப்பதை எவரும் எளிதில் அறியும் வண்ணம் மூடியிலேயே சாவியின் படம்
ஒட்டப்பட்டிருந்தது.
ஒரு படம் என்பது
ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் அல்லவா.
ஆய்வகக்
காட்சிகள், செயல்பாடுகள், நடைமுறைகள், பராமரிப்பு அனைத்தும் அவளோடு கலந்துவிட்ட
ஒன்றல்லவா. எனவே இந்தப் பழக்கப்பட்ட காட்சிகளில் இருந்து தன்னை சடுதியில்
விடுவித்துக் கொண்டாள் ஜனனி.
ஆய்வகத்திற்கு
வெளியே நீண்டு பரவியிருந்த சாலையை ஒட்டிய பிளாட்பாரத்தில், ஒரு மரத்தின் கீழ் நின்ற ஜனனியின் நிலை கொண்ட பார்வையானது, அவள் மனதிற்குள் நிகழ்ந்த எத்தனையெத்தனையோ
ரசவாதங்களை அவள்முகம் பிரதிபலித்தது அப்போது...!
***
நகரத்தின்
பரபரப்பில் இருந்து ஒதுங்கி அமைதியான பகுதியில் அமைந்து இருக்கும் நிழற்சாலை அது.
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் போடப்பட்ட லே அவுட்.
குடியிருப்புப்
பகுதியாகத்தான் அறிமுகமானது அந்த லே அவுட்.
பெட்டிக் கடை, ஒர்க் ஷாப், ஜெராக்ஸ் கடை, பஞ்சர் கடை, மெடிக்கல் ஷாப், கன்ஸல்டன்ஸிகள், மருத்துவ மனை, ஆய்வகங்கள், ரத்தப் பரிசோதனை நிலையங்கள், தனியார் வங்கி, சீட்டுக் கம்பெனி என ஒவ்வொன்றாக
அறிமுகப்படுத்தப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக இன்டஸ்ட்ரியல் ஏரியாவாக மாறிக் கொண்டிருந்தாலும், இன்னும் ஓயாமல் அனைத்து விதமான இரும்புக்
குதிரைகளெல்லாம் எதிரும் புதிருமாக ஓடி, டிராஃபிக் ஏற்படுத்தும் பரபரப்பான சாலையாக
மாறவில்லை அது.
ஜனனி பார்த்துக்
கொண்டே இருக்கும் இந்தக் கணம், சாலையில் மனித நடமாட்டம் அறவே இல்லை.
ஜனங்கள், வீட்டின் கதவை சார்த்திக்கொண்டு, தொலைக் காட்சிக்கு முன்னாலே அமர்ந்து கொண்டோ, கணினியை இயக்கிக் கொண்டோ, கைப்பேசியில் தங்களைக் கரைத்துக் கொண்டோ
இருக்கக் கூடும்.
ஆம்.
காலங்கள் மாறிக்
கொண்டே இருக்க. காட்சிகளும் மாறத்தானே செய்யும்.
கோவில்கள், குளங்கள், திருவிழாக்கள், என வெளி உலகில் சுற்றி வருவதும், பல வித குணாம்சமுள்ள மனிதர்களிடம் பழகிப்
பொழுது போக்குவதையே, ஆரோக்கியமான வழக்கமாக வைத்திருந்த கிராமத்து ஜனங்களையே தொலைக் காட்சிப்
பெட்டிகளும், கைப் பேசிகளும் கட்டிப்
போட்டு முடக்கி விட்டதைப் பார்க்கும்போது, இது போன்ற நகரங்களில் அதன் தாக்கங்களைப்
பற்றிச் சொல்லவேண்டுமா என்ன...?
***
கண் மட்டத்திற்கு
மேலும், கண் மட்டத்திலும்
பரவியிருந்த விசாலமான. விஸ்தாரமான பார்வையை, படிப்படியாகக் குறைத்து, கண் மட்டத்திற்குக் கீழ், தலை தாழ்த்தி ஆய்வகத்தின் பின் புறத் தெருவில்
ஆய்வகத்திற்கு நேர் எதிரே இருந்த வீட்டின் முன் நிலைகொண்டது ஜனனியின் கவனம்.
வீட்டின்
காம்பவுண்டு சுவருக்கு முன், கவையாகிக் கொம்பாகி, நிற்கும், காட்டகத்தி
இலையைப் போன்ற வடிவத்தில், அதைவிட அளவில் இரண்டு மடங்கு பெரிய இலைகளாய், மெழுகு தடவியது போல, விரைப்பாகப் பளபளத்துக்
கொண்டிருந்த ‘சொர்க்கம்’ மரத்தின் அடிவாரத்தில் கவனம் முழுவதும் குவிந்து, குத்திட்டு நின்றது ஜனனியின் விரிந்த பார்வை.
மரத்தின்
அடிவாரத்தில், அவள் கண்ட அந்தக்
காட்சி;
நான்கு
கால்களையும் ஆட்டிக்கொண்டு, இடதும் வலதுமாய் அசைத்தபடி , மல்லாக்கப் படுத்துக் கிடந்தது ஒரு தெரு நாய்.
அதன் பால் மடி
ஊறிப் பருத்திருந்தது.
செவ்வறியோடிய
அந்தத் தாய் நாயின் மடியில், முட்டி முட்டிப் பால் பருகின, பல வண்ண நாய்க் குட்டிகள்.
தாய் நாய், நாக்கை நீட்டி... நீட்டி... “புஸ்... புஸ்...
புஸ்...” என்று மூச்சு விட்டவாறு அமுதூட்டுகையில், கிடைக்கும் சுகத்தை அனுபவித்தது.
தாய் நாயின்
பாசத்தையும், குட்டிகளின்
கும்மாளத்தையும், பார்க்கப்
பார்க்க, ஜனனியின் கண்கள்
பனித்தன.
அவளின் ‘தெரிவை’ப்
பருவத்தில் அறிந்து கொண்ட ஒரு திருவாசகப் பாடலுக்கு இந்தக் கணத்தில் முழுப்
பொருளும், பொழிப்புரையும் தெரித்தது போல உணர்ந்தாள் ஜனனி.
சின்ன வயதில், சிவன் கோவில் ஓதுவார் பரமசிவம் அய்யாவின்
முன்னால், அவ்வப்போது
ஜனனியைக் கொண்டுபோய் உட்கார வைத்துவிட்டு, தானும் சிறிது நேரம் உட்காருவார் அவள் தாத்தா.
கம்பீரமான குரல் அவருக்கு.
சிறிதும் பிசிர்
அடிக்காமல், ராக, தாளக் கட்டுகளோடு தமிழ் மறைகளைப் பாடும்போது
ஓதுவார் தன்னை இழந்துவிடுவார்.
இன்னதுதான்
என்றில்லை. எது தோன்றுகிறதோ அதைப் பாடுவார்.
ஒருநாள் தேவாரம், சில நாட்கள் திருவாசகம், சில தினங்களில் திருமந்திரம், என இஷ்டத்துக்குப் பாடுவார்.
பாடுபவர்களுக்கு
ஒரு ரசிகன், ஒரே ஒரு ரசிகன்
எதிரில் இருந்தாலும் போதுமே, தன்னை மறந்து பாடுவார்களல்லவா...!
ஓதுவார் பரமசிவம்
அய்யாவுக்கு ஜனனி, அவள் தாத்தா என இரண்டு ரசிகர்கள் இருக்க, தைத்ரீயம் தவழ, மனமுருக பரவசத்துடன் அவர் பாடுவதை எத்தனை நேரம்
கேட்டாலும் தெவிட்டாது.
சில நேரங்களில், அவராகவே பொருளும் பொழிப்புரையும் சொல்லுவார்.
அன்றாட வாழ்விலிருந்து எளிய உதாரணங்கள் சொல்லி கடினமான பதங்களையும் ஏற்றிவிடுவார்.
ஓதுவார் கற்றுத்
தந்த, மாணிக்க வாசகரின்
திருவாசகத்தில், ‘பிடித்த பத்து’ப்
பகுதி அனிச்சையாக ஜனனிக்குள் சுரந்து, அவளை நெகிழ்வித்தது.
‘பால் நினைந்து
ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து’
என்ற திருவாசகப்
பாடல், இந்தக் கணத்தில், ஜனனியின் ஊனை உருக்கி, அவள் உள்ளொளியைப் பெருக்கியது.
மூளையின் ஒரு
‘செல்’ மீது அழுத்தமாய்க் கீறப்பட்டு, கல்வெட்டாய்ப் பதிவாகியிருந்த ஒரு சொற்றொடரை
அவள் உதடுகள், அனிச்சையாய்
உச்சரித்தன.
‘தாயிற்
சிறந்ததோர் கோவிலுமில்லை...!’
***
சிறிது நேரம்
கழித்து வருவோம் என்று தற்காலிகமாக ஜனனியை தனிமையில் விட்டுச் சென்ற மார்த்தாண்டம், மீண்டும் வந்தார்.
“ஜனனி... ப்ளீஸ்
லுக் ஹியர்... ப்ளீஸ் லுக்... ப்ளீஸ்...”
தன்
பொறுப்புகளையும், கடமைகளையும் இரு
கண்களாகக் கொண்ட மார்த்தாண்டம், நேர நிர்வாகத்தை அனுசரித்து தன் பக்கம் கவனத்தைக் கவர, ஜனனியைத் தொடர்ந்து அழைத்தார்.
ஒரு கட்டத்தில், பளிச் என்று, ஜனனி தன் பார்வையை
மார்த்தாண்டத்தின் பக்கம் திருப்பினாள்.
கையில் இருந்த
அழைப்பிதழை அவள் கையில் கொடுத்துவிட்டு,
“ஜனனி... ப்ளீஸ்
இதை ஒரு முறை பாத்துருங்களேன்...!” என்று சொன்ன மார்த்தாண்டம், அவள் அதைப் பார்த்து முடிக்கும் வரை
காத்திருந்தார்.
“மேடம் நான், உங்களோட ஆவணங்களை, லே
அவுட் பண்ணி வெச்சிருக்கேன். பார்த்துட்டு, ஏதாவது மாற்றம் வேணும்னா சொல்லுங்க...” என்று
வாய் சொல்ல, பக்கவாட்டில், மேஜை மேல் விரிக்கப்பட்டிருந்த வெண் பட்டுத் துணியின் மீது, வைக்கப் பட்டிருந்தவற்றை காட்டிக்
கொண்டிருந்தது மார்த்தாண்டத்தின் வலது ஆள்காட்டி விரல்.
கரும் பச்சை
வண்ணத்தில் இருந்த அகலமான ரிப்பனில் கோர்க்கப்பட்ட உள்ளங்கை அகலத் தங்கப் பதக்கம்;
லேமினேஷன்
செய்யப்பட்ட பாராட்டுப் பத்திரம்;
அறிவியல் கழகம்
அளித்த நினைவுப் பரிசு;
இவைகளோடு, மேஜையில் லேசாய் சாய்த்து நிறுத்தப்பட்டிருந்த
ஏ 3 நீள அகலங்களில் சட்டமிடப்பட்ட, ‘ஜனனி, ஜனாதிபதியிடம் தங்கப் பதக்கம் பெறும்’ மேக்ஸி
சைஸ் புகைப்படம்...;
கலை நயத்துடன்
அடுக்கப் பட்டிருந்த அனைத்தையும் பார்த்தவுடன் முறுவலித்தாள் ஜனனி.
“இதெல்லாம்
எதுக்கு இங்கே டிஸ்பிளே பண்ணணும்...?” கேட்டாள்.
“ப்ரோட்டா கால்
நிமித்தம், உங்களை இங்கே
சந்திக்க உயர் அதிகாரிகளும், சீனியர் விஞ்ஞானிகளும் வருவாங்க. அவங்க கவன ஈர்ப்புக்காகத்தான் மேடம்...”
என்றார் மார்த்தாண்டம்.
அடடே!
எப்படியெல்லாம் ஒருவரைக் கொண்டாடவேண்டும் என்று வகை வகையாக வித விதமாக யோசித்து
யோசித்து, இப்படியெல்லாம்
நேர்த்தியாய்ப் காட்சிப்படுத்தி வைத்த மார்த்தாண்டத்தைக் கண்டு நெஞ்சம்
நெகிழ்ந்தாள் ஜனனி.
கையில் இருந்த
அழைப்பிதழை மீண்டும் ஒரு முறை பார்த்தாள்.
தன் சொந்த ஊரான
சிறுகுடி கிராமத்திலே தான் துவக்கக் கல்வி கற்ற பள்ளி வளாகத்தில், தனக்கு எடுக்கும் விழா அழைப்பிதழின் முகப்பில், ஜனாதிபதி கைகளால் தான் விருது பெறும்
புகைப்படத்தைப் பார்த்தபோது, ஜனனி உள்ளத்தால் தலைநகரத்திற்குப் பயணித்துவிட்டாள்.
***
அத்தியாயம் 3
புது டெல்லி;
ஜனாதிபதி மாளிகை;
இந்த மாளிகையைக்
கண்களால் கண்டு களிப்பதும், , அதைப் பின்னணியாக வைத்து பற்பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொள்வதும், செல்ஃபி எடுத்துக் கொள்வதும், சுற்றுலாப் பயணிகளின் பொழுது போக்குகள்.
“இந்த
இடத்துலதான் குடியரசு தின அணிவகுப்பு நடக்கும்;
இதுதான் ராஜ பாதை, அதோ அந்த இடத்துலதான் பிரதம மந்திரி கொடி
ஏத்திட்டு முப்படைகளோட அணி வகுப்பை ஏத்துக்குவார்;”
இதுதான் இந்தியா
கேட்...”
இப்படியெல்லாம்
டூரிஸ்ட் கைடு சொல்லும் விளக்கங்களையெல்லாம் கேட்டு வியப்பதும், இன்பச் சுற்றுலா செல்பவர்களின் வழக்கம்.
ஆனால், ஒரு சாதனையாளராக ஜனாதிபதி மாளிகைக்கு சிறப்பு
விருந்தினராக அழைக்கப்பட்டு, விருந்தில் கலந்து கொள்வது என்பது ஒரு பேரனுபவம்.
ஜனனிக்கு
வாய்த்தது அந்தப் பேரனுபவம்.
***
‘தமிழக வேளாண்
விஞ்ஞானி வாழ்க!!’
‘வாழ்த்துக்கள் விஞ்ஞானி ஜனனி!’
‘உலகத்துக்கேப் படியளந்த தமிழ் ஜனனி வாழ்க வளர்க…’
‘தமிழகத்தின் அன்னலெட்சுமி ஜனனி...’
இப்படியெல்லாம்
பதாகைகளுடனும்,
போட்டோ
ஷாப்செய்து உருவாக்கப்பட்ட, நெற்பயிரின் பின்னணில் சிரித்துக் கொண்டு நிற்கும் ஜனனி;
உலக வரைபடத்தில்
ஊடுறுவியது போன்ற ஜனனி போன்ற போஸ்டர்களையும் தாங்கிய படி, வழி மேல் விழி வைத்து டெல்வி வாழ் தமிழர்கள்
கூடி நின்றார்கள்.
மார்த்தாண்டம்
கார் நிறுத்தினார்.
முன்னால்
பாதுகாப்புக்காக சென்ற காவலரின் ஜீப் சடாரென்று நின்றது.
“இங்கே
நிறுத்தாதீங்க சார்…” என்று இந்தியில் கத்திக் கொண்டே ஓட்டமும் நடையுமாக வந்தார்
எஸ்பி.
டோண்ட் ஒர்ரி சார்
இவங்க டெல்லி வாழ் தமிழர்கள். இவங்க நம்ம விஞ்ஞானியை ஹானர் பண்ண வந்திருக்காங்க...
அவங்க கைல இருக்கற பதாகைகளையும், போஸ்டர்களையும் பாருங்க...” என்றார் மார்த்தாண்டம் நுனி நாக்கு ஆங்கிலத்தில்
“சார்
பூங்கொத்தோட வந்துதான் ஒரு பிரதமரை காலி பண்ணினாங்க. எங்க வேணா எது வேணா
நடக்கலாம். விஞ்ஞானிய காரை விட்டு இறக்காதீங்க...”
எஸ் பியும்
இப்போது ஆங்கிலத்துக்கு வந்துவிட்டார்.
“எங்க ஊர் பொண்ணு
உலக அளவுல சாதிச்சிருக்கு. ஏன் உலகத்துக்கே சோறு போட்ட தமிழ் பொண்ணு சார். அவங்களை
ஹானர் பண்ணினா உங்களுக்கு பொத்துக் கிட்டு வருதோ?”
ஒரு நடு வயது
பெண் எஸ்பியிடம் விவாதித்தாள். துரதிருஷ்ட வசமாக, அவள் விவாதம் மொழி சார்ந்தும் இனம் சார்ந்தும்
அமைந்து விட்டது.
அந்த விவாதத்தையே, தனக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டார்
எஸ் பி. “இதனாலதான் டிபார்ட்மெட்காரங்க ஓட்டற வாகனத்துல விஐபிய ஏத்தணும்னு
சொன்னேன். மெத்தப் படிச்ச கம்யூனிட்டிங்கற காரணத்துனால, நீங்க ட்ரைவ் பண்ற வண்டீல ஏற அனுமதிச்சேன்.
இப்படிச் சிக்கல் பண்ணிட்டீங்களே...?” என்று பதறினார் எஸ் பி
“என்ன செய்வது
என்று புரியாமல் விழித்தார் மார்த்தாண்டம்.
“எஸ் பி சார்
எதாவது ஆல்டர் நேட் ஏற்பாடு பண்ண முடியுமா பாருங்க... ப்ளீஸ். உள்ளே
உட்கார்ந்திருக்கற விஞ்ஞானியும் அதையேத்தான் கேக்கறாங்க.” என்றார்.
ஒகே... வெயிட்
பண்ணுங்க, என்று
பந்தோபஸ்துக்கு வந்த காவலர்களை அழைத்து ஏதோ கட்டளைகளைப் பிறப்பித்தார்.
நேரம் ஆக ஆக
கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது.
“சார். போலீஸ்
டிபார்ட்மெண்டுக்கே இதுபோல விஐபிக்களை சமாளிச்சி திருப்பி அனுப்பறதுதான் பெரிய
சவால் சார். இப்ப பாருங்க ஏகப்பட்ட கூட்டம் கூடிருச்சு. மீடியா ஆட்கள்
ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சிட்டாங்க பாருங்க...”
“சார் நான் பிடிஐ. விஞ்ஞானியை பேட்டி எடுக்கலாமா?”
ஒரு இளம் பெண்
கழுத்தில் தொங்கிய ஐடி கார்டு மற்றும் காமிராவுடனும் எஸ் பி முன் வந்து நின்றாள்.
“சாரி மேடம்.
சட்டம் ஒழுங்கு, பந்தோபஸ்து
காரணமா இப்போ விஞ்ஞானியைச் சந்திக்க அனுமதிக்க மாட்டோம். ராஜ் பாத் எண்ட்ல வழக்கமா
ப்ரஸ் மீட் நடத்தற இடத்துல வெயிட் பண்ணுங்க. அங்கே பேட்டி எடுத்துக்கலாம்…”
என்றார் காவலர்.
“தமிழ் விஞ்ஞானி
ஜன…னீ...!” என்று கூட்டத்தில் ஒருவர் கத்த, வாழ்க என்று கோரஸாய் குரல் எகிறத் தொடங்கியது.
‘வேறு ஏதாவது
போராட்டமாகவோ, மரியல்
நிகழ்வாகவோ இருந்தால், தடியடி, கண்ணீர் புகை
குண்டுகள் என கூட்டத்தைக் கலைக்கலாம். விஞ்ஞானியைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகக்
கூடிய கூட்டம் என்றுதான் சொல்கிறார்கள். எங்கு வேண்டுமானாலும் தீவிரவாதிகள்
இருக்கலாம். ஒரு மொழியைத் தீவிரமாக நேசிக்கும் ஒருவர், மற்ற மொழியை தவறாக விமர்சித்து விட்டால்
போதும். நாடே பற்றி எரியும். இதையெல்லாம் உணராமல் அந்த விஞ்ஞானி காரை
நிறுத்திவிட்டார். இடை எப்படிச் சமாளிப்பது’ என்று யோசித்தார் எஸ்பி.
அந்த நேரத்தில்
தான் ஆம்புலன்ஸ் போன்ற வடிவத்தில் பிரச்சார வண்டி வந்து காரில் அருகே நின்றது.
பெண் காவலர்கள்
நான்கு பேர் சென்று காரிலிருந்து ஜனனியை இறக்கி, பிரச்சார வண்டியில் ஏற்றினார்கள். வண்டியின்
கூரையிலிருந்த ஸ்லாட் வழியாக பாராட்ட வந்த மக்களைப் பார்த்து கும்பிடச்
சொன்னார்கள்.
பலவிதமான
கோஷங்களை எழுப்பிய படியும், விசில் அடித்த படியும் “உலகத்துக்கே சோறு போட்ட தமிழச்சி” என்று கூவியபடியும்
ஜனனியின் கண்டுபிடிப்பைக் கொண்டாடினார்கள்.
“ஓகே
ஸ்டார்ட்...” என்று எஸ் பி உத்தரவிட பிரச்சார வாகனத்தில் நின்றபடியே ஜனாதிபதி
மாளிகைக்கு வந்து சேர்ந்தாள் ஜனனி.
உலகளாவிய அறிவியல் அறிஞர்களால் நிரம்பி வழிந்த
ஜனாதிபதி மாளிகையில் தான் ஒரு முக்கியமான, போற்றுவதற்கு உரிய விஞ்ஞானியாக இடம் பெற்ற அந்த
நாள் ஜனனியின் வாழ்வில் ஒரு பொன்னாள்.
***
‘ஜெய் ஜவான் ஜெய்
கிஸான்’.
முதலில் உயிரைப்
பாதுகாக்கும் சிப்பாயைக் கூறியபின், அடுத்து மனிதனின் அத்தியாவசியத் தேவையான உணவுப்
பொருள்களை உற்பத்தி செய்யும் உழவனைப் போற்றுகிறது மேற்கண்ட ஸ்லோகன்.
சுழன்றும் ஏர் பின்னது
உலகம்;
உழுதுண்டு
வாழ்வாரே வாழ்வார் என்றெல்லாம் சொல்கிறதே வள்ளுவம்.
உலகம்
முழுவதற்கும், பொருந்தும்
வகையில், மகத்தான
கண்டுபிடிப்பாக இருப்பதால், உலகளாவிய அறிவியல் கழகம் ஜனனியை கௌரவிக்க உலகளாவிய விழாவாக நடத்த வேண்டும்
என்று அழுத்தம் கொடுத்தது.
பல்வேறு
நாடுகளிலிருந்தும் விஞ்ஞானிகளின் பிரதிநிதிகள் வந்து, சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விஞ்ஞானிகள் பலர்
பார்வையாளர்களாக அமர்ந்திருந்த சூழலில், ஜனாதிபதியின் கரங்களால் பாராட்டுப் பத்திரமும்
பதக்கமும் பெற்ற தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் எதிர் மேஜையில்
மார்த்தாண்டத்தால் காட்சிப்படுத்தப்பட்ட அந்த ‘ஸ்நாப் ஷாட்’.
***
பாராட்டு விழாக்
குழுவினர் ஜனனியை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் சென்ற தருணம்;
ஜனாதிபதியை
நேருக்கு நேர் பார்த்து கை கூப்பிய தருணம்;
இருக்கையை முதற்
குடிமகனே தன் வலது கையால் சுட்டிக் காட்டி, சைகையால் உட்காரச் சொன்ன தருணம்;
என அனைத்து இனிய
தருணங்களும் சீரியல் எபிசோட் போல் தொடர்ந்து மனத்திரையில் காட்சியானது.
மாளிகையின் உள் அரங்கத்தின் ஒரு பகுதியில்
அனைத்து ஜனாதிபதிகளின் உருவப் படங்களும் நேர்த்தியாக பொருத்தப்பட்டிருக்கும், ‘பெரிய விருந்து மண்டபத்தில்’ உலக விஞ்ஞானிகள்
பலரும் கலந்து கொண்டு, இந்திய ஜனாதிபதியோடு அமர்ந்து, தும்பையாய் வெளுத்த மேசை விரிப்பின் மீது, நேநீர் விருந்தை ருசித்த தருணம்..., மனத்திரையில் பிரகாசித்து ஜனனிக்குக்
கிளர்ச்சியூட்டியது.
விருந்தில்
கலந்து கொண்ட தன் தாயின் மகிழ்ச்சியையும், மந்தஹாசத்தையும் நினைத்து நினைத்து, இப்போதும் ஜனனியின் மனசு மந்தஹாசித்தது...?
பாட்டி, தாத்தாவையும் ஜனாதிபதி மாளிகை விருந்துக்கு
அழைக்கத்தான் செய்தாள் ஜனனி. விழாக் குழு அனுமதியும் தந்தது.
“நம்ம
கிராமத்துலயே நீ படிச்ச துவக்கப் பள்ளியிலேயே உனக்கு விழா நடத்தப் போறாங்க அங்கே
வந்து கலந்துக்கறோம்.” என்று பெருந்தன்மையாகச் சொல்லி விட்டார்கள் அவர்கள். அம்மா
மட்டும் விமானத்தில் வந்து இறங்கினாள். மார்த்தாண்டம்தான் ஏர்போர்ட் சென்று
அம்மாவை அழைத்து வந்தார்.
பரிசளிப்பு விழா
முடிந்த கையோடு,
தன்னார்வ வழிகாட்டிகள்
வழிநடத்த, ‘மார்பிள் ஹாலில்’
தொடங்கி. பல்வேறு மகாராஜாக்கள், மகாராணிகள், வைஸ்ராய்கள், கவர்னர் ஜெனரல்கள் போற்ற முக்கியஸ்தர்களின்
உருவப்படங்கள், சிற்பங்களெல்லாம்
காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு களித்தார்கள்.
தர்பார்
மண்டபத்தில் சிம்மாசன அறையைப் பார்த்தபின், பிரதான கதவைத் திறந்து காட்டினார்கள்.
அங்கிருந்து ராஜ
பாதை, ஜெய்ப்பூர் தூண், இந்தியா கேட் ஆகியவற்றை ஒரு நேர் கோட்டில்
பார்த்து ரசித்த அனுபவம், இப்போது நினைத்தாலும் ஜனனிக்கு மனதை நிறைத்தது.
கல்லூரியில் யு
ஜி படித்தபோது, தேசிய மாணவர்
படையில் பயிற்சி பெற்றவர் மார்த்தாண்டம். ஆர் டி சி எனக் குறிப்பிடக்கூடிய
குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொண்டவர்.
மொகலாயப் பூங்கா, அங்கிருந்த அலங்கார நீரூற்றுகள், விஸ்தாரமான புல்வெளிகள் அனைத்தையும்
காட்டிவிட்டு, மார்த்தாண்டம்
விளக்கினார். “இந்த ஏரியாவுலதான் ஒவ்வோர் ஆண்டும் குடியரசு மற்றும் சுதந்திர தின
அணி வகுப்பு நடக்கும். இதே இடத்துல ஒரு ரிபபப்ளிக் டேல நானே மார்ச் பாஸ்ட்
பண்ணியிருக்கேன்.” என்று சொன்னதை இப்போது நினைத்துப் பார்த்தாள் ஜனனி.
*மார்த்தாண்டத்தின்
பன்முகத் திறமைகளை எல்லாம் ஓரமாய் ஒதுக்கி வைத்துவிட்டு, சுயநலம் சிறிதும் இல்லாமல், முழுக்க முழுக்க, தனக்காகவே வாழும் தியாக சீலத்துக்கும்;
தன் மேல் அதீமாய்
வைத்திருக்கும் நம்பிக்கைக்கும், பாசத்திற்கும் நான் என்னதான் பிரதி செய்யப் போகிறேன்...?’
உணர்ச்சி
வசப்பட்டாள் ஜனனி
மார்த்தாண்டம்
பயணத் திட்டத்தை கவனமாய் பார்த்துக் கொண்டிருந்த தருணத்தில், அவரை பாதாதி கேசம் பாசத்தோடும் நேசத்தோடும்
நோக்கினாள்.
அம்மாவிற்கு
அடுத்த நிலையில், தனக்காகவே
வாழ்ந்து கொண்டிருக்கும் மார்த்தாண்டத்தைப் பார்த்துக் கேட்டாள்...
“உங்க சிங்கிள்
பேரண்ட் சிறுகுடி விழாவுக்கு வருவாங்கதானே?”
“ஷ்யூர்.”
“யாரு அழைச்சி
வருவாங்க?”
“உங்களை பயணியர் மாளிகைல ட்ராப் பண்ணிட்டு, நான் போயி அழைச்சிட்டு வரதா ப்ளான். அவரும்
வரணும்னு துடிச்சிக்கிட்டுதான் இருக்காரு மேடம்.”
“என்னை விட கிட்டத்தட்ட வயசுல பெரியவர் நீங்க. வா ஜனனி போ ஜனனின்னு ஒருமைலயே
அழைக்கலாம்னு எத்தனை முறை சொன்னாலும் கேட்கவே மாட்டீங்களா மார்த்தாண்டம் சார்.”
நீங்க மட்டும்
சார்னு சொல்லலாம் நான் மட்டும் மேடம்’னு சொல்லக் கூடாதா...?
இருவருக்கும்
இடையே இது போல பல முறை உரையாடல் நிகழ்ந்திருக்கிறன.
உரிமை எடுத்துக்
கொள்ளுதல் என்பது தேவையற்ற ஒன்று.
உரிமையோடு
பேசுதல் ஆரம்பத்தில் கிளர்ச்சியை தோற்றுவித்தாலும், நாளடைவில், நட்பின் அல்லது உறவின், வளர்ச்சியை முடக்கிவிடும் என்பதுதான் உண்மை.
மனிதர்களின்
நிலைப்பாடு எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில சந்தர்ப்பங்களில் உரிமையோடு
பேசுவதாக எண்ணிப் பேசுகிற பேச்சில் சொற்குற்றம் வந்துவிட வாய்ப்புகள் அதிகம்.
சொற்குற்றத்தால், பலப் பல முறிவுகளை சந்தித்த நட்புகளும்
உறவுகளும் நிறைய உண்டு மனித உறவுகளில்.
குறிப்பிட்ட
எல்லையைக் கடக்காமல், ஒருவரோடு ஒருவர் பழகும் உறவே என்றென்றும் சிரஞ்சீவியாக நிலைத்து நிற்கும்.
என்ற பேருண்மையை அறிந்து வைத்திருந்ததால் மார்த்தாண்டம், ஜனனி இருவருமே எந்தச் சூழ்நிலையிலும், ஒருவருக்கொருவர் உரிமை எடுத்துக் கொண்டதே
இல்லை.
சிந்தனை வயப்பட்ட
ஜனனியின் உள்ளத்தில் கெலைடாஸ்கோப் போல மாறி மாறி எல்லையற்ற காட்சிப் படிமங்கள்
தோன்றி விரிந்தன.
***
அத்தியாயம் 4
கீழ்ப்பாக்கம்
மனநல மருத்துவமனைக்கு வெளிப்புறம்;
குப்பைகளும்
கழிவுகளும் ஏகமாய் இறைந்து கிடந்த கரடு முரடான பராமரிப்பற்ற சாலை.
துர்நாற்றம் நிரந்தரமாய்
தங்கிவிட்ட, டீக்கடை முகப்பு;
பாய்லரில்
இருந்து வரும் ஆவியும், தொடர்ந்து டீயை ஆற்றும்போதும்;
ஆற்றிய பின்
வடிகட்டியை வளையத்தோடு சுற்றி, டவராவினால் அழுத்தி சக்கையில் தேங்கியிருக்கும் தேநீரைப் பிழியும்போதும்;
கொதிநீரை கண்ணாடி
டம்ளருக்குள்ளும், வட்டா செட்டுக்குள்ளும் ஊற்றி, கழுவிக் கவிழ்க்கும்போதும், குபீர் என ஆவி புறப்பட்டு பரவும் அல்லவா. அந்த
ஆவி, கடையினுள்
புகுந்த தெருக்குப்பை நாற்றத்தை வெளியேற்றிவிடும்.
துர்நாற்றம்
குறைவாக இருக்கும் என்பதால், கடைக்குள்ளே கூட்டம் அதிகமாய் இருக்கும்.
கடைக்கு வெளியே
பிசுக்குப் பிடித்துப் போய்க் கிடக்கும் இரு பக்கக் கால்களையும் விரித்துக் கொண்டு
நிற்கும் ஒரு விசி பலகை பெஞ்ச்சு.
தன்னை அந்த விசி
பலகையில் அமர வைத்த அம்மா மங்கலாக நினைவுக்கு வந்தாள்;
ஒன்றரை ஒண்ணே
முக்கால் வயது சிறுமியாக இருக்கும்போது நடைபெற்ற நிகழ்வுகள்தான் என்றாலும், அந்தச் சம்பவமும், அதற்குக் காரணமான முந்தைய நடப்புகளும், மனதில் ஆழப் பதிந்துதான் இருந்தன.
பிசுக்கு பிடித்த
பெஞ்சில் அமர்ந்த தாய் மீதும், சேய் மீதும், சுற்றிச் சுற்றி
வந்து எங்கு வேண்டுமானாலும் இஷ்டத்துக்கு மொய்த்தன ஈக்கள்.
குழந்தையான தன்
மீது மொய்கும் ஈக்களை அம்மா கையை வீசி விரட்டுவதும், ஓட்டும்போது எழும்பி எழும்பி எட்டப் போவது போல
பாவ்லா காட்டிவிட்டு, போன வேகத்தில் மீண்டும் வந்து அமர்ந்துமாய் போக்குக் காட்டின ஈக்கள்.
சுற்று
வட்டாரத்தில் கிடந்த அத்தனைக் கழிவுகளிலும் அமர்ந்து மொய்த்த ஈக்கள் குழந்தை மேல்
அமர்ந்து விடக்கூடாது என்பதற்காக, விடாமல் தொடர்ந்து ஒரு கையால் ஈ ஓட்டிக் கொண்டேயிருந்த அம்மா;
நடு நடுவே, டம்ளரில் இருந்து, டவராவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, வாயால் ஊதி ஊதி, ஆற்றி ஆற்றி, வாய் பொறுக்கும் சூட்டில் ஜனனியின் வாயில்
புகட்ட,
தாயின் கையால்
பொது இடத்தில்அவள் பருகிய முதல் தேநீர் நினைவில் நிழற்பட நொடிப்பெடுப்பாய்த்
(ஸ்நாப் ஷாட்) தோன்றி, நெகிழ்வித்தது ஜனனியை.
அப்படித் தன்
பசியைத் தீர்த்த அம்மாவை, ஜனாதிபதி மாளிகையில் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வைத்த தருணத்தை நினைத்து
நினைத்து நெகிழ்ந்தாள் ஜனனி.
ஆராய்ச்சி
மாணவியான தன்னுடைய ஆராய்ச்சி முடிவுளை, கைடு (வழிகாட்டி) உட்பட , திருட எத்தனித்த பலரைத் தோலுரித்து, தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய மார்த்தாண்டத்திற்கும்
இந்தநேரத்தில்,மனம் குவித்து
நன்றி தெரிவித்தாள் ஜனனி.
***
“இந்தப்
பயித்தியத்தையெல்லாம் கட்டிக்கிட்டு என்னால மாரடிக்க முடியாது... நீயே
கட்டிக்கிட்டு அழு...”
‘மன நல
மருத்துவர், பயிற்சி
மருத்துவர்கள், மருத்துவரிடம்
ஆலோசனை பெற தங்கள் குழந்தைகளுடன் வந்த மற்ற மற்றப் பார்வையாளர்கள், எல்லோரும் சுற்றிலும் இருக்கிறார்கள்...!’
என்பதையெல்லாம் சிறிதும், கருத்தில் கொள்ளாமல், அவர்களின் எதிரிலேயே அநாகரீகமாய்க்
கூச்சலிட்ட கசப்பான நிகழ்வு தொடங்கி...
‘மனநலக் காப்பக
வளாகத்தில், ஒன்றரை வயதுக்
குழந்தையுடன் அபலையாய் தவிக்கவிட்டுச் சென்ற கணவனின் இழி செயலை எத்தனை ஆயிரம் முறை
தன்னிடம் கூறியிருப்பாள் அம்மா.’
இதைச்
சொல்லும்போது அம்மாவின் ரத்தக் கொதிப்புதான் எத்தனை ஏறும்...?
“எந்தப் பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது ஜனனி...!”
ஓரளவு விவரம் தெரிந்தபின்
தன்னிடம் பேசிய அம்மாவின் பேச்சில்தான் எவ்வளவு ஆதங்கம் இருக்கும்...!’
“அப்பா என்கிற அந்தக் கிராதகப் பேர்வழிக்குப் பிறகு, எல்லா ஆண்களின் மீதும் ஜனனிக்கு வெறுப்புதான்
இருந்தது.
ஒரு கால கட்டம்
வரை, ஆண்களைக் கண்டாலே
அடியோடு வெறுத்தவள்தான் ஜனனி.
ஒரு கட்டத்தில், தியாகத்துடன் கூடிய, பாசத்துடன் கூடிய, நேர்மையான நட்பு இயல்பாய் மலர, எந்த இடத்திலும் உரிமை எடுத்துக் கொள்ளாமல்
பழகிய, மார்த்தாண்டத்தின்
கன்னியமான பழக்க வழக்கங்கள் ஜனனிக்குள் நம்பிக்கையை விதைத்தன.
‘இதோ இன்றளவும்
அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமாகத்தான் இருக்கிறார் அவர்.’
நினைத்த போதே
ஜனனிக்குள் இனம் புரியாத பரவசம் நிரம்பியது.
***
கீழ்ப்பாக்கம்
மனநல மருத்துவமனைக்கு வெளிப்புறம் இருந்த தேநீரகத்தின் முன் கிடத்தப்பட்ட விசி
பலகையில் உட்கார்ந்து, ஈக்களை ஓட்டியபடியே குழந்தை ஜனனிக்கு தேநீர் பருகக் கொடுத்துப் பசியாற்றிய
பின் அங்கிருந்து புறப்பட ஆயத்தமானாள் வஸந்தா.
மனதில் உறுதி
இருந்ததால், எதிர் காலம்
பற்றியோ, ‘எங்கே செல்வது?’ என்பதைப் பற்றியோ குழப்பமெல்லாம் வஸந்தாவுக்கு
இல்லை.
‘பிறந்த
வீட்டுடோடு சென்றுவிடுவது. அங்யேயே செட்டில் ஆகிவிடுவது என்று முடிவு செய்துவிட்ட
வஸந்தா, கணவன்
வீட்டிலிருந்து ஏதேனும் எடுத்துக் கொள்ள வேண்டுமா...?’ என்பதை யோசித்தாள்.
‘குழந்தை ஜனனி
விஷயத்தில் இன்னும் ஓராண்டுக்கு முன்பே
இப்படி ஒரு அதிரடியான முடிவை எடுக்காமல் இருந்து விட்டோமே...!’, என்று தன்னிரக்கம் வந்தாலும்.
"லேட் ஈஸ் பெட்டர் தேன் நெவர்' என்ற ஞானமும் வந்தது அவளுக்கு.
நடந்தவை எல்லாமே
ஏதோ நல்லவற்றிற்குத்தான் என்ற முடிவுக்கு வந்தாள் வஸந்தா. எது கற்றுக்
கொடுக்கப்பட்டதோ அது தானே சுயமாய் எழும்.
பிறந்த வீட்டில்
அடங்கிப் போகத்தான் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது. தடாலடியாக முடிவு எடுக்கும்
துணிச்சல் இல்லாததால் இதுவரை எப்படி எப்படியோ போய் விட்டது.
கடந்த காலத்
தவறுகளை நினைத்து வருந்துவதால் எதுவும் ஆகப் போவது இல்லை. ஜனனியின் வளமான
வருங்காலத்திற்காக, நிகழ்காலத்தை சிறப்பாகத் திட்டமிட வேண்டும் என்ற மன உறுதியோடு புறப்பட
ஆயத்தமானாள்.
***
"இதுக்கு
மேலயும் மறுபடியும் நீ போய் அந்தக் கேடு கெட்டவனோடயா குடித்தனம் பண்ண போற?" – வஸந்தாவின் முகத்தருகே குனிந்து, பளிச் என்று கேள்வி எழுப்பினாள் ஒரு மூதாட்டி.
மன நல
மருத்துவரின் முன்னே, அநாகரிகமான முறையில் கத்திய ராஜேந்திரனின் நடவடிக்கைகளை பார்த்து, அந்தக் கத்தலை காதில் வாங்கி முகம் சுழித்த மூதாட்டிதான் அவள்.
பெண்ணீயத்தின்
போர்வாளாய் அந்த மூதாட்டியை அடையாளம் கண்டாள் வஸந்தா.
அந்த
மூதாட்டியின் கேள்வி, வஸந்தாவுடைய வைராக்கியத்தின் விழுக்காட்டை நூறுக்கு மேல் உயர்த்தியது.
நிராதரவான
நிலையில், நிரந்தரமாக, பெற்றோரின் வீட்டுக்கு செல்வதற்கு முன் நாம் செய்ய வேண்டியது என்னென்ன?' என்பதை இப்போது தெளிவாக யோசித்துப்
பட்டியலிட்டாள் வஸந்தா.
படித்தவள்
அல்லவா.
தெளிவாக அனைத்து
கோணங்களையும், அலசி ஆராய்ந்தாள்.
பல்வேறு எதிர்
விளைவுகள் பற்றிய முழுப் புரிதலும் அவளிடம் இருந்ததால், எதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்ற விடையும்
அவளிடம் இருந்தது.
கணவன்
வீட்டிற்குச் செல்வதற்கான காரணம் ஏதாவது உள்ளதா என்பதை ஒவ்வொரு விஷயமாக எடுத்துக்
கொண்டு கூர்ந்தாய்வு செய்தாள்?'.
***
வஸந்தாவுக்கு
திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
மாப்பிள்ளை
வீட்டார் சிறுகுடி கிராமத்தில் வஸந்தாவின் வீட்டில் குழுமியிருக்கிறார்கள்.
ஊர்க்காரர்கள்
பலர் வந்திருக்கிறார்கள்.
லக்ன பத்திரிகை
வாசிக்கப் படுகிறது. நிச்சயம் முடிந்து விட்டது.
திருமணத்துக்கும்
நாள் குறித்து விட்டார்கள்..
அப்போது, வஸந்தாவின் மாமியாராக வரப்போகிறவள் எழுகிறார்.
“உங்க பொண்ணு
எங்க வீட்டுக்கு மருமகளா வந்த பிறகு, எந்த வேலைக்கும் செல்லத் தேவை இல்லை ... "
கண்டிப்பாகச் சொல்கிறாள்.
மற்றவர்களும், மாப்பிள்ளை ராஜேந்திரன் உட்பட “அவங்க
சொல்றதுதான் சரி...” என்று ஆமோதித்தார்கள்
எந்த
நோக்கத்திற்காக அப்படிச் சொன்னார்களோ தெரியவில்லை.
அவர்கள் அப்படிச்
சொல்லி விட்டதாலும், அதை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டதால், தானும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்ததாலும், தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள்
எதையுமே புகுந்த வீட்டிற்குக் கொண்டு செல்லவில்லை வஸந்தா.
அதற்காக அவள்
என்றுமே வருத்தப்பட்டதுமில்லை.
அனைத்துச் சான்றிதழ்களும் பிறந்தகத்தில்
அப்பாவின் ட்ரங்க் பெட்டியிலேயே இருப்பது, தற்போதைய சூழ்நிலையில் அனுகூலமாகத்தான்
இருக்கிறது;
எதிர் காலத்தில்
எதிலாவது காலூன்ற, படித்த சான்றிதழ்களை எடுத்துக் கொள்ள வேண்டுமே என்பதற்காக அங்கே செல்லவேண்டிய கட்டாயம் இல்லை;
அடுத்து...
நகை நட்டுக்கள்
பற்றி யோசித்தாள்.
திருமணத்தின்
போது அம்மா வீட்டில் போட்ட மூன்று சவரன் சங்கிலியும் தாலிக்கொடியும் கழுத்தில்
தான் இருக்கிறது. மாமியார் வீட்டில் போட்ட நகைகள் எல்லாம், அவர் பணியாற்றும் வங்கியிலேயே அவர் பெயரில்
உள்ள வங்கி லாக்கரில் இருக்கிறது.
எனவே அதுவும்
ரூல்ட் அவுட்;
மருத்துவ மனையின்
விதிகளின்படி மனநோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயரைப் பதிவு செய்வதற்கு, அவசியம் எடுத்து வரவேண்டிய ஆவணங்கள் பட்டியலில், ஆதார் குறிப்பிடப்பட்டிருந்ததால், தன்னுடையதும், குழந்தையுடையதுமான ஆதார் அட்டையும் கூட
கையில்தான் இருக்கிறது. பெரிய ரிலீஃப்;
அடுத்து
உடுப்புகள் பற்றி யோசித்தாள்.
புடவைகள் எல்லாம்
பெரும்பாலும் மாமியார் வீட்டில் கணவன் பணத்தில் வாங்கி கொடுத்ததுதான்.
திருமணத்தின்
போது அம்மா வாங்கிக் கொடுத்த ஒரு சில பழைய புடவைகளை எடுத்துக்கொள்ள அங்கே சென்று
திரும்ப வேண்டிய அவசியம் இல்லை.
குழந்தையின்
பொக்கிஷங்கள் என்று அங்கு ஏதுமில்லை...
அனைத்துக்
கோணங்களிலும் ஆராய்ந்தபின் தெளிவாக முடிவெடுத்தாள் வஸந்தா.
ஜனனியை தூக்கித்
தோளில் போட்டுக் கொண்டு ரயில் நிலையம் நோக்கி நடந்தாள்.
“அப்பா அம்மாவிடம் நிரந்தரமா இங்கேதான் இருக்கப்போறேன்...” என்று ஜனனியோடு போய்
நின்றால்...
அவர்கள்
எப்படியெல்லாம் ரியாக்ட் செய்வார்கள் என்பதையெல்லாம் நினைத்துப் பார்த்து, எதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதையும்
மனத்தளவில் திட்டமிட்டுக் கொண்டாள் வஸந்தா.
***
அத்தியாயம் 5
“வஸந்தா...
என்னடீ சொல்றே?” அம்மா பெரிதாகக்
கத்தியே விட்டாள்.
“கத்தாதே...!”
என்று அடக்கவில்லை வஸந்தா.
‘எதிர் பாராத
ஷாக் வரும்போது, அதை எதிர் கொள்ள
இப்படிக் கத்துதல் ஒரு பாதுகாப்பு வழிமுறைதான்.
கத்தட்டும் என்று
விட்டாள்.
“இப்படி
வாழாவெட்டியா வந்து இங்க ஒக்காரத்தான் உனக்குக் கல்யாணம் செஞ்சி வெச்சிதா.
போதாததுக்கு கையில ஒரு பொண்குழந்தையுமாச்சு. உனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிப்
போச்சு... வீடுன்னா அப்படி இப்படித்தான் இருக்கும். அதுக்காக இப்படி அறுத்துக்
கட்டுவாங்களா... குளிச்சி முழுகி சாப்பிட்டு ரெடியாகு. அப்பா வயல்லேந்து வந்ததும்
உன்னை கொண்டு போய் புருஷன் கைல ஒப்படைக்கச் சொல்றேன்.”
அம்மா நீளமாகப்
கத்திப் புலம்பிவிட்டு ஒரு வழியாக முடிவும் எடுத்துவிட்டாள்.
‘பதிலுக்குக்
கத்துவதால் எந்தப் பயனும் இல்லை. நிலைமையை தெளிவாகப் புரிய வைக்க வேண்டும்.
ஜனனிக்கு இருக்கும் குறைபாட்டைப் பற்றியும் அந்தக் குறைபாட்டை, இங்கே கிராமத்தில் வயலும் விவசாயமும் இருக்கும்
இடத்தில்தான் தீர்க்க முடியும். என்பதையெல்லாம் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்.’
அதற்கான வழி
முறைகளையும் அணுகு முறையைம் தனக்குள்ளே வகுத்துக் கொண்டாள்.
“என்னாடி, கல்லுளி மங்கியாட்டம் கம்ம்முனு இருக்கே...?”
போரை மீண்டும்
தொடங்கினாள் அம்மா.
“அம்மா, பேத்திக்கு ஏதாவது வவுத்துக்குக் குடு, காலைலேந்து ஒரே ஒரு டீ மட்டும்தான் வாங்கிக்
கொடுத்தேன் அவளுக்கு.” இயல்பாகப் பேசினாள் வஸந்தா.
சோர்வாய்
கண்மூடிக் கிடந்த பேத்தியை அள்ளி எடுத்து தோளில் போட்டுக் கொண்டு, அடுப்பங்கரையை நோக்கிச் சென்றாள்.
பரும்பும் ரசமும்
நெய்யும் ஊற்றி மசியப் பிசைந்து குழந்தைக்கு ஊட்டினாள் பாட்டி.
“அம்மா, நீ பாப்பாவப் பாத்துக்க, நான் வயலுக்குப் போயி அப்பாவை பார்த்துப்
பேசிட்டு வரேன்...” என்று வஸந்தா சொல்ல,
“வயலுக்கா... நானும் வரேம்மா...” என்று மழலையில் மிழற்றினாள் ஜனனி.
“சரி சரி நீ
மம்மு சாப்டு. அழைச்சிக்கிட்டுப் போறேன்.” என்று ஜனனியிடம் சொல்லிவிட்டு, பின் கட்டுக்குச் சென்று குளித்துவிட்டு
வந்தாள்.
வஸந்தா குளித்து
விட்டு உள்ளே வந்தபோது ஜனனி உண்ட களைப்பில் தூங்கத் தொடங்கியிருந்தாள்.
***
பெண் என்பவள்
பூமித்தாய் போலத்தான். எத்தனை பாரத்தையும் பொறுத்துத் போகக்கூடியவள்தான்.
எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டல்லவா. எல்லை மீறி பாரம் ஏற்றும் போது பூகம்பமாய்
வெடித்து விடுவாள்.
அன்பைப் போலவே
பெண்ணின் வெறுப்பும் மிக ஆழமானது. தன்னை நேசிப்பவர்கள், உரிய காரணங்களுக்காக எட்டி உதைத்தாலும் ஏற்றுக்
கொள்வாள். ஆனால் அர்த்தமற்ற ஆணாதிக்கப் போக்கினால், அடிமனதில் கசந்து வெறுத்து விலக்கிவிட்டால், கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் எற்க
மாட்டாள்.
அடிமனதில்
கசந்துவிட்டது வஸந்தாவிற்கு.
‘உன் புருஷன்’
என்று அம்மா சொல்வது அறவே பிடிக்கவில்லை வஸந்தாவிற்கு.
இருந்தாலும், ‘நானும் என் மகள் இது போல வந்து நின்றால்
முதலில் இப்படித்தானே எதிர்வினையாற்றத் தோன்றும்.’ என்று தனக்குள் பார்த்துக்
கொண்டாள்.
அம்மாவிடம்
பொறுமையாக, விவரமாக
அனைத்தையும் சொன்னால் நிச்சயம் தன் முடிவை ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கை
இருந்தது வஸந்தாவிற்கு. நான் தவறிழைத்து விட்டேன் என்ற முன் முடிவோடு இருக்கும்
அம்மாவிடம், இப்போது எந்த
நியாயமும் எடுபடாது என்பதை தெளிவாக உணர்ந்தாள் வஸந்தா.
“அம்மா எனக்கும்
சாப்பிட ஏதாவது குடேன்.”
“நீ வரப்போறேனு தகவல் தந்திருந்தா தடபுடலா சமைச்சிருப்பேன். நாங்க ரெண்டு
பேருதானேனு ஏனோதானோனு சமைச்சிருக்கேன். வா சாப்புடு. என்று துவையல் வைத்து சாதம்
பரிமாறினாள்.
காலை முதல்
அலைந்த அலைச்சலால் சோர்வாகி விட்ட ஜனனி பாட்டியின் கையால் வயிறார உண்டபின்
அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
அம்மாவின் கையால்
பரிமாறப்பட்ட துவையல் சாதத்தை, சாப்பிடும்போது வஸந்தாவுக்குள் எந்த குற்ற உணர்வும் இல்லை.
“ஏண்டீ, தாலி கட்டின புருசனை உதறி எறிஞ்சிட்டு
வந்துட்டமேனு கொஞ்சமும் லஜ்ஜையே இல்லாம, ரசிச்சி ருசிச்சி சாப்பிடறயே, எப்பிட்ரீ உன்னால் முடியுது.” அம்மாவின் கண்
கலங்கியது.
சாப்பாடு
போட்டுவிட்டு கண்ணீர்விடுவது தவறு என்பதை உணர்ந்தாளோ என்னவோ, முந்தானைணால் கண்களை ஒற்றிக் கொண்டே, சமையலறைக்குள் புகுந்து விட்டாள் அம்மா.
சற்றைக்கெல்லாம்
தட்டில் சாதத்தோடு வந்தாள்.
“ரசம் சாதம்
சாப்ட்டுட்டு அப்பறம் மோர் போட்டுக்கோ...” என்றாள் அம்மா.
அம்மா, கஷ்டப்பட்டு, தான் இயல்பு நிலையில் இருப்பதாய்க் காட்டிக்
கொண்டதை அப்பட்டமாக உணர முடிந்தது வஸந்தாவால்.
***
“அம்மா வயல்
வரைக்கும் போயிட்டு வந்துர்றேன். குழந்தை தூங்கட்டும்.” என்றாள் வஸந்தா.
“இப்போ எதுக்கு
வயலுக்கு? அப்பாவே இன்னும்
அரை மணி ஒரு மணி நேரத்துல வந்துடுவாரு... அப்பா வர்ற வரைக்கும் ரெஸ்ட் எடு.
வந்ததும் அவருக்கு சீக்கிரமா வயித்தை ரொப்பி கிளப்பி விடறேன். காலா காலத்துல உன்
வூடு போய் சேருவியாம்...” என்று அம்மா, தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தாள்.
***
கணவன் நிகழ்
காலத்தில் அனுசரணையாக இருந்துவிட்டால், கடந்த காலத் தவறுகள் அனைத்தையும் மன்னித்து
ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதுதான் பெண்ணினத்தின் பெருந்தன்மை.
எத்தனையோ
இக்கட்டான, கரடுமுரடான
சூழ்நிலைகளையெல்லாம், இதுவும் கடந்து போகும் என கடந்து வந்தவள்தான் வஸந்தா.
திருமணமாகி, ஜனனி பிறந்த பின் இன்று வரை வேறு வழியின்றி, அமைதியாக, பொறுத்துக் கொண்டு இருந்த வஸந்தா ‘பொறுத்தது
போதும் பொங்கி எழு!’ என்பதாய், துணிந்து சுயமாக ஒரு முடிவெடுத்தாள்.
***
“கீழ்ப்பாக்கம்
அரசு மனநலக் காப்பகத்துக்கு, ஜனனிய இப்போ அழைச்சிக்கிட்டுப் போகப்போறேன்...” முதல் முறையாக கணவன்
ராஜேந்திரனிடம் உறுதியாக அறிவித்தாள்.
“அதெல்லாம்
தேவையில்லை... டாக்டரும் வேண்டாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்...” என்று
சொல்லி, வழக்கம் போல
ராஜேந்திரன். மனைவியின் பேச்சை அலட்சியப் படுத்தினான்.
“ஸாரி, இவ்ளோ நாள் உங்க பேச்சைக் கேட்டது போறும்.
டாக்டர் கிட்டே அழைச்சிக்கிட்டு போகணும் முடிவு பண்ணியாச்சு. நீங்க வர முடிஞ்சா
ஒரு அப்பாவா கூட வாங்க. இஷ்டமில்லேன்னா வரவேண்டாம்.”
முதல் முறையாக
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று அறுத்துக் கட்டிப் பேசினாள்.
“யாரைக் கேட்டு
முடிவெடுத்தே...?” சீறினான்.
“பத்து மாசம்
சுமந்து பெத்த என் மகளுக்கு வைத்தியம் பார்க்கப் போறதுக்கு யாரைக் கேக்கணும்...?”
“என்னை மீறிப் போயிருவியா நீ?” மிரட்டல் தொனியில் கேட்டான்.
“போவேன்...!’
குரலில் உறுதி இருந்தது
இதுநாள் வரை
அடங்கிப் பேசிய வஸந்தாவா இவள். இன்று இந்த அளவுக்கு எதிர்த்து வாயாடுறாளே? யார் கொடுத்த தைரியம் இது? இவளை இப்படியே விடக்கூடாது, முளையிலேயே கிள்ளி எறிஞ்சிடணும்’ என்ற எண்ணம்
வலுத்தது ராஜேந்திரனுக்கு.
“என்னடீ
சொல்றே...?” இடிபோல்
முழங்கிக் கத்தினான்.
“போவத்தான்
போவேன்... உங்களால முடிஞ்சதப் பார்த்துக்கிடுங்க’னு சொல்றேன்...”
அடிபட்ட
சிறுத்தையாய் சீறினான் ராஜேந்திரன்.
சீற்றத்தின்
பிரதிபலிப்பாய் வன்முறை வெடித்தது. ராஜேந்திரனின் கை ஓங்கியது.
தன்னை அடிக்க
ஓங்கிய கையை இறுக்கமாய்ப் பற்றினாள் வஸந்தா.
***
தொண்ணூறு சதவீத
ஆண்கள், பெண்ணை அடக்கி ஆள
நினைக்கிறவர்கள்தான்.
காரணம், முந்தைய தலைமுறையினரின் வளர்ப்பு முறை.
அவர்கள்
குழந்தைகளை வளர்க்கும் விதமே ஆணாதிக்க மனப்பான்மையில்தானே...!
“அவன் ஆம்பளை...
சிங்கம்...”
“ஜான்
பிள்ளையானாலும் ஆண் பிள்ளை...”
“பொம்பளைப் புள்ளை நீ கொஞ்சம் அடக்கிதான் வாசிக்கணும்.”
“இன்னொரு
வீட்டுக்குப் போறவ நீ. வாயாடாதே...”
என்ற ரீதியில், பெற்றோர்களாலும் பெரியோர்களாலும் எழுப்பப்படும்
பேதங்கள்தானே என்றென்றும் பெண்ணிணத்திற்குப் பெரிய சவாலாக இருந்து வருகிறது.
இது போன்ற
சவால்களை மிகச் சாதுர்யமாக எதிர் கொள்ளும் பெண் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும்
வெற்றி பெறுகிறாள்.
அதை அசட்டுத்
தனமாக அணுகும் பெண் அடையாளம் இழந்துவிடுகிறாள்.
‘கணவனே கண் கண்ட
தெய்வம்’;
‘கல்லானாலும் கணவன்...’;
இது போன்ற
சொல்லாடல்கள் எல்லாம் அணுகுமுறையின் மேன்மையால் கருத்தாழமிக்கவைதான்.
அதையே கண்மூடித்
தனமாகப் பின்பற்றும்போது அர்த்தமற்றதாகி விடுகிறது.
கணவன் மனைவிக்கு
இடையே பரஸ்பரம் ஏற்படும் புரிதல்;
ஒருவருக்கொருவர்
அனுசரணையாக இருத்தல்;
தனக்கென வாழாமல், மனைவிக்கென கணவனும், கணவனுக்கென மனைவியும் வாழ்ந்த காலத்தில், பெண்ணிணம் உணர்ச்சி வசப்பட்டு முழங்கிய
வாசகங்கள் அவை;
இன்றும், என்றும் அதுபோல இணையர்கள் பரவலாக இருந்து
கொண்டுதான் இருக்கிறார்கள். என்றென்றும் இருக்கவும் செய்வார்கள்.
ஆணாதிக்கம் போலக்
தோற்றமளிக்கும், சில வாசகங்களை
மேம்போக்காகப் பார்த்துவிட்டோ, நுனிப்புல் மேயும் விதமாகவோ, பெண்ணை அடக்க வேண்டும் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறார்கள்
பெரும்பான்மையான ஆண்கள்.
என்னதான்
படித்திருந்தாலும், பட்டங்கள் பெற்றிருந்தாலும், சராசரி ஆண்கள் ஆணாதிக்க மனப்பான்மையில் குடும்பத்தை அணுகும்போது, சிக்கல்களைத்தான் சந்திக்க நேர்கிறது.
***
வருடக் கணக்காய்
அடங்கி வாழ்ந்து வந்த வஸந்தாவின் மாற்றம் ராஜேந்திரனை யோசிக்க வைத்தது.
அவளின் தற்போதைய
போர் குணமிக்க சீற்றமான, அணுகுமுறையைக் கண்டு ராஜேந்திரன் முதன் முறையாக மிரண்டான்.
‘சாது மிரண்டு
எழுந்து விட்டது. காடு கொள்ளாது...’ என்பதை அவன் உள்ளுணர்வு அவனுக்கு
உணர்த்திவிட்டது.
‘அடங்க மறு’த்த
வஸந்தாவை எதிர் கொள்ள முடியாமல் திணறினான், ‘அத்து மீறு’வதற்குள் சுதாரித்தான்
“வந்துத்
தொலையறேன்... இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்...!” உறுமினான்.
வாழ்க்கையில்
வஸந்தா பெற்ற முதல் வெற்றி.
***
ஒரு பிரச்சனை நம்
முன் வரும்போது அதற்குத் தீர்வு காண இரண்டே உத்திகள் தான். ஃபைட் ஆர் ஃப்ளைட்...
எதிர்த்துப்
போராடுதல் அல்லது புறமுதுகிட்டு ஓடுதல்.
புறமுதுகிட்டு
ஓடி தப்பித்த காலம் வஸந்தாவின் வாழ்வில் மலையேறிவிட்டது. எது நடந்தாலும்
பார்த்துக் கொள்ளலாம் என்கிற துணிச்சல் வந்துவிட்டது அவளுக்கு.
எதிர்த்துப்போராடத்
துணிந்தாள்.
முதல்
போராட்டத்திலேயே வெற்றி வாகையும் சூடிவிட்டாள்.
“வந்துத் தொலையறேன்.”
என்று ராஜேந்திரன் இறங்கி வந்தபின், அதற்கு மேல் வாய் வளர்க்கவில்லை வஸந்தா.
‘இப்போது
வீட்டில் உட்கார்ந்து வாய்ச் சண்டை போடுவது அர்த்தமற்றது. குறிப்பிட்ட நேரத்தில்
மருத்துவ மனைக்குச் சென்று ஜனனிக்கு சிகிச்சை தொடங்க வேண்டும்’ என்கிற ஒற்றை
இலக்கோடு அடுத்தடுத்த பணிகளில் ஈடுபட்டாள்.
குழந்தைக்கு
மட்டும் பாலில் ஃபார்முலா பவுடர் போட்டு ஆற்றி, டவராவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, ஊதி ஊதிப் புகட்டினாள்.
வழக்கமாக, இப்படி வெளியில் செல்லத் திட்டமிட்டால், விடி கருக்கலில் எழுந்து சமையல்
முடித்துவிடுவாள்.
காலா காலத்தில் வீட்டிற்குத்
திரும்ப முடியாத பட்சத்தில், கட்டுச் சாதமாகக் கட்டி எடுத்துக்கொள்வாள்.
முடிந்த வரை
கடையில் சாப்பிடுவதைத் தவிர்ப்பவள் வஸந்தா.
இன்று எதுவும
சமைக்கவில்லை.
காலை டிபன் கூடச்
செய்யவில்லை.
புறப்படுவதில்
மட்டுமே குறியாக இருந்த வசந்தாவின் இந்த மாற்றம் முற்றிலும் புதியதாயிருந்தது
ராஜேந்திரனுக்கு.
இந்த இருக்கமான
சூழ்நிலையில் எது பேசினாலும் ஏடாகூடமாகிவிடும் என்பதை உணர்ந்த ராஜேந்திரன்
அமைதியாக, ஒரு பார்வையாளனாக
அனைத்தையும் பார்த்துக் கொண்டே இருந்தான்.
அத்தியாயம் 6
ஒயர் கூடையில், ஒரு டவரா செட், சத்துமாவு டப்பா, தண்ணீர் ப்ளாஸ்க் மற்றும் ஒரு டவல், எங்கேயாவது தரையில் உட்கார நேர்ந்தால், தரையில் விரித்து உட்கார இருக்கட்டுமே என
ஒருஷீட் செய்தித்தாள், மனநல மருத்துவர் ஏதாவது குறிப்பு சொன்னால் குறித்துக் கொள்ள ஒரு ஷீட் டிம்மி
பேப்பர், எழுதிக் கொள்ள
ஒரு பால் பாய்ண்ட் பேனா அனைத்தையும் பையில் போட்டுக் கொண்டாள்.
எதற்கும்
இருக்கட்டுமே என்று ஜனனியின் கவுன் மட்டும் ஒன்றுக்கு இரண்டாக எடுத்துக் கொண்டாள்.
அனைத்தையும்
பங்கிடாக, ஒயர் கூடையில்
நிரப்பி வைத்துக் கொண்டாள்.
புறப்படத்
தயாராகி விட்டபின், கண்ணாடி முன் சில விநாடிகள் நின்று சீப்பால் தலைமுடியை கீறி ஓரளவுக்குப் படிய
வைத்துக் கொண்டாள். அலமாரியைத் திறந்து, தன்னுடையதும், குழந்தையுடையதுமான ஆதார் அட்டைகளை எடுத்து
பர்ஸில் வைத்துக் கொண்டாள்;
தூங்கிக்
கொண்டிருந்த ஜனனியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு இயந்திர கதியில், மின்சார ரயிலைப் பிடிக்க விரைந்தாள் வஸந்தா.
ராஜேந்திரன்
வருகிறானா, இல்லையா என்பதைப்
பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப் படவில்லை அவள்.
***
குழந்தை ஜனனியோடு
மனநலக் காப்பக வளாகத்திற்குள் நுழைந்தாள் வஸந்தா.
அங்கு அழைத்து
வந்திருந்த பல்வேறு மன நோய் பாதித்த குழந்தைகளை ஆதங்கத்துடனும், ஆற்றாமையுடனும் பார்த்தாள்.
வஸந்தாவின்
கண்கள் பனித்தன.
ஒரு குழந்தை...
ஜனனியின் வயதுதான் இருக்கும்.
“கீ... கீ...”
என்று ஓயாமல் உரத்துக் கத்திக் கொண்டே இருந்தது. அடக்கிய தாயின் தோளைக் கடித்துக்
குதறியது. முகத்தை நகத்தினால் பிராண்டியது.
அர்த்தமில்லாமல்
உரத்துச் சிரித்துக் கொண்டே இருந்தன சில குழந்தைகள்...
ஒரே சொல்லையே
மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருந்தனர் சிலர்...
தாய் தந்தையின்
கையிலேயே தங்காமல் அங்கும் இங்கும் ஓடுவதும் குதிப்பதுமாய் சில.
மனநோயால்
பாதிக்கப்பட்ட குழந்தைகளின், பல்வேறு பரிமாணங்களையும் பார்த்த வஸந்தா, தன் மகள் ஜனனியின் நடத்தைகளை அந்த அப்நார்மல்
பிகேவியர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தாள்.
தன் மகள் குணமாகிவிடுவாள்
என்கிற நம்பிக்கை வந்தது அவளுக்கு.
நம்பிக்கைதானே
வாழ்க்கை.
***
மனநல
மருத்துவர்கள் குழந்தைகளின் மன வளர்ச்சி பற்றி ஆராயும்போது அவர்களைத் தனியாளாக
வைத்து சோதிப்பதில்லை. பாதிப்புக்குள்ளான மற்ற குழந்தைகளையும் அதே அறையில்
இருக்கச் செய்துதான் சோதிப்பார்கள்.
பெரும்பாலும்
‘மேட்டர் ஆஃப் பிரைவஸி’ என்பதை, இந்தச் சூழலில் யாரும் பார்ப்பதுமில்லை. பார்க்க வேண்டிய அவசியமுமில்லை.
ஒரு குழந்தையை
சோதனை செய்யும்போது, வேறு ஒரு குழந்தை அந்தச் சோதனைக்கு ரெஸ்பான்ஸ் செய்தால், தூண்டலுக்கு ஏற்ற துலங்கல் செய்த குழந்தைக்கு அடுத்தடுத்த
சோதனைகளை விரைவாகச் செய்து விட முடியும்.
அதே போல ஒரு
சோதனை செய்யும் போது யாருமே எந்த ரியாக்ஷனுமே கொடுக்கவில்லை எனில் அந்த சோதனையை
குறிப்பிட்ட பேட்ச்ல் அனைவருக்குமே தவிர்த்துவிடலாம்... இதனால் நிறைய கால விரயம்
தவிர்க்கப்படும்.
இப்படியெல்லாம்
நிறைய நுட்பங்களும், முறைகளும், உத்திகளும் மன நல
மருத்துவத்தில், குறிப்பாக
குழந்தைகளின் குறையறியும் முறைகளில் உண்டு.
***
பல்வேறு
சோதனைகளையெல்லாம் செய்து முடித்த பிறகு, ஜனனிக்கு ஆடிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு என்பதை
மனநல மருத்துவர் அதிகார பூர்வமாக அறிவித்தார்.
“குழந்தைக்கு
ஒண்ணரை வயசாகுதே, பீடியாட்ரிஷியன்
ரெஃப்பர் பண்ணி இதுக்கு முன்னால யாராவது நியூரோ கிட்டே காட்டினீங்களா. ஏதாவது
பாஸ்ட் ரெக்கார்ட்ஸ் இருந்தா, ஃபாலோ அப் க்கு வசதியா இருக்கும்...” என்றார் மருத்துவர்.
“இவ பிறந்து
வீட்டுக்கு அழைச்சி வந்த பிறகு, இன்னிக்கு வரை, குழந்தை நல மருத்துவர் உட்பட எந்த டாக்டர் கிட்டேயும் இதுவரைக்கும் காட்டலை
டாக்டர்.” வஸந்தா இதைச் சொல்லும்போது அவளின் இயலாமை குரலில் பிரதிபலித்தது.
“என்ன...? பிறந்த ஒண்ணரை வருஷத்துல, இண்ணிக்குத்தான் குழந்தையை டாக்டர் கிட்டேயே
அழைச்சி வந்திருக்கீங்களா. நீங்க
படிச்சவங்கதானே?” என்று உரிமையோடு
கோபித்தார் மருத்துவர்.
“பிறந்த உடனேயே
எல்லாக் குழந்தைங்களைப் போல அழலை டாக்டர் என் பொண்ணு.”
“அரசு மருத்துவ மனைலதானேப் பிறந்திச்சு பாப்பா...?”
“ஆமாம் டாக்டர்...”
“பிரசவம் பார்த்த
ஆஸ்பத்திரில பாப்பாவோட நிலையைப் பத்தி அங்கே டாக்டருங்க எதுவும் சொன்னாங்களா
சொல்லலியா?”
மருத்துவர்
வருத்தமும் கோபமும் கலந்து கேட்க,
“சொன்னாங்க டாக்டர்.”
“என்ன சொன்னாங்க?”
“நரம்புக் கோளாறு இருக்கு பாப்பாவுக்கு, நியூரோ டாக்டர் கிட்டே முறையாக் காட்டுங்கனு
சொல்லித்தான் டிஸ்சார்ஜ் பண்ணிவிட்டாங்க; சில நரம்பியல் நிபுணர்களை பத்தியும் சொன்னாங்க; கீழ்ப்பாக்கத்துல இதே ஆஸ்பத்திரி பத்தியும்
சொன்னாங்க.”
“அப்ப ஏன் காலத்துல குழந்தையைக் கொண்டு வந்த காட்டலை...?”
“என் புருசன் எந்த டாக்டர் கிட்டேயும் போகக்கூடாதுனு ஆர்டர் போட்டுட்டதாலே எனக்கு
வேறு வழி தெரியலை. இன்னிக்கு நிலைமை மாறும், நாளைக்கு மாறும்னு இப்படியே போயிடுச்சு
டாக்டர்... தப்பு என்னோடதுதான். நான் செஞ்சதெல்லாம் பயித்தியக்காரத்தனம்னு இப்போ
தெரியுது. இனிமே சரி பண்ண முடியாதா
டாக்டர்...”
இப்படிச்
சொல்லும்போது மருத்துவரின் பக்கவாட்டில் நின்ற கணவன் ராஜேந்திரனை வெறுப்போடும், அருவெறுப்போடும் பார்த்தாள் வஸந்தா.
“அம்மா, நீங்க பட்டப் படிப்பு வரைக்கும் படிச்சவங்க.
படிச்ச நீங்களே இப்படி அவர்னெஸ் இல்லாம இருந்துட்டீங்களே, குழந்தைகள் விஷயத்துல படிக்காதவங்க கூட
இப்பெல்லாம் ரொம்ப கவனமா இருக்காங்க... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை போங்க...?”
வருத்தப்பட்டு
நொந்து கொண்டார் மருத்துவர்.
***
முகத்தில் டன்
கணக்கில் கடுகடுப்பு அப்பியிருக்க, பக்கவாட்டில் ஓரமாக நின்ற ராஜேந்திரனின் பக்கம்
திரும்பியது மருத்துவரின் பார்வை.
“ஏன் சார்...!
நீங்க, படிச்சிருக்கீங்க, பேங்க்ல ஒர்க் பண்றீங்க. குழந்தையை ப்ராபரா
கவனிக்காம விட்டுட்டீங்களே...!”
மனநல மருத்துவர்
நவீனன் சொல்லிக் கொண்டிருந்தபோதே... பொது இடம் என்று கூடப் பார்க்காமல், கூச்சலிட்டான் ராஜேந்திரன்.
“இந்தப்
பயித்தியத்தையெல்லாம் கட்டிக்கிட்டு என்னால மாரடிக்க முடியாது...”
ஜனனியைச் அவன்
வலது கைச் சுட்டுவிரல் சுட்டிக் காட்ட, வஸந்தாவைப் பார்த்துக் காட்டுக் கத்தலாய்க்
கத்தினான் ராஜேந்திரன்.
மருத்துவர் உட்பட, மற்றவர்களும் நம்மைப் பார்க்கிறார்களே என்கிற
எந்தவித அவமான உணர்வும் இல்லாமல், திரியைப் பற்ற வைத்தவுடன் விருட்டென பக்கவாட்டில் செல்லும் பாம்பு வானத்தைப்
போல, அந்த இடத்திலிருந்து பக்கவாட்டில் நகர்ந்து, மருத்துவரின் அறையை விட்டு வெளியேறிச்
சென்றான்.
இது போன்ற
அப்நார்மல் பிகேவியர்களை அடிக்கடி பார்ப்பவரல்லவா மனநல மருத்துவர்கள். டாக்டர்
நவீனன் இந்த நிகழ்வை வழக்கம்போல இக்னோர் செய்தார்.
க்ளையண்டுகளுக்குத்
தன் மருத்துவ ஆலோசனைகளைத் தொடர்ந்தார்.
அன்றோடு
அப்பாவின் உறவு முறிந்து போனது ஜனனிக்கு.
***
ராஜேந்திரன்
அநாகரீகமாக் கத்திவிட்டு, மருத்துவ மனையை விட்டு வெளியேறியவுடன், ஒரு சில நொடிகள் பிரமை பிடித்தாற்போல
அமர்ந்திருந்த வஸந்தா, பின் அந்த நிகழ்வை முற்றிலும் தன் நினைவில் இருந்து அழித்தாள்.
“இந்த நொடியோட
அந்த ஆளை தலை முழுக முடிவு பண்ணிட்டேன் டாக்டர். ‘லேட் ஈஸ் பெட்டர் தேன் நெவர்’னு
சொல்லுவாங்க. இதுக்குப் பிறகு என் மகளை எப்படிப் பராமரிக்கணும்னு சொல்லுங்க. நான்
என்னைத் தயார் படுத்திக்கறேன்.”
என்று கூறிய
வஸந்தாவின் கண்களில் ஒளியைக் கண்டார் மருத்துவர்.
தாய் தந்தை
இருந்தவரை ராஜேந்திரன் இருந்த நிலை;
பெற்றோரின்
மறைவுக்குப் பின், பிறந்த பெண் குழந்தைமேல் அவனுக்கு இருந்த வெறுப்பு;
பெற்ற குழந்தை
என்றும் பார்க்காமல், அதன் சீரான வளர்ச்சிக்கு நேற்று வரை அவன் செய்த தடைகள்;
கிட்டத்தட்ட ஒரு
வருடமாக, வேலை பார்க்கும்
வங்கியின் மேலதிகாரி மலர் என்ற பெண்ணிடம் அவன் வைத்துள்ள கள்ளத் தொடர்பு;
பல நாட்கள்
வெளியூரில் சென்று தங்கி விட்டு வரும் திரை மறைவு வாழ்க்கை...;
என்று
அனைத்தையும் மருத்துவரிடம் சொல்லித் தீர்த்தாள்.
தன் வாழ்க்கைப்
போராட்டங்களைப் பற்றியும் கடந்து வந்த பல விதமான காலகட்டங்களின் தாக்கங்களையும்
மருத்துவரிடம் விலாவாரியாகச் சொல்லிக் கதறினாள் வஸந்தா.
அனைத்து
பாரங்களையும். தன் முன்னே சுமைதாங்கியாய் இருந்த மன நல மருத்துவரிடம்
இறக்கிவைத்துவிட்ட பின் மனசு சேசானது வஸந்தாவிற்கு.
கடந்த காலத்தை
கழற்றி எறிந்தாள்.
நிகழ்காலத்தில்
தன்னை நிலைநிறுத்திக் கொண்டாள்.
இன்று புதிதாய்
பிறந்தவளாய் புது வாழ்வைத் தொடங்கினாள் வஸந்தா.
உள்ளத்தில் உண்மை
ஒளி புகுந்து கொண்ட பின் பின் அவள் வாக்கினிலே ஒளி உண்டாகிப் பிரகாசித்தது.
***
இப்போது ஜனனியின்
ரொட்டீன் பற்றியும், குணாதிசயங்கள் பற்றியெல்லாம் வஸந்தா நிதானமாகச் சொன்னவற்றையெல்லாம் கேட்டு
கேஸ் ஹிஸ்டரி தயாரித்தார் மருத்துவர் நவீனன்.
“ஜனனி யாரோடயும்
கண்ணுக்குக் கண்ணு பார்த்துப் பேசறதில்லை. ஆனா யாராவது எதாவது சொன்னா, எங்கேயாவது பாத்துக்கிட்டே பேச்சை காதுல
வாங்கவா. அதை புரிஞ்சிக்குவாளானு தெரியலை.
அப்பறம் முக்கியமா ஒரு சங்கதி டாக்டர்...”
“சொல்லுங்க...”
மனநல மருத்துவர்
நவீனனும் வஸந்தாவும் உரையாடிக் கொண்டிருந்தபோது, அந்த உரையாடல்களை எல்லாம் அமைதியாக உள்வாங்கிக்
கொண்டு அமர்ந்திருந்தாள் ஜனனி.
ஜனனியைக்
கூர்ந்து கவனித்துக் கொண்டே அவ்வப்போது
டாக்டர் நவீனன்,
“அப்படியா...?”
“ம்...சொல்லுங்க...!”
“ஓஹோ...!”
“வெரிகுட்...!”
என்றெல்லாம்
காதில் வாங்கிய செய்திகளுக்குத் தக்கவாறு உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
வஸந்தாவிடமிருந்து, ஜனனி பற்றிய அனைத்து விவரங்களையும்
கேட்டறிந்தபோது மருத்துவரின் கண்கள் ஜனனியின் பிகேவியரையும் , கூர்ந்து கவனித்துப் பட்டியலிட்டன.
அத்தியாயம் 7
மருத்துவரின்
மேசையில் வைக்கப்பட்டிருந்த மிகச் சிறிய செல்லுலாய்ட் தாவரத்தையே உற்றுப்
பார்த்துக் கொண்டிருந்தாள் ஜனனி.
அதைக் கண்ட
மருத்துவர் அந்த போன்ஸாய் தாவரத்தை எடுத்து ஜனனியின் கைகளில் கொடுத்தார்.
“டாக்டர் சார், விவரம் தெரிஞ்சதுலேர்ந்தே, டிவில, வாட்ஸ்-அப்ல, நியூஸ் பேப்பர்ல இதுலல்லாம், விவசாயம், வயல்வெளி, தாவரங்கள் இதைப் பார்த்தா கூர்ந்து நோக்குவா
டாக்டர்;
வயவெளிங்க பத்தி
யாராவது பேசிக்கிட்டிருந்தா போதும். அதை உத்து கவனிச்சிக்கிட்டே நிப்பா டாக்டர் அவ;
நெல்லை கண்டுட்டா
உசிரு சார் அவளுக்கு.
அவ கைல ஒரு
கிண்ணத்துல நெல்லைப் போட்டுக் குடுத்துட்டாப் போறும். சோறு தண்ணி வேணாம். அதை
பார்த்துக் கிட்டே பொழுதைப் போக்கிடுவா டாக்டர். இதெல்லாம் நார்மலா அப் நார்மலா
டாக்டர்...?”
“உங்க பொண்ணு ஜனனியைப் பொறுத்தவரை இந்த பிகேவியர்தான் அவளோட ப்ளஸ் பாயிண்ட்.”
என்றார் டாக்டர்.
“ஜனனி பாப்பா
உனக்கு நெல்லுன்னா அவ்ளோ பிடிக்குமா...?” டாக்டர் கேட்க,
“ம்...” என்ற ஜனனியின் பதிலில் ஜீவன் இருப்பதைக் கண்டார் மருத்துவர்.
ஜனனியிடம் பேச்சு
கொடுத்துக் கொண்டே, மருத்துவர் தனது லாப்டாப்பில் நெல்சாகுபடி குறித்த தொடர் படத்தை எதிரில்
இருந்த திரையில் ஒளிரச் செய்தவுடன் ஜனனி நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
ஐ...நாத்து
வுடறாங்க; நாத்து பறி
நடக்குது, நடவு ஓடுது, களையெடுக்கறாங்க, அறுவடை… என்று மழலையில் சொல்லி மகிழ்ந்தாள்
ஜனனி.
அடுத்தாற்போல், டிரான்ஸ்போர்ட்,
பிறகு மருத்துவம்
இப்படி, வேறு வேறு துறைகளின் வண்ணமிகு சங்கிலித் தொடர் படங்களை
போட்டுக் காட்டியபோதும்,
‘டாம் அன்டு ஜெர்ரி’ கார்ட்டூன் படத்தையும் சிறிது நேரம் ஓட விட்டபோதும், எந்த வித எதிர்வினையும் இல்லாமல் அமைதியாக
அமர்ந்திருந்த ஜனனியைக் கண்டு, விவசாயத்தில் ஜனனிக்கு இருந்த அதீதமான ஈடுபாட்டை உறுதி செய்து கொண்டார்
நவீனன்.
***
“மேடம் உங்க
பொண்ணுக்கு இருக்கறது ‘லிட்டில் ப்ரொபசர் சின்ட்ரோம்’ங்கற வகை ஆடிசம்தான்.
விவசாயத்தைப் பத்தி என்ன பேசினாலும், விவசாயம் சம்பந்தமா எதைக் காட்டினாலும்
ஏத்துக்குவா. அதைப்பத்தி அவளுக்குக் கற்றுக் கொடுக்கப்படுவதை விலாவாரியா பேசுவா.
மத்த எதையும் சுத்தமா கன்ஸிடரே பண்ண மாட்டா. அவளை விவசாய ஏரியாவுலேயே வெச்சி
கொண்டு வந்தா அந்தத் துறைல நிச்சயமா சாதிப்பா.” என்றார் டாக்டர் நவீனன்.
மருத்துவரின்
குரலில் அதீத நம்பிக்கை இருந்தது.
இப்போது வஸந்தா
பேசினாள்.
“டாக்டர் சார், எங்க அப்பா அம்மாவோட பூர்வீகம் செங்கல்பட்டு
தாண்டி சிறுகுடி ன்னு ஒரு கிராமம். அங்கே, பொழுதுக்கும், ஜனனி, தாத்தாவோடதான் வயக்காட்டுலயும், வரப்புலயும்தான் பொழுது போக்குவா டாக்டர்.
அ- அம்மா
ன்னுதானே அறிச்சுவடி சொல்லித் தருவாங்க எல்லாரும். ஆனா எங்கப்பா, அ – அரிசி னு அரிச்சுவடி சொல்லி வளர்ந்தவ சார் இவ.
அதுவும் குறிப்பா நெல்லு வயலைப் பார்த்துட்டா போறும். அவளுக்கு சோறு தண்ணி கூட
வேணாம். வயவெளியப் பாக்கறதும், நெல்லுப் பயிர் பக்கத்துல உட்கார்ந்து அதை செல்லம் கொஞ்சறதுமா இருப்பா
டாக்டர்.
அவ தாத்தா
அவகிட்டே சின்னக் குழந்தைனு கூட பாக்காம ரொம்ப சீரியஸா நெல்லு பத்தியும் அதன்
தன்மை, காற்று, ஈரப்பதம், குருவை, சம்பா, தாளடி இப்படியெல்லாம் பேசுவாங்க சார். ‘பச்ச
மண்ணு அது. அதுகிட்டே இப்படி பேசுறீங்களேனு நான் கூடச் சொல்லுவேன்” டாக்டர்.
மருத்துவரிடம்
இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தபோதே, அவர்கள் உரையாடலை காது கொடுத்து கவனமாகக்
கேட்டபடி இருந்தாள் குழந்தை.
“மழைய நம்பி
ஏலேலோ பயிர் இருக்கு ஐலசா...” என்று மழலையில் மிழற்றினாள் ஜனனி.
இதைக் கூர்ந்து
கவனித்தார் மருத்துவர்,
தன் தாய்
வயல்வெளிகளைப் பற்றியும், பயிர் சுழற்சியைப் பற்றியும், நெல் வகைகளைப் பற்றியும் மருத்துவரிடம் பேசும்போது ஜனனியின் முகபாவத்தையும், அவளின் உணர்வுகளையும் கூர்ந்து கவனித்த நவீனன்
நீங்க சொல்றதையும் உங்க மகளோட பிகேவியரையும் வெச்சிப் பார்த்தா, ஜனனிக்கு வேளாண் விஞ்ஞானத்துல நாட்டம்
இருக்குங்கறது உறுதியாத் தெரியுது. அதை டெவலப் பண்ணிடலாம் கவலையேப் படாதீங்க...!”
என்று உறுதியாக் கூறினார்.
“கொஞ்சம்
விவரமாச் சொல்ல முடியுமா டாக்டர்...?”
“மேடம், ‘ஆடிசம் ஸ்பெட்ரம்
ஸின்ட்ரோம்’னு சொல்ற நரம்புக் குறைபாட்டுல பல வகைகள் இருக்கு.
குறிப்பா உங்க
பொண்ணு ஜனனியோட பிரச்சனை தீர்க்க முடிஞ்ச பிரச்சனைதான்.”
“அப்படியா டாக்டர். ஜனனியோட குறைபாடு தீர்க்க முடியற வகைங்கறதை உங்க வாயால
கேட்கும்போதே சந்தோஷமா இருக்கு டாக்டர்?”
நம்பிக்கைதான்
வாழ்க்கை என்பது வெறும் அலங்காரச் சொற்றொடர் இல்லை. அதுதான் மனித வாழ்வின்
யதார்த்தம்.
நம்பினார்
கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு.
நல்லதுதான்
நடக்கும் என்று நூறு சதவிகிதம் நம்புபவருக்கு நல்லதுதான் நடந்திருப்பதாக புள்ளி
விவரங்கள் சொல்கின்றன.
வஸந்தா
டாக்டரிடம் உரையாடும்போது அதில் அதீத நம்பிக்கை தெரிந்தது.
“உங்க மகளுக்கு இருக்கற இந்தக் குறைபாட்டை, நான் ஏற்கனவே உங்க கிட்டே சொன்னதைப் போல, ஒரு காலத்துல ‘லிட்டில் ப்ரொபசர்
ஸின்ட்ரோம்’ன்னு சொன்னாங்க.
அதாவது சின்ன
வயசுலயே ஏதாவது ஒரு துறைல நாட்டம் வந்து அதுல எவ்வளவு முடியுமோ அவ்வளவு
முன்னேறுவாங்க, இந்த வகை ஆடிசம்
பாதிப்பு உள்ளவங்க.”
“அப்படியா டாக்டர்?”
“ஆமாம். அதைப் பாருங்க.” என்று லேப்டாப்பில் கூகுள் செய்து, திரையில் ஃபோக்கஸ் செய்திருந்த ஐன்ஸ்டீன்
படத்தைக் காட்டினார் மருத்துவர்.
“மேடம், ஆடிசம் குறைபாட்டால, நாலு வயசு வரைக்கும், வாய்மொழி பேசாமலே இருந்தவர்... அதுக்கு அப்பறம்
கூட ஏழு வயசு வரைக்கும் தனக்குத்தானே வாக்கியங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்
கொண்டவர், இவர்தான்
பிற்காலத்துல ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்ன்கற உலகப்புகழ் வாய்ந்த விஞ்ஞானி.
படிச்ச
உங்களுக்கு அவரைப் பத்தி, நான் சொல்ல வேண்டியதில்லை.
அது போல ஆடிசம்
குறைபாட்டை கடந்து வெளியே வந்து சாதிச்சி, உலகப் புகழ் அடைஞ்ச வேற சில நபர்களையும்
சொல்றேன்... என்று சொல்லிவிட்டு,
சர் ஐசக்
நியூட்டன், சார்லஸ் டார்வின், நிகோலா டெஸ்ஸா இவர்களின் பெயரைச் சொன்னதுடன், அவர்கள் தங்கள் லிட்டில் ப்ரெபசர் சின்ட்ரோம்
என்கிற குறைபாட்டை எப்படி அவர்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டார்கள்
என்பதையும் விளக்கமாகச் சொன்னபோது, வஸந்தாவுக்கு தன் மகள் சாதனையாளராக மிளிரச்
செய்துவிடலாம் என்ற நம்பிக்கையின் விழுக்காடு உயர்ந்தது.
சிறிது நேர மௌன
நகர்வுக்குப் பின், மருத்துவர் நவீனனே தொடர்ந்தார்.
“நிச்சயமா உங்க
மக ஜனனியும் வேளாண் துறைல பெருசா சாதிப்பா பாருங்க.” என்றார் நவீனர்.
“உங்க வாயால
இப்படிக் கேக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்..” என்று உணர்ச்சி வசப்பட்டாள்
வஸந்தா.
“மருந்து
குடுத்து சரியாக்க இது வியாதி இல்லை. இது ஒரு குறைபாடு. எந்தக் குறைபாட்டையும்
முறைப்படி அணுகினா கொஞ்சம் கொஞ்சமா சரியாக்கிடலாம்.”
“புரியுது டாக்டர். நிச்சயமா நான் இதை முறைப்படி அணுகுவேன் டாக்டர்.”
“குறிப்பா ‘சிறிய பேராசிரியர் குறைபாட்டை’ நீங்க உங்க குழந்தைக்குக் கிடைச்ச
வாய்ப்பாப் பயன்படுத்தினாலே போதும். அவளோட வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள். நீங்க
செய்ய வேண்டியதெல்லாம் அவளை சரியா வழி நடத்தறது ஒண்ணுதான்.”
“ஓகே டாக்டர். இவளை உருப்படியாக்கறது ஒண்ணுதான் என்னுடைய ஒரே நோக்கம். இதை
சவாலா எடுத்துக்கிட்டு, முழு வீச்சுல இறங்கி, முழு ஃபோக்கஸ்ல ஒர்க் பண்ணத் தயாரா இருக்கேன். என்னென்ன செய்யணும்னு ப்ரொசிஜர்
மட்டும் சொல்லுங்க டாக்டர்.
“நீங்க எந்த
நேரமும் வேளாண்மை சம்பந்தமான காட்சிகளையும், புத்தகங்களையும் படிச்சு உங்க பொண்ணுக்கு
சொல்லுங்க;
பிரத்யேகமா, அழுத்தமான மடிப்பு உருவாகி தனித் தனியா மூளைல
ரிஜிஸ்தர் ஆகிற வரைக்கும் ஒவ்வொரு கான்செப்ட்டையும் பல முறை, பலவேற சூழ்நிலைகள்ல, பல வேறு உத்திகள்ல சொல்லியும், எழுதிக் காட்டியும், ஸ்பெசிமன் காட்டியும் எப்படியோ, குழந்தை மனசுல பதிய வைங்க. மூளைல அழுத்தமா ஒரு
முறை பதிய வைச்சிட்டா உயிர் இருக்கற வரைக்கும் அதை யாராலும் அழிக்கவே
முடியாதுங்கறதுதான் மூளையோட தனித்தன்மையே;
“............”
“ஐந்து வயசுல ஒண்ணாங்கிளாஸ் சேர்க்கற வரைக்கும், ஜனனியை முடிஞ்ச வரைக்கும் முழுக்க முழுக்க
வயலும் வயல் சார்ந்த இடமுமா இருக்கற ஏரியவுல என்கேஜ் பண்ணுங்க.”
“............”
தாத்தாவை எப்பவும் போல சீரியஸா வேளாண்மை
விஷயங்களை அவளுக்குச் சொல்லவும் என்கரேஜ் பண்ணுங்க.
ஐந்து வயசுல
பள்ளிக் கூடத்துல ஒண்ணாம் வகுப்பு சேர்க்கறதுக்குள்ளே, ஓரளவு குழந்தையோட மனநிலையையும், பிகேவியரையும் பேலன்ஸ் பண்ணிடலாம். இந்த
நிமிஷத்துலேர்ந்து தொடங்குங்க. ஆல் தி பெஸ்ட்”
இதுபோல நிறைய
அறிவுறைகளை வழங்கி நம்பிக்கையூட்டி வஸந்தாவை அனுப்பி வைத்தார் மனநல மருத்துவர்
நவீனன்.
பொறுமையாக
அனைத்து சாத்தியக் கூறுகளையும் எடுத்துச் சொன்ன, டாக்டரை கையெடுத்துக் கும்பிட்டாள் வஸந்தா.
மனது நிறைய
தன்னம்பிக்கையோடும், வைராக்யத்தோடும் மருத்துவமனையை விட்டு ஜனனியுடன் வெளியேறினாள்.
***
தாயறியா சூல்
உண்டா?
அழாமல் கொள்ளாமல்
அமைதியாய் இருந்தாலும், மகளின் பசி தெரிந்தவளல்லவா தாய்.
ட்ரீட் மெண்ட்
தொடங்குவதற்கு சில மணித்துளிகள் முன் ஜனனியை விட சிறிய குழந்தை பசியால் வீரிட்டு
அழுவதைப் பார்த்த வஸந்தா தன் பையில் இருந்த சத்து மாவு டப்பாவை எடுத்துக்
கொடுத்ததை மீண்டும் வாங்க மறந்த காரணத்தால், ஜனனிக்கு புட்டி மாவு கலந்து புகட்ட வாய்ப்பில்லாமல்
போனது.
முதன் முதலாக, மகளின் வயிற்றுப் பசிக்கு, ரோட்டுக் கடையில் டீ வாங்கிப் புகட்டினாள்.
இனிமேல் ஜனனிக்கு
அம்மா மட்டும்தான் என்று உறுதியாக முடிவு செய்துகொண்டாள்.
அடுத்து அடுத்து
திட்டம் வகுத்தாள்.
கீழ்பாக்கம்
மெட்ரோ பிடித்து, கிண்டியில்
இறங்கி, லோக்கல் பிடித்து
செங்கல் பட்டு போகலாமா என யோசித்தாள்.
ஷேர் ஆட்டோ
கிடைத்தால் சேத்துப்பட்டு, அல்லது நுங்கம் பாக்கத்தில் இறங்கிப் போகலாமே எனவும் தோன்றியது.
அந்த நேரத்தில், மருத்தவ நிலைய நிறுத்தத்தில் 27 D பேருந்து வந்து நிற்க, அதில் ஏறி, எழும்பூரில் வந்து இறங்கினாள் வஸந்தா.
மின்சார ரயிலில்
செங்கல்பட்டுக்கு ஜனனியுடன் பயணமானாள்.
அத்தியாயம் 8
அம்மாவை எப்போது
நினைத்தாலும் ஜனனிக்கு பிரமிப்பாய் இருக்கும்.
அம்மா ஒரு
அற்புதம்;
தன் தாய் ஒரு
கர்மயோகி;
தன்னைப் பெற்றவள்
ஒரு புரட்சிப் பெண்;
இப்படியாக, அம்மாவைப் பற்றி எண்ணிலடங்கா பிம்பங்களைச்
சுமந்திருப்பவள் ஜனனி.
‘உலகம் போற்றும்
விஞ்ஞானி’ என்ற இந்தப் புகழுக்கு, முதல் காரணம் என் அம்மாதான்;
இந்த விருதுகளும், தங்கப் பதக்கமும், சான்றிதழ்களும் அம்மாவுக்குத்தான் முதலில்
சொந்தம்;
நான் சுயம்பு
இல்லை;
அம்மாதான் என்னை
தட்டித் தட்டி உருவமாக்கிவள்.’
“அம்மா மட்டும்தானா...!” அவளுக்குள் ஒரு குரல் அவளையேக் கேட்க...
‘அம்மா, அம்மாதான் முதல் காரணம்...;
அம்மாவைத் தவிர, சமுதாயத்தில், பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும், பிரதி பலன் எதிர்பார்த்தும், எந்த விதப் பிரதிபலனும் எதிர் பார்க்காமலும்
எனக்கு உரமேற்றியிருக்கிறார்கள்;
உயரமேற்றியிருக்கிறார்கள்;
உருவாக்கியிருக்கிறார்கள்;
உன்னதம்
செய்திருக்கிறார்கள்;’
இதோ கண்ணெதிரே
தனக்காக வாழாமல் எனக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் டாக்டர்
மார்த்தாண்டம்.
இந்த மார்த்தாண்டம்
நினைத்திருந்தால், தன்னையே அவர் இன்னும் உயரமேற்றிக் கொண்டு இருக்கலாம். நான் தற்போது இருக்கும்
இடத்தில் அவர் இருந்திருப்பார்.
ஆடிசம் பாதித்த
பெண்-விஞ்ஞானியான நான் உயரமேறுவதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, தியாக வாழ்க்கை வாழும் மார்த்தாண்டம் என்கிற
மகத்தான இளைஞனைப் பற்றிச் சிந்தித்தபோது உள்ளுக்குள் ஏதோ ஒரு கல் புரண்டுகொள்ள, உணர்ச்சி வசமானாள் ஜனனி.
***
மார்த்தாண்டம்
காட்டிய அழைப்பிதழைப் நிதானமாகப் பார்த்தாள் ஜனனி.
விழாத் தலைமை
‘டாக்டர்
ம்ருணாளிணி’
என்று, பெரிய எழுத்துக்களில் தலைமை தாங்குபவரின் பெயரைப்
போட்டு, பெயரைத்
தொடர்ந்து சற்றே சிறிய ‘ஃபாண்ட்’களில் அவரின் படிப்பு வரிசையாகக்
குறிப்பிடப்பட்டிருந்த பகுதியில் பார்வை நின்றது.
ஜனனியின் பார்வை
நிலைக் குத்திய இடத்தை மார்த்தாண்டமும் கவனித்தார்.
ஜனனி ஒரு கணம்
மார்த்தாண்டத்தை ஒரு மாதிரி கலாய்ப்பதைப் போலப் பார்த்தாள்.
மார்த்தாண்டம்
கூச்சத்தோடு ஜனனியைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.
ஜனனி இப்போது
அர்த்த புஷ்டியோடு புன்னகைத்தபடியே, மார்த்தாண்டத்தை பார்த்தாள்.
‘கல்லூரிக்
காலத்துல நீ விழுந்து விழுந்து காதலிச்ச ம்ருணாதான் விழாத் தலைமை போல. உனக்கு
வேட்டைதான்...!” என்று ஜனனி தன்னைப் பார்த்துக் கலாய்ப்பதைப் போல இருந்தது
அவனுக்கு.
மிருணாளிணி என்ற
பெயரை சுட்டு விராலால் சுட்டி, மார்த்தாண்டத்திடம் காட்டினாள் ஜனனி.
‘காதலைப்
புதுப்பிச்சிக்க சரியான சந்தர்ப்பம் வந்திருக்கு போல...!’ என்று தன்னைப் பார்த்து
ஜனனி கேட்பதாகத் தோன்றியது மார்த்தாண்டத்துக்கு.
ஆம்.
ஆராய்ச்சிப்
படிப்பில் இணையும் முன்,
கல்லூரியில்
முதுகலைப் படிப்புப் படித்தபோதே, , ம்ருணாளிணியும் தங்கள் வகுப்புத் தோழிதான்.
முதுகலை வேளாண்
விஞ்ஞானம் படிக்கும் காலத்தில், மார்த்தாண்டத்தின் மீது தீரா மோகம் கொண்டிருந்தவள் ம்ருணாளிணி.
***
“ம்ருணா...”
இப்படித்தான், அவளை அப்பொழுதெல்லாம் செல்லமாக அழைப்பான்
மார்த்தாண்டம்.
அண்ணாமலைப்
பல்கலைக் கழக வளாகத்தில் இருக்கும் பல்வேறு துறைகளிலிருந்தும் எத்தனை எத்தனையோ காதல்
ஜோடிகள் பறந்து திரிந்தாலும், ம்ருணாளிணி மார்த்தாண்டம் இணைவு மட்டும் தனித்தன்மையோடு ஒரு சகாப்தமாக இருந்த
காலம் அது.
பல்கலைக் கழக
விடுமுறை நாட்களில், ஆண்கள் விடுதி மற்றும், பெண்கள் விடுதி என மொத்தமும் காலியாகிவிடும். ஒரு சிலர் அருகே இருபது கிலோ
மீட்டர் தொலைவில் இருக்கும் பிச்சாவரம் சென்று போட்டிங் சென்று களிப்பார்கள்.
பெரும்பாலான மாணவ
மாணவியர், ஜோடி போட்டுக்
கொண்டு சபாநாயகர் கோவில் வளாகத்தில்தான் அடைக்கலம் தேடுவார்கள்...
சிதம்பரத்துக்கே
அழகு சேர்க்கும் மேல வீதி, கீழ வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி என நான்கு பக்கமும் கம்பீரமாக
எழும்பி நிற்கும் நிற்கும் ராஜ கோபுரங்களின் கோபுர வாயில்கள், பல்கலைக் கழக விடுமுறை நாட்களில், காதல் ஜோடிகளின் அணிவகுப்பால் மேலும் அழகு
கூடும்.
வழக்கமாக, கீழ வீதி சபாநாயகர் தேர் முட்டியில்தான் தங்கள்
காதல் பிரயாணத்தைத் தொடங்குவார்கள் ம்ருணாளிணியும் மார்த்தாண்டமும்.
சிதம்பரத்தில்
வழக்கமாக ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் கொண்டாடப் படும் ஆனித் திருவிழா; மற்றும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில்
நடைபெறும் மார்கழித் திருவிழா இரண்டும் தேர்திருவிழாக்களுக்கு மிகவும் பிரசித்தம்.
தவிர ஆருத்ரா
தரிசன நாளில் தேரோட்டம் சிறப்பினும் சிறப்பாக அமையும்.
இதுபோன்ற
திருவிழாக்களில் குறிப்பிட்ட நாளன்று தில்லை அம்பல நடராஜா, சிவகாம சுந்தரி அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வர் ஆகிய மூர்த்திகள் தனித்தனியாக
எழுந்தருளக்கூடிய தேர்கள் சின்னதும், பெரியதும், பிரும்மாண்டமானதுமாக தேர் முட்டியில் நிற்கும்.
ஒரு காலத்தில், வெயிலில் காய்ந்து கொண்டும், மழையில் நனைந்துகொண்டும், பனியில் விரைத்துக் கொண்டும் தெருவில்
வீசப்படும் குப்பை கூளங்களெல்லாம் காற்றில் அடித்து வரப்பட்டு தேரடியில் குவிவதும், வாகனங்கள் செல்லும்போது கிளம்பும் புழுதி தேர்
முழுவதும் படிந்து, அதன் அழகைக் குலைப்பதுமாக இருக்கும் அல்லவா. அதெல்லாம் நாளடைவில் மாறி
விட்டது.
கலை ரசிகர்கள்
அதை காப்பாற்றத் துவங்கிவிட்டார்கள். தொண்டு நிறுவனங்கள் எல்லாம் இதுபோன்ற கலைச்
செல்வங்களைக் காப்பாற்ற போதிய முயற்சிகள் எடுக்கின்றன.
புழுதி படிந்து
சோபை இழக்காமல் இருக்கவும், கலை ரசிகர்கள் தேரில் செதுக்கப்பட்டுள்ள கலையம்சங்களை ரசிக்க வசதியாகவும்
சபாநாயகர் தேர் குடில் என்று அமைத்துவிட்டார்கள்.
தேர் சக்கரங்கள்
உயரத்திற்கு தகரத்தால் அடைப்பும், அதற்கு மேல் ஃபைபர் கண்ணாடியால் அடைப்பும் வைத்து, தென்னாட்டுக் கலைச் செல்வங்கள் பாதுகாக்கப்
படுவதால், ‘தேருக்குள்ள
சிங்காரம் அதுக்கேத்த அலங்காரம்’ என்பதை கலை ரசிகர்களால் முழுமையாய் ரசிக்க
முடிகிறது.
பல்வேறு உயர
கனங்களில் உள்ள தேர்கள், படிப் படியாக, கட்டம் கட்டமாகப் பிரிக்கப்பட்டு சொஸ்திக், தாமரை, டைமண்ட், அன்னம், என பல்வேறு பார்டர் டிசைன்களுக்கு மத்தியில் கட்டம் கட்டமாக காட்சிப்
படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு நுட்பனான மரச் செதுக்கு வேலைகளைக் கூர்ந்து
கவனிப்பார்கள் மிருணாளிணியும், மார்த்தாண்டமும்.
அவரவருக்குப்
பிடித்ததை ஒருவர் மாற்றி ஒருவர் வர்ணிப்பதும், கலையின் உயர்வை போற்றுவதுமாக, பொழுதைக் கழிப்பார்கள்.
தேர் குடிலைச்
சுற்றி, ஆங்காங்கே தனித்
தனியாக நின்று கொண்டும், கை கோர்த்துக் கொண்டும், ஒருவர் அணைப்பில் ஒருவர் அடைக்கலமாகிய நிலையிலும் அந்த மரச் சிற்பங்களைப்
பார்த்து அவைகளை வர்ணித்தும்
அந்த
சிற்பங்களில் உள்ளதைப்போல இமிடேட் செய்வதுமாக இருக்கும் மற்ற காதல் ஜோடிகளைப்
பார்த்து ரசித்து விமர்சித்தும் சில நேரங்களில் அவர்கள் பொழுது போக்குவார்கள்.
வெளி நாட்டவர்கள்
விலை உயர்ந்த கேமராவுடனும், வீடியோக் கருவியுடனும் வந்து ரசிக்கும்போது அவர்களிடம் வலியச் சென்று தங்களை
அறிமுகப் படுத்திக் கொண்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பெருமையையும், இந்திய சிற்பக்கலையைப் பற்றிய மேன்மையை
எடுத்துரைப்பது அவர்கள் இருவருக்குமே பிடித்த ஒன்று.
ஆடை விலகிய ஒரு
சில சிற்பங்களின் அழகைக் கண்டு பூடகமாக ஒருவருக்கு ஒருவர் கருத்து பரிமாறிக்
கொள்வதும், அர்த்த
புஷ்டியோடு சிரித்துக் கொள்வதுமாக சில மணித் துளிகளைக் கழிப்பார்கள்.
ஆனால் இருவருமே
கட்டுப்பாடாகத்தான் இருப்பார்களே ஒழிய ஒருக்காலும் எல்லை மீறும் ரகம் இல்லை.
தேர் குடிலை
விட்டு அகன்றபின், திருவாசகத் தேனைச் சிந்திக் கொண்டே, மாணிக்க வாசகர் திருக்கோவிலுக்குள்ளே, எழுந்தருளிய கிழக்கு கோபுர வாசல் வழியாக
இருவரும் உள்ளே செல்வார்கள்.
கோபுர வாசலுக்கு
உள்ளே நுழைந்ததும் இடப்புறம் அமைந்துள்ள கிணற்றுக் கட்டையும் யாக சாலைக் கட்டமும்
அவர்களை அரவணைத்துக் கொள்ளும்.
ஆங்காங்கே காதல்
ஜோடிகள் அளவலாவிக் கொண்டிருந்துவிட்டுக் மனமே இல்லாமல் பிரிந்து செல்வதைப்
பார்க்கும்போதெல்லாம் “பிரிவுதான் காதலின் சுவாரஸ்யத்தைக் கூட்டும்...” என்று
பேசிக் கொள்வார்கள் இருவரும்.
பல
சந்தர்ப்பங்களில் கோவிலுக்கு உள்ளே போய் சந்நிதி முன் நின்று ஆடல் வல்லானைக் கூட
தரிசிக்காமல், கோவிலை விட்டு
வந்த வழியே வெளியேறி ஸ்ரீ கிருஷ்ணா பவனில் சாப்பிட்டுவிட்டு
திரும்பியிருக்கிறார்கள் மார்த்தாண்டமும் ம்ருணாளிணியும்.
***
அப்படி ஓர் நாள்
கிணற்றுக் கட்டையில் அமர்ந்து அவர்கள் இருவர் மட்டும் ஏகாந்தமாகப் பேசிக் கொண்டிருந்த
போதுதான், ம்ருணாளிணி
அந்தக் காகிதத்தை மார்த்தாண்டத்திடம் காண்பித்தாள்.
மார்த்தாண்டத்துக்கு
பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது, காகிதத்தில் எழுதப்பட்டிருப்பது சங்கேத மொழியில் எழுதப்பட்ட ஆராய்ச்சிக்
குறிப்பு என்று.
“இது நீ
உருவாக்கின ஃபார்முலாவா ம்ருணா...?”
“நோ... நோ... இது நம்ம பேட்ச்ல பிஜி படிக்கற ஜனனியோடது.”
“ஜனனியோட
ஆராய்ச்சிக் குறிப்பு உன் கைல எப்படி...?”
“ஜனனி ஒரு ஆட்டிசம் பேஷண்ட், ஆனா சப்ஜெக்ட்ல ரொம்ப தரவ்வா இருக்கா. அவ எழுதின குறிப்பை ப்ராஜக்ட்டுக்காக
அவளே ஃபேர் பண்ண கஷ்டப்பட்டுகிட்டு இருந்தாளா. “நான் ஃபேர் பண்ணித் தரவா ஜனனினு
கேட்டு அவகிட்டேயிருந்து அதை வாங்கினேன்;
“.........................”
“தாங்ஸ் ம்ருணானு சொல்லி என் கிட்டேக் கொடுத்துட்டா...” என்று சொல்லிச்
சிரித்தாள்.
“நல்ல விஷயம்தான்
ம்ருணா. இப்படி பிறருக்கு உதவற மனசு எல்லாருக்கும் வராது. ஐ ம் வெரி ப்ரௌட் ஆஃப்
யூ...” என்று நெகிழ்ந்தவனுக்கு அடுத்த நொடியே அதிர்ச்சி காத்திருந்தது.
“மாரு...”
மார்த்தாண்டத்தை
இப்படித்தான் செல்லமாக அழைப்பாள் ம்ருணாளிணி.
“சொல்லு
மிருணா...” ஆர்வமாய்க் கேட்டான்.
“நான் இதை
வாங்கிக்கிட்டு வந்தது உண்மையிலேயே அவளுக்கு உதவறதுக்கு இல்லை.”
“வேற எதுக்கு?”
இப்போது
அப்பாவியாகக் கேட்டான் மார்த்தாண்டம்.
“அந்த கான்சப்டை
உல்டா பண்ணி என் பேர்ல ப்ராஜக்ட் சமர்ப்பிக்கலாம்னு திட்டம் போட்டேன். இதை கொஞ்சம்
அனலைஸ் பண்ணி மெமரி ஸ்பேஸ்ல எழுதாம விட்டு வெச்சிருக்கற இடங்களை கொஞ்சம் சரி
பண்ணித் தாயேன்...”
கேட்டபோது
ம்ருணாளிணியின் பேச்சில் ஒரு கொஞ்சல் ஒலித்தது.
“நிஜமாத்தான்
சொல்றியா ம்ருணாளிணி. சும்மா விளையாட்டாப் பேசறியா?”
குரலில் கொஞ்சம்
கடுமை கலந்து கேட்டான் மார்த்தாண்டம்.
“இதுல விளையாட
என்ன இருக்கு...? மண்டையப்
போட்டுப் பிச்சிக்காம ப்ராஜக்ட் முடிக்கறதுக்கு இதை விடச் சுலபமான வழி இருந்தாச்
சொல்லு, அதைச்
செய்யலாம்... ஹ...! ஹ...! ஹ...!”
தவறு செய்கிறோம்
என்ற குற்ற உணர்வில்லாமல், அதோடு செய்த தவற்றை நியாயப் படுத்தும் வகையில் பேசிச் குரூரமாய்ச் சிரிக்கும்
ம்ருணாளிணியைப் பார்க்கப் பார்க்க ஆத்திரம் பொங்கி எழுந்தது.
‘இத்தனை
சுயநலமும், திருட்டு குணமும்
உள்ள ஒரு பெண்ணையா நாம் காதலித்திருக்கிறோம்...’ என்று நினைத்தபோதே குமட்டிக்
கொண்டு வந்தது மார்த்தாண்டத்திற்கு.
‘திருட்டுகளிலேயே
‘ப்ளேஜியரிசம்’ என்று சொல்லக் கூடிய ‘கருத்துத் திருட்டுதானே’ மிகவும்
கொடுமையானது. மூளையைக் கசக்கிப் பிழிந்து ஓயாமல் உழைத்துக் கண்டுபிடித்த
கண்டுபிடிப்பை நோகாமல் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளும் இழிகுணம் மிக்க ஒருத்தியையா, நான் இத்தனை நாளும் காதலிந்து வந்திருக்கிறேன்;
தில்லை அம்பல
நடராஜா, என்னை இந்த
இக்கட்டிலிருந்து காப்பாற்று.’ என்று வேண்டிக் கொண்டான்.
சடாரென
எழுந்தான்.
அத்தியாயம் 9
இனம் புரியாத
வருத்தத்தோடு, விறுவிறுவென்று
கீழ உள் கோபுரத்தை நோக்கி நடந்தான்.
அதன் வழியாக
செல்லும் பக்தர்களுக்கு, வாயிற்படியின் வலது பக்கத் தூணில் எண்ணைக் காப்புடன் மினுமினுப்பாய்
பிரகாசித்து அருள் பாலிக்கும், மினியேச்சர் அளவில் நுட்பமாகப் பொறிக்கப்பட்ட லோக மாதா காளியின் உருவம்
கண்ணில் பட்டே தீரும்.
அதைக் கைக்
கூப்பி வணங்காமல் எவரும் உள்ளே செல்லவே மாட்டார்கள். மூர்த்தி அளவில் மிகமிகச்
சிறியதுதான் என்றாலும் கீர்த்தி பெரிதல்லவா.
காளியை கை கூப்பி
வணங்கினான் மார்த்தாண்டம்.
‘யாதுமாகி
நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய். தீது நன்மையெல்லாம் காளி, தெய்வ லீலையன்றோ...’
என்ற பாரதியின்
பாடலை அவன் பின்னால் நின்ற ஒரு சிவனடியார் பலமாய்ப் பாட, மார்த்தாண்டத்தின் காதில் கனமாய் இறங்கியது
அது.
தொடர்ந்து, நடராஜர் சந்நிதி சேவிப்பதற்காக, படியிறங்கி நடந்தான்.
“மாரு...
மாரு...”
பலமாய் அழைத்துக்
கொண்டே, மார்த்தாண்டத்தின்
நடைக்கு ஈடாக அவன் பின்னே ஓடோடி வந்தாள் ம்ருணாளிணி.
படிகள் இறங்கி
நடந்தவன் நடுவில் இருக்கும் தேவசபை யைத் தாண்டும் முன் ம்ருணாளிணி, மார்த்தாண்டத்தின் முன் வந்து கைகளைப்
பரப்பியபடி அவனைத் தடுத்து நிறுத்தினாள்.
“என்னாச்சு மாரு.
ஏன் இப்படி வெறி பிடிச்சாப்பல நடந்துக்கறே? இப்ப என்ன ஆகிப் போச்சு? நான் என்ன தப்பாச் சொல்லிட்டேன்...?”
நடராஜா
சந்நதிக்குள் நுழையும் தோரணவாயில் கடக்கும் முன் வலதுபுறம் உயரமான இடத்தில் அமைந்திருக்கும் தேவ
சபை. அதன் எதிரில் எதிரில் நீளும் இரண்டாம் பிரகாரத்தில் முதல் தூணுக்கருகே
நின்றான் மார்த்தாண்டம்.
***
‘பஞ்ச சபை’
என்பதே சிதம்பரத்தின் சிறப்பு.
சித் சபை, கனக சபை(பொன்னம்பலம்), தேவ சபை, நிருத்த சபை மற்றும் ராஜ சபை எனப்படும் ஐந்து சபைகளில், வீதி உலா சென்று ஜனங்களுக்குக் காட்சியளித்து
அருள் பாலிக்கும் பஞ்ச உலோகங்களால வார்க்கப்பட்ட உற்சவ விக்ரகங்கள் அனைத்தும்
வைக்கப்பட்டுள்ள இடம்தான் தேவ சபை.
கோவிலுக்குள்
வரும்போதெல்லாம் உட்கார்ந்து மிருணாளிணியோடு காதல் மொழிகள் பேசிய அதே தூண் அருகில், இப்போது இருவரும் எலியும் பூனையுமாக
நின்றார்கள்.
முரண்தொடை என்பது
இதுதானோ?
தன் எதிரில்
நிற்கும் மிருணாளிணியின் முகத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லை மார்த்தாண்டத்துக்கு.
அவள் தோளுக்கு மேல் பார்வையை உயர்த்தி பின்னால் இருந்த தேவசபையை நோக்கினான்.
தேவ சபைக்குள்ளே,
ஆங்காங்கே ஏற்றி
வைக்கப்பட்ட எண்ணை விளக்குகளைத் தவிர, குறைந்த ஒளியை உமிழும் மின் விளக்கு ஒன்றும், மைய மண்டபத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த
விளக்கின் ஒளியில் சபையினுள்ளே அதனதன் வாகனங்களில், அததற்குரிய அபய, வரத ஆயுத ஹஸ்தங்களோடும் அபூர்வ முத்திரைகளோடும்
அதனதன் பீடங்களில் அருள் பாலித்துக் கொண்டிருந்த ஐம்பொன் விக்ரஹங்களும், பீடத்தின் பின் பகுதியில் பொருத்தப்பட்ட
திருவாசிகளும்... எரிகின்ற எண்ணை விளக்கின் கோணத்திற்கு ஏற்ப பின்புறம் நிழலை
அப்பிக் கொண்டிருந்தன.
பூட்டப்பட்ட
இரும்பு அழி கம்பிகளுக்குள் இருந்த விக்ரகங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்
மார்த்தாண்டம்.
சமீபத்தில்
அபிஷேகம் செய்யப் பட்டு, அலங்காரங்களுக்கு உட்பட்டிருந்த
சிலைகளுக்குச்
சூடப்பட்ட மாலைகளும், அணிவிக்கப்பட்ட வஸ்திரங்களும் கொஞ்சம் புது
மெருகோடும் மற்றவையெல்லாம் சற்றே மெருகு குறைந்தும் தோற்றமளித்தன.
மிகச் சமீபத்தில்
சூட்டப்பட்ட மாலைகள் ஏதும் கண்களில் படவில்லை.
ம்ருணாளிணி
மார்த்தாண்டம் காதல் ஜோடியின் தற்போதைய நிலையைப் போல, வாடிய, சுக்காய்க் காய்ந்த நிர்மால்யங்கள் மட்டுமே
சிலாரூபங்களில் தொங்கிக் கொண்டு, வாழ்வின் நிதர்சனமான மாற்றங்களைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன.
***
'தேவ சபை'
எவ்வளவு அருமையான, ஆற்றல் மிக்க சொற்கோவை இது.
இந்தக் கம்பீரமான
மண்டபம், உற்றுப்
பார்த்தால்தான் தெரியும் அளவுக்கு மங்கலாகவும் சோகையாகவும்
வாழ்வின் முரண்
தொடையாய்த் காட்சியளித்தன.
சபையின் வெளிப்புற மண்டபம், அதன் படிக்கட்டுகள் எல்லாம் சற்றே வெளிச்சமாகத் தெரிந்தன.
தில்லை கோவிந்த
பெருமாள் கொடி மரத்தின் முன் பிரகாசிக்கும் சூரிய ஒளியின் கசிவு, சபைக்கு மேல் ஏறும் சிகப்பு வெள்ளை பட்டை
அடிக்கப்பட்ட படிகளை சற்றே வெளிச்சம் போட்டுக் காட்டியது.
சபையின் முன்
மண்டபத்தில் நிரந்தரமாகக் கிடத்தப்பட்டுள்ள தங்க வண்ணத் தகடுகள் பொறுத்தப்பட்ட, கிட்டத்தட்ட ஆறுக்கு மூணு அளவுள்ள அபிஷேக
தாரையின் ஓர் புறம் மங்கல் வெளிச்சமாய்ப் பளிச்சிட, அதனுடைய பக்கவாட்டுப் பகுதி
இருளோவென்றிருந்தது.
ஒளியும் நிழலும்
சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை குறிப்பால் உணர்த்துவது போல, அழிகம்பிகளுக்கு உள்ளே ஒளிர்ந்து கொண்டு இருந்த
சிலைகளின் அருளை சற்றே உயர்த்திக் காட்டியது பின்னணியாக அமைந்த இருள்.
பூ
வேலைப்பாடுகளும், தேவ கோஷ்டங்களும், பிறைகளும், புடைப்புகளும், சிலைகளுமாக, மேற்கூரையைத் தாங்கி நின்ற பிரும்மாண்டமான தூண்கள்.
தூண்களின்
உச்சியில் யாளிகள் புகுந்து விதானத்தைத் தாங்கிக் கொள்ள, வாழை குலை தள்ளினாற்போல், நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும் அபிஷேக தாரை
வடிவ தண்டியத்தின் முனையில் தேள் கொடுக்கின் முனைபோல செதுக்கப்பட்ட அமைப்பு
துருத்திக் கொண்டு அலங்காரமாய்த் தொங்கின.
தன் தீர்க்கமான
முட்டை விழிகளால், தன்னைப் பார்த்து “இதுதாண்டா மானிட உலகம். உன் நேர்மையை உன் காதலியுடமும்
எதிர்பார்த்து ஏமாந்து போனியா...? எதிர்பார்ப்புனு வந்துட்டா ஏமாற்றத்துக்குத் தயாரா இருக்கணும். இல்லேன்னா உன்
உறவே வேண்டாம்னு அறுத்துக் கட்டணும்...” என்றெல்லாம் சொல்லி, அனைத்து யாளிகளும் கோரை பற்கள் உட்பட அனைத்துப்
பற்களையும் காட்டி, வாய்விட்டுச் சிரிப்பதாகத் தோன்றியது மார்தாண்டத்துக்கு.
எதிர் பாராத
இதுபோன்ற இக்கட்டான சூழலை எதிர் கொள்ள முடியாமல் தவித்தான். லஜ்ஜையாக இருந்தது.
தலையைக் குனிந்து கொண்டான்.
"ஏன்
இப்படித் தலை குனியறே? மாரு... என்னைப் பாரு...!" ம்ருணாளிணியின் குரலைக் கேட்டு, குரல் வந்த திக்குக்கு எதிர் திசையில் திரும்பி
நிமிர்ந்து மேற்கூரையை பார்த்தான்.
தன் தலைகளால்
மேற்கூரையைத் தாங்கியபடி சிரித்துக் கொண்டிருக்கும் யாளிகள், தொடர்ந்து அவனைப் பார்த்துச் விடாமல்
சிரித்தபடி இருந்தன.
இரண்டு மேற்பக்க
ஈற்றிலிருந்தும் உட்புறமாய் வளைந்த மூன்று மூன்று கோரை பற்களும், அதற்கிடையே வெளியில் துருத்திக் கொண்டிருந்த
நான்கு முன்னம் பற்களும் பளிச் என்று வெளியே தெரிய,
அனைத்து
யாளிகளும் தன்னைப் பார்த்து கண்களை உருட்டிக் கொண்டு ஏளனமாய்ச் சிரிப்பதை பல்வேறு
பார்வைக் கோணத்தில் பார்த்து வெட்கினான் மார்த்தாண்டம்.
தன்மேல் தனக்கே
வெறுப்பாக இருந்தது.
உள்ளத்தை உறுதிப்
படுத்திக் கொண்டு, சிறிதும் தாட்சண்யம் காட்டாமல் மிருணாளிணியிடம் உறுதியாகச் சொன்னான்.
“ஒரு
ப்ளேஜியரிஸ்டான உன்னை காதலிச்சதுக்காக நான் ரொம்ப வெட்கப் படறேன். வேதனைப் படறேன்.
இந்த நிமிஷத்துலேர்ந்து நம்ம லவ் ப்ரேக் அப் ஆகுது...”
காதல் ப்ரபோஸ்
பண்ணப்பட்ட அதே இடத்தில் இன்று ப்ரேக் அப்
அடிபட்ட அன்னமாய்
ம்ருணாளிணி துவண்டு நிற்க,
அவசர அவசரமாக
நடராஜா சந்நிதிக்குச் செல்லும் தோரண வாயிலைக் கடந்து சித் சபையில் தில்லை
அம்பலத்தான் முன் சென்று நின்றான் மார்த்தாண்டம்.
மண்ணாகி பூதமொடு
விண்ணாதி அண்டம் நீ...
மறை நான்கின் அடி
முடியும் நீ...
என்று உள்ளம்
உருகிக் கதறிக் கொண்டிருந்தார் ஒரு சிவனடியார்.
அவருக்கு அருகில்
நின்று கண்களில் கண்ணீர் மல்க நின்றான் மார்த்தாண்டம்.
காதல் முறிவை
விடக் கொடுமையிலும் கொடுமை என்ன தெரியுமா?
காதலை பிரேக் அப்
செய்த பின்பு, ஒரே இடத்தில்
முன்னாள் காதலர்கள் ஒருவரை ஒருவர் வெறுத்தபடி வளைய வரவேண்டிய கட்டாயம்தான்.
அந்தக்
கொடுமையையும் அனுபவித்தார்கள் இருவரும்.
***
ஒருவரின் திறமையை
முழு மனதோடு பாராட்ட வேண்டும்.
அதோடு அந்த நபர்
தனது திறமையை மேலே மேலே வளர்த்துக் கொள்வதற்கு நாம் உரமாக விளங்க வேண்டும்.
அதுதான் மனிதம்;
அதிலும், ‘உடலிலோ அல்லது மனத்திலோ குறைபாடு உள்ள, ஒருவரின் திறமையைப் போற்றி வளர்த்து, அவர்களை மேலே மேலே உயர்ந்துவதுதான் மனிதத்
தன்மை;
அப்படியெல்லாம்
எதுவும் செய்யாமல் போனாலும் பரவாயில்லை;
குறையுள்ள ஒரு
பெண்ணின் உண்மையான திறமையை திருட முயல்வது கொடுமையிலும் கொடுமையல்லவா? பாவத்திலும் பெரிய பாவமல்லவா?’
சுயநலத்தின்
உச்சத்தில் மனிதர்கள் செய்யும் இதுபோன்ற பாவச் செயல்களை நினைத்து நினைத்து
மருகினான் மார்த்தாண்டம்.
அன்று முதல், ஜனனியைப் பற்றிய அனைத்துத் தரவுகளையும்
சேகரிக்கத் துவங்கினான்.
ஜனனியின் அப்பா
ராஜேந்திரன்.
அவரின்
பெற்றோருக்கு ஒரே மகன்.
மகனுக்கு
வஸந்தாவை பார்த்துத் திருமணம் செய்து வைத்து, கூட்டுக் குடும்பமாய் அவர்களோடு வாழ்ந்து, மூன்று வருடங்களுக்கு முன்னால்தான் ஆறு மாத
இடைவெளியில் அவர்கள் இருவரும் காலமானார்கள்.
அரசுடைமை
ஆக்கப்பட்ட வங்கியில் அலுவலக உதவியாளர் ராஜேந்திரன்.
அம்மா வஸந்தா.
தன் பெற்றோருக்கு
ஒரே மகள்.
ஹோம் மேக்கர்.
பொருளாதார
ரீதியாக, நடுத்தரக்
குடும்பம்.
செங்கல்பட்டுக்கு
அருகே சிறுகுடி என்னும் கிராமத்தில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உழைப்பை மட்டுமே
மூலதனமாகக் கொண்டிருக்கும் விவசாயக் குடும்பத்தில் ஒரே பெண்ணாகப் பிறந்த வஸந்தாவை
பெற்றோர் தேவையான அளவுக்குப் படிக்க வைத்தார்கள்.
வஸந்தாவும்
பெற்றோர்களின் நம்பிக்கையை ஈடு செய்யும் விதமாக நன்றாகப் படித்தாள்.
தன் முதுகலைப்
பட்ட இறுதியாண்டு தேர்வுக்கு ஒரு வாரம் முன், கல்லூரியில் முகாமிட்டது ஒரு அமெரிக்கத் தொழில்
நுட்ப நிறுவனம்.
கேம்பஸ்
இன்டர்வியூ என்று பரவலாக அறியப்படும், வளாகத் தேர்வில் வஸந்தாவைத் தேர்ந்தெடுத்தது
அந்த நிறுவனம்.
இறுதி செமஸ்டர்
தேர்வுகள் முடிந்த அடுத்த நாளே ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் பயிற்சி முகாமில்
கலந்து கொள்வதற்கான ஆணையும் அவளுக்கு வழங்கப்பட்டது.
***
அத்தியாயம் 10
“சேதி
தெரியுமா...?”
“என்னா சேதி?”
“தனத்தரசி சமாச்சாரம்தான்...”
“யாரு, அந்த மொத புருசன
கழட்டிவிட்ட மவராசிதானே...?”
“உனக்கு புதுக் கதை தெரியாதாங்காட்டியும்...?
“அது என்னாயா புதுக் கதை...?
கேட்டுவிட்டு
காதை தீட்டிக் கொண்டதாள் அமூசு,
கோவில்
குளக்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த பொன்னுரங்கமும், புனிதாவும் சற்றே அடித்துத் துவைத்தலை நிறுத்தினார்கள்.
அப்போதுதான்
ஆற்றங்கரையில் துணி மூட்டையோடு வந்து நின்ற வண்ணான் தீர்காயுசு, காது மடலை மடக்கிக் கொண்டு காத்திருந்தான்.
தலை முழுகப்போன
சரோஜா, ருக்மணி, தேவகி எல்லோரும் முழுகாமல் கழுத்துவரை
நீருக்குள் புதைத்துக் கொண்டு காத்திருந்தார்கள் புதுக்கதை கேட்பதற்காக.
“அந்தச் செருக்கி, தனத்தரசி, தன் ரெண்டாவது புருசனையும் விவாகரத்து
செஞ்சிட்டாளாம்.”
ஆரவல்லி
கெக்கலித்தபடிச் சொல்லி, மொத்தப் பற்களும் வெளியே தெரிய இடியிடியெனச் சிரித்தாள்.
“அடியாத்தீ...!”
“பொம்பளையா அவ...?”
“ஏன்? முணாவதா
எவனையாவது தொரத்தராளா?”
இப்படியெல்லாம்
பலரின் வாய்க்குள் புகுந்து புறப்பட்டுக்கொண்டிருந்தாள் தனத்தரசி.
ஊரெல்லாம்
தனத்தரசியின் செயல்பாடுகள் வைரலாகிக் கொண்டிருந்தன.
தனத்தரசி.
சிறுகுடி கிராமத்
தலையாரியின் ஒரே மகள்.
தலையாரி, தன் வசதிக்குத் தக்கபடி நிறைய செலவு செய்து
மகளை ஒரு பிரசித்தமான கல்லூரியில் படிக்க வைத்தார்.
ஆர்க்கிடெக்ட்
படிப்புப் படித்தபோது கடைசீ செமஸ்டருக்கு முன் வளாகத் தேர்வு நடத்திய அமெரிக்க நிறுவனம் அவளுக்கு வேலை தர, கல்லூரியில் கடைசீ செமஸ்டர் தேர்வு முடிந்த
மறுநாளே புறப்பட்டு புனே சென்றாள்.
கம்பெனி கொடுத்த பயிற்சிகளை பெற்றுக் கொண்டாள்.
கல்கத்தா தலைமை
அலுவலகத்தில் தனத்தரசிக்கு போஸ்டிக் போட்டது நிறுவனத் தலைமையகம்.
***
வேலைக்குப் போன
ஆறாவது மாதம், ஒரு இளைஞனோடு
வீட்டுக்கு வந்தாள் தனத்தரசி.
“அப்பா இவர்
ஜோசப்...” என்று அறிமுகப் படுத்தினாள்.
“.......................”
“நான் இவரை ரிஜிஸ்தர் ஆபீஸ்ல வெச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ப்பா..."
தகவல் சொன்னாள்.
கையில ஜோசப்
போட்ட மோதிரத்தைக் காட்டினாள்.
தகவல் அறிந்த
தலையாரிக்குக் கோபம் தலைக்கு ஏறியது.
‘தாயில்லா
பொண்ணுனு ரொம்ப எடம் கொடுத்துட்டோமா?’ என்று வேதனைப் பட்டார்.
நடந்த எதையும்
மாற்ற முடியாது என்ற யதார்த்தத்தை மனதில் கொண்டு, தன்னை கட்டுப் படுத்திக் கொண்டார்.
நாளாவட்டத்தில், ‘எப்படியோ பொண்ணு நல்லா இருந்தா சரி...” என்று
தனக்குத் தானே சமாதானமும் செய்து கொண்டுவிட்டார்.
கோடிக் கணக்கில்
செலவு செய்து, பெண்ணுக்கு
எப்படியெல்லாமோ தடபுடலாகத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டு, தங்கமும் வெள்ளியுமாக சேர்த்து வைத்த தலையாரி
கொஞ்சம் கொஞ்சமாக யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டார்.
வேறு வழி?
மகள்
தனத்தரசியும் அப்பாவின் சொத்துக்களையோ நகைகளையோ எதிர் பார்க்கவேயில்லை என்பதால்,
‘பேரனோ பேத்தியோ பிறந்தால் அதற்கு அத்தனையும் கொடுத்துவிடலாம் என்று முடிவு
செய்து வைத்திருந்தார் தலையாரி.’
வருடம் ஒன்று
ஆயிற்று.
எதுவும்
விசேஷமாகச் சொல்லவில்லை தனத்தரசி.
***
ஒரு நாள்
முருகானந்தம் என்ற இளைஞனோடு திடீரென்று அப்பாவைப் பார்க்க வந்தாள் தனத்தரசி.
ஒரு வருஷத்திற்கு
முன் ஒரே ஒரு நாள் பார்த்த ஜோசப்பை அடையாளம் தெரியவில்லை தலையாரிக்கு.
ஆனால் முகத்தில்
ஏதோ மாறுதல் இருப்பதாகப் பட்டது. எப்படிக் கேட்பது என்று திணறிக் கொண்டிருந்தார்
அவர்.
அவர் கேட்பதற்கே
இடம் வைக்கவில்லை தனத்தரசி
“அப்பா”
“ம்...”
“என் கூட உள்ளது
யாருன்னுதானே யோசிக்கறீங்க?”
“...........................” அமைதியாக நின்றார் தலையாரி.
“நான் முதல்ல
கல்யாணம் பண்ணிக்கிட்ட ஜோசப் ஒத்து வரல்லைப்பா. அதனால டைவர்ஸ்க்கு அப்ளை
பண்ணிட்டேன். இவரு முருகானந்தம். இவரை நான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்.”
கழுத்தில்
தாலியைக் காட்டி, மிகச்
சாதாரணமாகச் சொல்ல, தலையாரி மூர்ச்சையாகி கீழே விழுந்தார்.
‘ஸ்ட்ரோக்’
என்றனர் மருத்துவர்கள்.
கோமாவுக்குப்
போய்விட்டதாக அறிவித்தார்கள்.
பேச்சு
மூச்சில்லாமல், மல ஜலம்
வெளியறுவதைக் கூட உணர முடியாமல், மணல் மூட்டையாய்ப் படுத்தேக் கிடந்தார்.
ஒரு வாரம். ஒரே
வாரம்தான்.
போய்ச் சேர்ந்து
விட்டார் தலையாரி.
அனைத்து
வகையிலும், ஊரில் உயர்ந்து
நின்ற தலையாரியின் பெருமையெல்லாம், ஒரே மகளால் சந்தியில் நின்றதுதான் இப்போது
ஊர்வாய்க்குக் கிடைத்த அவல்.
இது நடந்து
ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன.
இன்று, இரண்டாவது புருஷன் முருகானந்தத்தையும் தனத்தரசி
விவாகரத்து செய்துவிட்டாள் என்கிற புதிய செய்தி கிராமம் முழுதும் தலைப்புச்
செய்தியாக எதிரொலித்த இந்த நேரத்தில்,
துரதிருஷ்ட வசமாக, வஸந்தா அமெரிக்க நிறுவத்தால்
தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியைக் கொண்டு வர, வசந்தாவின் அப்பாவும் அம்மாவும் கவலைப்
பட்டார்கள்.
***
‘தனத்தரசியின்
தாறுமாறான, ஒழுக்கக் கேடான
நடத்தைகளுக்குக் காரணம் அவள், ஐடி கம்பெனியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, புனே, கல்கத்தா, என டிரெயினிங் போய், ‘யு எஸ்’, ‘யு கே’ என வெளிநாடுகளுக்கெல்லாம் பணி நிமித்தம்
சென்றதுதான்’ என்ற எண்ணம் ஊர் முழுதும் விரவிக் கிடக்க, வஸந்தாவின் பெற்றோர் மட்டும் விதி விலக்கா என்ன?
“தனத்தரசியின் நிலை உனக்கு வந்துட வேண்டாம் வஸந்தா”
அவள் கைப்
பிடித்து, அழுது, அரற்றி ஐ டி கம்பெனி வேலைக்குச் செல்ல அனுமதி
மறுத்தனர் அவள் பெற்றோர்.
அவளும் ‘நான்
போய்தான் தீருவேன்...’ என்று பிடிவாதம் எல்லாம் பிடிக்கவும் இல்லை.
‘பெற்றோர் நம்
நல்லதுக்குத்தான் சொல்வார்கள்’ என்ற திடமான நம்பிக்கையோடு படிப்பு முடிந்ததும், டைப்பிங், ஷார்ட்ஹாண்ட், கம்ப்யூட்டர் வகுப்பு என தன் ஊர் அருகிலேயே
இருக்கும் நிறுவனங்களில் சேர்ந்து தன் தகுதியை வளர்த்துக் கொண்டாள் வஸந்தா.
விவசாயக்
குடும்பத்தில் பிறந்து , சாணி மெழுகிய களிமண் தரையில் படுத்து உறங்கி, அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் படித்தவள்
வஸந்தா.
ஜாதகப் பொருத்தம்
பார்த்து, குலம் கோத்திரம்
விசாரித்து, வங்கிப் பணியாளர்
ராஜேந்திரனை கல்யாணம் செய்து வைத்தனர் பெற்றோர்.
அவர்கள் கடமை
முடிந்துவிட்டதாக நிம்மதியாகவும் இருந்தனர்.
ஓட்டு வீட்டு மண்
தரையில் படுத்த வஸந்தா, கல்யாணத்துக்குப் பின் ஒட்டு வீட்டில், மின்விசிறிக்குக் கீழ் விரிக்கப்பட்ட
மெத்தையில் படுப்பதும், லேப்டாப்பில் மின் புத்தகம் வாசிப்பதுமாக மாறிப்போனாள்...
நாளாவட்டத்தில், கொஞ்சம் கொஞ்சமாக வஸந்தாவின் பொழுது போக்கு
அம்ஸங்களை குறைத்தனர் மாமியார் வீட்டில். பொறுப்புகள் கூடின.
யதார்த்தத்தை
முகம் சுழிக்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டாள்.
குடும்பக்
கடமைகளில் தன்னை முழுக்க முழுக்க அர்ப்பணித்துக் கொண்டாள்.
வயதான தன்
மாமனார் மாமியாருக்குப் பணிவிடை செய்யவேண்டிய தார்மீகக் கடமையை தவறாமல் செய்தாள்.
கணவனை விட நிறைய
படித்துள்ளோம் என்ற இறுமாப்பு சிறிதும் கிடையாது வஸந்தாவுக்கு.
படித்த நாம்
வேலைக்குச் செல்லாமல் இருக்கிறோமே என்ற குறையும் அவளுக்கு இல்லை.
ஒரு பொறுப்புள்ள
குடும்பத் தலைவியாக இருப்பதில் பெருமிதமடைந்தாள்.
என்னதான்
ஆத்மார்த்தமாக, மனப்பூர்வமாக, பெற்றெடுத்தத் தன் தாய் தந்தை ஸ்தானத்தில்
வைத்து மாமியார் மாமனாரைப் பராமரித்தாலும், வழக்கமான மாமியாரின் குணத்தை காட்டிக்
கொண்டுதான் இருந்தாள் கணவனின் தாய்.
மாமனார் மிக மிக
நல்ல குணம் உடையவர்தான் என்றாலும், மாமியாரை மீறி அவர் எப்போதும் எந்தக்
கருத்தையும் தெரிவிக்க விரும்பியதில்லை.
***
மாமியார்
மருமகளுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் எல்லாவற்றையும் கணவனிடம் சொல்லும்
வழக்கம் அறவே கிடையாது வஸந்தாவிற்கு.
அப்படித்தான்
வளர்த்திருக்கிறார்கள் அவள் பெற்றோர்.
இருந்தாலும்
எப்போதாவது, தவிர்க்க முடியாத
பட்சத்தில், “ஏன்
சொல்லவில்லை... என்று எதிர் காலத்தில் பொல்லாப்பு வந்துவிடுமோ...?” என்கிற எண்ணத்தில், ஒரு சிலவற்றை சொல்லவேண்டிய கட்டாயத்துக்கு
ஆட்படும்போது கூட,
“அட்ஜஸ்ட் பண்ணிக் கிட்டுப் போ...” என்று, மனைவி வஸந்தாவிடம் சொல்லுவதோடு சரி. எந்தச்
சூழலிலும், அம்மாவிடம் வாய்
கொடுக்கவே மாட்டான் ராஜேந்திரன்.
‘பெண்கள்
விவகாரத்தில் ஆண்கள் தலையிட்டால் தேவையற்ற சிக்கலாகிவிடும். நிம்மதி போய் விடும்’
என்பதே ராஜேந்திரனின் சித்தாந்தம்.
***
இதுபோல எதிலும்
தலையிடாமல் இருப்பது எஸ்கேபிசம். தப்பித்தல். இது ஆண்மை அல்ல.
ஆண்மை என்பது, தாய்க்கும், மருமகளுக்கும் இடையில் உள்ள கருத்து
வேற்றுமைகளை அறிந்து, அதை அகற்றுதல்.
மனைவியையும்
தாயையும், தாய் மகளாக
மாறும் வண்ணம் மாற்றுதலே ஆண்மை.
தாய், மனைவி இருவரிடம் தனித்தனியே பேசிப்
அவர்களுக்குள் புரிதலை வளர்த்தலே ஆண்மை.
ஆண்மை தவறேல்.
என்ற பாரதியின் கோட்பாடு அறியாதவன் ராஜேந்திரன்.
ஆண்மை தவறியவன்
அவன்.
‘காய்க்கும்
மரத்திற்குக் கல்லடி ஒன்றும் புதிதல்லவே...!’
எல்லாவற்றையும்
பொறுத்துக் கொண்டு, எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல், தன் கடமைகளை முழு ஈடுபாட்டோடு செய்து
கொண்டுதான் இருந்தாள் வஸந்தா.
இப்படியே ஓடிக்
கொண்டிருந்த வாழ்வில் திடீரென சில மாற்றங்கள் வந்தன.
மாமனார்
குளியலறையில் வழுக்கி விழுந்தார்.
ஆஸ்பத்திரிக்கு
தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.
இடுப்பெலும்பு
முறிவு. அறுவை சிகிச்சை செய்து ப்ளேட் பொருத்தப்பட்டது.
மாவுக் கட்டுடன், படுத்த படுக்கையில் கிடந்தார் மாமனார்.
நடுத்தரக்
குடும்பம் ராஜ வைத்தியம் என்றானது சூழ்நிலை.
கணவனுக்கு வரும்
சம்பளத்தை வைத்து, சிக்கனமாகச் செலவு செய்து குடும்பத்தைப் பராமரித்து வந்தாள் வஸந்தா.
இப்படிப் பட்ட
சூழ்நிலையில் “குழந்தைப் பெற்றுக் கொள்வதைத் தள்ளிப் போடலாமே...?” என்று கொஞ்சம் தள்ளிப் போட்டார்கள்
ராஜேந்திரனும் வஸந்தாவும்.
‘பட்ட காலிலே
படும் என்பார்களல்லவா...!”
தொடர்ந்து, பிசியோ தெரபி செய்யப்பட்டதில், வாக்கர் வைத்துத் தன் காரியங்களைப் பார்த்துக்
கொள்ளத் தொடங்கி, சீராகப்
போய்க்கொண்டிருந்த மாமனாரின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு திருப்பம்.
ஒரு நாள் எதிர்
பாராத வேளையில், தலை சுற்ற, வாக்கரோடு மல்லார்ந்து விழுந்தவர்தான்.
பின் மண்டையில்
அடிபட்டு பேச்சு மூச்சில்லாமல், ஒரு வாரம் கோமாவில் கிடந்து ஒரு வழியாய் போய்ச் சேர்ந்து விட்டார்.
அதைத் தொடர்ந்து, கணவன் போன துக்கத்திலும், சொச்ச காலத்தை எப்படித் தள்ளப் போகிறோம்’ என்ற
ஏக்கத்திலும் இரத்த அழுத்தம் அதிமாகி, நெஞ்சுவலி வந்து கணவன் இறந்த நாற்பத்து
எட்டாவது நாள் மாமியாரும் மாண்டாள்.
குறுகிய
காலத்தில், அப்பாவையும்
அம்மாவையும் இழந்துவிட்ட ராஜேந்திரனுக்கு எல்லா வகையிலும் தன்னால் இயன்றவரை ஆறுதல்
தந்தாள் வஸந்தா.
வீட்டில் இருந்த
இறுக்கமான சூழலை மாற்றிக் கொள்ள, வங்கியில் தந்த எல் டி சி சலுகையைப் பயன் படுத்திக் கொண்டு ஊட்டி, கொடைக்கானல் என்று ஒரு பத்து நாட்களுக்கு டூர்
போட்டு என்ஜாய் செய்தார்கள்.
அத்தியாயம் 11
வஸந்தாவிற்கு
நாள் தள்ளிப் போயிற்று,
மாமனார் மாமியார்
உடல் நலமில்லாமல் இருந்த காலத்தில், அடிக்கடி அரசு மருத்துவ மனைக்குச் சென்றபோது, ரத்தப் பரிசோதனை நிலையத்தில் பணி புரியும்
செவிலியின் நட்பு கிடைத்திருந்தது வஸந்தாவிற்கு.
செவிலி
கார்த்திகாவின் வீட்டிற்குப் போனாள்.
அவளிடம் நாள்
தள்ளிப் போகிற விஷயத்தை சொன்னாள் வஸந்தா.
உடனே, தன் வீட்டிலேயே வைத்திருந்த ‘ஹோம் ப்ரக்னன்ஸி
கிட்’ வைத்து டெஸ்ட் போட்டுப் பார்த்தா கார்த்திகா.
‘கிட்’ல் இரண்டு
கோடுகள் கீற்றுக்களாய் தெரிய, கன்கிராஜூலேஷன்ஸ்” என்று வாழ்த்தினாள் செவிலி. சமையறைக்குச் சென்று சர்க்கரை
கொண்டு வந்து வாயில் ஊட்டிவிட்டுக்
கொண்டாடினாள்.
ஒரு பக்கம்
மகிழ்ச்சியும், மறுபுறம்
வெட்கமுமாக மலர்ந்தாள் வஸந்தா.
“ஹோம்கிட்
சமயத்துல எரர் காட்டும். ஏமாத்திரும். வேரியேஷன்ஸ் வர வாய்ப்பு உண்டு. நாளைக்கு
லேப்ல டெஸ்ட் எடுத்துப் பாத்துடலாம்...” என்று செவிலி புன்னகையோடு சொல்ல,
“சரி” என்றாள் வஸந்தா.
***
மறுநாள்,
கணவன் வேலைக்குப்
போன பிறகு, அரசு ஆரம்ப
சுகாதார நிலையத்திற்குச் சென்றாள், நர்ஸ் கார்த்திகாவே பரிசோதனைச்சாலைக்கு
அழைத்துச் சென்று, முறையாகப் பரிசோதனைகள் எல்லாம் செய்தபின், ஓகே கன்கிராட்ஸ் என்று சொல்லி ரிப்போர்ட்
கொடுத்தாள்.
வசந்தாவின், நாக்கை நீட்டச் சொல்லியும், கண்களின் கீழ் இரப்பையை சற்றே கீழ் இறக்கியும்
பார்த்துவிட்டு, ரிப்போர்ட்டை
பரிசீலித்துவிட்டு, கர்ப்பத்தை உறுதி செய்தார் அரசு மருத்துவர்.
செவிலி
கார்த்திகா, மருத்துவமனைப்
பதிவேட்டில் பெயர் பதிந்து கொண்டதோடு, முறைப்படி விவரங்களைப் பதிவு செய்து, மருத்துவ அட்டை வழங்கினார்.
இந்த அட்டைல உள்ள
நம்பர் ஆன் லைன்ல ஏறிரும். நீங்க எந்த ஊர் ஆரம்ப சுகாதார மையத்துக்குப் போனாலும்
இந்த நம்பரைத் தட்டினா, உங்க ஜாதகமே தெரிஞ்சிரும். எதாவது பிரச்சனைன்னா, இங்கேதான் வரணும்னு இல்லே. பக்கத்துல இருக்கற நிலையத்துக்கு
இந்த அட்டையோட போனா போதும்...”
விவரமாகச் சொல்லி
வாழ்த்தி அட்டையைத் தந்தாள் ஆரம்ப சுகாதார மையச் செவிலி.
மேலும், கர்பிணிகளுக்கு என அரசாங்கம் அலாட் செய்துள்ள, மாத்திரை மருந்துகள், சத்துணவு மாவுகள், போன்றவை அடங்கிய சீல் வைக்கப்பட்ட ரோஸ் கலர் கூடையோடு உள் ‘கிட்’ டைத் தந்தாள்.
கிட்’டை போட்டோ
எடுத்து கணவனுக்கு வாட்ஸப் செய்தாள். கைப்பேசியில் விஷயத்தை ராஜேந்திரனுக்குச்
சொன்னாள்.
“அப்படியா...!”
எனக் மகிழ்ந்தவன், “மதியம் லீவு கொடுத்துட்டு வரேன்...” என்றான்.
வந்தான்.
எப்போதும்
அலுவலகத்திலிருந்து வருவதைப் போல வெறும் கையை வீசிக் கொண்டு வந்தான்.
‘தான் அப்பாவான
செய்தியறிந்ததும், முதல் முதலில் தன்னைப் பார்க்க வருகிறார், ஒரு முழம் புஷ்பம் கூட வாங்காமல்
வந்திருக்கிறாரே...!’ என்று ஒரு கணம் ஆதங்கப் பட்டது வஸந்தாவின் மனசு.
அடுத்த கணம், ‘அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.’ என்று மனசை
சமாதானமும் செய்து கொண்டாள்.
ராஜேந்திரன்
வந்ததும் வராததுமாய், சூல் கொண்டதை சோதித்தறிந்து உறுதி செய்ய, இந்த இரண்டு நாட்களாய், தான் செய்த சாகசங்களையெல்லாம் வெள்ளந்தியாக
அவனிடம் சொன்னாள்.
“ஓ... நீயாவே
எல்லாத்தையும் பாத்துக்குவே. அப்படித்தானே...! என்னோட உதவி எதுக்கும்
தேவையில்லைன்னு சொல்லு...!” என்று குத்தலாகப் பேசினான் ராஜேந்திரன்.
“அப்படியா? என்று வியந்து, கன்னம் தடவி உச்சந்தலை முகர்ந்து பாராட்டுவான்’
என்று நினைத்த வஸந்தாவுக்கு ஏமாற்றமாகி விட்டது.
ராஜேந்திரனின்
இடத்தில் தன்னைப் பொருத்திப் பார்த்தாள் வஸந்தா.
‘அவர் பேசியதில்
எந்தத் தவறும் இல்லை என்று முடிவு செய்து கொண்டாள். அவரிடம் தள்ளிப் போன
விஷயத்தைச் சொல்லி அவர் துணையோடு மருத்துவ மனைக்குச் சென்றிருக்கவேண்டும்.
‘சர்ப்ரைஸாக’ இருக்கட்டுமே என்று தன்னந்தனியாக ப்ரக்னன்ஸி டெஸ்ட்க்குப் போனது தன்
தவறுதான்...” என்று சமாதானப் படுத்திக் கொண்டாள்.
“ஸாரிங்க.
சர்ப்ரைஸா இருக்கட்டும்னுதான், உங்க கிட்ட சொல்லாம செஞ்சிட்டேன்...!” என்றாள் வஸந்தா.
இதற்கு
அவனிடமிருந்து எந்த எதிர் வினையும் இல்லை.
மாறாக, “உன் அப்பா அம்மாகிட்டே சொல்லியாச்சா?” என்று கேட்டான். கேள்வியில் குத்தல் இருந்தது.
“அதெப்படிங்க? நீங்க இல்லாம அவங்க கிட்டே நான்
சொல்லுவேன்...!” என்று சொன்னதைக் கேட்டவுடன், கழுத்தை ஒருசாய்த்துக் கொண்டு கேவலமாக ஒரு
பார்வை பார்த்தான் ராஜேந்திரன்.
‘பரவாயில்லையே!
இதையும் தான்தோன்றித் தனமா இல்லாம, புருசனோட சேர்ந்து செய்யணும்னு தோணிச்சே...
அதுவரைக்கும் சந்தோஷம்...’ என்று ஏளனம் செய்வது போல இருந்தது அந்தப் பார்வையும்
உடல் மொழியும்.
‘மனசு விட்டுப்
பேசுவதெல்லாம் குற்றப் பாடாகப் போகிறதே...!’ என்பதை நினைத்து மனசு, விட்டுப் போனது வஸந்தாவுக்கு.
இதற்கு மேல்
ராஜேந்திரனோடு, எதைப்
பேசுவதற்கும், எதை பகிர்ந்து
கொள்வதற்கும், வஸந்தாவிற்குள்
தயக்கம் வந்துவிட்டது.
ஒரு கட்டத்தில், ‘இவர் லீவு போட்டுவிட்டு வந்திருக்கவே
வேண்டாமோ...!’ என்று கூடத் தோன்றியது.
எதுவும் பேசாமல்
அமைதியாகச் சில நிமிடங்கள் கடந்தன.
“இப்பவே மாமா
மாமி கிட்டே சொல்லிருவமா?” என்று கேட்டான் ராஜேந்திரன்.
தொடக்கத்தில், உன் அப்பா அம்மா என்று சொன்னவன், இப்போது மாமா மாமி என்று சொன்னதில், சற்றே ஆறுதல் அவளுக்கு.
“ம்...” என்று
ஒற்றை வார்தையில் பதில் சொன்னாள்.
கைப் பேசியை
ஸ்பீக்கரில் போட்டு, எதிர் முனையையும் ஸ்பீக்கரில் போடச் சொல்லி, “நீங்க பாட்டி தாத்தா ஆகப் போறீங்க...? என்று இருவரும் ஒருவர் பின் ஒருவர்
சொன்னார்கள்.
“அடுத்த ஒன்றரை
மணி நேரத்தில், பழம், புஷ்பம் மஞ்சள் கிழங்கு என மங்கலப்பொருள்களோடு, வஸந்தாவுக்குப் பிடித்த ஆவின் பால்கோவாவும்
சேர்த்து எடுத்துக் கொண்டு, அப்பாவும் அம்மாவும் வந்து சேர்ந்தார்கள்.
***
சிசுவின்
வளர்ச்சிக்கு ஏற்ப, வயிற்றுப் புரட்டல், மசக்கை, வாந்தி என கர்ப
காண்டத்தின் அத்யாயங்கள் தொடர்ந்தன.
அவஸ்தைகளும், கஷ்டங்களுமாக, சுகமான சுமையைச் சுமந்திருந்தபோதுகூட, ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப்போடாமல், தான் உண்டு தன் அலுவலகம் உண்டு என்று இருந்தான்
ராஜேந்திரன்.
சில நேரங்களில்
அவள் செய்யும் சமையல் மணமே, குமட்டலை ஏற்படுத்தியது வசந்தாவிற்கு.
அது போன்ற
சமயங்களில், பத்து பதினைந்து
நிமிடங்கள் சமையல் கட்டை விட்டு வெளியேறி காற்றோட்டமான போர்டிகோவில் மின் விசிறியைச்
சுழலவிட்டுக் கொண்டு, சிறிது நேரம் உலவுவாள். சமநிலைக்கு வந்தவுடன், மீண்டும் சமையலறையில் நுழைந்து மீதி சமையலை
முடிப்பாள்.
மாதா மாதம்
சிசுவின் வளர்ச்சியை சோதித்து அறிய, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதற்குக் கூட
ராஜேந்திரன் ஒத்துழைக்கவில்லை.
நர்ஸ்
கார்த்திகாவின் உதவியால் ஒவ்வொரு செக்அப்’பையும் முடித்தாள்.
***
சிறு குடி
கிராமத்தில், தெருவடைத்துப்
பந்தல் போட்டு, வஸந்தாவிற்கு
வளைகாப்பு, சீமந்தம் எல்லாம்
விமரிசையாக நடத்தி விட்டார்கள் பெற்றோர்.
கை நிறைய
வளையல்களுடன், பிறந்த வீட்டில்
வளைய வந்தாள் வஸந்தா.
வயல்
வெளிகளுக்கெல்லாம் கூட சென்று வந்தாள்.
ஆபீசில் வேலை, ஆடிட்டிங், இன் சர்வீஸ் ட்ரைனிங் என ஏதோ காரணங்களைச்
சொல்லி சொல்லி, சிறுகுடிக்கு
வருவதை மொத்தமாகத் தவிர்த்தான் ராஜேந்திரன்.
சிறுகுடி கிராம
ஆரம்ப சுகாதார நிலையத்தில் வஸந்தாவுக்கு சுகப் பிரசவம் ஆயிற்று.
ஜனனி பிறந்த
அன்று, மருத்துவ மனைக்கு
வந்து சென்றான் ராஜேந்திரன்.
***
‘எதையும் கண்டு
கொள்ளாமல் விட்டேர்த்தியாக, அவர் வேலையை மட்டும் பார்க்கும் ராஜேந்திரனை நினைத்து மிகவும் கவலைப் பட்டாள்
வஸந்தா.
‘இப்படியே
விட்டால் ரொம்பவும் இடம் கொடுத்துவிடும்...’ என்பதை உணர்ந்தாள்.
‘தும்பை விட்டு
வாலைப் பிடிப்பது அறிவீனம்’ என்பதை யோசித்து, குழந்தைக்கு ஆறு மாதம் முடியும் வரை தாய்
தந்தையோடுதான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்த ஜனனி, முடிவை மாற்றிக் கொண்டாள்.
குழந்தை பிறந்த
ஒரே மாதத்திலேயே கணவன் வீட்டுக்கு வந்துவிட்டாள்.
அவ்வப்போது
வஸந்தாவின் அம்மா வந்து ஓரிரு நாட்கள் ஒத்தாசையாக இருந்துவிட்டுப் போனாள்.
மற்ற நாட்களில்
எல்லாம் தனியாகவே, குழந்தையையும், குடுப்ப வேலைகளையும் சமாளித்தாள் வஸந்தா..
குழந்தை ஜனனியும்
மற்ற மற்ற குழந்தைகளைப் போல, அழுவதும், ஆர்ப்பாட்டம்
செய்வதுமாக இல்லாமல், உயிர் உள்ள பொம்மை போலத்தான் கிடந்தது.
பிறந்த போதே, ஜனனி வீரிட்டு அழவில்லை.
‘ஆவிரி ஆவிரி’
எனப் பால் பருகவில்லை.
கை கால்களை
உதைத்துக் கொண்டு சிணுங்கவில்லை.
“பேபி கொஞ்சம்
அப்நார்மல்தான்.
பீடியாட்ரிஷன்
அனுமதியோட நீயூரோ ஒருத்தரை கன்ஸல்ட் பண்ணிருங்க...”
அறிவுறை
வழங்கினார், பிரசவம் பார்த்த
கைனகாலஜிஸ்ட்.
கைனகாலஜிஸ்ட்
சொன்னதை மனதில் வைத்து,
‘ஏங்க ஜனனிய நியூரோ கிட்டே அழைச்சிப் போகணும்க” என்று கேட்கும் போதெல்லாம்
ராஜேந்திரன் தட்டிக் கழித்தான்.
“டாக்டரும்
வேண்டாம், ஒரு
மண்ணாங்கட்டியும் வேண்டாம். சில குழந்தைகளுக்கு பேச்சு வர லேட்டாகும், பேசாம இரு. தானாச் சரியாகும்...” என்று
சொல்லிவிடுவான்.
நடுவில் ஒரு முறை
நர்ஸ் கார்த்திகா வீட்டிற்கு வந்தாள்.
“நீங்க வந்தா, சாதாரணமா பாத்துட்டுப் போயிருங்க சிஸ்டர்.
ஆஸ்பத்திரி, டாக்டர், நியூராலஜிஸ்ட், சைக்காலஜிஸ்ட்னு எதையாவது வஸந்தாகிட்டேச்
சொல்லி அவ மனசைக் கலைச்சிட்டுப் போயிடறீங்க. எனக்குப் பெரிய தலைவலியாவுது...”
என்று
ராஜேந்திரன் கார்த்திகாவிடம் கடுப்படித்துவிட்டார்.
அத்துடன், நர்ஸ் கார்த்திகா, வஸந்தாவுடனான நட்பை முறித்துக் கொண்டாள்.
வஸந்தாவின் செல் நம்பரை ப்ளாக் செய்து விட்டாள்.
***
எல்லா வகையிலும்
கையறு நிலையில் நின்றாள் வஸந்தா.
திக்கற்றவளுக்கு
தெய்வமே துணை... என்ற ரீதியில் ஆண்டவன் மேல் பாரம் போட்டுவிட்டு குழந்தை நார்மலாக
ஆகிவிடுவாள் என்ற நம்பிக்கையோடு பொறுமையாகத்தான் காத்திருந்தாள் வஸந்தா.
***
அத்தியாயம் 12
தாய் தந்தை
காலமான பிறகு, முழுச்
சம்பளத்தையும் வஸந்தா கையில் கொண்டு வந்து கொடுத்து, வீட்டு நிர்வாகத்தைச் செய்யச் சொன்னவன்தான்
ராஜேந்திரன்.
திடீரென்று ஒரு
நாள்,
மாதச் சம்பளப்
பணத்தில் கால் வாசித் தொகையை மட்டுமே
வஸந்தாவின் கையில் கொடுத்தான்.
“ஏன் இவ்வளவுதான்
தரீங்க...?”
வஸந்தா
இயல்பாய்க் கேட்டாள்.
“நீ என்ன என்னோட
ஆடிட்டரா...?”;
“எனக்கு என்ன நிர்வாகம் பண்ணத் தெரியாதா?”;
“குடுத்து வெச்சா மாதிரி கேக்கறே...?”;
“இவ்ளோ நாள் நான் கொடுத்த பணத்துக்கு கணக்கு குட்ரீ...” என்றெல்லாம்
தாறுமாறாகப் பேசினான் ராஜேந்திரன்.
வானத்துக்கும்
பூமிக்குமாய் குதித்தான்.
‘இத்தனை நாள்
இப்படியெல்லாம் பேசியதில்லையே?;
அதுவும், இப்போ ‘ஒரு-வயசுக் குழந்தையை, அதுவும் அப்நார்மலா உள்ள பொண்ணை வெச்சிக்கிட்டுத்
தவிக்கற நேரத்துல, என்கிட்டே ஏன் திடீர்னு இப்படியெல்லாம் நடந்துக்கறார்?’
புரியாமல்
தவித்தாள் வஸந்தா.
‘ஆபீசில் வேலை
பளுவால் இப்படிப் பேசுவாராயிருக்கும்..?’ என்று சமாதானப் படுத்திக் கொண்டாள்.
எதையும் மனதில்
போட்டுக் கொண்டு குழம்பாமல், ‘தெய்வம் விட்ட வழி’, என்று இயல்பாக அனைத்தையும் கடந்து போனாள் வஸந்தா.
***
அதே வாரத்தில், வஸந்தாவின் அப்பாவும் அம்மாவும், வருவதாக போனில் சொல்லி விட்டு ஒரு நாள்
வந்தார்கள்.
தன் பெற்றோர்கள்
வரவிருப்பது தெரிந்தும், அன்று மாலை அலுவலகம் முடிந்து வழக்கமான நேரத்தில் வரவில்லை ராஜேந்திரன்.
கணவனுக்குப்
ஃபோன் செய்தாள் வஸந்தா.
“அப்பாவும்
அம்மாவும் உங்களைப் பார்த்துட்டுத்தான் கிளம்பணுன்னு காத்திருக்காங்க.. எப்ப
வருவீங்க..?” என்று கேட்டாள்.
“ஆடிட் நடக்குது.
நான் வர மிட் நைட் ஆயிரும். அவங்களை ஊருக்கு அனுப்பிரு...” என்றவன், தொடர்ந்து, “அவங்க இப்போ வரலையேனு யார் அழுதாங்க...” என்று
சுருக் எனச் சொல்லிவிட்டு, பேசி இணைப்பைத் துண்டித்து விட்டான் ராஜேந்திரன்.
‘என்ன ஆயிற்று
இவருக்கு? சிறிது
நாட்களாகவே இப்படி மந்திரித்து விட்டதைப் போல இருக்கிறார். முன்னுக்குப் பின்
முரணாகப் பேசுகிறார். இவருக்கு என்ன பிரச்சனை. சொன்னால்தானே தீர்வு காண முடியும்;
இவர்
இப்படியெல்லாம் பேசக்கூடியவர் இல்லையே...?; கொஞ்ச நாட்களாகவே ஏன் இவர் பேச்செல்லாம் ஒரு
மாதிரி இருக்கு...?’
யோசிக்க யோசிக்க, ராஜேந்திரனின் பேச்சு, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதாக
உணர்ந்தாள். வஸந்தாவிற்குள் ராஜேந்திரன் மீது சந்தேகம் தலைத் தூக்கியது.
“மாப்ளை எப்போ
வர்றாராம் வஸந்தா..?” கேட்டாள் அம்மா.
கண்களாலேயே
வினவினார் அப்பா.
“அவருக்கு ஆபீஸ்ல
ஆடிட்டாம். மிட் நைட் ஆயிடும்னு சொன்னாரு. நீங்க புறப்படுங்கப்பா...”
சரி...
மாப்பிள்ளைய ரொம்ப விசாரிச்சதாச் சொல்லு...” என்று சொல்லிவிட்டு மனமே இல்லாமல்
கிளம்பினார்கள்.
அவர்கள்
சென்றபின் வஸந்தா ஒரு முடிவுக்கு வந்தாள்.
***
ஹோம் மேக்கராகவே, இதுநாள் வரை வீட்டோடு இருந்து விட்ட
வஸந்தாவுக்குள் குபீரென போர்குணம் மூண்டது.
குழந்தையை
எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டாள்.
முதன் முறையாக, வாயிற்படி தாண்டினாள்.
வாயிற் கதவை
இழுத்துத் தாழிட்டாள். பூட்டினாள்.
டவுன் பஸ்
ஏறினாள்.
ஐந்து
நிறுத்தங்கள் தாண்டி, ‘பேங்க் ஸ்டாப்பிங்’கில் இறங்கினாள்.
வங்கியின்
கதவுகளில் பூட்டுக்கள் தொங்க, ஒரு கணம் அதிர்ந்தாள்.
“கைப் பேசியில்
ராஜேந்திரனின் எண்களை அழுத்தினாள்.”
“ஏண்டீ சும்மாச் சும்மா போன் பண்ணிக்கிட்டே இருக்கே... ஆடிட்டிங் பிஸியா போய்க்
கிட்டிருக்கு. மிட் நைட் ஆகும்னு சொன்னேனில்லை. அறிவில்லையா ஒனக்கு ... உள் பக்கமா
பூட்டுப் போட்டுட்டுப் படு. மாத்து சாவி போட்டுத் திறந்துக்கிட்டு உள்ளே
வந்துடுவேன். இனிமே இப்படி ஆபீஸ் வேலை நேரத்துல டிஸ்ட்ரப் பண்ணாத...” என்று
கடுப்படித்துவிட்டுக் கட் செய்தான்.
பொய் சொல்கிறார்.
பச்சை பொய் புளுகுகிறார். எங்கோ தவறு இருக்கிறது. என்று உள்ளுணர்வு உணர்த்தியது.
‘ஏதோ பெரிய்ய தப்பு நடக்குது...’ வஸந்தாவின்
சந்தேகம் வலுத்தது.
‘பதறினால்
காரியம் சிதறிப் போகும்.’ என்று எச்சரித்தது அவள் புத்தி.
எதுவாக
இருந்தாலும் சமாளிப்போம். என்று முடிவெடுத்தாள்.
***
வங்கிக் கிளையின்
ஒரு ஓரத்தில் இருந்த ஏடிஎம் க்கு வெளியே, வங்கிச் சீருடையுடன் அமர்ந்திருந்த இரவுக்
காவலர் எழுந்து இவளை நோக்கி வந்தார்.
“நீங்க
ராஜேந்திரன் சார் ஒய்ஃப்தானே...? கல்யாணத்தப்ப பாத்தது...”
வஸந்தாவின் அருகே
வந்து கேட்டார்.
ஆமாம்ணே…
“சாரோட தலைச்சன் பாப்பாங்களா?”
தோளில்
சரிந்திருந்த குழந்தையைப் பார்த்து விசாரித்தார்.
“ம்...”
“ஏம்மா...! என்று தொடங்கினார்.
சந்நதம்
வந்தவரைப் போல ராஜேந்திரனின் நடவடிக்கைகளைப் பற்றி கதை கதையாகச் சொன்னார்.
சொல்லிய
அனைத்தையும் கேட்ட வஸந்தாவுக்கு மயக்கமே வந்துவிடும் போல இருந்தது.
இத்தனை நாட்கள்
ராஜேந்திரனின் இழிவான நடவடிக்கைகளுக்குக் காரணம் மலர் என்ற மேனேஜர்தான் காரணம்
என்பது இப்போது தெரிந்துவிட்டது.
“என் மக
மாதிரிம்மா நீங்க. நான் சொன்னதா காட்டிக்கிடாதீங்கம்மா... எனக்குச்
சிக்கலாயிரும்.” என்றார் வயதான அந்தக் காவலர்.
“நிச்சயமா உங்களை
எந்த இடத்துலயும் காட்டிக் கொடுக்க மாட்டேன்ணே...” என்று சொல்லிவிட்டு முட்டிக்
கொண்டு வந்த அழுகையை வலிந்து அடக்கிக் கொண்டாள்.
அழுவது
கோழைத்தனம் என்று முடிவெடுத்தாள்.
அடுத்து
ஆகவேண்டியதை யோசித்தாள்.
மனதை ஒருமுகப்
படுத்தினாள்.
சுதாரித்தாள்.
வீட்டை
அடைந்தாள்.
‘துச்சமாக எண்ணி
நம்மை தூறு செய்த போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...’ என்ற
பாடல் வரிகளுக்கு உருவம் கொடுத்தாற்போல இருந்தது வஸந்தாவின் நடவடிக்கைகள்
அத்தனையும்.
***
விடிகாலையில்தான்
வீடு திரும்பினான் ராஜேந்திரன்.
இரவு வங்கிக்கு
வந்ததையோ,
மலர் என்ற
பெண்ணின் வலையில் வீழ்ந்து விட்டதாக அவனைப் பற்றிக் கேள்விப் பட்டதையோ
வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
“ஆடிட்டிங் விடிய
விடிய நடக்குங்களா?” நிதானமாய் கேட்டாள்.
ஆமாம். பேங்ல
எல்லாரும் இப்பத்தான் போறாங்க. நானும் பூட்டிக்கிட்டு வரேன். இன்னும் ரெண்டு மணி
நேரத்துல திரும்பவும் திறக்கணும். வர வர பேங்க்ல வேலை ரொம்பரொம்ப
அதிகமாயிருச்சு...” என்று பொய்யாக அங்கலாய்த்துக் கொண்டான் ராஜேந்திரன்.
‘என்னமாய்
நடிக்கிறான்...?’ என்று நினைத்துக்
கொண்டாள்.
ஒவ்வொரு நாளாகக்
கழுத்தைப் பிடித்துத் தள்ளினாள்.
காலத்தை
ஓட்டினாள். அவ்வப்போது,
“குழந்தையை மருத்துவரிடம் காட்ட அழைத்துச் செல்வோமா?”
என்று கேட்பதும், ராஜேந்திரன் “வேண்டாம்...” என்று மறுப்பதும் வாடிக்கையானது.
கணவன் மறுப்பான்
என்பதால் வஸந்தா கேட்காமல் இருப்பதில்லை. என்றோ ஒரு நாள் மனம் திருந்தி அழைத்துச்
செல்வான் என்கிற அசாத்திய நம்பிக்கை இருக்கத்தான் செய்தது அவளுக்கு.
நாளாவட்டத்தில்
எல்லாம் வழிக்கு வந்துவிடும் என்று திடமாக நம்பினாள்.
அதற்குப்
பின்னும் மூன்று மாதங்கள் பொறுமையாய்க் காத்திருந்தும் பயன் ஏதுமில்லை.
மேலும்
காத்திருக்கப் பொறுமையும் இல்லை வஸந்தாவிற்கு.
பெற்ற குழந்தையை
உருப்படி செய்ய வேண்டிய நிர்பந்தம் அவளை முடுக்கி விட்டது.
பொறுத்தது போதும்
பொங்கி எழு என உறுமியது அவள் மனம்.
வெடித்து
விட்டாள்.
சாது மிரண்டால்
காடு தாங்காதல்லவா.
கீழ்ப்பாக்கம் மன
நல மருத்துவமனை வளாகத்தில் வைத்து, மொத்தமாக ராஜேந்திரன் உறவையே முறித்துக்
கொண்டாள் வஸந்தா.
***
மகள்
வஸந்தாவையும் பேத்தி ஜனனியையும் பார்த்துவிட்டு, பேருந்தில் ஊருக்குத் திரும்பிக்
கொண்டிருந்தபோது, ஜனனியின் தாத்தா
சற்றே கண்ணயர்ந்தார்.
ஆனால் வஸந்தாவின்
அம்மாவோ மனதில் ஏதேதோ குறுகுறுப்பும் கவலைகளும் ஆக்ரமித்திருக்க, தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாள்.
“என்னங்க...
என்னங்க...!”
“ம்...”
“வஸந்தாவுக்கு ஏதோ கடுமையான பிரச்சனைனு நினைக்கறேன். அவ நம்ம கிட்டே எதையோ
மறைக்கறானு தோணுதுங்க...”
“எதை வெச்சிச் சொல்றே நீ?”
“நாம வரும்போதெல்லாம் மாப்பிள்ளை நம்மை தவிர்க்கறாரு. பேத்தியோ எல்லா
குழந்தைகளையும் போல நார்மலா இல்லை. ஆசுபத்திரிக்கும் அழைச்சிப் போக
மாட்டேங்கறாராம் மாப்ளை.”
புருஷன்
பொஞ்சாதிக்குள்ள ஆயிரம் இருக்கும். இன்னைக்கு அடிச்சுக்குவாங்க. நாளைக்கு
சேர்ந்துக்குவாங்க. அதுலல்லாம் நாம மூக்கை நுழைக்கக் கூடாது. பேசாம வா.” என்று ஒரே
போடாய்ப் போட்டு அடக்கி விட்டார். அவர்.
***
வஸந்தாவின்
பிடிவாதத்தால் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனைக்குச் சென்றுவிட்டு, டாக்டர் எதிரிலேயே வஸந்தாவையும், குழந்தையையும் கேவலமாய்ப் பேசிவிட்டு, அவர்களை சந்தியில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு
வந்தான் ராஜேந்திரன்.
“அவளுக்குப்
போக்கிடம் வேற ஏது? திரும்பி இங்கேதானே வரணும்... பாத்துக்கலாம்... என்று கருவினான்.
வங்கியில் நகைத்
திருட்டுப் பிரச்சனையில் வசமாக மாட்டிக் கொண்டு விசாரணை வளையத்தில் சிக்குண்டு மன
உளைச்சலில தவிக்கும் ராஜேந்திரனுக்கு வீட்டிலும் நிம்மதி இல்லை.
கட்டப்
பஞ்சாயத்து, டிபார்ட்மெண்டல்
என்கொயரி, நட்பு வட்டத்தில்
பேச்சு வார்த்தை, என்று
ராஜேந்திரன் நாயாய் அலைக்கழிக்கப்பட்டான்.
கட்டிய
மனைவியிடம் மறைத்துவிட்டு, எப்படியாவது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். என்ற நினைக்கிற ஆண்கள்
கோழைகள்.
சுகத்திலும் துக்கத்திலும்
பங்கு கொள்வேன் என்று அக்னி சாட்சியாக ஏற்றுக் கொண்ட பெண், நிச்சயம் கணவனின் கஷ்ட காலங்களில் கூடவே
நிற்பாள் என்பதுதான் மனித குல வரலாறு.
***
இரவு வெகு நேரம்
தூக்கம் வராமல் புரண்டுகொண்டு இருந்தான் ராஜேந்திரன். வஸந்தா குழந்தையோடு வீடு திரும்பவே
இல்லை என்பது பெருத்த ஏமாற்றமாகவும், பெருத்த அவமானமாகவும் இருந்தது.
அவளைக்
கைப்பேசியில் தொடர்ப்பு கொள்வதற்கும் ராஜேந்திரனின் தன்முனைப்பு இடம் தரவில்லை.
நகைத் திருட்டுப்
பிரச்சனை வேறு திகிலூட்டியது.
எப்போது
தூங்கினானோ தெரியாது. காலையில் எழும்போது மிகவும் தாமதமாகிவிட்டது.
அதற்குப் பிறகு, புறப்பட்டு, ஓட்டலில் சாப்பிட்டு அலுவலகம் விரைந்தான்.
தாமதமாக
வருகிறோம் என்கிற பரபரப்பில், அவசர அவசரமாக, அப்போதுதான் ராஜேந்திரன் வங்கிக்குள் நுழைந்தான்.
“ராஜேந்திரன்...”
“............................”
“ஏன் சோகமா இருக்கே? உன்னை பிரச்சனைலேர்ந்து வெளீல கொண்டு வர்றது என் பொறுப்பு” என்றார் வங்கி
மேலாளர் மலர்.
சமீபத்தில்
மேலாளராக இந்தக் கிளையில் பொறுப்பேற்றவர்.
வங்கி மேலாளர்
மலருக்கு, ஆண் குழந்தை
பிறந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.
மகப்பேறு மற்றும்
சம்பளமில்லா விடுப்பில் ஒரு வருடம் இருந்தவள்.
வயிற்றில்
குழந்தை எட்டு மாதமாக இருக்கும்போதே, கணவனை ஒரு விபத்தில் இழந்து விட்டவள் மலர்.
பதவு உயர்வு
பெற்று. இந்தக் கிளைக்கு மாற்றலாகி வந்தவள்.
டவுனில் தனி வீடு
பார்த்துக் குடியிருக்கிறாள்.
தன் ஒரே மகனை, பேபி சிட்டர் போட்டு வளர்க்கிறாள்.
ஒற்றைப்
பெற்றோராக குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதே அவளுக்கு முன் நிற்கும் ஒரே சவால்.
மலர்க்கு, கோவையில், பெரிய பூர்வீக வீடு இருக்கிறது.
ஒரு முறை நகைத்
திருட்டு சம்பந்தமாக போலீஸ் கெடுபிடிகள் தீவிரமான போது, ராஜேந்திரனை அந்தக் கோவை வீட்டில்தான் தலை
மறைவாக வைத்து, பெயில்
வாங்கினாள் மலர்.
இந்த
நகைத்திருட்டில் குற்றவாளி யார் என்பது தெள்ளத் தெளிவாக மலருக்குத் தெரியும்.
சி சி டி வி
கேமராக்களை அணுஅணுவாகச் சோதித்துப் பார்த்துவிட்டாள்.
ஜோடிக்கப்பட்ட
வழக்குகளை உடைப்பது மிகவும் கடினம்.
அது போன்ற
வழக்குகளை நியாயமான முறையில் தீர்க்க, காலம்தான் ஒரே ஆயுதம் என்பதை அறிந்தவள் மலர்.
மலர் எப்போதும்
ராஜேந்திரனுக்கு ஆறுதலாய் நேர்மறையாகத்தான் பேசுவாள்.
***
இப்போதெல்லாம் பல வங்கிகளின் நடை முறைகள்
இதுதான்.
ஆட்குறைப்புகளினால்
ஏற்படும் பாதிப்பை சரிகட்டுவதற்காக, ‘ஓஏ’வுக்கு தனி மேசை நாற்காலி, கம்ப்யூட்டர் எல்லாம் கொடுத்து, புது அக்கவுண்ட் ஓப்பனிங், பாஸ் புத்தகம் எண்ட்ரி போடுதல், அவ்வப்போது வரும் மின்னஞ்சல்களை பதிவிறக்கம்
செய்து பிரிண்ட் அவுட் எடுத்தல், இப்படியாக ஒரு குமாஸ்தாவைப் போல வேலை வாங்கி விடுகிறார்கள் சாமர்த்தியமுள்ள
மேனேஜர்கள்.
லாக்கர் திறந்து
பார்க்க வருபவர்களுக்கு அஸிஸ்டெண்ட் மானேஜர்தான் சென்று லாக்கர் திறந்து விட
வேண்டும், அதையும் ஓ ஏவை
விட்டே செய்யச் சொல்வது இப்போதெல்லாம் நடைமுறை வழக்கமாகி விட்டது.
மேனேஜராக மலர்
வந்தபிறகு, அவர் பல படி மேலே
போய்விட்டாள்.
ஓ ஏ
ராஜேந்திரனுக்கு கம்யூட்டரில் எக்ஸ் எல் எப்படிப் பயன் படுத்துவது என்பதை, புதிதாக கிளைக்கு வந்த அரிமா மூலம் கற்றுக்
கொடுக்கச் செய்தாள்.
கம்யூட்டர்
சகிதம் தனி மேசை நாற்காலிகள் போட்டு, ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ரேஞ்சுக்கு
உயர்த்தி விட்டபோது அது ராஜேந்திரனுக்குப் பெருமையாகத்தான் இருந்தது.
அது மட்டுமில்லை.
மலர், தன் பொறுப்புகள் எல்லாவற்றையும் உதவி மேலாளரின்
தலையில் கட்டிவிட்டார்.
எல்லா நாட்களும்
பிஸியாக இருக்கும் நகைக்கடன் பிரிவில், அப்ரைசரோடு இணைந்து நகை லாக்கர் திறந்து அடகு
பிடித்த நகைகளை வைப்பதும், மீட்க வருபவர்களுக்கு எடுத்துக் கொடுப்பதுமான, மிகவும் பிஸியான, ரிஸ்க்கான வேலையை துணை மேலாளரிடமிருந்து
பறித்து, ராஜேந்திரனிடம்
கொடுத்தாள்.
மேனேஜரை
எதிர்த்துப் பேசத் திராணியின்றி அந்த வேலையை ஏற்றுக் கொண்டான் ராஜேந்திரன்.
வேண்டாத வேலையைச்
செய்தால் விளைவுகள் மோசமாகத்தானே இருக்கும்.
பாபுலால் குப்தா, தான் அடகு வைத்த நகைகளில் நான்கு சவரன்
சங்கிலிகள் இருந்த மூன்று கவரைக் காணவில்லை என்று புகார் எழுப்ப, அந்தப் பழி ராஜேந்திரன் மீது விழுந்தது.
***
அத்தியாயம் 13
வயல்வெளியிலிருந்து
வந்துவிட்டார் அப்பா.
வீட்டில் மகளையும்
பேத்தியையும் கண்டதும் முகத்தில் ஆனந்தம் ஒரு புறமும், அதிர்ச்சி மறு புறமும் விரவியது.
“அறுத்துக்
கட்டிக் கிட்டு வந்திருக்கா...” அம்மாவின் குரல் ஆத்திரமாக வந்தது.
அப்பா ஏதும்
கேள்வி கேட்கவில்லை.
“சாப்டியாம்மா?”
“சாப்ட்டேம்ப்பா”
“உன்னோட திட்டம் என்ன?”
“குட்டிம்மாவை ஒரு நல்ல நிலைக்கு உயர்த்தணும்ப்பா.”
“அதுக்கு என்ன செய்யப் போறே?”
பாப்பாவுக்கு
விவசாயத்துல ஆர்வம் இருக்கு. விவசாயச் சூழல்ல வளர்க்கறதுதான் நல்லது’ என்று, மருதுவர் சொன்ன அனைத்தையும் அப்பாவிடம் சொல்லி
முடித்தாள் வஸந்தா.
ஓ கே .. அப்படியே
செய்துடுவோம். டாக்டர் சொன்ன ‘சிறிய பேராசிரியர் குறைபாடு’ பற்றி கூகுள் செய்து
பார்த்தா நிறைய விவரங்கள் கிடைக்கும். ஆனா அதுபோல கூகுள் சொல்ற விஷயத்தை
வெச்சிக்கிட்டு செய்யற எந்த அணுகுமுறையும் வெற்றிகரமா அமையாதுங்கறது என்னோட
கருத்து வஸந்தா.
“நானும் அதை
ஒத்துக்கறேன்ப்பா.”
“அப்படின்னா ஒண்ணு செய்யி. என் பெட்டீல இருக்கற உன்னோட ப்ளஸ் டூ டாகுமெண்ட்ஸ், பிஜி டிகிரி, மார்க் லிஸ்ட், டிசி எல்லாத்தையும் சரிபாத்து எடுத்துக்கோ, மெட்ராஸ் யுனிவர்சிடி வரைக்கும் போய், தொலை தூரக் கல்வீல எம் ஏ சைக்காலஜி கோர்ஸ்ல
ஸ்பாட் அட்மிஷன் போட்டுட்டு வந்துருவோம்.”
உணர்ச்சி
வசப்பட்ட நிலையில் அவள் கண்களிலிருந்து நன்றிக் கண்ணீர் ஊற்றெடுத்தது.
“உங்களாலத்தான்
இப்படியெல்லாம் யோசிக்க முடியும்ப்ப “அ...ப்...பா...” என்று அவர் தோளில் வந்து
சாய்ந்து கொண்டாள் வஸந்தா.
கோர்ஸ் சேர்ந்து
படிச்சா, கான்ட்டாக்ட்
செமினார் வகுப்புகள்ல, அடிப்படைலேர்ந்து பல விஷயங்களைச் சொல்லித்தருவாங்க. நம்ம பாப்பாவோட
நிலைமையையும் பேராசிரியர்கள்கிட்டே சொன்னா ரெமடி சொல்லுவாங்க. கோர்ஸ் படிக்கறதுனால, அந்த ரெமடியை எப்படி அணுகணும்னும் நமக்குத்
தெரியும். எல்லாத்தையும் உத்தேசிச்சித்தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்...”
அப்பாவின்
அணுகுமுறையைக் கண்டு பிரமித்துவிட்டாள் வஸந்தா.
***
‘டிகிரி படிக்கவேண்டும் என்று முடிவெடுத்தபின், ஏன் காலத்தைக் கடத்த வேண்டும்...’ என்று
உடனடியாக செயலில் இறங்கினர் வஸந்தாவும் அவள் அப்பாவும்.
“குழந்தையைப்
பாத்துக்க. யுனிவர்சிடி வரைக்கும் போயிட்டு வந்துர்றேன்.” என்றார் வஸந்தாவின்
அப்பா.
வஸந்தாவை பேக்
செய்து கணவன் வீட்டுக்கு அனுப்பும் நோக்கத்தில் இருந்த அம்மாவிற்கு, அப்பாவின் முடிவு அதிர்ச்சி அளித்தது. அதே
சமயம், ‘அவர் ஒரு
முடிவெடுத்துவிட்டால் தெய்வமே வந்தாலும் அதை மாற்ற முடியாது...’ என்பதை
அனுபவத்தில் நன்கு அறிந்த அம்மா எதுவும் எதிர்வினை புரியாமல் பேசாமல் இருந்து
விட்டாள்.
செங்கல்பட்டு
ரயில் நிலையத்தில், சேப்பாக்கத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு, லோக்கல் ரயிலில் ஏறி, சேப்பாக்கம் இறங்கி, பல்கலைக் கழகத்தில் ஸ்பாட் அட்மிஷன் முடித்து, தொலை தூரக் கல்விப் பிரிவில் எம் ஏ சைக்காலஜி
மாணவி, என உறுதி
செய்யும் பல்கலைக் கழக இலச்சினையிட்ட அடையாள அட்டையும், முதல் பருவத்துக்கான ஐந்து
பாடப்புத்தகங்களையும் பெற்று, வீட்டுக்குத் திரும்பும் வரை, அப்பாவும் மகளும், பலப் பல விஷயங்களைப் பேசினார்கள். அப்பாவின் அறிவார்ந்த பேச்சுக்களும், அனுபவப் பகிர்வுகளும் வஸந்தாவுக்கு அபரிமிதமான
நம்பிக்கையை ஏற்படுத்தியது.
நிறைய
திட்டங்களைப் பற்றி விவாதித்தார்கள்.
வானத்தில் கோட்டை
கட்டாமல், தங்கள் சக்திக்கு
உட்பட்டு, தங்களால்
என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைப் பற்றிப் பேசி முடிவெடுத்தார்கள்.
***
“அழறது எந்த விதத்துலயும் பிரச்சனைக்குத்
தீர்வாகாது ராஜேந்திரா.” என்றாள் மேனேஜர் மலர்.
நகைத் திருட்டுச் சம்பவத்துக்குப் அதை
மறைப்பதற்காக வீட்டில் எப்படியெல்லாம் தாறுமாறாக நடந்து கொண்டதையும், உச்ச பட்சமாக, முதல் நாள் மனைவி வஸந்தாவோடு மனநல
மருத்துவமனையில் ஏற்பட்ட மோசமான நிகழ்வுகளையும், அவள் மொத்தமாகத் தன்னை தலைமுழுகிவிட்டுச்
சென்றதையும் கூறி கண் கலங்கினான் ராஜேந்திரன்.
“ராஜேந்திரா, நீ நிரபராதினு எனக்குத் தெரியும்.
சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் உனக்கு எதிரா செயல்படறதுனால கொஞ்சம் நிதானமா அணுக
வேண்டியிருக்கு. எல்லாம் சரியாயிரும். கவலைப்படாதே...” என்று ஆறுதல் கூறியதோடு, போன் போட்டு உன் மனைவியோட பேசி அவளுக்கு
நிலைமையைப் புரிய வை.” என்றும் சொன்னாள் மலர்.
“ஹலோ மிஸ்டர் ராஜேந்திரன். உங்களை மொத்தமா தலை
முழுகிட்டு இங்கே என்னோடயே இருக்கற முடிவுல வந்துட்ட வஸந்தா, உங்க கிட்டே பேச விருப்பமில்லைனு உறுதியா
சொல்லிட்டா. இனிமே போன் பண்ணி தொந்தரவு பண்ணாதீங்க.” என்று நிதானமாகச்
சொல்லிவிட்டு கட் செய்து விட்டார் வஸந்தாவின் அப்பா.
“மாப்ளே மாப்ளே...” என்று பாசத்தோடு பேசும் அவரே இந்த அளவுக்கு
வெட்டிப் பேசுகிறார் என்பதைப் யோசித்தபோது, இனி எவரிடமும் பேசிப் பயனில்லை என்பதை முடிவு
செய்து கொண்டான்.
வங்கித் தலைமை நகைத் திருட்டு விசாரணையைத்
தீவிரப் படுத்திய நிலையில், ராஜேந்திரனை தற்காலிகப் பதவி நீக்கம் செய்து ஆணை பிறப்பிக்க உத்தரவிட, அதை உடைப்பதற்காக மலர் தலைமை அலுவலகத்திற்குச்
சென்று, பேசி, பதவி நீக்கம் என்றில்லாமல், சம்பளமில்லா விடுப்பில் அனுப்பினாள்.
வஸந்தா, குழந்தை இருவரும் இல்லாத வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை ராஜேந்திரனுக்கு. ஒரு முறை சிறுகுடிக்குப் போய் பார்த்துவிட்டு
வரலாமே என்று சென்றான்.
தெருவிலேயே நிறுத்தித் திருப்பி அனுப்பினார்
முன்னாள் மாமனார்.
தன்னுடைய கடந்த காலத் தவறுக்குப் பிராயச்சித்தமாக
தனித்து வாழத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டான் ராஜேந்திரன்.
மலர், ராஜேந்திரனை குற்றச் சாட்டிலிருந்து வெளிக்
கொண்டு வர பிரம்மப் பிரயத்தனம் எடுத்தாள். பல முறை டெல்லி, கல்கத்தா என்று சேர்மேன் வரை பார்த்தாள்.
அவள் வெளியூர்
செல்லும் நேரங்களிலெல்லாம் ராஜேந்திரன்தான் மலர் வீட்டுக்கும், மலர் மகனுக்கும் காவல்.
வெறுமையில்
இருந்த ராஜேந்திரனுக்கு, மலரின் மகனோடு இருப்பது ஒரு மன ஆறுதலைத் தந்தது.
***
“காலேஜ்ல படிச்ச
நீங்க போயி நாத்து பறிக்க நிக்கறது நல்லாவா இருக்கு...?” ஜோதி கேட்க,
“அதானே... நீங்க நாத்து பறிக்கறதாவது. பேசாம பாப்பாவோட அந்த மரத்தடீல குந்துங்க
அம்மணி” என்றாள் வேணி.
“எல்லாரும்
கேட்டுக்கங்க. என்று தொடங்கி, இந்த வயல் எங்க அப்பாவுக்குத்தான் சொந்தம். மொதலாளி மகளா நான் இங்கே வரல்லை.
ஒரு லேபரா வந்திருக்கேன். புருசனோட ஒத்து வரலை. நான் தனியா நின்னு குழந்தையை
வளர்த்து ஆளாக்கறேன்னு சவாலோட இங்கே வந்துருக்கேன். எங்க அப்பா வயல்ல மட்டுமில்ல.
ஊர்ல எங்கே நாத்து பறி, நடவு, களையெடுப்பு, அறுப்பு, போரடி னு எந்த வேலையா இருந்தாலும் என்னையும்
சேத்துக்கணும்னு உங்க எல்லாரையும் கேட்டுக்கறேன்.” தெளிவாக அனைத்தையும் உடைத்துப்
பேசினாள் வஸந்தா.
வஸந்தா சொல்ற
மாதிரி, அவளையும் உங்களோட
ஒருத்தரா சேத்துக்கங்க.” என்று வழி மொழிந்தார் வஸந்தாவின் அப்பா.
அனைவரும் அதைப்
புரிந்து கொண்டாலும், முதலாளியின் மகள் தங்களோடு சேர்ந்து வேலை செய்வதை நினைத்து சற்றே கூச்சப்
பட்டார்கள்.
“நாத்துப்
பறிக்கு வந்தீகளா...
காத்து வாங்க
வந்தீகளா...
சேத்துல
இறங்கிடுவோம்...
நாத்துப்
பறிச்சிடுவோம்...
என்று பலமாகப்
பாடியபடி வஸந்தா முதலில் வந்து வயலில் இறங்க, மற்ற கூலியாட்களும் கூச்சம் தெளிந்து சேற்றில்
இறங்கினார்கள்.
தன் சொந்த
வயலிலேயே விவசாயக் கூலியாக இறங்கி வேலை செய்யும் வஸந்தாவை எல்லோருமே நேசிக்கத்
தொடங்கிவிட்டார்கள்.
பாட்டும், குலவையுமாக வயலில் வேலை செய்யும்போது ஜனனி
சந்தோஷமாக சிரித்து விளையாடினாள்.
தாத்தா சின்னக்
குழந்தைதானே என்று பார்க்காமல், ஜனனிக்கு விவசாயத்தைப் பற்றியெல்லாம் சீரியஸாக சொன்னார்.
நாற்று பறி, நடவு, களை எடுத்தல், அறுப்பு, கட்டு கட்டுதல், கட்டு அடித்தல், தூற்றுதல், வைக்கோல் போர் போடுதல், உழவு, பரம்படித்தல், வரப்பு வெட்டுதல் வருடக் கணக்கில் அனைத்து
விவசாய வேலைகளையும் பார்த்துப் பார்த்து வளர்ந்தாள் ஜனனி.
***
சைக்காலஜி
படிப்பு ஒரு புறம் காண்ட்டாக்ட் செமினார் வகுப்புகள், பிராக்டிகல் வகுப்புகள், ரெக்கார்ட் எழுதுவது, வைவா ஓசி என்கிற நேர்முகத் தேர்வுகள் என போய்
கொண்டிருக்க, நேசித்துப்
படிக்கும் வஸந்தாவுக்கு நிறைய விஷயங்கள் கிடைத்தன.
நூலகத்தில்
குறிப்பெடுத்தலும், கூகுள் செய்து பார்ப்பதுமாக, ஆழ்ந்து படித்து அறிவை விரிவு செய்வதும், அகண்டமாக்குதலுமாக முன்னேறினாள் வஸந்தா.
உடலுழைப்பும், மூளை உழைப்பும் சமச்சீராக வளர்ந்தன
வஸந்தாவிற்கு. தன் வளர்ச்சியின் சாரத்தை ஜனனிக்குள் கடத்தினாள்.
நல்ல அடிவாரம் போட்டதால் தொடக்கக் கல்வியை
சிறப்பாகக் கடந்த ஜனனி பள்ளிக் கல்வியின் போது, அறிவியல் கழகம் நடத்திய கண்டுபிடிப்புகள்
நிகழ்வில், ஊடு பயிர் பற்றி
ஆய்வு செய்து, சமர்ப்பித்த
கட்டுரை மாநில அளவில் தேர்வாகியது.
வானமே எல்லையாய்
உயர்ந்து கொண்டே இருந்தாள் ஜனனி.
***
வருடக் கணக்கில
போராடி, உண்மையான
குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்ததோடு ஒரு வழியாக ராஜேந்திரனின் மேல் இருந்த
களங்கத்தையும் போக்கி, வங்கி நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்த சம்பள அரியர் அனைத்தையும் பெற்றுத்
தந்தும் விட்டாள்.
இந்த நிலையிலும்
ஒரு முறை வஸந்தாவோடு தொலைப் பேசியில் பேசிப் பார்த்தான் ராஜேந்திரன். இப்போதும்
முன்னாள் மாமனாரேதான் பேசினார். அவள் திட்டத்தில் ஏதும் மாற்றமில்லை என்பது
உறுதியானது.
குடும்பத்திலும்
உத்யோகத்திலும், நிறைய அவமானங்களைப்
பெற்றுவிட்டதால் இதே கிளையில் பணியாற்ற விரும்பமில்லாமல், மலர், ராஜேந்திரன் இருவருமே கோயம்புத்தூர் கிளைக்கு
மாற்றல் வாங்கிச் சென்றார்கள்.
தனியாக வீடு
பிடிக்கும் வரை மலர் வீட்டிலேயே தங்கிக் கொள்ளலாம் என்று எண்ணிய ராஜேந்திரனுக்கு
அங்கேயே தொடர்ந்து தங்கி அவள் மகனுக்கு ஒரு பாதுகாவலனாக இருக்குமாறு செய்தது விதி.
மலர் ஹார்ட்
அட்டாக்கில் இறந்து போக. அவள் மகனை வளர்க்கும் பொறுப்பில் தன்னை ஈடுபடுத்திக்
கொண்டான் ராஜேந்திரன்.
அத்தியாயம் 14
சிறுகுடி
கிராமத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன் தன் துவக்கக் கல்வியைத் தொடங்கிய ஜனனி, உலகம் போற்றும் கண்டுபிடிப்பை அர்பணித்த புகழ்
பெற்ற விஞ்ஞானியாக, அதே பள்ளி வளாகத்துக்கு, இப்போது ராஜ மரியாதையுடன் வருகிறாள்.
இந்த இருபது
ஆண்டுகளில் ஜனனியின், தோற்றமும், ஆளுமையும், வாழ்க்கைத் தரமும் உயர்ந்ததைப் போலவே, பள்ளியின் தோற்றமும், உட்கட்டமைப்புகளும் வெகுவாக மாறியிருந்தன.
அன்று ஓட்டுக்
கட்டடத்தில் இயங்கிய பள்ளி, இப்போது கான்கிரீட் ஒட்டுக் கட்டடத்தில் இயங்குகிறது.
அது மட்டுமா, ஜனனி படித்தபோது, ஓராசிரியர் பள்ளியாக இருந்த நிலை மாறி இப்போது
நான்கு ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியாக உயர்ந்திருக்கிறது.
பள்ளி முகப்பில், மரவட்டைமேல் இருப்பது போல, கருப்பும் சிகப்புமாகக் கோடுகள் போடப்பட்டு, கூராகச் சீவப்பட்ட நடராஜ் பென்சில் ஒன்றில், கூர் பக்கம் ஒரு சிறுமி, வலது கையில் புத்தகத்தோடு அமர்ந்திருக்க,
பென்சிலின்
பின்புறம் ஒரு சிறுவன் வலது கையால் தம்ஸ் அப் காட்டியபடி அமர்ந்து, சந்தோஷமாக பென்சில் பயணம் செய்யும் சர்வ சிஷ்ய
அபியான் பேனர், அனைவர்க்கும்
கல்வி’ என்பதை அறிவித்துக் கொண்டு நின்றது.
இரண்டு
நாட்களாகவே சிறுகுடி கிராமம் பரபரப்பாகத்தான் இருக்கிறது.
அவ்வப்போது
மாவட்ட ஆட்சியர், துணை மாவட்ட
ஆட்சியர் , வட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர், மந்திரி என அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் அங்கே வந்து செல்வதால், தூய்மைப் பணியானது ஓயாமல் நிகழ்ந்து கொண்டேதான்
இருந்தது.
குளோரினை
கூடையில் கொட்டி குறிப்பிட்ட இடைவெளிகளில் தட்டி, போடப்பட்டிருந்த குளோரின் கோலங்கள் சாலையின்
இரு புறங்களிலும் பளிச்சிட்டன.
பள்ளி
முகப்பிற்கு இருபது அடிகள் முன் குமரக் கோவில் செல்லும் குறுக்குச் சாலை
இருப்பதால், பள்ளி
முகப்பிலேயே சாலை நடுவிலேயே விழா மேடை அமைக்க முடிவு செய்யப்பட்டு, மேடை அமைப்புப் பணிகள் துரித கதியில் நடை
பெற்று வந்தன.
பள்ளி நிர்வாகம், ஊர் பிரமுகர்கள், கட்சிக்காரர்கள், தொழிலதிபர்கள், வணிகர் சங்கத்தினர், மகளிர் கழகம், மாவட்ட அறிவியல் கழகம் என ஒவ்வோர் அமைப்பும்
தனித்தனியாகத் தயாரித்த பெரிய பெரிய பேனர்கள் வரிசையாக, சாலையின் இரு புறமும் நின்று கவனத்தைக் கவர்ந்தன.
ஜனாதிபதி கையால்
கோப்பை வாங்கும் ஜனனி;
ஆய்வுக்
கூடத்தில் ஆய்வு செய்யும் ஜனனி;
பிரதமருடன் ஜனனி;
ஆளுநருடன் ஜனனி;
மாநில
முதல்வருடன் ஜனனி;
என, பலதரப்பட்ட புகைப் படங்களை பின்னணியாக வைத்து
விழா வளாகத்தை அலங்கரித்தது ஜனனிக்கு மட்டுமில்லை. அந்த ஊருக்கே பெருமை சேர்த்தது.
சிறுகுடி
கிராமத்தில் மட்டுமல்ல.
அருகாமை
கிராமங்களில் இருந்தெல்லாம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்து ஜனனியின்
சாதனைகளையும், சிறுகுடி
கிராமத்துக்கு ஜனனியால் கிடைத்த பெருமையை எல்லாம் கூறினார்கள்.
“ஜனனி போல
வாழ்க்கைல உயரணும்...”
“ஜனனி மாதிரி பிறந்த ஊருக்குப் பெருமை சேர்க்கணும்...”
““ஜனனிய ரோல் மாடலா எடுத்துக்க. சரியா?...”
“ஆடிசம் குறைபாட்டால பாதிக்கப்பட்ட ஜனனியே இவ்ளோ சாதித்திச்சிருக்கும்போது, எந்தக் குறைபாடும் இல்லாத நீ எவ்ளோ
சாதிக்கலாம்..?.”
“சாதிக்கணும்கற வெறி இருக்கணும். கவனத்தை ஏதாவது ஒரு துறைல குவிக்கணும். கவனச்
சிதறல் அறவே கூடாது. பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை...”
இப்படியாக, ஜனனி, வருங்காலக் குழந்தைகளுக்கு உதாரணமாகவும், ரோல் மாடலாகவும் ஆகிப்போனாள்.
ஊரெங்கும் ஜனனி
ஜனனி என்பதே பேச்சு.
ஊரெங்கும்
ஒட்டப்பட்ட வால் போஸ்டர்களில் ஜனாதிபதியுடன் சிரித்தாள் ஜனனி.
***
சிறுகுடி
கிராமத்தில், ஜனனியின் பாட்டி
தாத்தா வீடு, திரு மண வீடு
போலக் களைகட்டியிருந்தது.
பாட்டியும்
தாத்தாவும் மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.
“உங்க பேத்தியால
ஊருக்கே பெருமை...” என்று பாராட்டும்போதொல்லாம் உள்ளம் பூரித்தார்கள்.
புளகாங்கிதம் அடைந்தார்கள்.
வீட்டிற்கு
வந்தவர்களை அன்பாக சிறப்பாக வரவேற்று, விருந்து உபசரித்தார்கள்.
தன் மகளை
சான்றோர் எனக் கேட்ட தாயான வசந்தாவிற்கு மகிழ்ச்சி எல்லைகடந்து விரவியது.
தேனீயைப் போல
சுறுசுறுப்பாய், வந்த விருதாளிகளை
கவனித்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா, நீங்க உட்காருங்க, வேலை செய்யத்தான் நாங்க இருக்கமே...” என்று
அவ்வப்போது வந்து யாராவது சொல்லும்போது, மகளால் கிடைத்த மதிப்பை நினைத்து மகிழ்ந்தாள்.
“ஜனனி இன்னும்
அரை மணீல பயணியர் மாளிகைக்கு வந்துருவாங்களாம். அவங்க வர்றதுக்கு முன்னால உங்களை
அழைச்சிக்கிட்டுக் கொண்டு போய் விடச் சொல்லி கலெக்டர் உத்தரவு.”
பளிச் எனச்
சீருடை அணிந்த காரோட்டி வஸந்தாவின் முன் வந்து நின்றான்.
***
“சென்னைலேர்ந்து
கிளம்பிட்டாங்களா?”
“எத்தனை மணிக்கு வர்றாங்க?”
“ஆன் தி வே. இன்னும் ஒன் அவர்ல வந்துருவாங்களாம்...”
“வீட்டுக்கு வந்துருவாங்களா நேரா...”
“நோ நோ டிராவலர்ஸ் பங்களா இருக்கில்ல அதுலதான் தங்கவைக்கப் போறாங்களாம்.”
“ஏன்? வீட்டுக்கு
அழைச்சிக்கிட்டு வந்தா என்னவாம்...?” யாரோ வினவ,
“உறவினர் நண்பர்கள்னு எல்லாருமே அவளைச் சுத்திக்கிட்டு டயர்டா ஆக்கிருவாங்க.
பயணியர் மாளிகைல தங்கினா, அவளைப் பார்க்க யாரையும் அனுமதிக்காது பாதுகாப்பு போலீஸ். ஜனனி நல்லா ரெஸ்ட்
எடுக்கலாம். அங்கேயிருந்து ஃப்ரஷ்ஷா விழா மேடைக்கு அழைச்சி வரலாமே...
அதுக்குதான்...”
யாரோ
பதிலளித்தார்கள்.
“சரிதான் சரிதான்...”
என்று எவரோ ஆமோதித்தார்கள்.
இப்படியாக
ஜனனியின் சாதனைகள் பற்றி, ப்ரொக்ராம் பற்றி, விருது பெற்றது பற்றி, நடக்கப் போகும் விழா பற்றி எதையாவது வெள்ளந்தியாக பேசிக் கொண்டிருந்தார்கள்
ஜனங்கள்.
***
பயணியர் மாளிகை
கலெக்டர் உட்பட
உயர் அதிகாரிகள் உலகளாவிய சாதனை படைத்த வேளாண் விஞ்ஞானி ஜனனியை வரவேற்க பயணியர்
மாளிகை வாயிலில் கூடினார்கள்.
கார் வந்து
நின்றதும், டிரைவர் இறங்கி
பின் கதவைத் திறக்க, ஜனனி இறங்கினாள்.
அம்மாவும், பாட்டியுமாக ஆரத்தி எடுத்தார்கள்.
பாட்டி
ஆரத்தியில் இடது கை கட்டை விரலை முக்கி ஜனனியின் நெற்றியில் திலகமிட்டாள்.
ஜனனியின் கூடவே
வந்த மார்த்தாண்டம், ஜனனியின் அம்மா மற்றும் தாத்தா பாட்டியின் முன் கை கூப்பி வணங்கினான்.
“ஜனனி, நான் பாண்டி வரைக்கும் போயிட்டு
வந்துர்றேன்...” என்று கூற, மார்த்தாண்டம் தன் வளர்ப்புத் தந்தையை விழாவுக்கு அழைத்து வரப் போகும்
திட்டத்தை முன்பே அறிந்தவளாதலால் “வாங்க...” என்று விடை கொடுத்தாள்.
மார்த்தாண்டம்
சார். விழா தொடங்க இன்னும் ரெண்டு மணி நேரம்தான் இருக்கு. ஜனனிக்கு எல்லாமே
நீங்கதான். நீங்க வர ஏதாவது காரணத்தால லேட் ஆயிட்டா, எங்க எல்லாருக்குமே மனசு கஷ்டமாயிரும். நீங்க
இங்கே இருங்க. நாங்க யாராவது போய் அழைச்சிக்கிட்டு வரோம். அட்ரஸ் மட்டும் தாங்க
போதும்.” என்றார் ஜனனியின் தாத்தா.
“பயப்படாதீங்க.
ஒரு மணி நேரத்துல நான் திரும்பிருவேன்...” என்று சொல்லிவிட்டு, வேறு எவரேனும் ஏதாவது கருத்து சொல்வதற்கு
வாய்ப்பே தராமல் இடத்தைக் காலி செய்தான் மார்த்தாண்டம்.
“விழா தொடங்க
இன்னும் இரண்டே மணி நேரம்தான் இருக்கு. ஜனனியை யாரும் தொந்தரவு பண்ணாம தனியே
விடுங்க. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு, விழாவுக்கு அவங்க தன்னை தயார் பண்ணிக்கணும்.”
என்று சொல்லி ஊடகவியலாளர்கள் உட்பட யாரையுமே உள்ளே விடாமல் தடுத்து திருப்பி
அனுப்பிவிட்டார்கள் காவலர்கள்.
தலைமை தாங்க
வந்திருக்கும் ம்ருணாளிணி, மரியாதை நிமித்தம், பயணியர் மாளிகை வந்து ஜனனியை சந்தித்தாள்.
பார்த்தவுடன்
ம்ருணாளிணியை அடையாளம் தெரியவில்லை ஜனனிக்கு. அவள் தோற்றத்தில் அவ்வளவு
மாற்றங்கள்.
‘ம்ருணாளியின்
கொள்ளை அழகு என்னவாயிற்று?;
எப்படி அந்த அழகு
கொள்ளை போயிற்று?’ ஜனனியின்
கண்களில் கேள்விக் கனைகள் தொக்கி நின்றதைப் பார்த்தாள் ம்ருணா.
ஜனனியின் இரண்டு
கைகளையும் பற்றினாள் ம்ருணாளிணி, “என்னை மன்னிச்சேன்னு சொல்லு ஜனனி.” என்று அரற்றினாள்.
“நான் எதுக்கு
உன்னை மன்னிக்கணும். பிஜி படிக்கும்போது நடந்ததையெல்லாம் இன்னும் நினப்புல
வெச்சிக்கிட்டா இருப்பாங்க. ரிலாக்ஸ் ம்ருணா.” என்று தேற்றினாள் ஜனனி.
“உன்னோட ப்ராஜக்ட்டை
திருடப் போய், என் காதலையும்
பறி கொடுத்தேன். அப்பவும் நான் திருந்தலே. திருடின கை நிக்காதுனு சொல்வாங்கல்ல, ரிசர்ச் இன்ஸிடியூட்ல நான் கைடா இருந்தபோது ஒரு
சிலரோட கண்டுபிடிப்புகளையும் திருடி வித்துருக்கேன். அப்படி வித்தப்போ ரெட்
ஹாண்டடா மாட்டினதுக்குப் பிறகு, என்னோட கைடன்ஸ் கேரியரை ப்ஃரீஸ் பண்ணிட்டாங்க; மனிதாபிமான அடிப்படைல பதவியை பறிக்காம
விட்டாங்க;
“............”
“நான் செய்த பாவங்களுக்கு எனக்கு கிடைச்ச பரிசுதான் இந்த முடக்கு வாதம்.”
ருமாடிக் அட்டாக் வந்து மடக்க முடியாது விரைத்து நின்ற கை விரல்களைக் காட்டியபடியே
பேசினாள்.
“நான் பார்க்காத
டாக்டரில்லே, செய்யாத
வைத்தியமில்லே. யுனானி ட்ரீட்மெண்ட்ல மருந்து ஒத்துக்காம ஸ்கின் ரப்சர் ஆயிடுச்சு.
அதான் இப்படி தோல் சுருங்கி...”
“..................” இதெற்கெல்லாம் என்ன பதில் சொல்வது எனத் தெரியாத ஜனனி
அமைதியாக இருந்தாள்.
“சீனியாரிட்டில
ரிசர்ச் இன்ஸ்டிடியூட்ல உயர் பதவீல இப்போ இருக்கேன்கறதுனால உன்னை ஹானர் பண்ண
எனக்கு சான்ஸ் கொடுத்திருக்காங்க. அதே சமயம், உன்னை ஹானர் பண்ற தகுதி எனக்கு இருக்கா ஜனனி?” உடைந்து அழுதாள்.
கை கூப்பித்
தொழுதாள்.
அவளின் உப்புக்
கடல் பொங்கிக் கரை கடந்தது.
தன் நெஞ்சோடு
மிருணாளிணியை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறித் தேற்றினாள் ஜனனி.
அத்தியாயம் 15
மன்னித்தல் மனித
குணம்.
இந்த மண்
எப்போதும் மன்னித்தலுக்கே முன்னுரிமை தருகிறது. மன்னிப்பதற்கு மனசு மட்டும்
இருந்தால் போதும், பெரிதாக ஞானமெல்லாம் தேவையில்லை.
இந்த மண்ணின்
பிரதிநிதியான ஜனனி அனைத்தையும் மன்னித்தாள்.
அழுக்குகளைத்
துடைத்தெறிந்ததும் பளிச்சிடும் கண்ணாடி போல இறுக்கமான சூழல் கொஞ்சம் கொஞ்சமாக
இயல்பு நிலைக்கு வந்தது.
இருவரும் முகம்
கழுவி, மேக்கப்
செய்துகொண்டார்கள்.
கல்லூரித்
தோழிகளாய், மலரும் நினைவுளைப்
பேசிக் கொண்டிருந்த நேரத்தில் ஜனனியின் அம்மா வஸந்தா, கதவைத் தட்டி சத்தப்படுத்திவிட்டு, உள்ளே வந்தாள்.
அம்மாவிடம் தன்
அருகே இருந்த, வகுப்புத்
தோழியும் இன்றைய விழாத் தலைவருமான மூத்த விஞ்ஞானி ம்ருணாளிணியை
அறிமுகப்படுத்தினாள் ஜனனி.
தன் கதையை
ஒன்றுவிடாமல் ஜனனியின் அம்மாவிடமும் கூறினாள் ம்ருணாளிணி.
மார்த்தாண்டம்
ம்ருணாளிணியின் பழைய காதலன் என்பதையும், ஜனனிக்கு தீங்கிழைக்க நினைத்ததால் தன் காதலையே
தியாகம் செய்தவன் என்பதையெல்லாம் அறிந்தபோது நெகிழ்ந்துபோனாள் வஸந்தா.
***
“இன்னும் விழா
ஆரம்பிக்க ஒரு மணி நேரம்தான் இருக்கு. நாம இப்போ புறப்பட்டு கிராமத்துல உங்க
தாத்தா பாட்டி வீட்டுக்குப் போய் அரைமணி நேரம் தங்கிட்டு, பிறகு அங்கிருந்து விழா வளாகத்துக்குப்
போலாம்னு ப்ரொக்ராம் பண்ணியிருக்கேன் ஜனனி.”
ம்ருணாளிணி
சொல்லிக் கொண்டே இருக்க, ஜனனி முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு ஏதோ யோசனையோடு இருந்தாள்.
“ஜனனி ஏன்
திடீர்னு மூட் அவுட் ஆயிட்டே...?”
“மார்த்தாண்டம் ஒரு மணி நேரத்துல வந்துருவேன்னு சொல்லிட்டுப் போனாரு. இன்னும்
வரல்லையேனு கவலைப் படறா ஜனனி.” என்று அவள் தாயார் வஸந்தா விளக்கம் தந்தாள்.
“மாரு எங்கேயாவது
டிராஃபிக்ல மாட்டியிருப்பார் ஜனனி.” ஒரு ஃப்ளோவில் சொல்லிவிட்டு நாக்கைக்
கடித்துக் கொண்டாள் ம்ருணாளிணி.
“மிஸ்டர்
மார்த்தாண்டம் விரைவா வந்துடுவார். கவலைப் படாதே.” என்று தேற்றினாள்.
“மார்த்தாண்டத்துக்கு
உறவுனு இருக்கறது அவரோட வளர்ப்புத் தந்தை மட்டும்தானாம். கண்பார்வை இல்லாததனால, ஒரு முதியோர் இல்லத்துலதான் அவரை விட்டு
வெச்சிருக்கேன்னு ஒரு முறை சொல்லியிருக்கார். அவர் கதை ரொம்ப பேதடிக்...” என்றாள்
ம்ருணாளிணி
“அப்படியா? அவர் எதையும்
காட்டிக்கிட்டதே கிடையாதே...”
“என்னை காதலிச்சப்போ, என்கிட்டே சொல்லியிருக்கார்.”
“அவருக்கு அப்பா அம்மா இல்லையா? ஏன்?”
அம்மா வயித்துல
ஆறு மாசக் குழந்தையா மார்த்தாண்டம் இருக்கும்போதே, அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாராம். “
அடப்பாவமே...
“அம்மா?”
அவங்களும் போய்
சேர்ந்துட்டாங்களாம். அவங்க அம்மா அதிகாரியா இருந்தப்போ எல்லாருக்கும் நிறைய உதவி
செய்வாங்களாம். அப்படி அவங்களால பயனடைஞ்ச ஒருத்தர்தான், நன்றிக் கடனா இவரை வளர்த்தாங்களாம்.”
நம்பல்லாம்
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துல பி ஜி படிக்கற சமயத்துலதான் அவருக்கு டயாப்டீஸ்
அதிகமாகி, குளூகோமா லெவல்
ஏறி கண் பார்வை பாதிச்சி, முழுக்க பார்வை போயிருச்சாம்;
பார்வை போன
பின்னால, ஆளு போட்டு
வீட்லயே பாத்துக்கச் சொல்றேன்னு சொன்னப்போ, அதெல்லாம் வேண்டாம் என்னை முதியோர் ஹாஸ்டல்ல
அவரை விட்டுருனு சொல்லியிருக்காரு.”
“............”
கவலைப் படாதே
ஜனனி விரைவா அழைச்சிக்கிட்டு வந்துருவார் கவலைப்படாதே.” என்று தேற்றினாள்
ம்ருணாளிணி.
‘வாழ்க்கையில்
இத்தனை இன்னல்களையும் கடந்து வந்தபோதிலும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், தனக்கு ஒரு காட் ஃபாதர் மாதிரியல்லவா
இருந்திருக்கிறார் மார்த்தாண்டம்...’ என்று ஜனனி எண்ணிபோது அவள் கண்கள் குளமாயின.
***
‘மார்த்தாண்டம்
எப்போது வருவார்’ என்ற எதிர்பார்ப்பைத் தவிர வேறு ஒரு சிந்தனையும் இல்லை இப்போது
ஜனனிக்கு.
மாத்த்தாண்டம்
வந்த பிறகுதான் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று ஜனனி உறுதியாகச்
சொல்லிவிட்டதால், பாட்டி தாத்தாவை
இங்கே வரச் சொல்லிவிட்டாள் ம்ருணாளிணி.
பாட்டியும்
தாத்தாவும் விடுதிக்கு வந்தனர்.
ஜனனியை ஆரத்
தழுவி முத்தமிட்டு அன்பைச் சொறிந்தாள் பாட்டி.
உச்சந்தலையில் கை
வைத்து தன் உள்ளங்கைக்கு முத்தமிட்டு தன் பாசத்தைப் பொழிந்தார் தாத்தா.
மார்த்தாண்டம்
அப்போதுதான் உள்ளே நுழைந்தார்.
அதைக்
கண்டதும்தான் ஜனனிக்கு நிம்மதியே வந்தது.
“அப்பா எங்கே?” கேட்டாள் ஜனனி
“அப்பா கார்ல இருக்காரு. நேரமாச்சு சீக்கிரம் கிளம்பணும்... விழா மேடைல போய்
பார்த்துக்கலாம். கிளம்புங்க” என்றான் மார்த்தாண்டம்.
“உள்ளே
அழைச்சிக்கிட்டு வாங்க தம்பி. நாங்களும் அவரைப் பார்க்கணுமில்ல.”
ஜனனியின் பாட்டி, தாத்தா, அம்மா அனைவரும் ஒன்றாய்க் கேட்க, மறுக்க முடியவில்லை மார்த்தாண்டத்தால்.
நீங்கதான் அவரைப்
பார்க்கலாம். அவரால் உங்களைப் பார்க்க முடியாது. நீங்க யாரும் இங்கே இருக்கறதாக்
காட்டிக்காம இருக்கறதா இருந்தா அழைச்சிக் கிட்டு வரேன்...”
“சரி. நாங்க அமைதி காக்கறோம். அழைச்சிட்டு வாங்க என்றார்கள் அனைவருமே.”
***
பார்வையற்றவர்க்கான
ஊன்று கோலை தரையில் தட்டிக் கொண்டே வர மார்த்தாண்டம் அவரை உள்ளே அழைத்து வந்தான்.
வஸந்தா, அவளின் பெற்றோர்கள் மூவரும் விரித்த கண்களை
மூடவில்லை. அவரையே பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
வாய் மூடி, பேச வேண்டாம் என்று ஜாடை காட்டினான்
மார்த்தாண்டம்.
பாட்டி தாத்தா
அம்மா மூவரும் ஏன் இப்படி உரைந்து நின்றுவிட்டார்கள் என்பதற்குக் காரணம் ஏதும் தெரியவில்லை
ஜனனிக்கு.
ஜனனி தனக்குப்
பின்னால் மார்த்தாண்டத்தைப் பார்க்கத் திராணியற்று தலை குனிந்து மறைந்து நின்ற
ம்ருணாளிணியை முன்னால் இழுக்க, எதிர் பாராமல் அவளை அங்கே பார்த்த மார்த்தாண்டம் அதிர்ந்தான்.
கண் பார்வையற்ற
நிலையில் அருகில் வந்தவரின் கைகளைப் பற்றிக் கொண்டாள் ஜனனி. பற்றிய கைகளை
விடுவித்து தன் கைகளால் அவள் கைகளை இறுக்கிக் கொண்டபின்...
“ஜனனி, ‘இந்தப் பயித்தியத்தை வெச்சி என்னால மாரடிக்க
முடியாது”ங்கற வார்த்தையை நான் சொல்லியிருக்கவே கூடாது. என் போதாத காலம் என் வாயில
அது போல வந்துடுச்சு;
உங்க அம்மா. உத்தமி.
எனக்காக எத்தனையெத்தனையோ விட்டுக் கொடுத்தவங்க. கடைசியா அவங்கள இழந்துட்டு
நின்னப்போதான், நான் வேலை
பார்த்த பாங்க்ல வேலை மேனாஜரா இருந்த மலர் மேடம் எனக்கு அடைக்கலம் கொடுத்தாங்க.
நடுநடுவே இரண்டு
மூன்று தரம் உன் அம்மாவுக்கு தூது விட்டப்பவும் கண்டிப்பா முறிஞ்சி போச்சுன்னு
தீர்மானமாச் சொல்லிட்டாங்க.
மலர் மேடம்
ஹார்ட் அட்டாக்ல திடீர்னு இறந்த பிறகு, மார்த்தாண்டத்தை வளர்க்கறதையே என் முழு நேர
வேலையா எடுத்துக் கிட்டேன்.
ஆராய்ச்சி மாணவனா
இருந்தப்ப உன்னைப் பத்திச் சொன்னதும், நான் நடந்த எல்லாத்தையும் அவன் கிட்டே சொன்னேன்.”
பார்வையற்ற அவர்
கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது
***
கூடப் பிறக்காத
அண்ணனாக இத்தனை நாள் தன்னை கண்ணின் இமைபோலக் காத்த மார்த்தாண்டத்தை அருகில்
அழைத்து அவன் கையை தன் கையால் எடுத்தாள் ஜனனி.
அருகில் நின்ற
ம்ருணாளிணியின் கையை இன்னொரு கையால் எடுத்து இருவரின் கைகளையும் இணைத்தாள்.
எத்தனை ஆண்டுகள்
ஆனால்தான் என்ன? எப்படிப் பட்ட
பிரச்சனைகள் வந்தால்தான் என்ன? உண்மைக் காதலுக்கு அழிவுதான் ஏது?
அம்மா, என்னைப் பெற்றெடுத்த தாய் பெயர் மலர். உங்க
கணவர் ஒரு பெரிய கேஸ்ல மாட்டின பிறகு அந்த மன உளைச்சல்லே, உங்க கிட்டே ரொம்பக் கேவலமா நடந்துகிட்டதையும், ஆஸ்பத்திரீல உங்களை நிரந்தரமாப் பிரிய நேர்ந்த
அந்த நாளையும் சம்பவங்களையும், இதுவரை எத்தனையோ ஆயிரம் முறை சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டிருக்காங்கம்மா...”
என்று சொல்லி வஸந்தாவின் கைகளைப் பற்றினான்.
இவரையும்
என்அம்மாவையும் இணைச்சி தப்பாப் பேசினவங்களையெல்லாம் பத்தி சிறிதும் கவலைப்படாம, பெரும் முயற்சி பண்ணி இவரை அந்த ஜோடிக்கப்பட்ட
கேஸ்லேர்ந்து விடுவிச்சி நிரபராதினு வெளிக் கொண்டு வந்த என் அம்மாவுக்கு விசுவாசமா, என்னை இவருதான் உயர்வா வளர்த்தவர்ம்மா.”
மார்த்தாண்டத்தின் கண்கள் பனித்தன.
மாப்ளே... என்று
மாமனாரும் மாமியாரும் உணர்ச்சிவசப்பட்டு முழங்க, ராஜேந்திரனின் கையை மார்த்தாண்டம் எடுக்க, வஸந்தாவின் கையை ம்ருணாளிணி எடுத்துத்தர, இருவரும் சேர்ந்து அவர்களை சேர்த்து
வைத்தார்கள்.
“விழாவுக்கு
நேரமாச்சு கிளம்புங்க...”
விழாக் குழுத்
தலைவர் வந்து பரபரப்பாய்க் கூற, அஇன்னோவாவின் முன்புறம் ஓட்டுநர் இருக்கையில் மார்த்தாண்டம் அமர,
“ம் அவரு பக்கத்துல போயி உட்காரு...” என்று ஜனனி உட்பட அனைவரும் ம்ருணாளிணியைப்
பிடித்துத் தள்ள அங்கே மகிழ்ச்சி சிரிப்பலையாக எழுந்தது.
பின் இருக்கையில்
தாத்தாவையும் பாட்டியையும் ஏற்றி விட்டாள் ஜனனி,
நடு இருக்கையில்
நடுவில் அமர்ந்து கொண்ட ஜனனி, வலதுபுறம் அப்பாவை ஏற்றிக் கொண்டாள். அம்மா இந்தப் பக்கம் வந்து
உட்காருங்க...” என்றாள்.
பிரிந்த
எல்லோரும் இணைந்து ஒரே காரில் பயணித்து, விழா மேடைக்கு முன் வந்து நின்றபோது, உலகளாவிய விருதினை விட அதிக மகிழ்ச்சியில்
திளைத்தாள் ஜனனி.
உச்ச கட்ட
மகிழ்ச்சியில் ஜனனியின் கண்களிலிருந்து, உப்புக் கடல் பொங்கிக் கன்னத்தில் வழிந்தது...
இசைக் கடல்
வேலூர் ராம்குமார் எழுதி இசை அமைத்த ‘ஜனனீ ஜெயம் நீ...’ எனும் பாடல் மேடையில்
ஒலிக்க, மீடியாக்களின்
நேரடி ஒளிபரப்பில் உலகெங்கும் காற்றோடு கலந்து ஒலித்துக் கொண்டிருந்தது...
முற்றும்
*********
“இதுல விளையாட என்ன இருக்கு...? மண்டையப் போட்டுப் பிச்சிக்காம ப்ராஜக்ட்
முடிக்கறதுக்கு இதை விடச் சுலபமான வழி இருந்தாச் சொல்லு, அதைச் செய்யலாம்... ஹ...! ஹ...! ஹ...!”
தவறு செய்கிறோம் என்ற குற்ற உணர்வில்லாமல், அதோடு செய்த தவற்றை நியாயப் படுத்தும் வகையில்
பேசிச் குரூரமாய்ச் சிரிக்கும் ம்ருணாளிணியைப் பார்க்கப் பார்க்க ஆத்திரம் பொங்கி
எழுந்தது.
‘இத்தனை சுயநலமும், திருட்டு குணமும் உள்ள ஒரு பெண்ணையா நாம்
காதலித்திருக்கிறோம்...’ என்று நினைத்தபோதே குமட்டிக் கொண்டு வந்தது
மார்த்தாண்டத்திற்கு.
‘திருட்டுகளிலேயே ‘ப்ளேஜியரிசம்’ என்று சொல்லக்
கூடிய ‘கருத்துத் திருட்டுதானே’ மிகவும் கொடுமையானது. மூளையைக் கசக்கிப் பிழிந்து
ஓயாமல் உழைத்துக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பை நோகாமல் தங்கள் பெயருக்கு மாற்றிக்
கொள்ளும் இழிகுணம் மிக்க ஒருத்தியையா, நான் இத்தனை நாளும் காதலிந்து வந்திருக்கிறேன்;
தில்லை அம்பல நடராஜா, என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்று.’
என்று வேண்டிக் கொண்டான்.
சடாரென எழுந்தான்.
அத்தியாயம் 9
இனம் புரியாத வருத்தத்தோடு, விறுவிறுவென்று கீழ உள் கோபுரத்தை நோக்கி
நடந்தான்.
அதன் வழியாக செல்லும் பக்தர்களுக்கு, வாயிற்படியின் வலது பக்கத் தூணில் எண்ணைக்
காப்புடன் மினுமினுப்பாய் பிரகாசித்து அருள் பாலிக்கும், மினியேச்சர் அளவில் நுட்பமாகப் பொறிக்கப்பட்ட
லோக மாதா காளியின் உருவம் கண்ணில் பட்டே தீரும்.
அதைக் கைக் கூப்பி வணங்காமல் எவரும் உள்ளே
செல்லவே மாட்டார்கள். மூர்த்தி அளவில் மிகமிகச் சிறியதுதான் என்றாலும் கீர்த்தி
பெரிதல்லவா.
காளியை கை கூப்பி வணங்கினான் மார்த்தாண்டம்.
‘யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ
நிறைந்தாய். தீது நன்மையெல்லாம் காளி, தெய்வ லீலையன்றோ...’
என்ற பாரதியின் பாடலை அவன் பின்னால் நின்ற ஒரு
சிவனடியார் பலமாய்ப் பாட, மார்த்தாண்டத்தின்
காதில் கனமாய் இறங்கியது அது.
தொடர்ந்து, நடராஜர் சந்நிதி சேவிப்பதற்காக, படியிறங்கி நடந்தான்.
“மாரு... மாரு...”
பலமாய் அழைத்துக் கொண்டே, மார்த்தாண்டத்தின் நடைக்கு ஈடாக அவன் பின்னே
ஓடோடி வந்தாள் ம்ருணாளிணி.
படிகள் இறங்கி நடந்தவன் நடுவில் இருக்கும்
தேவசபை யைத் தாண்டும் முன் ம்ருணாளிணி, மார்த்தாண்டத்தின் முன் வந்து கைகளைப் பரப்பியபடி அவனைத்
தடுத்து நிறுத்தினாள்.
“என்னாச்சு மாரு. ஏன் இப்படி வெறி பிடிச்சாப்பல
நடந்துக்கறே? இப்ப என்ன ஆகிப்
போச்சு? நான் என்ன
தப்பாச் சொல்லிட்டேன்...?”
நடராஜா சந்நதிக்குள் நுழையும் தோரணவாயில்
கடக்கும் முன் வலதுபுறம் உயரமான
இடத்தில் அமைந்திருக்கும் தேவ சபை. அதன் எதிரில் எதிரில் நீளும் இரண்டாம்
பிரகாரத்தில் முதல் தூணுக்கருகே நின்றான் மார்த்தாண்டம்.
***
‘பஞ்ச சபை’ என்பதே சிதம்பரத்தின் சிறப்பு.
சித் சபை, கனக சபை(பொன்னம்பலம்), தேவ சபை, நிருத்த சபை
மற்றும் ராஜ சபை எனப்படும் ஐந்து சபைகளில், வீதி உலா சென்று ஜனங்களுக்குக் காட்சியளித்து
அருள் பாலிக்கும் பஞ்ச உலோகங்களால வார்க்கப்பட்ட உற்சவ விக்ரகங்கள் அனைத்தும்
வைக்கப்பட்டுள்ள இடம்தான் தேவ சபை.
கோவிலுக்குள் வரும்போதெல்லாம் உட்கார்ந்து
மிருணாளிணியோடு காதல் மொழிகள் பேசிய அதே தூண் அருகில், இப்போது இருவரும் எலியும் பூனையுமாக
நின்றார்கள்.
முரண்தொடை என்பது இதுதானோ?
தன் எதிரில் நிற்கும் மிருணாளிணியின் முகத்தைப்
பார்க்கப் பிடிக்கவில்லை மார்த்தாண்டத்துக்கு. அவள் தோளுக்கு மேல் பார்வையை
உயர்த்தி பின்னால் இருந்த தேவசபையை நோக்கினான்.
தேவ சபைக்குள்ளே,
ஆங்காங்கே ஏற்றி வைக்கப்பட்ட எண்ணை
விளக்குகளைத் தவிர, குறைந்த ஒளியை
உமிழும் மின் விளக்கு ஒன்றும், மைய மண்டபத்தில்
ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த விளக்கின் ஒளியில் சபையினுள்ளே அதனதன் வாகனங்களில், அததற்குரிய அபய, வரத ஆயுத ஹஸ்தங்களோடும் அபூர்வ முத்திரைகளோடும் அதனதன்
பீடங்களில் அருள் பாலித்துக் கொண்டிருந்த ஐம்பொன் விக்ரஹங்களும், பீடத்தின் பின் பகுதியில் பொருத்தப்பட்ட
திருவாசிகளும்... எரிகின்ற எண்ணை விளக்கின் கோணத்திற்கு ஏற்ப பின்புறம் நிழலை
அப்பிக் கொண்டிருந்தன.
பூட்டப்பட்ட இரும்பு அழி கம்பிகளுக்குள் இருந்த
விக்ரகங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் மார்த்தாண்டம்.
சமீபத்தில் அபிஷேகம் செய்யப் பட்டு, அலங்காரங்களுக்கு
உட்பட்டிருந்த சிலைகளுக்குச்
சூடப்பட்ட மாலைகளும், அணிவிக்கப்பட்ட வஸ்திரங்களும் கொஞ்சம் புது
மெருகோடும் மற்றவையெல்லாம் சற்றே மெருகு குறைந்தும் தோற்றமளித்தன.
மிகச் சமீபத்தில் சூட்டப்பட்ட மாலைகள் ஏதும்
கண்களில் படவில்லை.
ம்ருணாளிணி மார்த்தாண்டம் காதல் ஜோடியின்
தற்போதைய நிலையைப் போல, வாடிய, சுக்காய்க் காய்ந்த நிர்மால்யங்கள் மட்டுமே
சிலாரூபங்களில் தொங்கிக் கொண்டு, வாழ்வின்
நிதர்சனமான மாற்றங்களைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன.
***
'தேவ சபை'
எவ்வளவு அருமையான, ஆற்றல் மிக்க சொற்கோவை இது.
இந்தக் கம்பீரமான மண்டபம், உற்றுப் பார்த்தால்தான் தெரியும் அளவுக்கு
மங்கலாகவும் சோகையாகவும் வாழ்வின் முரண்
தொடையாய்த் காட்சியளித்தன.
சபையின்
வெளிப்புற மண்டபம், அதன்
படிக்கட்டுகள் எல்லாம் சற்றே வெளிச்சமாகத் தெரிந்தன.
தில்லை கோவிந்த பெருமாள் கொடி மரத்தின் முன்
பிரகாசிக்கும் சூரிய ஒளியின் கசிவு, சபைக்கு மேல் ஏறும் சிகப்பு வெள்ளை பட்டை அடிக்கப்பட்ட
படிகளை சற்றே வெளிச்சம் போட்டுக் காட்டியது.
சபையின் முன் மண்டபத்தில் நிரந்தரமாகக்
கிடத்தப்பட்டுள்ள தங்க வண்ணத் தகடுகள் பொறுத்தப்பட்ட, கிட்டத்தட்ட ஆறுக்கு மூணு அளவுள்ள அபிஷேக
தாரையின் ஓர் புறம் மங்கல் வெளிச்சமாய்ப் பளிச்சிட, அதனுடைய பக்கவாட்டுப் பகுதி இருளோவென்றிருந்தது.
ஒளியும் நிழலும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை
குறிப்பால் உணர்த்துவது போல, அழிகம்பிகளுக்கு
உள்ளே ஒளிர்ந்து கொண்டு இருந்த சிலைகளின் அருளை சற்றே உயர்த்திக் காட்டியது
பின்னணியாக அமைந்த இருள்.
பூ வேலைப்பாடுகளும், தேவ கோஷ்டங்களும், பிறைகளும், புடைப்புகளும், சிலைகளுமாக, மேற்கூரையைத் தாங்கி நின்ற பிரும்மாண்டமான தூண்கள்.
தூண்களின் உச்சியில் யாளிகள் புகுந்து
விதானத்தைத் தாங்கிக் கொள்ள, வாழை குலை
தள்ளினாற்போல், நீண்டு தொங்கிக்
கொண்டிருக்கும் அபிஷேக தாரை வடிவ தண்டியத்தின் முனையில் தேள் கொடுக்கின் முனைபோல
செதுக்கப்பட்ட அமைப்பு துருத்திக் கொண்டு அலங்காரமாய்த் தொங்கின.
தன் தீர்க்கமான முட்டை விழிகளால், தன்னைப் பார்த்து “இதுதாண்டா மானிட உலகம். உன்
நேர்மையை உன் காதலியுடமும் எதிர்பார்த்து ஏமாந்து போனியா...? எதிர்பார்ப்புனு வந்துட்டா ஏமாற்றத்துக்குத்
தயாரா இருக்கணும். இல்லேன்னா உன் உறவே வேண்டாம்னு அறுத்துக் கட்டணும்...” என்றெல்லாம்
சொல்லி, அனைத்து
யாளிகளும் கோரை பற்கள் உட்பட அனைத்துப் பற்களையும் காட்டி, வாய்விட்டுச் சிரிப்பதாகத் தோன்றியது
மார்தாண்டத்துக்கு.
எதிர் பாராத இதுபோன்ற இக்கட்டான சூழலை எதிர்
கொள்ள முடியாமல் தவித்தான். லஜ்ஜையாக இருந்தது. தலையைக் குனிந்து கொண்டான்.
"ஏன் இப்படித் தலை குனியறே? மாரு... என்னைப் பாரு...!" ம்ருணாளிணியின்
குரலைக் கேட்டு, குரல் வந்த
திக்குக்கு எதிர் திசையில் திரும்பி நிமிர்ந்து மேற்கூரையை பார்த்தான்.
தன் தலைகளால் மேற்கூரையைத் தாங்கியபடி
சிரித்துக் கொண்டிருக்கும் யாளிகள், தொடர்ந்து அவனைப் பார்த்துச் விடாமல் சிரித்தபடி இருந்தன.
இரண்டு மேற்பக்க ஈற்றிலிருந்தும் உட்புறமாய்
வளைந்த மூன்று மூன்று கோரை பற்களும், அதற்கிடையே வெளியில் துருத்திக் கொண்டிருந்த நான்கு முன்னம்
பற்களும் பளிச் என்று வெளியே தெரிய,
அனைத்து யாளிகளும் தன்னைப் பார்த்து கண்களை உருட்டிக்
கொண்டு ஏளனமாய்ச் சிரிப்பதை பல்வேறு பார்வைக் கோணத்தில் பார்த்து வெட்கினான்
மார்த்தாண்டம்.
தன்மேல் தனக்கே வெறுப்பாக இருந்தது.
உள்ளத்தை உறுதிப் படுத்திக் கொண்டு, சிறிதும் தாட்சண்யம் காட்டாமல் மிருணாளிணியிடம்
உறுதியாகச் சொன்னான்.
“ஒரு ப்ளேஜியரிஸ்டான உன்னை காதலிச்சதுக்காக
நான் ரொம்ப வெட்கப் படறேன். வேதனைப் படறேன். இந்த நிமிஷத்துலேர்ந்து நம்ம லவ்
ப்ரேக் அப் ஆகுது...”
காதல் ப்ரபோஸ் பண்ணப்பட்ட அதே இடத்தில் இன்று
ப்ரேக் அப்
அடிபட்ட அன்னமாய் ம்ருணாளிணி துவண்டு நிற்க,
அவசர அவசரமாக நடராஜா சந்நிதிக்குச் செல்லும்
தோரண வாயிலைக் கடந்து சித் சபையில் தில்லை அம்பலத்தான் முன் சென்று நின்றான்
மார்த்தாண்டம்.
மண்ணாகி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ...
மறை நான்கின் அடி முடியும் நீ...
என்று உள்ளம் உருகிக் கதறிக் கொண்டிருந்தார்
ஒரு சிவனடியார்.
அவருக்கு அருகில் நின்று கண்களில் கண்ணீர் மல்க
நின்றான் மார்த்தாண்டம்.
காதல் முறிவை விடக் கொடுமையிலும் கொடுமை என்ன
தெரியுமா?
காதலை பிரேக் அப் செய்த பின்பு, ஒரே இடத்தில் முன்னாள் காதலர்கள் ஒருவரை ஒருவர்
வெறுத்தபடி வளைய வரவேண்டிய கட்டாயம்தான்.
அந்தக் கொடுமையையும் அனுபவித்தார்கள் இருவரும்.
***
ஒருவரின் திறமையை முழு மனதோடு பாராட்ட
வேண்டும்.
அதோடு அந்த நபர் தனது திறமையை மேலே மேலே
வளர்த்துக் கொள்வதற்கு நாம் உரமாக விளங்க வேண்டும். அதுதான் மனிதம்;
அதிலும், ‘உடலிலோ அல்லது மனத்திலோ குறைபாடு உள்ள, ஒருவரின் திறமையைப் போற்றி வளர்த்து, அவர்களை மேலே மேலே உயர்ந்துவதுதான் மனிதத்
தன்மை;
அப்படியெல்லாம் எதுவும் செய்யாமல் போனாலும்
பரவாயில்லை;
குறையுள்ள ஒரு பெண்ணின் உண்மையான திறமையை திருட
முயல்வது கொடுமையிலும் கொடுமையல்லவா? பாவத்திலும் பெரிய பாவமல்லவா?’
சுயநலத்தின் உச்சத்தில் மனிதர்கள் செய்யும்
இதுபோன்ற பாவச் செயல்களை நினைத்து நினைத்து மருகினான் மார்த்தாண்டம்.
அன்று முதல், ஜனனியைப் பற்றிய அனைத்துத் தரவுகளையும் சேகரிக்கத்
துவங்கினான்.
ஜனனியின் அப்பா ராஜேந்திரன்.
அவரின் பெற்றோருக்கு ஒரே மகன்.
மகனுக்கு வஸந்தாவை பார்த்துத் திருமணம் செய்து
வைத்து, கூட்டுக்
குடும்பமாய் அவர்களோடு வாழ்ந்து, மூன்று
வருடங்களுக்கு முன்னால்தான் ஆறு மாத இடைவெளியில் அவர்கள் இருவரும் காலமானார்கள்.
அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கியில் அலுவலக
உதவியாளர் ராஜேந்திரன்.
அம்மா வஸந்தா.
தன் பெற்றோருக்கு ஒரே மகள்.
ஹோம் மேக்கர்.
பொருளாதார ரீதியாக, நடுத்தரக் குடும்பம்.
செங்கல்பட்டுக்கு அருகே சிறுகுடி என்னும்
கிராமத்தில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டிருக்கும்
விவசாயக் குடும்பத்தில் ஒரே பெண்ணாகப் பிறந்த வஸந்தாவை பெற்றோர் தேவையான
அளவுக்குப் படிக்க வைத்தார்கள்.
வஸந்தாவும் பெற்றோர்களின் நம்பிக்கையை ஈடு செய்யும்
விதமாக நன்றாகப் படித்தாள்.
தன் முதுகலைப் பட்ட இறுதியாண்டு தேர்வுக்கு ஒரு
வாரம் முன், கல்லூரியில்
முகாமிட்டது ஒரு அமெரிக்கத் தொழில் நுட்ப நிறுவனம்.
கேம்பஸ் இன்டர்வியூ என்று பரவலாக அறியப்படும், வளாகத் தேர்வில் வஸந்தாவைத் தேர்ந்தெடுத்தது
அந்த நிறுவனம்.
இறுதி செமஸ்டர் தேர்வுகள் முடிந்த அடுத்த நாளே
ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கான ஆணையும்
அவளுக்கு வழங்கப்பட்டது.
***
அத்தியாயம் 10
“சேதி தெரியுமா...?”
“என்னா சேதி?”
“தனத்தரசி
சமாச்சாரம்தான்...”
“யாரு, அந்த மொத புருசன கழட்டிவிட்ட மவராசிதானே...?”
“உனக்கு புதுக்
கதை தெரியாதாங்காட்டியும்...?
“அது என்னாயா
புதுக் கதை...?
கேட்டுவிட்டு காதை தீட்டிக் கொண்டதாள் அமூசு,
கோவில் குளக்கரையில் துணி துவைத்துக்
கொண்டிருந்த பொன்னுரங்கமும், புனிதாவும் சற்றே
அடித்துத் துவைத்தலை நிறுத்தினார்கள்.
அப்போதுதான் ஆற்றங்கரையில் துணி மூட்டையோடு
வந்து நின்ற வண்ணான் தீர்காயுசு, காது மடலை
மடக்கிக் கொண்டு காத்திருந்தான்.
தலை முழுகப்போன சரோஜா, ருக்மணி, தேவகி எல்லோரும் முழுகாமல் கழுத்துவரை நீருக்குள்
புதைத்துக் கொண்டு காத்திருந்தார்கள் புதுக்கதை கேட்பதற்காக.
“அந்தச் செருக்கி, தனத்தரசி, தன் ரெண்டாவது புருசனையும் விவாகரத்து செஞ்சிட்டாளாம்.”
ஆரவல்லி கெக்கலித்தபடிச் சொல்லி, மொத்தப் பற்களும் வெளியே தெரிய இடியிடியெனச்
சிரித்தாள்.
“அடியாத்தீ...!”
“பொம்பளையா அவ...?”
“ஏன்? முணாவதா எவனையாவது தொரத்தராளா?”
இப்படியெல்லாம் பலரின் வாய்க்குள் புகுந்து
புறப்பட்டுக்கொண்டிருந்தாள் தனத்தரசி.
ஊரெல்லாம் தனத்தரசியின் செயல்பாடுகள் வைரலாகிக்
கொண்டிருந்தன.
தனத்தரசி.
சிறுகுடி கிராமத் தலையாரியின் ஒரே மகள்.
தலையாரி, தன் வசதிக்குத் தக்கபடி நிறைய செலவு செய்து மகளை ஒரு
பிரசித்தமான கல்லூரியில் படிக்க வைத்தார்.
ஆர்க்கிடெக்ட் படிப்புப் படித்தபோது கடைசீ
செமஸ்டருக்கு முன் வளாகத் தேர்வு நடத்திய
அமெரிக்க நிறுவனம் அவளுக்கு வேலை தர, கல்லூரியில் கடைசீ செமஸ்டர் தேர்வு முடிந்த மறுநாளே
புறப்பட்டு புனே சென்றாள். கம்பெனி
கொடுத்த பயிற்சிகளை பெற்றுக் கொண்டாள்.
கல்கத்தா தலைமை அலுவலகத்தில் தனத்தரசிக்கு
போஸ்டிக் போட்டது நிறுவனத் தலைமையகம்.
***
வேலைக்குப் போன ஆறாவது மாதம், ஒரு இளைஞனோடு வீட்டுக்கு வந்தாள் தனத்தரசி.
“அப்பா இவர் ஜோசப்...” என்று அறிமுகப்
படுத்தினாள்.
“.......................”
“நான் இவரை
ரிஜிஸ்தர் ஆபீஸ்ல வெச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ப்பா..." தகவல் சொன்னாள்.
கையில ஜோசப் போட்ட மோதிரத்தைக் காட்டினாள்.
தகவல் அறிந்த தலையாரிக்குக் கோபம் தலைக்கு
ஏறியது.
‘தாயில்லா பொண்ணுனு ரொம்ப எடம் கொடுத்துட்டோமா?’ என்று வேதனைப் பட்டார்.
நடந்த எதையும் மாற்ற முடியாது என்ற
யதார்த்தத்தை மனதில் கொண்டு, தன்னை கட்டுப்
படுத்திக் கொண்டார்.
நாளாவட்டத்தில், ‘எப்படியோ பொண்ணு நல்லா இருந்தா சரி...” என்று தனக்குத் தானே
சமாதானமும் செய்து கொண்டுவிட்டார்.
கோடிக் கணக்கில் செலவு செய்து, பெண்ணுக்கு எப்படியெல்லாமோ தடபுடலாகத் திருமணம்
செய்து வைக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டு, தங்கமும் வெள்ளியுமாக சேர்த்து வைத்த தலையாரி கொஞ்சம்
கொஞ்சமாக யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டார்.
வேறு வழி?
மகள் தனத்தரசியும் அப்பாவின் சொத்துக்களையோ
நகைகளையோ எதிர் பார்க்கவேயில்லை என்பதால்,
‘பேரனோ பேத்தியோ
பிறந்தால் அதற்கு அத்தனையும் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்து வைத்திருந்தார்
தலையாரி.’
வருடம் ஒன்று ஆயிற்று.
எதுவும் விசேஷமாகச் சொல்லவில்லை தனத்தரசி.
***
ஒரு நாள் முருகானந்தம் என்ற இளைஞனோடு
திடீரென்று அப்பாவைப் பார்க்க வந்தாள் தனத்தரசி.
ஒரு வருஷத்திற்கு முன் ஒரே ஒரு நாள் பார்த்த
ஜோசப்பை அடையாளம் தெரியவில்லை தலையாரிக்கு.
ஆனால் முகத்தில் ஏதோ மாறுதல் இருப்பதாகப்
பட்டது. எப்படிக் கேட்பது என்று திணறிக் கொண்டிருந்தார் அவர்.
அவர் கேட்பதற்கே இடம் வைக்கவில்லை தனத்தரசி
“அப்பா”
“ம்...”
“என் கூட உள்ளது யாருன்னுதானே யோசிக்கறீங்க?”
“...........................”
அமைதியாக நின்றார் தலையாரி.
“நான் முதல்ல கல்யாணம் பண்ணிக்கிட்ட ஜோசப்
ஒத்து வரல்லைப்பா. அதனால டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டேன். இவரு முருகானந்தம். இவரை
நான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்.”
கழுத்தில் தாலியைக் காட்டி, மிகச் சாதாரணமாகச் சொல்ல, தலையாரி மூர்ச்சையாகி கீழே விழுந்தார்.
‘ஸ்ட்ரோக்’ என்றனர் மருத்துவர்கள்.
கோமாவுக்குப் போய்விட்டதாக அறிவித்தார்கள்.
பேச்சு மூச்சில்லாமல், மல ஜலம் வெளியறுவதைக் கூட உணர முடியாமல், மணல் மூட்டையாய்ப் படுத்தேக் கிடந்தார்.
ஒரு வாரம். ஒரே வாரம்தான்.
போய்ச் சேர்ந்து விட்டார் தலையாரி.
அனைத்து வகையிலும், ஊரில் உயர்ந்து நின்ற தலையாரியின்
பெருமையெல்லாம், ஒரே மகளால்
சந்தியில் நின்றதுதான் இப்போது ஊர்வாய்க்குக் கிடைத்த அவல்.
இது நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன.
இன்று, இரண்டாவது புருஷன் முருகானந்தத்தையும் தனத்தரசி விவாகரத்து
செய்துவிட்டாள் என்கிற புதிய செய்தி கிராமம் முழுதும் தலைப்புச் செய்தியாக
எதிரொலித்த இந்த நேரத்தில்,
துரதிருஷ்ட வசமாக, வஸந்தா அமெரிக்க நிறுவத்தால்
தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியைக் கொண்டு வர, வசந்தாவின் அப்பாவும் அம்மாவும் கவலைப் பட்டார்கள்.
***
‘தனத்தரசியின் தாறுமாறான, ஒழுக்கக் கேடான நடத்தைகளுக்குக் காரணம் அவள், ஐடி கம்பெனியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, புனே, கல்கத்தா, என டிரெயினிங்
போய், ‘யு எஸ்’, ‘யு கே’ என வெளிநாடுகளுக்கெல்லாம் பணி நிமித்தம்
சென்றதுதான்’ என்ற எண்ணம் ஊர் முழுதும் விரவிக் கிடக்க, வஸந்தாவின் பெற்றோர் மட்டும் விதி விலக்கா என்ன?
“தனத்தரசியின்
நிலை உனக்கு வந்துட வேண்டாம் வஸந்தா”
அவள் கைப் பிடித்து, அழுது, அரற்றி ஐ டி கம்பெனி வேலைக்குச் செல்ல அனுமதி மறுத்தனர்
அவள் பெற்றோர்.
அவளும் ‘நான் போய்தான் தீருவேன்...’ என்று
பிடிவாதம் எல்லாம் பிடிக்கவும் இல்லை.
‘பெற்றோர் நம் நல்லதுக்குத்தான் சொல்வார்கள்’
என்ற திடமான நம்பிக்கையோடு படிப்பு முடிந்ததும், டைப்பிங், ஷார்ட்ஹாண்ட், கம்ப்யூட்டர் வகுப்பு என தன் ஊர் அருகிலேயே
இருக்கும் நிறுவனங்களில் சேர்ந்து தன் தகுதியை வளர்த்துக் கொண்டாள் வஸந்தா.
விவசாயக் குடும்பத்தில் பிறந்து , சாணி மெழுகிய களிமண் தரையில் படுத்து உறங்கி, அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் படித்தவள்
வஸந்தா.
ஜாதகப் பொருத்தம் பார்த்து, குலம் கோத்திரம் விசாரித்து, வங்கிப் பணியாளர் ராஜேந்திரனை கல்யாணம் செய்து
வைத்தனர் பெற்றோர்.
அவர்கள் கடமை முடிந்துவிட்டதாக நிம்மதியாகவும்
இருந்தனர்.
ஓட்டு வீட்டு மண் தரையில் படுத்த வஸந்தா, கல்யாணத்துக்குப் பின் ஒட்டு வீட்டில், மின்விசிறிக்குக் கீழ் விரிக்கப்பட்ட
மெத்தையில் படுப்பதும், லேப்டாப்பில்
மின் புத்தகம் வாசிப்பதுமாக மாறிப்போனாள்...
நாளாவட்டத்தில், கொஞ்சம் கொஞ்சமாக வஸந்தாவின் பொழுது போக்கு அம்ஸங்களை
குறைத்தனர் மாமியார் வீட்டில். பொறுப்புகள் கூடின.
யதார்த்தத்தை முகம் சுழிக்காமல் அப்படியே
ஏற்றுக் கொண்டாள்.
குடும்பக் கடமைகளில் தன்னை முழுக்க முழுக்க
அர்ப்பணித்துக் கொண்டாள்.
வயதான தன் மாமனார் மாமியாருக்குப் பணிவிடை
செய்யவேண்டிய தார்மீகக் கடமையை தவறாமல் செய்தாள்.
கணவனை விட நிறைய படித்துள்ளோம் என்ற இறுமாப்பு
சிறிதும் கிடையாது வஸந்தாவுக்கு.
படித்த நாம் வேலைக்குச் செல்லாமல் இருக்கிறோமே
என்ற குறையும் அவளுக்கு இல்லை.
ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவியாக இருப்பதில்
பெருமிதமடைந்தாள்.
என்னதான் ஆத்மார்த்தமாக, மனப்பூர்வமாக, பெற்றெடுத்தத் தன் தாய் தந்தை ஸ்தானத்தில் வைத்து மாமியார்
மாமனாரைப் பராமரித்தாலும், வழக்கமான
மாமியாரின் குணத்தை காட்டிக் கொண்டுதான் இருந்தாள் கணவனின் தாய்.
மாமனார் மிக மிக நல்ல குணம் உடையவர்தான்
என்றாலும், மாமியாரை மீறி
அவர் எப்போதும் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பியதில்லை.
***
மாமியார் மருமகளுக்கு இடையே ஏற்படும் கருத்து
வேறுபாடுகள் எல்லாவற்றையும் கணவனிடம் சொல்லும் வழக்கம் அறவே கிடையாது
வஸந்தாவிற்கு.
அப்படித்தான் வளர்த்திருக்கிறார்கள் அவள்
பெற்றோர்.
இருந்தாலும் எப்போதாவது, தவிர்க்க முடியாத பட்சத்தில், “ஏன் சொல்லவில்லை... என்று எதிர் காலத்தில்
பொல்லாப்பு வந்துவிடுமோ...?” என்கிற
எண்ணத்தில், ஒரு சிலவற்றை
சொல்லவேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படும்போது கூட,
“அட்ஜஸ்ட் பண்ணிக்
கிட்டுப் போ...” என்று, மனைவி
வஸந்தாவிடம் சொல்லுவதோடு சரி. எந்தச் சூழலிலும், அம்மாவிடம் வாய் கொடுக்கவே மாட்டான் ராஜேந்திரன்.
‘பெண்கள் விவகாரத்தில் ஆண்கள் தலையிட்டால்
தேவையற்ற சிக்கலாகிவிடும். நிம்மதி போய் விடும்’ என்பதே ராஜேந்திரனின்
சித்தாந்தம்.
***
இதுபோல எதிலும் தலையிடாமல் இருப்பது
எஸ்கேபிசம். தப்பித்தல். இது ஆண்மை அல்ல.
ஆண்மை என்பது, தாய்க்கும், மருமகளுக்கும் இடையில் உள்ள கருத்து வேற்றுமைகளை அறிந்து, அதை அகற்றுதல்.
மனைவியையும் தாயையும், தாய் மகளாக மாறும் வண்ணம் மாற்றுதலே ஆண்மை.
தாய், மனைவி இருவரிடம் தனித்தனியே பேசிப் அவர்களுக்குள் புரிதலை
வளர்த்தலே ஆண்மை.
ஆண்மை தவறேல். என்ற பாரதியின் கோட்பாடு
அறியாதவன் ராஜேந்திரன்.
ஆண்மை தவறியவன் அவன்.
‘காய்க்கும் மரத்திற்குக் கல்லடி ஒன்றும்
புதிதல்லவே...!’
எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல், தன் கடமைகளை முழு ஈடுபாட்டோடு செய்து
கொண்டுதான் இருந்தாள் வஸந்தா.
இப்படியே ஓடிக் கொண்டிருந்த வாழ்வில் திடீரென
சில மாற்றங்கள் வந்தன.
மாமனார் குளியலறையில் வழுக்கி விழுந்தார்.
ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.
இடுப்பெலும்பு முறிவு. அறுவை சிகிச்சை செய்து
ப்ளேட் பொருத்தப்பட்டது.
மாவுக் கட்டுடன், படுத்த படுக்கையில் கிடந்தார் மாமனார்.
நடுத்தரக் குடும்பம் ராஜ வைத்தியம் என்றானது
சூழ்நிலை.
கணவனுக்கு வரும் சம்பளத்தை வைத்து, சிக்கனமாகச் செலவு செய்து குடும்பத்தைப்
பராமரித்து வந்தாள் வஸந்தா.
இப்படிப் பட்ட சூழ்நிலையில் “குழந்தைப்
பெற்றுக் கொள்வதைத் தள்ளிப் போடலாமே...?” என்று கொஞ்சம் தள்ளிப் போட்டார்கள் ராஜேந்திரனும்
வஸந்தாவும்.
‘பட்ட காலிலே படும் என்பார்களல்லவா...!”
தொடர்ந்து, பிசியோ தெரபி செய்யப்பட்டதில், வாக்கர் வைத்துத் தன் காரியங்களைப் பார்த்துக்
கொள்ளத் தொடங்கி, சீராகப்
போய்க்கொண்டிருந்த மாமனாரின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு திருப்பம்.
ஒரு நாள் எதிர் பாராத வேளையில், தலை சுற்ற, வாக்கரோடு மல்லார்ந்து விழுந்தவர்தான்.
பின் மண்டையில் அடிபட்டு பேச்சு மூச்சில்லாமல், ஒரு வாரம் கோமாவில் கிடந்து ஒரு வழியாய் போய்ச்
சேர்ந்து விட்டார்.
அதைத் தொடர்ந்து, கணவன் போன துக்கத்திலும், சொச்ச காலத்தை எப்படித் தள்ளப் போகிறோம்’ என்ற
ஏக்கத்திலும் இரத்த அழுத்தம் அதிமாகி, நெஞ்சுவலி வந்து கணவன் இறந்த நாற்பத்து
எட்டாவது நாள் மாமியாரும் மாண்டாள்.
குறுகிய காலத்தில், அப்பாவையும் அம்மாவையும் இழந்துவிட்ட
ராஜேந்திரனுக்கு எல்லா வகையிலும் தன்னால் இயன்றவரை ஆறுதல் தந்தாள் வஸந்தா.
வீட்டில் இருந்த இறுக்கமான சூழலை மாற்றிக்
கொள்ள, வங்கியில் தந்த
எல் டி சி சலுகையைப் பயன் படுத்திக் கொண்டு ஊட்டி, கொடைக்கானல் என்று ஒரு பத்து நாட்களுக்கு டூர் போட்டு
என்ஜாய் செய்தார்கள்.
அத்தியாயம் 11
வஸந்தாவிற்கு நாள் தள்ளிப் போயிற்று,
மாமனார் மாமியார் உடல் நலமில்லாமல் இருந்த
காலத்தில், அடிக்கடி அரசு
மருத்துவ மனைக்குச் சென்றபோது, ரத்தப் பரிசோதனை
நிலையத்தில் பணி புரியும் செவிலியின் நட்பு கிடைத்திருந்தது வஸந்தாவிற்கு.
செவிலி கார்த்திகாவின் வீட்டிற்குப் போனாள்.
அவளிடம் நாள் தள்ளிப் போகிற விஷயத்தை சொன்னாள்
வஸந்தா.
உடனே, தன் வீட்டிலேயே வைத்திருந்த ‘ஹோம் ப்ரக்னன்ஸி கிட்’ வைத்து
டெஸ்ட் போட்டுப் பார்த்தா கார்த்திகா.
‘கிட்’ல் இரண்டு கோடுகள் கீற்றுக்களாய் தெரிய, கன்கிராஜூலேஷன்ஸ்” என்று வாழ்த்தினாள் செவிலி.
சமையறைக்குச் சென்று சர்க்கரை கொண்டு வந்து வாயில் ஊட்டிவிட்டுக் கொண்டாடினாள்.
ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மறுபுறம் வெட்கமுமாக மலர்ந்தாள் வஸந்தா.
“ஹோம்கிட் சமயத்துல எரர் காட்டும்.
ஏமாத்திரும். வேரியேஷன்ஸ் வர வாய்ப்பு உண்டு. நாளைக்கு லேப்ல டெஸ்ட் எடுத்துப்
பாத்துடலாம்...” என்று செவிலி புன்னகையோடு சொல்ல,
“சரி” என்றாள்
வஸந்தா.
***
மறுநாள்,
கணவன் வேலைக்குப் போன பிறகு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றாள், நர்ஸ் கார்த்திகாவே பரிசோதனைச்சாலைக்கு
அழைத்துச் சென்று, முறையாகப்
பரிசோதனைகள் எல்லாம் செய்தபின், ஓகே கன்கிராட்ஸ்
என்று சொல்லி ரிப்போர்ட் கொடுத்தாள்.
வசந்தாவின், நாக்கை நீட்டச் சொல்லியும், கண்களின் கீழ் இரப்பையை சற்றே கீழ் இறக்கியும்
பார்த்துவிட்டு, ரிப்போர்ட்டை
பரிசீலித்துவிட்டு, கர்ப்பத்தை உறுதி
செய்தார் அரசு மருத்துவர்.
செவிலி கார்த்திகா, மருத்துவமனைப் பதிவேட்டில் பெயர் பதிந்து
கொண்டதோடு, முறைப்படி
விவரங்களைப் பதிவு செய்து, மருத்துவ அட்டை
வழங்கினார்.
இந்த அட்டைல உள்ள நம்பர் ஆன் லைன்ல ஏறிரும்.
நீங்க எந்த ஊர் ஆரம்ப சுகாதார மையத்துக்குப் போனாலும் இந்த நம்பரைத் தட்டினா, உங்க ஜாதகமே தெரிஞ்சிரும். எதாவது பிரச்சனைன்னா, இங்கேதான் வரணும்னு இல்லே. பக்கத்துல இருக்கற நிலையத்துக்கு
இந்த அட்டையோட போனா போதும்...”
விவரமாகச் சொல்லி வாழ்த்தி அட்டையைத் தந்தாள்
ஆரம்ப சுகாதார மையச் செவிலி.
மேலும், கர்பிணிகளுக்கு என அரசாங்கம் அலாட் செய்துள்ள, மாத்திரை மருந்துகள், சத்துணவு மாவுகள், போன்றவை அடங்கிய சீல் வைக்கப்பட்ட ரோஸ் கலர் கூடையோடு உள் ‘கிட்’ டைத் தந்தாள்.
கிட்’டை போட்டோ எடுத்து கணவனுக்கு வாட்ஸப்
செய்தாள். கைப்பேசியில் விஷயத்தை ராஜேந்திரனுக்குச் சொன்னாள்.
“அப்படியா...!” எனக் மகிழ்ந்தவன், “மதியம் லீவு கொடுத்துட்டு வரேன்...” என்றான்.
வந்தான்.
எப்போதும் அலுவலகத்திலிருந்து வருவதைப் போல
வெறும் கையை வீசிக் கொண்டு வந்தான்.
‘தான் அப்பாவான செய்தியறிந்ததும், முதல் முதலில் தன்னைப் பார்க்க வருகிறார், ஒரு முழம் புஷ்பம் கூட வாங்காமல்
வந்திருக்கிறாரே...!’ என்று ஒரு கணம் ஆதங்கப் பட்டது வஸந்தாவின் மனசு.
அடுத்த கணம், ‘அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்.’ என்று மனசை சமாதானமும்
செய்து கொண்டாள்.
ராஜேந்திரன் வந்ததும் வராததுமாய், சூல் கொண்டதை சோதித்தறிந்து உறுதி செய்ய, இந்த இரண்டு நாட்களாய், தான் செய்த சாகசங்களையெல்லாம் வெள்ளந்தியாக
அவனிடம் சொன்னாள்.
“ஓ... நீயாவே எல்லாத்தையும் பாத்துக்குவே.
அப்படித்தானே...! என்னோட உதவி எதுக்கும் தேவையில்லைன்னு சொல்லு...!” என்று
குத்தலாகப் பேசினான் ராஜேந்திரன்.
“அப்படியா? என்று வியந்து, கன்னம் தடவி உச்சந்தலை முகர்ந்து பாராட்டுவான்’ என்று
நினைத்த வஸந்தாவுக்கு ஏமாற்றமாகி விட்டது.
ராஜேந்திரனின் இடத்தில் தன்னைப் பொருத்திப் பார்த்தாள்
வஸந்தா.
‘அவர் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்று
முடிவு செய்து கொண்டாள். அவரிடம் தள்ளிப் போன விஷயத்தைச் சொல்லி அவர் துணையோடு
மருத்துவ மனைக்குச் சென்றிருக்கவேண்டும். ‘சர்ப்ரைஸாக’ இருக்கட்டுமே என்று
தன்னந்தனியாக ப்ரக்னன்ஸி டெஸ்ட்க்குப் போனது தன் தவறுதான்...” என்று சமாதானப்
படுத்திக் கொண்டாள்.
“ஸாரிங்க. சர்ப்ரைஸா இருக்கட்டும்னுதான், உங்க கிட்ட சொல்லாம செஞ்சிட்டேன்...!” என்றாள்
வஸந்தா.
இதற்கு அவனிடமிருந்து எந்த எதிர் வினையும்
இல்லை.
மாறாக, “உன் அப்பா அம்மாகிட்டே சொல்லியாச்சா?” என்று கேட்டான். கேள்வியில் குத்தல் இருந்தது.
“அதெப்படிங்க? நீங்க இல்லாம அவங்க கிட்டே நான் சொல்லுவேன்...!” என்று
சொன்னதைக் கேட்டவுடன், கழுத்தை
ஒருசாய்த்துக் கொண்டு கேவலமாக ஒரு பார்வை பார்த்தான் ராஜேந்திரன்.
‘பரவாயில்லையே! இதையும் தான்தோன்றித் தனமா
இல்லாம, புருசனோட
சேர்ந்து செய்யணும்னு தோணிச்சே... அதுவரைக்கும் சந்தோஷம்...’ என்று ஏளனம் செய்வது
போல இருந்தது அந்தப் பார்வையும் உடல் மொழியும்.
‘மனசு விட்டுப் பேசுவதெல்லாம் குற்றப் பாடாகப்
போகிறதே...!’ என்பதை நினைத்து மனசு, விட்டுப் போனது வஸந்தாவுக்கு.
இதற்கு மேல் ராஜேந்திரனோடு, எதைப் பேசுவதற்கும், எதை பகிர்ந்து கொள்வதற்கும், வஸந்தாவிற்குள் தயக்கம் வந்துவிட்டது.
ஒரு கட்டத்தில், ‘இவர் லீவு போட்டுவிட்டு வந்திருக்கவே வேண்டாமோ...!’ என்று
கூடத் தோன்றியது.
எதுவும் பேசாமல் அமைதியாகச் சில நிமிடங்கள்
கடந்தன.
“இப்பவே மாமா மாமி கிட்டே சொல்லிருவமா?” என்று கேட்டான் ராஜேந்திரன்.
தொடக்கத்தில், உன் அப்பா அம்மா என்று சொன்னவன், இப்போது மாமா மாமி என்று சொன்னதில், சற்றே ஆறுதல் அவளுக்கு.
“ம்...” என்று ஒற்றை வார்தையில் பதில்
சொன்னாள்.
கைப் பேசியை ஸ்பீக்கரில் போட்டு, எதிர் முனையையும் ஸ்பீக்கரில் போடச் சொல்லி, “நீங்க பாட்டி தாத்தா ஆகப் போறீங்க...? என்று இருவரும் ஒருவர் பின் ஒருவர்
சொன்னார்கள்.
“அடுத்த ஒன்றரை மணி நேரத்தில், பழம், புஷ்பம் மஞ்சள் கிழங்கு என மங்கலப்பொருள்களோடு, வஸந்தாவுக்குப் பிடித்த ஆவின் பால்கோவாவும்
சேர்த்து எடுத்துக் கொண்டு, அப்பாவும்
அம்மாவும் வந்து சேர்ந்தார்கள்.
***
சிசுவின் வளர்ச்சிக்கு ஏற்ப, வயிற்றுப் புரட்டல், மசக்கை, வாந்தி என கர்ப காண்டத்தின் அத்யாயங்கள் தொடர்ந்தன.
அவஸ்தைகளும், கஷ்டங்களுமாக, சுகமான சுமையைச் சுமந்திருந்தபோதுகூட, ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப்போடாமல், தான் உண்டு தன் அலுவலகம் உண்டு என்று இருந்தான்
ராஜேந்திரன்.
சில நேரங்களில் அவள் செய்யும் சமையல் மணமே, குமட்டலை ஏற்படுத்தியது வசந்தாவிற்கு.
அது போன்ற சமயங்களில், பத்து பதினைந்து நிமிடங்கள் சமையல் கட்டை
விட்டு வெளியேறி காற்றோட்டமான போர்டிகோவில் மின் விசிறியைச் சுழலவிட்டுக் கொண்டு, சிறிது நேரம் உலவுவாள். சமநிலைக்கு வந்தவுடன், மீண்டும் சமையலறையில் நுழைந்து மீதி சமையலை
முடிப்பாள்.
மாதா மாதம் சிசுவின் வளர்ச்சியை சோதித்து அறிய, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவதற்குக் கூட
ராஜேந்திரன் ஒத்துழைக்கவில்லை.
நர்ஸ் கார்த்திகாவின் உதவியால் ஒவ்வொரு
செக்அப்’பையும் முடித்தாள்.
***
சிறு குடி கிராமத்தில், தெருவடைத்துப் பந்தல் போட்டு, வஸந்தாவிற்கு வளைகாப்பு, சீமந்தம் எல்லாம் விமரிசையாக நடத்தி
விட்டார்கள் பெற்றோர்.
கை நிறைய வளையல்களுடன், பிறந்த வீட்டில் வளைய வந்தாள் வஸந்தா.
வயல் வெளிகளுக்கெல்லாம் கூட சென்று வந்தாள்.
ஆபீசில் வேலை, ஆடிட்டிங், இன் சர்வீஸ்
ட்ரைனிங் என ஏதோ காரணங்களைச் சொல்லி சொல்லி, சிறுகுடிக்கு வருவதை மொத்தமாகத் தவிர்த்தான் ராஜேந்திரன்.
சிறுகுடி கிராம ஆரம்ப சுகாதார நிலையத்தில்
வஸந்தாவுக்கு சுகப் பிரசவம் ஆயிற்று.
ஜனனி பிறந்த அன்று, மருத்துவ மனைக்கு வந்து சென்றான் ராஜேந்திரன்.
***
‘எதையும் கண்டு கொள்ளாமல் விட்டேர்த்தியாக, அவர் வேலையை மட்டும் பார்க்கும் ராஜேந்திரனை
நினைத்து மிகவும் கவலைப் பட்டாள் வஸந்தா.
‘இப்படியே விட்டால் ரொம்பவும் இடம் கொடுத்துவிடும்...’
என்பதை உணர்ந்தாள்.
‘தும்பை விட்டு வாலைப் பிடிப்பது அறிவீனம்’
என்பதை யோசித்து, குழந்தைக்கு ஆறு
மாதம் முடியும் வரை தாய் தந்தையோடுதான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்த
ஜனனி, முடிவை மாற்றிக்
கொண்டாள்.
குழந்தை பிறந்த ஒரே மாதத்திலேயே கணவன்
வீட்டுக்கு வந்துவிட்டாள்.
அவ்வப்போது வஸந்தாவின் அம்மா வந்து ஓரிரு
நாட்கள் ஒத்தாசையாக இருந்துவிட்டுப் போனாள்.
மற்ற நாட்களில் எல்லாம் தனியாகவே, குழந்தையையும், குடுப்ப வேலைகளையும் சமாளித்தாள் வஸந்தா..
குழந்தை ஜனனியும் மற்ற மற்ற குழந்தைகளைப் போல, அழுவதும், ஆர்ப்பாட்டம் செய்வதுமாக இல்லாமல், உயிர் உள்ள பொம்மை போலத்தான் கிடந்தது.
பிறந்த போதே, ஜனனி வீரிட்டு அழவில்லை.
‘ஆவிரி ஆவிரி’ எனப் பால் பருகவில்லை.
கை கால்களை உதைத்துக் கொண்டு சிணுங்கவில்லை.
“பேபி கொஞ்சம் அப்நார்மல்தான்.
பீடியாட்ரிஷன் அனுமதியோட நீயூரோ ஒருத்தரை
கன்ஸல்ட் பண்ணிருங்க...”
அறிவுறை வழங்கினார், பிரசவம் பார்த்த கைனகாலஜிஸ்ட்.
கைனகாலஜிஸ்ட் சொன்னதை மனதில் வைத்து,
‘ஏங்க ஜனனிய
நியூரோ கிட்டே அழைச்சிப் போகணும்க” என்று கேட்கும் போதெல்லாம் ராஜேந்திரன் தட்டிக்
கழித்தான்.
“டாக்டரும் வேண்டாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம். சில
குழந்தைகளுக்கு பேச்சு வர லேட்டாகும், பேசாம இரு. தானாச் சரியாகும்...” என்று சொல்லிவிடுவான்.
நடுவில் ஒரு முறை நர்ஸ் கார்த்திகா வீட்டிற்கு
வந்தாள்.
“நீங்க வந்தா, சாதாரணமா பாத்துட்டுப் போயிருங்க சிஸ்டர். ஆஸ்பத்திரி, டாக்டர், நியூராலஜிஸ்ட், சைக்காலஜிஸ்ட்னு எதையாவது வஸந்தாகிட்டேச் சொல்லி அவ மனசைக்
கலைச்சிட்டுப் போயிடறீங்க. எனக்குப் பெரிய தலைவலியாவுது...”
என்று ராஜேந்திரன் கார்த்திகாவிடம்
கடுப்படித்துவிட்டார்.
அத்துடன், நர்ஸ் கார்த்திகா, வஸந்தாவுடனான நட்பை முறித்துக் கொண்டாள். வஸந்தாவின் செல்
நம்பரை ப்ளாக் செய்து விட்டாள்.
***
எல்லா வகையிலும் கையறு நிலையில் நின்றாள்
வஸந்தா.
திக்கற்றவளுக்கு தெய்வமே துணை... என்ற ரீதியில்
ஆண்டவன் மேல் பாரம் போட்டுவிட்டு குழந்தை நார்மலாக ஆகிவிடுவாள் என்ற நம்பிக்கையோடு
பொறுமையாகத்தான் காத்திருந்தாள் வஸந்தா.
***
அத்தியாயம் 12
தாய் தந்தை காலமான பிறகு, முழுச் சம்பளத்தையும் வஸந்தா கையில் கொண்டு
வந்து கொடுத்து, வீட்டு
நிர்வாகத்தைச் செய்யச் சொன்னவன்தான் ராஜேந்திரன்.
திடீரென்று ஒரு நாள்,
மாதச் சம்பளப் பணத்தில் கால் வாசித்
தொகையை மட்டுமே வஸந்தாவின் கையில்
கொடுத்தான்.
“ஏன் இவ்வளவுதான் தரீங்க...?”
வஸந்தா இயல்பாய்க் கேட்டாள்.
“நீ என்ன என்னோட ஆடிட்டரா...?”;
“எனக்கு என்ன
நிர்வாகம் பண்ணத் தெரியாதா?”;
“குடுத்து வெச்சா
மாதிரி கேக்கறே...?”;
“இவ்ளோ நாள் நான்
கொடுத்த பணத்துக்கு கணக்கு குட்ரீ...” என்றெல்லாம் தாறுமாறாகப் பேசினான்
ராஜேந்திரன்.
வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்தான்.
‘இத்தனை நாள் இப்படியெல்லாம் பேசியதில்லையே?;
அதுவும், இப்போ ‘ஒரு-வயசுக் குழந்தையை, அதுவும் அப்நார்மலா உள்ள பொண்ணை வெச்சிக்கிட்டுத்
தவிக்கற நேரத்துல, என்கிட்டே ஏன்
திடீர்னு இப்படியெல்லாம் நடந்துக்கறார்?’
புரியாமல் தவித்தாள் வஸந்தா.
‘ஆபீசில் வேலை பளுவால் இப்படிப்
பேசுவாராயிருக்கும்..?’ என்று சமாதானப்
படுத்திக் கொண்டாள்.
எதையும் மனதில் போட்டுக் கொண்டு குழம்பாமல், ‘தெய்வம் விட்ட வழி’, என்று இயல்பாக அனைத்தையும் கடந்து போனாள்
வஸந்தா.
***
அதே வாரத்தில், வஸந்தாவின் அப்பாவும் அம்மாவும், வருவதாக போனில் சொல்லி விட்டு ஒரு நாள்
வந்தார்கள்.
தன் பெற்றோர்கள் வரவிருப்பது தெரிந்தும், அன்று மாலை அலுவலகம் முடிந்து வழக்கமான
நேரத்தில் வரவில்லை ராஜேந்திரன்.
கணவனுக்குப் ஃபோன் செய்தாள் வஸந்தா.
“அப்பாவும் அம்மாவும் உங்களைப்
பார்த்துட்டுத்தான் கிளம்பணுன்னு காத்திருக்காங்க.. எப்ப வருவீங்க..?” என்று கேட்டாள்.
“ஆடிட் நடக்குது. நான் வர மிட் நைட் ஆயிரும்.
அவங்களை ஊருக்கு அனுப்பிரு...” என்றவன், தொடர்ந்து, “அவங்க இப்போ
வரலையேனு யார் அழுதாங்க...” என்று சுருக் எனச் சொல்லிவிட்டு, பேசி இணைப்பைத் துண்டித்து விட்டான்
ராஜேந்திரன்.
‘என்ன ஆயிற்று இவருக்கு? சிறிது நாட்களாகவே இப்படி மந்திரித்து
விட்டதைப் போல இருக்கிறார். முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். இவருக்கு என்ன
பிரச்சனை. சொன்னால்தானே தீர்வு காண முடியும்;
இவர் இப்படியெல்லாம் பேசக்கூடியவர் இல்லையே...?; கொஞ்ச நாட்களாகவே ஏன் இவர் பேச்செல்லாம் ஒரு
மாதிரி இருக்கு...?’
யோசிக்க யோசிக்க, ராஜேந்திரனின் பேச்சு, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதாக
உணர்ந்தாள். வஸந்தாவிற்குள் ராஜேந்திரன் மீது சந்தேகம் தலைத் தூக்கியது.
“மாப்ளை எப்போ வர்றாராம் வஸந்தா..?” கேட்டாள் அம்மா.
கண்களாலேயே வினவினார் அப்பா.
“அவருக்கு ஆபீஸ்ல ஆடிட்டாம். மிட் நைட்
ஆயிடும்னு சொன்னாரு. நீங்க புறப்படுங்கப்பா...”
சரி... மாப்பிள்ளைய ரொம்ப விசாரிச்சதாச்
சொல்லு...” என்று சொல்லிவிட்டு மனமே இல்லாமல் கிளம்பினார்கள்.
அவர்கள் சென்றபின் வஸந்தா ஒரு முடிவுக்கு
வந்தாள்.
***
ஹோம் மேக்கராகவே, இதுநாள் வரை வீட்டோடு இருந்து விட்ட
வஸந்தாவுக்குள் குபீரென போர்குணம் மூண்டது.
குழந்தையை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டாள்.
முதன் முறையாக, வாயிற்படி தாண்டினாள்.
வாயிற் கதவை இழுத்துத் தாழிட்டாள். பூட்டினாள்.
டவுன் பஸ் ஏறினாள்.
ஐந்து நிறுத்தங்கள் தாண்டி, ‘பேங்க் ஸ்டாப்பிங்’கில் இறங்கினாள்.
வங்கியின் கதவுகளில் பூட்டுக்கள் தொங்க, ஒரு கணம் அதிர்ந்தாள்.
“கைப் பேசியில் ராஜேந்திரனின் எண்களை
அழுத்தினாள்.”
“ஏண்டீ சும்மாச்
சும்மா போன் பண்ணிக்கிட்டே இருக்கே... ஆடிட்டிங் பிஸியா போய்க் கிட்டிருக்கு. மிட்
நைட் ஆகும்னு சொன்னேனில்லை. அறிவில்லையா ஒனக்கு ... உள் பக்கமா பூட்டுப்
போட்டுட்டுப் படு. மாத்து சாவி போட்டுத் திறந்துக்கிட்டு உள்ளே வந்துடுவேன். இனிமே
இப்படி ஆபீஸ் வேலை நேரத்துல டிஸ்ட்ரப் பண்ணாத...” என்று கடுப்படித்துவிட்டுக் கட்
செய்தான்.
பொய் சொல்கிறார். பச்சை பொய் புளுகுகிறார்.
எங்கோ தவறு இருக்கிறது. என்று உள்ளுணர்வு உணர்த்தியது.
‘ஏதோ
பெரிய்ய தப்பு நடக்குது...’ வஸந்தாவின் சந்தேகம் வலுத்தது.
‘பதறினால் காரியம் சிதறிப் போகும்.’ என்று
எச்சரித்தது அவள் புத்தி.
எதுவாக இருந்தாலும் சமாளிப்போம். என்று
முடிவெடுத்தாள்.
***
வங்கிக் கிளையின் ஒரு ஓரத்தில் இருந்த ஏடிஎம்
க்கு வெளியே, வங்கிச்
சீருடையுடன் அமர்ந்திருந்த இரவுக் காவலர் எழுந்து இவளை நோக்கி வந்தார்.
“நீங்க ராஜேந்திரன் சார் ஒய்ஃப்தானே...? கல்யாணத்தப்ப பாத்தது...”
வஸந்தாவின் அருகே வந்து கேட்டார்.
ஆமாம்ணே…
“சாரோட தலைச்சன் பாப்பாங்களா?”
தோளில் சரிந்திருந்த குழந்தையைப் பார்த்து
விசாரித்தார்.
“ம்...”
“ஏம்மா...! என்று
தொடங்கினார்.
சந்நதம் வந்தவரைப் போல ராஜேந்திரனின்
நடவடிக்கைகளைப் பற்றி கதை கதையாகச் சொன்னார்.
சொல்லிய அனைத்தையும் கேட்ட வஸந்தாவுக்கு
மயக்கமே வந்துவிடும் போல இருந்தது.
இத்தனை நாட்கள் ராஜேந்திரனின் இழிவான
நடவடிக்கைகளுக்குக் காரணம் மலர் என்ற மேனேஜர்தான் காரணம் என்பது இப்போது
தெரிந்துவிட்டது.
“என் மக மாதிரிம்மா நீங்க. நான் சொன்னதா
காட்டிக்கிடாதீங்கம்மா... எனக்குச் சிக்கலாயிரும்.” என்றார் வயதான அந்தக் காவலர்.
“நிச்சயமா உங்களை எந்த இடத்துலயும் காட்டிக்
கொடுக்க மாட்டேன்ணே...” என்று சொல்லிவிட்டு முட்டிக் கொண்டு வந்த அழுகையை வலிந்து
அடக்கிக் கொண்டாள்.
அழுவது கோழைத்தனம் என்று முடிவெடுத்தாள்.
அடுத்து ஆகவேண்டியதை யோசித்தாள்.
மனதை ஒருமுகப் படுத்தினாள்.
சுதாரித்தாள்.
வீட்டை அடைந்தாள்.
‘துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...’ என்ற பாடல் வரிகளுக்கு உருவம்
கொடுத்தாற்போல இருந்தது வஸந்தாவின் நடவடிக்கைகள் அத்தனையும்.
***
விடிகாலையில்தான் வீடு திரும்பினான்
ராஜேந்திரன்.
இரவு வங்கிக்கு வந்ததையோ,
மலர் என்ற பெண்ணின் வலையில் வீழ்ந்து விட்டதாக
அவனைப் பற்றிக் கேள்விப் பட்டதையோ வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
“ஆடிட்டிங் விடிய விடிய நடக்குங்களா?” நிதானமாய் கேட்டாள்.
ஆமாம். பேங்ல எல்லாரும் இப்பத்தான் போறாங்க.
நானும் பூட்டிக்கிட்டு வரேன். இன்னும் ரெண்டு மணி நேரத்துல திரும்பவும்
திறக்கணும். வர வர பேங்க்ல வேலை ரொம்பரொம்ப அதிகமாயிருச்சு...” என்று பொய்யாக
அங்கலாய்த்துக் கொண்டான் ராஜேந்திரன்.
‘என்னமாய் நடிக்கிறான்...?’ என்று நினைத்துக் கொண்டாள்.
ஒவ்வொரு நாளாகக் கழுத்தைப் பிடித்துத்
தள்ளினாள்.
காலத்தை ஓட்டினாள். அவ்வப்போது,
“குழந்தையை
மருத்துவரிடம் காட்ட அழைத்துச் செல்வோமா?”
என்று கேட்பதும், ராஜேந்திரன் “வேண்டாம்...” என்று மறுப்பதும்
வாடிக்கையானது.
கணவன் மறுப்பான் என்பதால் வஸந்தா கேட்காமல்
இருப்பதில்லை. என்றோ ஒரு நாள் மனம் திருந்தி அழைத்துச் செல்வான் என்கிற அசாத்திய நம்பிக்கை
இருக்கத்தான் செய்தது அவளுக்கு.
நாளாவட்டத்தில் எல்லாம் வழிக்கு வந்துவிடும்
என்று திடமாக நம்பினாள்.
அதற்குப் பின்னும் மூன்று மாதங்கள்
பொறுமையாய்க் காத்திருந்தும் பயன் ஏதுமில்லை.
மேலும் காத்திருக்கப் பொறுமையும் இல்லை
வஸந்தாவிற்கு.
பெற்ற குழந்தையை உருப்படி செய்ய வேண்டிய
நிர்பந்தம் அவளை முடுக்கி விட்டது.
பொறுத்தது போதும் பொங்கி எழு என உறுமியது அவள்
மனம்.
வெடித்து விட்டாள்.
சாது மிரண்டால் காடு தாங்காதல்லவா.
கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனை வளாகத்தில்
வைத்து, மொத்தமாக
ராஜேந்திரன் உறவையே முறித்துக் கொண்டாள் வஸந்தா.
***
மகள் வஸந்தாவையும் பேத்தி ஜனனியையும்
பார்த்துவிட்டு, பேருந்தில்
ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஜனனியின் தாத்தா சற்றே கண்ணயர்ந்தார்.
ஆனால் வஸந்தாவின் அம்மாவோ மனதில் ஏதேதோ
குறுகுறுப்பும் கவலைகளும் ஆக்ரமித்திருக்க, தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாள்.
“என்னங்க... என்னங்க...!”
“ம்...”
“வஸந்தாவுக்கு ஏதோ
கடுமையான பிரச்சனைனு நினைக்கறேன். அவ நம்ம கிட்டே எதையோ மறைக்கறானு தோணுதுங்க...”
“எதை வெச்சிச்
சொல்றே நீ?”
“நாம
வரும்போதெல்லாம் மாப்பிள்ளை நம்மை தவிர்க்கறாரு. பேத்தியோ எல்லா குழந்தைகளையும்
போல நார்மலா இல்லை. ஆசுபத்திரிக்கும் அழைச்சிப் போக மாட்டேங்கறாராம் மாப்ளை.”
புருஷன் பொஞ்சாதிக்குள்ள ஆயிரம் இருக்கும்.
இன்னைக்கு அடிச்சுக்குவாங்க. நாளைக்கு சேர்ந்துக்குவாங்க. அதுலல்லாம் நாம மூக்கை
நுழைக்கக் கூடாது. பேசாம வா.” என்று ஒரே போடாய்ப் போட்டு அடக்கி விட்டார். அவர்.
***
வஸந்தாவின் பிடிவாதத்தால் கீழ்ப்பாக்கம் மனநல
மருத்துவ மனைக்குச் சென்றுவிட்டு, டாக்டர்
எதிரிலேயே வஸந்தாவையும், குழந்தையையும்
கேவலமாய்ப் பேசிவிட்டு, அவர்களை
சந்தியில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு வந்தான் ராஜேந்திரன்.
“அவளுக்குப் போக்கிடம் வேற ஏது? திரும்பி இங்கேதானே வரணும்... பாத்துக்கலாம்...
என்று கருவினான்.
வங்கியில் நகைத் திருட்டுப் பிரச்சனையில் வசமாக
மாட்டிக் கொண்டு விசாரணை வளையத்தில் சிக்குண்டு மன உளைச்சலில தவிக்கும்
ராஜேந்திரனுக்கு வீட்டிலும் நிம்மதி இல்லை.
கட்டப் பஞ்சாயத்து, டிபார்ட்மெண்டல் என்கொயரி, நட்பு வட்டத்தில் பேச்சு வார்த்தை, என்று ராஜேந்திரன் நாயாய்
அலைக்கழிக்கப்பட்டான்.
கட்டிய மனைவியிடம் மறைத்துவிட்டு, எப்படியாவது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.
என்ற நினைக்கிற ஆண்கள் கோழைகள்.
சுகத்திலும் துக்கத்திலும் பங்கு கொள்வேன்
என்று அக்னி சாட்சியாக ஏற்றுக் கொண்ட பெண், நிச்சயம் கணவனின் கஷ்ட காலங்களில் கூடவே நிற்பாள்
என்பதுதான் மனித குல வரலாறு.
***
இரவு வெகு நேரம் தூக்கம் வராமல் புரண்டுகொண்டு
இருந்தான் ராஜேந்திரன். வஸந்தா குழந்தையோடு வீடு திரும்பவே இல்லை என்பது பெருத்த
ஏமாற்றமாகவும், பெருத்த
அவமானமாகவும் இருந்தது.
அவளைக் கைப்பேசியில் தொடர்ப்பு கொள்வதற்கும்
ராஜேந்திரனின் தன்முனைப்பு இடம் தரவில்லை.
நகைத் திருட்டுப் பிரச்சனை வேறு திகிலூட்டியது.
எப்போது தூங்கினானோ தெரியாது. காலையில்
எழும்போது மிகவும் தாமதமாகிவிட்டது.
அதற்குப் பிறகு, புறப்பட்டு, ஓட்டலில் சாப்பிட்டு அலுவலகம் விரைந்தான்.
தாமதமாக வருகிறோம் என்கிற பரபரப்பில், அவசர அவசரமாக, அப்போதுதான் ராஜேந்திரன் வங்கிக்குள் நுழைந்தான்.
“ராஜேந்திரன்...”
“............................”
“ஏன் சோகமா இருக்கே? உன்னை பிரச்சனைலேர்ந்து வெளீல கொண்டு வர்றது
என் பொறுப்பு” என்றார் வங்கி மேலாளர் மலர்.
சமீபத்தில் மேலாளராக இந்தக் கிளையில்
பொறுப்பேற்றவர்.
வங்கி மேலாளர் மலருக்கு, ஆண் குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.
மகப்பேறு மற்றும் சம்பளமில்லா விடுப்பில் ஒரு
வருடம் இருந்தவள்.
வயிற்றில் குழந்தை எட்டு மாதமாக இருக்கும்போதே, கணவனை ஒரு விபத்தில் இழந்து விட்டவள் மலர்.
பதவு உயர்வு பெற்று. இந்தக் கிளைக்கு மாற்றலாகி
வந்தவள்.
டவுனில் தனி வீடு பார்த்துக் குடியிருக்கிறாள்.
தன் ஒரே மகனை, பேபி சிட்டர் போட்டு வளர்க்கிறாள்.
ஒற்றைப் பெற்றோராக குழந்தையை எப்படி வளர்ப்பது
என்பதே அவளுக்கு முன் நிற்கும் ஒரே சவால்.
மலர்க்கு, கோவையில், பெரிய பூர்வீக
வீடு இருக்கிறது.
ஒரு முறை நகைத் திருட்டு சம்பந்தமாக போலீஸ்
கெடுபிடிகள் தீவிரமான போது, ராஜேந்திரனை
அந்தக் கோவை வீட்டில்தான் தலை மறைவாக வைத்து, பெயில் வாங்கினாள் மலர்.
இந்த நகைத்திருட்டில் குற்றவாளி யார் என்பது
தெள்ளத் தெளிவாக மலருக்குத் தெரியும்.
சி சி டி வி கேமராக்களை அணுஅணுவாகச் சோதித்துப்
பார்த்துவிட்டாள்.
ஜோடிக்கப்பட்ட வழக்குகளை உடைப்பது மிகவும்
கடினம்.
அது போன்ற வழக்குகளை நியாயமான முறையில் தீர்க்க, காலம்தான் ஒரே ஆயுதம் என்பதை அறிந்தவள் மலர்.
மலர் எப்போதும் ராஜேந்திரனுக்கு ஆறுதலாய்
நேர்மறையாகத்தான் பேசுவாள்.
***
இப்போதெல்லாம்
பல வங்கிகளின் நடை முறைகள் இதுதான்.
ஆட்குறைப்புகளினால் ஏற்படும் பாதிப்பை
சரிகட்டுவதற்காக, ‘ஓஏ’வுக்கு தனி
மேசை நாற்காலி, கம்ப்யூட்டர்
எல்லாம் கொடுத்து, புது அக்கவுண்ட்
ஓப்பனிங், பாஸ் புத்தகம்
எண்ட்ரி போடுதல், அவ்வப்போது வரும்
மின்னஞ்சல்களை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்தல், இப்படியாக ஒரு குமாஸ்தாவைப் போல வேலை வாங்கி
விடுகிறார்கள் சாமர்த்தியமுள்ள மேனேஜர்கள்.
லாக்கர் திறந்து பார்க்க வருபவர்களுக்கு
அஸிஸ்டெண்ட் மானேஜர்தான் சென்று லாக்கர் திறந்து விட வேண்டும், அதையும் ஓ ஏவை விட்டே செய்யச் சொல்வது
இப்போதெல்லாம் நடைமுறை வழக்கமாகி விட்டது.
மேனேஜராக மலர் வந்தபிறகு, அவர் பல படி மேலே போய்விட்டாள்.
ஓ ஏ ராஜேந்திரனுக்கு கம்யூட்டரில் எக்ஸ் எல்
எப்படிப் பயன் படுத்துவது என்பதை, புதிதாக கிளைக்கு
வந்த அரிமா மூலம் கற்றுக் கொடுக்கச் செய்தாள்.
கம்யூட்டர் சகிதம் தனி மேசை நாற்காலிகள் போட்டு, ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ரேஞ்சுக்கு
உயர்த்தி விட்டபோது அது ராஜேந்திரனுக்குப் பெருமையாகத்தான் இருந்தது.
அது மட்டுமில்லை.
மலர், தன் பொறுப்புகள் எல்லாவற்றையும் உதவி மேலாளரின் தலையில்
கட்டிவிட்டார்.
எல்லா நாட்களும் பிஸியாக இருக்கும் நகைக்கடன்
பிரிவில், அப்ரைசரோடு
இணைந்து நகை லாக்கர் திறந்து அடகு பிடித்த நகைகளை வைப்பதும், மீட்க வருபவர்களுக்கு எடுத்துக் கொடுப்பதுமான, மிகவும் பிஸியான, ரிஸ்க்கான வேலையை துணை மேலாளரிடமிருந்து
பறித்து, ராஜேந்திரனிடம்
கொடுத்தாள்.
மேனேஜரை எதிர்த்துப் பேசத் திராணியின்றி அந்த
வேலையை ஏற்றுக் கொண்டான் ராஜேந்திரன்.
வேண்டாத வேலையைச் செய்தால் விளைவுகள்
மோசமாகத்தானே இருக்கும்.
பாபுலால் குப்தா, தான் அடகு வைத்த நகைகளில் நான்கு சவரன்
சங்கிலிகள் இருந்த மூன்று கவரைக் காணவில்லை என்று புகார் எழுப்ப, அந்தப் பழி ராஜேந்திரன் மீது விழுந்தது.
***
அத்தியாயம் 13
வயல்வெளியிலிருந்து வந்துவிட்டார் அப்பா.
வீட்டில் மகளையும் பேத்தியையும் கண்டதும்
முகத்தில் ஆனந்தம் ஒரு புறமும், அதிர்ச்சி மறு
புறமும் விரவியது.
“அறுத்துக் கட்டிக் கிட்டு வந்திருக்கா...”
அம்மாவின் குரல் ஆத்திரமாக வந்தது.
அப்பா ஏதும் கேள்வி கேட்கவில்லை.
“சாப்டியாம்மா?”
“சாப்ட்டேம்ப்பா”
“உன்னோட திட்டம்
என்ன?”
“குட்டிம்மாவை ஒரு
நல்ல நிலைக்கு உயர்த்தணும்ப்பா.”
“அதுக்கு என்ன
செய்யப் போறே?”
பாப்பாவுக்கு விவசாயத்துல ஆர்வம் இருக்கு.
விவசாயச் சூழல்ல வளர்க்கறதுதான் நல்லது’ என்று, மருதுவர் சொன்ன அனைத்தையும் அப்பாவிடம் சொல்லி முடித்தாள்
வஸந்தா.
ஓ கே .. அப்படியே செய்துடுவோம். டாக்டர் சொன்ன
‘சிறிய பேராசிரியர் குறைபாடு’ பற்றி கூகுள் செய்து பார்த்தா நிறைய விவரங்கள்
கிடைக்கும். ஆனா அதுபோல கூகுள் சொல்ற விஷயத்தை வெச்சிக்கிட்டு செய்யற எந்த
அணுகுமுறையும் வெற்றிகரமா அமையாதுங்கறது என்னோட கருத்து வஸந்தா.
“நானும் அதை ஒத்துக்கறேன்ப்பா.”
“அப்படின்னா ஒண்ணு
செய்யி. என் பெட்டீல இருக்கற உன்னோட ப்ளஸ் டூ டாகுமெண்ட்ஸ், பிஜி டிகிரி, மார்க் லிஸ்ட், டிசி எல்லாத்தையும் சரிபாத்து எடுத்துக்கோ, மெட்ராஸ் யுனிவர்சிடி வரைக்கும் போய், தொலை தூரக் கல்வீல எம் ஏ சைக்காலஜி கோர்ஸ்ல
ஸ்பாட் அட்மிஷன் போட்டுட்டு வந்துருவோம்.”
உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவள்
கண்களிலிருந்து நன்றிக் கண்ணீர் ஊற்றெடுத்தது.
“உங்களாலத்தான் இப்படியெல்லாம் யோசிக்க
முடியும்ப்ப “அ...ப்...பா...” என்று அவர் தோளில் வந்து சாய்ந்து கொண்டாள் வஸந்தா.
கோர்ஸ் சேர்ந்து படிச்சா, கான்ட்டாக்ட் செமினார் வகுப்புகள்ல, அடிப்படைலேர்ந்து பல விஷயங்களைச்
சொல்லித்தருவாங்க. நம்ம பாப்பாவோட நிலைமையையும் பேராசிரியர்கள்கிட்டே சொன்னா ரெமடி
சொல்லுவாங்க. கோர்ஸ் படிக்கறதுனால, அந்த ரெமடியை எப்படி அணுகணும்னும் நமக்குத் தெரியும்.
எல்லாத்தையும் உத்தேசிச்சித்தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்...”
அப்பாவின் அணுகுமுறையைக் கண்டு
பிரமித்துவிட்டாள் வஸந்தா.
***
‘டிகிரி படிக்கவேண்டும் என்று முடிவெடுத்தபின், ஏன் காலத்தைக் கடத்த வேண்டும்...’ என்று
உடனடியாக செயலில் இறங்கினர் வஸந்தாவும் அவள் அப்பாவும்.
“குழந்தையைப் பாத்துக்க. யுனிவர்சிடி வரைக்கும்
போயிட்டு வந்துர்றேன்.” என்றார் வஸந்தாவின் அப்பா.
வஸந்தாவை பேக் செய்து கணவன் வீட்டுக்கு
அனுப்பும் நோக்கத்தில் இருந்த அம்மாவிற்கு, அப்பாவின் முடிவு அதிர்ச்சி அளித்தது. அதே சமயம், ‘அவர் ஒரு முடிவெடுத்துவிட்டால் தெய்வமே
வந்தாலும் அதை மாற்ற முடியாது...’ என்பதை அனுபவத்தில் நன்கு அறிந்த அம்மா எதுவும்
எதிர்வினை புரியாமல் பேசாமல் இருந்து விட்டாள்.
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், சேப்பாக்கத்திற்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு, லோக்கல் ரயிலில் ஏறி, சேப்பாக்கம் இறங்கி, பல்கலைக் கழகத்தில் ஸ்பாட் அட்மிஷன் முடித்து, தொலை தூரக் கல்விப் பிரிவில் எம் ஏ சைக்காலஜி
மாணவி, என உறுதி
செய்யும் பல்கலைக் கழக இலச்சினையிட்ட அடையாள அட்டையும், முதல் பருவத்துக்கான ஐந்து
பாடப்புத்தகங்களையும் பெற்று, வீட்டுக்குத்
திரும்பும் வரை, அப்பாவும் மகளும், பலப் பல விஷயங்களைப் பேசினார்கள். அப்பாவின் அறிவார்ந்த பேச்சுக்களும், அனுபவப் பகிர்வுகளும் வஸந்தாவுக்கு அபரிமிதமான
நம்பிக்கையை ஏற்படுத்தியது.
நிறைய திட்டங்களைப் பற்றி விவாதித்தார்கள்.
வானத்தில் கோட்டை கட்டாமல், தங்கள் சக்திக்கு உட்பட்டு, தங்களால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைப்
பற்றிப் பேசி முடிவெடுத்தார்கள்.
***
“அழறது
எந்த விதத்துலயும் பிரச்சனைக்குத் தீர்வாகாது ராஜேந்திரா.” என்றாள் மேனேஜர் மலர்.
நகைத்
திருட்டுச் சம்பவத்துக்குப் அதை மறைப்பதற்காக வீட்டில் எப்படியெல்லாம் தாறுமாறாக
நடந்து கொண்டதையும், உச்ச பட்சமாக, முதல் நாள் மனைவி வஸந்தாவோடு மனநல
மருத்துவமனையில் ஏற்பட்ட மோசமான நிகழ்வுகளையும், அவள் மொத்தமாகத் தன்னை தலைமுழுகிவிட்டுச் சென்றதையும் கூறி
கண் கலங்கினான் ராஜேந்திரன்.
“ராஜேந்திரா, நீ நிரபராதினு எனக்குத் தெரியும்.
சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் உனக்கு எதிரா செயல்படறதுனால கொஞ்சம் நிதானமா அணுக
வேண்டியிருக்கு. எல்லாம் சரியாயிரும். கவலைப்படாதே...” என்று ஆறுதல் கூறியதோடு, போன் போட்டு உன் மனைவியோட பேசி அவளுக்கு
நிலைமையைப் புரிய வை.” என்றும் சொன்னாள் மலர்.
“ஹலோ
மிஸ்டர் ராஜேந்திரன். உங்களை மொத்தமா தலை முழுகிட்டு இங்கே என்னோடயே இருக்கற
முடிவுல வந்துட்ட வஸந்தா, உங்க கிட்டே பேச
விருப்பமில்லைனு உறுதியா சொல்லிட்டா. இனிமே போன் பண்ணி தொந்தரவு பண்ணாதீங்க.”
என்று நிதானமாகச் சொல்லிவிட்டு கட் செய்து விட்டார் வஸந்தாவின் அப்பா.
“மாப்ளே மாப்ளே...” என்று பாசத்தோடு பேசும் அவரே இந்த அளவுக்கு வெட்டிப்
பேசுகிறார் என்பதைப் யோசித்தபோது, இனி எவரிடமும்
பேசிப் பயனில்லை என்பதை முடிவு செய்து கொண்டான்.
வங்கித்
தலைமை நகைத் திருட்டு விசாரணையைத் தீவிரப் படுத்திய நிலையில், ராஜேந்திரனை தற்காலிகப் பதவி நீக்கம் செய்து
ஆணை பிறப்பிக்க உத்தரவிட, அதை உடைப்பதற்காக
மலர் தலைமை அலுவலகத்திற்குச் சென்று, பேசி, பதவி நீக்கம்
என்றில்லாமல், சம்பளமில்லா
விடுப்பில் அனுப்பினாள்.
வஸந்தா, குழந்தை இருவரும் இல்லாத வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை ராஜேந்திரனுக்கு. ஒரு முறை சிறுகுடிக்குப் போய் பார்த்துவிட்டு
வரலாமே என்று சென்றான்.
தெருவிலேயே
நிறுத்தித் திருப்பி அனுப்பினார் முன்னாள் மாமனார்.
தன்னுடைய
கடந்த காலத் தவறுக்குப் பிராயச்சித்தமாக தனித்து வாழத் தன்னைத் தயார் படுத்திக்
கொண்டான் ராஜேந்திரன்.
மலர், ராஜேந்திரனை குற்றச் சாட்டிலிருந்து வெளிக்
கொண்டு வர பிரம்மப் பிரயத்தனம் எடுத்தாள். பல முறை டெல்லி, கல்கத்தா என்று சேர்மேன் வரை பார்த்தாள்.
அவள் வெளியூர் செல்லும் நேரங்களிலெல்லாம்
ராஜேந்திரன்தான் மலர் வீட்டுக்கும், மலர் மகனுக்கும் காவல்.
வெறுமையில் இருந்த ராஜேந்திரனுக்கு, மலரின் மகனோடு இருப்பது ஒரு மன ஆறுதலைத் தந்தது.
***
“காலேஜ்ல படிச்ச நீங்க போயி நாத்து பறிக்க
நிக்கறது நல்லாவா இருக்கு...?” ஜோதி கேட்க,
“அதானே... நீங்க
நாத்து பறிக்கறதாவது. பேசாம பாப்பாவோட அந்த மரத்தடீல குந்துங்க அம்மணி” என்றாள்
வேணி.
“எல்லாரும் கேட்டுக்கங்க. என்று தொடங்கி, இந்த வயல் எங்க அப்பாவுக்குத்தான் சொந்தம்.
மொதலாளி மகளா நான் இங்கே வரல்லை. ஒரு லேபரா வந்திருக்கேன். புருசனோட ஒத்து வரலை.
நான் தனியா நின்னு குழந்தையை வளர்த்து ஆளாக்கறேன்னு சவாலோட இங்கே வந்துருக்கேன்.
எங்க அப்பா வயல்ல மட்டுமில்ல. ஊர்ல எங்கே நாத்து பறி, நடவு, களையெடுப்பு, அறுப்பு, போரடி னு எந்த
வேலையா இருந்தாலும் என்னையும் சேத்துக்கணும்னு உங்க எல்லாரையும் கேட்டுக்கறேன்.”
தெளிவாக அனைத்தையும் உடைத்துப் பேசினாள் வஸந்தா.
வஸந்தா சொல்ற மாதிரி, அவளையும் உங்களோட ஒருத்தரா சேத்துக்கங்க.”
என்று வழி மொழிந்தார் வஸந்தாவின் அப்பா.
அனைவரும் அதைப் புரிந்து கொண்டாலும், முதலாளியின் மகள் தங்களோடு சேர்ந்து வேலை
செய்வதை நினைத்து சற்றே கூச்சப் பட்டார்கள்.
“நாத்துப் பறிக்கு வந்தீகளா...
காத்து வாங்க வந்தீகளா...
சேத்துல இறங்கிடுவோம்...
நாத்துப் பறிச்சிடுவோம்...
என்று பலமாகப் பாடியபடி வஸந்தா முதலில் வந்து
வயலில் இறங்க, மற்ற
கூலியாட்களும் கூச்சம் தெளிந்து சேற்றில் இறங்கினார்கள்.
தன் சொந்த வயலிலேயே விவசாயக் கூலியாக இறங்கி
வேலை செய்யும் வஸந்தாவை எல்லோருமே நேசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
பாட்டும், குலவையுமாக வயலில் வேலை செய்யும்போது ஜனனி சந்தோஷமாக
சிரித்து விளையாடினாள்.
தாத்தா சின்னக் குழந்தைதானே என்று பார்க்காமல், ஜனனிக்கு விவசாயத்தைப் பற்றியெல்லாம் சீரியஸாக
சொன்னார்.
நாற்று பறி, நடவு, களை எடுத்தல், அறுப்பு, கட்டு கட்டுதல், கட்டு அடித்தல், தூற்றுதல், வைக்கோல் போர்
போடுதல், உழவு, பரம்படித்தல், வரப்பு வெட்டுதல் வருடக் கணக்கில் அனைத்து விவசாய
வேலைகளையும் பார்த்துப் பார்த்து வளர்ந்தாள் ஜனனி.
***
சைக்காலஜி படிப்பு ஒரு புறம் காண்ட்டாக்ட்
செமினார் வகுப்புகள், பிராக்டிகல்
வகுப்புகள், ரெக்கார்ட்
எழுதுவது, வைவா ஓசி என்கிற
நேர்முகத் தேர்வுகள் என போய் கொண்டிருக்க, நேசித்துப் படிக்கும் வஸந்தாவுக்கு நிறைய விஷயங்கள்
கிடைத்தன.
நூலகத்தில் குறிப்பெடுத்தலும், கூகுள் செய்து பார்ப்பதுமாக, ஆழ்ந்து படித்து அறிவை விரிவு செய்வதும், அகண்டமாக்குதலுமாக முன்னேறினாள் வஸந்தா.
உடலுழைப்பும், மூளை உழைப்பும் சமச்சீராக வளர்ந்தன
வஸந்தாவிற்கு. தன் வளர்ச்சியின் சாரத்தை ஜனனிக்குள் கடத்தினாள்.
நல்ல
அடிவாரம் போட்டதால் தொடக்கக் கல்வியை சிறப்பாகக் கடந்த ஜனனி பள்ளிக் கல்வியின்
போது, அறிவியல் கழகம்
நடத்திய கண்டுபிடிப்புகள் நிகழ்வில், ஊடு பயிர் பற்றி ஆய்வு செய்து, சமர்ப்பித்த கட்டுரை மாநில அளவில் தேர்வாகியது.
வானமே எல்லையாய் உயர்ந்து கொண்டே இருந்தாள்
ஜனனி.
***
வருடக் கணக்கில போராடி, உண்மையான குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்
தந்ததோடு ஒரு வழியாக ராஜேந்திரனின் மேல் இருந்த களங்கத்தையும் போக்கி, வங்கி நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்த சம்பள
அரியர் அனைத்தையும் பெற்றுத் தந்தும் விட்டாள்.
இந்த நிலையிலும் ஒரு முறை வஸந்தாவோடு தொலைப்
பேசியில் பேசிப் பார்த்தான் ராஜேந்திரன். இப்போதும் முன்னாள் மாமனாரேதான்
பேசினார். அவள் திட்டத்தில் ஏதும் மாற்றமில்லை என்பது உறுதியானது.
குடும்பத்திலும் உத்யோகத்திலும், நிறைய அவமானங்களைப் பெற்றுவிட்டதால் இதே
கிளையில் பணியாற்ற விரும்பமில்லாமல், மலர், ராஜேந்திரன்
இருவருமே கோயம்புத்தூர் கிளைக்கு மாற்றல் வாங்கிச் சென்றார்கள்.
தனியாக வீடு பிடிக்கும் வரை மலர் வீட்டிலேயே
தங்கிக் கொள்ளலாம் என்று எண்ணிய ராஜேந்திரனுக்கு அங்கேயே தொடர்ந்து தங்கி அவள்
மகனுக்கு ஒரு பாதுகாவலனாக இருக்குமாறு செய்தது விதி.
மலர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போக. அவள் மகனை
வளர்க்கும் பொறுப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான் ராஜேந்திரன்.
அத்தியாயம் 14
சிறுகுடி கிராமத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன்
தன் துவக்கக் கல்வியைத் தொடங்கிய ஜனனி, உலகம் போற்றும் கண்டுபிடிப்பை அர்பணித்த புகழ் பெற்ற
விஞ்ஞானியாக, அதே பள்ளி
வளாகத்துக்கு, இப்போது ராஜ
மரியாதையுடன் வருகிறாள்.
இந்த இருபது ஆண்டுகளில் ஜனனியின், தோற்றமும், ஆளுமையும், வாழ்க்கைத்
தரமும் உயர்ந்ததைப் போலவே, பள்ளியின் தோற்றமும், உட்கட்டமைப்புகளும் வெகுவாக மாறியிருந்தன.
அன்று ஓட்டுக் கட்டடத்தில் இயங்கிய பள்ளி, இப்போது கான்கிரீட் ஒட்டுக் கட்டடத்தில்
இயங்குகிறது.
அது மட்டுமா, ஜனனி படித்தபோது, ஓராசிரியர் பள்ளியாக இருந்த நிலை மாறி இப்போது நான்கு
ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியாக உயர்ந்திருக்கிறது.
பள்ளி முகப்பில், மரவட்டைமேல் இருப்பது போல, கருப்பும் சிகப்புமாகக் கோடுகள் போடப்பட்டு, கூராகச் சீவப்பட்ட நடராஜ் பென்சில் ஒன்றில், கூர் பக்கம் ஒரு சிறுமி, வலது கையில் புத்தகத்தோடு அமர்ந்திருக்க,
பென்சிலின் பின்புறம் ஒரு சிறுவன் வலது கையால்
தம்ஸ் அப் காட்டியபடி அமர்ந்து, சந்தோஷமாக
பென்சில் பயணம் செய்யும் சர்வ சிஷ்ய அபியான் பேனர், அனைவர்க்கும் கல்வி’ என்பதை அறிவித்துக் கொண்டு நின்றது.
இரண்டு நாட்களாகவே சிறுகுடி கிராமம்
பரபரப்பாகத்தான் இருக்கிறது.
அவ்வப்போது மாவட்ட ஆட்சியர், துணை மாவட்ட ஆட்சியர் , வட்டாட்சியர், சட்டமன்ற உறுப்பினர், மந்திரி என அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் அங்கே வந்து செல்வதால், தூய்மைப் பணியானது ஓயாமல் நிகழ்ந்து கொண்டேதான்
இருந்தது.
குளோரினை கூடையில் கொட்டி குறிப்பிட்ட
இடைவெளிகளில் தட்டி, போடப்பட்டிருந்த
குளோரின் கோலங்கள் சாலையின் இரு புறங்களிலும் பளிச்சிட்டன.
பள்ளி முகப்பிற்கு இருபது அடிகள் முன் குமரக்
கோவில் செல்லும் குறுக்குச் சாலை இருப்பதால், பள்ளி முகப்பிலேயே சாலை நடுவிலேயே விழா மேடை அமைக்க முடிவு
செய்யப்பட்டு, மேடை அமைப்புப்
பணிகள் துரித கதியில் நடை பெற்று வந்தன.
பள்ளி நிர்வாகம், ஊர் பிரமுகர்கள், கட்சிக்காரர்கள், தொழிலதிபர்கள், வணிகர் சங்கத்தினர், மகளிர் கழகம், மாவட்ட அறிவியல் கழகம் என ஒவ்வோர் அமைப்பும் தனித்தனியாகத்
தயாரித்த பெரிய பெரிய பேனர்கள் வரிசையாக, சாலையின் இரு புறமும் நின்று கவனத்தைக் கவர்ந்தன.
ஜனாதிபதி கையால் கோப்பை வாங்கும் ஜனனி;
ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்யும் ஜனனி;
பிரதமருடன் ஜனனி;
ஆளுநருடன் ஜனனி;
மாநில முதல்வருடன் ஜனனி;
என, பலதரப்பட்ட புகைப் படங்களை பின்னணியாக வைத்து விழா வளாகத்தை
அலங்கரித்தது ஜனனிக்கு மட்டுமில்லை. அந்த ஊருக்கே பெருமை சேர்த்தது.
சிறுகுடி கிராமத்தில் மட்டுமல்ல.
அருகாமை கிராமங்களில் இருந்தெல்லாம்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்து ஜனனியின் சாதனைகளையும், சிறுகுடி கிராமத்துக்கு ஜனனியால் கிடைத்த
பெருமையை எல்லாம் கூறினார்கள்.
“ஜனனி போல வாழ்க்கைல உயரணும்...”
“ஜனனி மாதிரி
பிறந்த ஊருக்குப் பெருமை சேர்க்கணும்...”
““ஜனனிய ரோல் மாடலா
எடுத்துக்க. சரியா?...”
“ஆடிசம்
குறைபாட்டால பாதிக்கப்பட்ட ஜனனியே இவ்ளோ சாதித்திச்சிருக்கும்போது, எந்தக் குறைபாடும் இல்லாத நீ எவ்ளோ
சாதிக்கலாம்..?.”
“சாதிக்கணும்கற
வெறி இருக்கணும். கவனத்தை ஏதாவது ஒரு துறைல குவிக்கணும். கவனச் சிதறல் அறவே
கூடாது. பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை...”
இப்படியாக, ஜனனி, வருங்காலக்
குழந்தைகளுக்கு உதாரணமாகவும், ரோல் மாடலாகவும்
ஆகிப்போனாள்.
ஊரெங்கும் ஜனனி ஜனனி என்பதே பேச்சு.
ஊரெங்கும் ஒட்டப்பட்ட வால் போஸ்டர்களில்
ஜனாதிபதியுடன் சிரித்தாள் ஜனனி.
***
சிறுகுடி கிராமத்தில், ஜனனியின் பாட்டி தாத்தா வீடு, திரு மண வீடு போலக் களைகட்டியிருந்தது.
பாட்டியும் தாத்தாவும் மகிழ்ச்சியில்
திளைத்தார்கள்.
“உங்க பேத்தியால ஊருக்கே பெருமை...” என்று
பாராட்டும்போதொல்லாம் உள்ளம் பூரித்தார்கள். புளகாங்கிதம் அடைந்தார்கள்.
வீட்டிற்கு வந்தவர்களை அன்பாக சிறப்பாக
வரவேற்று, விருந்து
உபசரித்தார்கள்.
தன் மகளை சான்றோர் எனக் கேட்ட தாயான
வசந்தாவிற்கு மகிழ்ச்சி எல்லைகடந்து விரவியது.
தேனீயைப் போல சுறுசுறுப்பாய், வந்த விருதாளிகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா, நீங்க உட்காருங்க, வேலை செய்யத்தான் நாங்க இருக்கமே...” என்று அவ்வப்போது
வந்து யாராவது சொல்லும்போது, மகளால் கிடைத்த
மதிப்பை நினைத்து மகிழ்ந்தாள்.
“ஜனனி இன்னும் அரை மணீல பயணியர் மாளிகைக்கு
வந்துருவாங்களாம். அவங்க வர்றதுக்கு முன்னால உங்களை அழைச்சிக்கிட்டுக் கொண்டு போய்
விடச் சொல்லி கலெக்டர் உத்தரவு.”
பளிச் எனச் சீருடை அணிந்த காரோட்டி வஸந்தாவின்
முன் வந்து நின்றான்.
***
“சென்னைலேர்ந்து கிளம்பிட்டாங்களா?”
“எத்தனை மணிக்கு
வர்றாங்க?”
“ஆன் தி வே.
இன்னும் ஒன் அவர்ல வந்துருவாங்களாம்...”
“வீட்டுக்கு
வந்துருவாங்களா நேரா...”
“நோ நோ டிராவலர்ஸ்
பங்களா இருக்கில்ல அதுலதான் தங்கவைக்கப் போறாங்களாம்.”
“ஏன்? வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வந்தா என்னவாம்...?” யாரோ வினவ,
“உறவினர்
நண்பர்கள்னு எல்லாருமே அவளைச் சுத்திக்கிட்டு டயர்டா ஆக்கிருவாங்க. பயணியர்
மாளிகைல தங்கினா, அவளைப் பார்க்க
யாரையும் அனுமதிக்காது பாதுகாப்பு போலீஸ். ஜனனி நல்லா ரெஸ்ட் எடுக்கலாம்.
அங்கேயிருந்து ஃப்ரஷ்ஷா விழா மேடைக்கு அழைச்சி வரலாமே... அதுக்குதான்...”
யாரோ பதிலளித்தார்கள்.
“சரிதான் சரிதான்...” என்று எவரோ
ஆமோதித்தார்கள்.
இப்படியாக ஜனனியின் சாதனைகள் பற்றி, ப்ரொக்ராம் பற்றி, விருது பெற்றது பற்றி, நடக்கப் போகும் விழா பற்றி எதையாவது
வெள்ளந்தியாக பேசிக் கொண்டிருந்தார்கள் ஜனங்கள்.
***
பயணியர் மாளிகை
கலெக்டர் உட்பட உயர் அதிகாரிகள் உலகளாவிய சாதனை
படைத்த வேளாண் விஞ்ஞானி ஜனனியை வரவேற்க பயணியர் மாளிகை வாயிலில் கூடினார்கள்.
கார் வந்து நின்றதும், டிரைவர் இறங்கி பின் கதவைத் திறக்க, ஜனனி இறங்கினாள்.
அம்மாவும், பாட்டியுமாக ஆரத்தி எடுத்தார்கள்.
பாட்டி ஆரத்தியில் இடது கை கட்டை விரலை முக்கி
ஜனனியின் நெற்றியில் திலகமிட்டாள்.
ஜனனியின் கூடவே வந்த மார்த்தாண்டம், ஜனனியின் அம்மா மற்றும் தாத்தா பாட்டியின் முன்
கை கூப்பி வணங்கினான்.
“ஜனனி, நான் பாண்டி வரைக்கும் போயிட்டு வந்துர்றேன்...” என்று கூற, மார்த்தாண்டம் தன் வளர்ப்புத் தந்தையை
விழாவுக்கு அழைத்து வரப் போகும் திட்டத்தை முன்பே அறிந்தவளாதலால் “வாங்க...” என்று
விடை கொடுத்தாள்.
மார்த்தாண்டம் சார். விழா தொடங்க இன்னும்
ரெண்டு மணி நேரம்தான் இருக்கு. ஜனனிக்கு எல்லாமே நீங்கதான். நீங்க வர ஏதாவது
காரணத்தால லேட் ஆயிட்டா, எங்க
எல்லாருக்குமே மனசு கஷ்டமாயிரும். நீங்க இங்கே இருங்க. நாங்க யாராவது போய்
அழைச்சிக்கிட்டு வரோம். அட்ரஸ் மட்டும் தாங்க போதும்.” என்றார் ஜனனியின் தாத்தா.
“பயப்படாதீங்க. ஒரு மணி நேரத்துல நான்
திரும்பிருவேன்...” என்று சொல்லிவிட்டு, வேறு எவரேனும் ஏதாவது கருத்து சொல்வதற்கு வாய்ப்பே தராமல்
இடத்தைக் காலி செய்தான் மார்த்தாண்டம்.
“விழா தொடங்க இன்னும் இரண்டே மணி நேரம்தான்
இருக்கு. ஜனனியை யாரும் தொந்தரவு பண்ணாம தனியே விடுங்க. கொஞ்சம் ரெஸ்ட்
எடுத்துக்கிட்டு, விழாவுக்கு அவங்க
தன்னை தயார் பண்ணிக்கணும்.” என்று சொல்லி ஊடகவியலாளர்கள் உட்பட யாரையுமே உள்ளே
விடாமல் தடுத்து திருப்பி அனுப்பிவிட்டார்கள் காவலர்கள்.
தலைமை தாங்க வந்திருக்கும் ம்ருணாளிணி, மரியாதை நிமித்தம், பயணியர் மாளிகை வந்து ஜனனியை சந்தித்தாள்.
பார்த்தவுடன் ம்ருணாளிணியை அடையாளம்
தெரியவில்லை ஜனனிக்கு. அவள் தோற்றத்தில் அவ்வளவு மாற்றங்கள்.
‘ம்ருணாளியின் கொள்ளை அழகு என்னவாயிற்று?;
எப்படி அந்த அழகு கொள்ளை போயிற்று?’ ஜனனியின் கண்களில் கேள்விக் கனைகள் தொக்கி
நின்றதைப் பார்த்தாள் ம்ருணா.
ஜனனியின் இரண்டு கைகளையும் பற்றினாள்
ம்ருணாளிணி, “என்னை
மன்னிச்சேன்னு சொல்லு ஜனனி.” என்று அரற்றினாள்.
“நான் எதுக்கு உன்னை மன்னிக்கணும். பிஜி
படிக்கும்போது நடந்ததையெல்லாம் இன்னும் நினப்புல வெச்சிக்கிட்டா இருப்பாங்க.
ரிலாக்ஸ் ம்ருணா.” என்று தேற்றினாள் ஜனனி.
“உன்னோட ப்ராஜக்ட்டை திருடப் போய், என் காதலையும் பறி கொடுத்தேன். அப்பவும் நான்
திருந்தலே. திருடின கை நிக்காதுனு சொல்வாங்கல்ல, ரிசர்ச் இன்ஸிடியூட்ல நான் கைடா இருந்தபோது ஒரு சிலரோட
கண்டுபிடிப்புகளையும் திருடி வித்துருக்கேன். அப்படி வித்தப்போ ரெட் ஹாண்டடா
மாட்டினதுக்குப் பிறகு, என்னோட கைடன்ஸ்
கேரியரை ப்ஃரீஸ் பண்ணிட்டாங்க; மனிதாபிமான
அடிப்படைல பதவியை பறிக்காம விட்டாங்க;
“............”
“நான் செய்த
பாவங்களுக்கு எனக்கு கிடைச்ச பரிசுதான் இந்த முடக்கு வாதம்.” ருமாடிக் அட்டாக்
வந்து மடக்க முடியாது விரைத்து நின்ற கை விரல்களைக் காட்டியபடியே பேசினாள்.
“நான் பார்க்காத டாக்டரில்லே, செய்யாத வைத்தியமில்லே. யுனானி ட்ரீட்மெண்ட்ல
மருந்து ஒத்துக்காம ஸ்கின் ரப்சர் ஆயிடுச்சு. அதான் இப்படி தோல் சுருங்கி...”
“..................”
இதெற்கெல்லாம் என்ன பதில் சொல்வது எனத் தெரியாத ஜனனி
அமைதியாக இருந்தாள்.
“சீனியாரிட்டில ரிசர்ச் இன்ஸ்டிடியூட்ல உயர்
பதவீல இப்போ இருக்கேன்கறதுனால உன்னை ஹானர் பண்ண எனக்கு சான்ஸ் கொடுத்திருக்காங்க.
அதே சமயம், உன்னை ஹானர் பண்ற
தகுதி எனக்கு இருக்கா ஜனனி?” உடைந்து அழுதாள்.
கை கூப்பித் தொழுதாள்.
அவளின் உப்புக் கடல் பொங்கிக் கரை கடந்தது.
தன் நெஞ்சோடு மிருணாளிணியை அணைத்துக் கொண்டு
ஆறுதல் கூறித் தேற்றினாள் ஜனனி.
அத்தியாயம் 15
மன்னித்தல் மனித குணம்.
இந்த மண் எப்போதும் மன்னித்தலுக்கே முன்னுரிமை
தருகிறது. மன்னிப்பதற்கு மனசு மட்டும் இருந்தால் போதும், பெரிதாக ஞானமெல்லாம் தேவையில்லை.
இந்த மண்ணின் பிரதிநிதியான ஜனனி அனைத்தையும்
மன்னித்தாள்.
அழுக்குகளைத் துடைத்தெறிந்ததும் பளிச்சிடும்
கண்ணாடி போல இறுக்கமான சூழல் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்தது.
இருவரும் முகம் கழுவி, மேக்கப் செய்துகொண்டார்கள்.
கல்லூரித் தோழிகளாய், மலரும் நினைவுளைப் பேசிக் கொண்டிருந்த
நேரத்தில் ஜனனியின் அம்மா வஸந்தா, கதவைத் தட்டி
சத்தப்படுத்திவிட்டு, உள்ளே வந்தாள்.
அம்மாவிடம் தன் அருகே இருந்த, வகுப்புத் தோழியும் இன்றைய விழாத் தலைவருமான
மூத்த விஞ்ஞானி ம்ருணாளிணியை அறிமுகப்படுத்தினாள் ஜனனி.
தன் கதையை ஒன்றுவிடாமல் ஜனனியின் அம்மாவிடமும்
கூறினாள் ம்ருணாளிணி.
மார்த்தாண்டம் ம்ருணாளிணியின் பழைய காதலன்
என்பதையும், ஜனனிக்கு
தீங்கிழைக்க நினைத்ததால் தன் காதலையே தியாகம் செய்தவன் என்பதையெல்லாம் அறிந்தபோது
நெகிழ்ந்துபோனாள் வஸந்தா.
***
“இன்னும் விழா ஆரம்பிக்க ஒரு மணி நேரம்தான்
இருக்கு. நாம இப்போ புறப்பட்டு கிராமத்துல உங்க தாத்தா பாட்டி வீட்டுக்குப் போய்
அரைமணி நேரம் தங்கிட்டு, பிறகு
அங்கிருந்து விழா வளாகத்துக்குப் போலாம்னு ப்ரொக்ராம் பண்ணியிருக்கேன் ஜனனி.”
ம்ருணாளிணி சொல்லிக் கொண்டே இருக்க, ஜனனி முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு ஏதோ
யோசனையோடு இருந்தாள்.
“ஜனனி ஏன் திடீர்னு மூட் அவுட் ஆயிட்டே...?”
“மார்த்தாண்டம்
ஒரு மணி நேரத்துல வந்துருவேன்னு சொல்லிட்டுப் போனாரு. இன்னும் வரல்லையேனு கவலைப்
படறா ஜனனி.” என்று அவள் தாயார் வஸந்தா விளக்கம் தந்தாள்.
“மாரு எங்கேயாவது டிராஃபிக்ல மாட்டியிருப்பார்
ஜனனி.” ஒரு ஃப்ளோவில் சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள் ம்ருணாளிணி.
“மிஸ்டர் மார்த்தாண்டம் விரைவா வந்துடுவார்.
கவலைப் படாதே.” என்று தேற்றினாள்.
“மார்த்தாண்டத்துக்கு உறவுனு இருக்கறது அவரோட
வளர்ப்புத் தந்தை மட்டும்தானாம். கண்பார்வை இல்லாததனால, ஒரு முதியோர் இல்லத்துலதான் அவரை விட்டு
வெச்சிருக்கேன்னு ஒரு முறை சொல்லியிருக்கார். அவர் கதை ரொம்ப பேதடிக்...” என்றாள்
ம்ருணாளிணி
“அப்படியா? அவர் எதையும் காட்டிக்கிட்டதே கிடையாதே...”
“என்னை
காதலிச்சப்போ, என்கிட்டே
சொல்லியிருக்கார்.”
“அவருக்கு அப்பா
அம்மா இல்லையா? ஏன்?”
அம்மா வயித்துல ஆறு மாசக் குழந்தையா
மார்த்தாண்டம் இருக்கும்போதே, அப்பா ஹார்ட்
அட்டாக்ல இறந்துட்டாராம். “
அடப்பாவமே...
“அம்மா?”
அவங்களும் போய் சேர்ந்துட்டாங்களாம். அவங்க
அம்மா அதிகாரியா இருந்தப்போ எல்லாருக்கும் நிறைய உதவி செய்வாங்களாம். அப்படி
அவங்களால பயனடைஞ்ச ஒருத்தர்தான், நன்றிக் கடனா
இவரை வளர்த்தாங்களாம்.”
நம்பல்லாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துல பி ஜி
படிக்கற சமயத்துலதான் அவருக்கு டயாப்டீஸ் அதிகமாகி, குளூகோமா லெவல் ஏறி கண் பார்வை பாதிச்சி, முழுக்க பார்வை போயிருச்சாம்;
பார்வை போன பின்னால, ஆளு போட்டு வீட்லயே பாத்துக்கச் சொல்றேன்னு
சொன்னப்போ, அதெல்லாம்
வேண்டாம் என்னை முதியோர் ஹாஸ்டல்ல அவரை விட்டுருனு சொல்லியிருக்காரு.”
“............”
கவலைப் படாதே ஜனனி விரைவா அழைச்சிக்கிட்டு
வந்துருவார் கவலைப்படாதே.” என்று தேற்றினாள் ம்ருணாளிணி.
‘வாழ்க்கையில் இத்தனை இன்னல்களையும் கடந்து
வந்தபோதிலும், எதையும்
வெளிக்காட்டிக் கொள்ளாமல், தனக்கு ஒரு காட்
ஃபாதர் மாதிரியல்லவா இருந்திருக்கிறார் மார்த்தாண்டம்...’ என்று ஜனனி எண்ணிபோது
அவள் கண்கள் குளமாயின.
***
‘மார்த்தாண்டம் எப்போது வருவார்’ என்ற
எதிர்பார்ப்பைத் தவிர வேறு ஒரு சிந்தனையும் இல்லை இப்போது ஜனனிக்கு.
மாத்த்தாண்டம் வந்த பிறகுதான் இங்கிருந்து
கிளம்ப வேண்டும் என்று ஜனனி உறுதியாகச் சொல்லிவிட்டதால், பாட்டி தாத்தாவை இங்கே வரச் சொல்லிவிட்டாள்
ம்ருணாளிணி.
பாட்டியும் தாத்தாவும் விடுதிக்கு வந்தனர்.
ஜனனியை ஆரத் தழுவி முத்தமிட்டு அன்பைச்
சொறிந்தாள் பாட்டி.
உச்சந்தலையில் கை வைத்து தன் உள்ளங்கைக்கு
முத்தமிட்டு தன் பாசத்தைப் பொழிந்தார் தாத்தா.
மார்த்தாண்டம் அப்போதுதான் உள்ளே நுழைந்தார்.
அதைக் கண்டதும்தான் ஜனனிக்கு நிம்மதியே வந்தது.
“அப்பா எங்கே?” கேட்டாள் ஜனனி
“அப்பா கார்ல
இருக்காரு. நேரமாச்சு சீக்கிரம் கிளம்பணும்... விழா மேடைல போய் பார்த்துக்கலாம்.
கிளம்புங்க” என்றான் மார்த்தாண்டம்.
“உள்ளே அழைச்சிக்கிட்டு வாங்க தம்பி. நாங்களும்
அவரைப் பார்க்கணுமில்ல.”
ஜனனியின் பாட்டி, தாத்தா, அம்மா அனைவரும் ஒன்றாய்க் கேட்க, மறுக்க முடியவில்லை மார்த்தாண்டத்தால்.
நீங்கதான் அவரைப் பார்க்கலாம். அவரால் உங்களைப்
பார்க்க முடியாது. நீங்க யாரும் இங்கே இருக்கறதாக் காட்டிக்காம இருக்கறதா இருந்தா
அழைச்சிக் கிட்டு வரேன்...”
“சரி. நாங்க அமைதி
காக்கறோம். அழைச்சிட்டு வாங்க என்றார்கள் அனைவருமே.”
***
பார்வையற்றவர்க்கான ஊன்று கோலை தரையில் தட்டிக்
கொண்டே வர மார்த்தாண்டம் அவரை உள்ளே அழைத்து வந்தான்.
வஸந்தா, அவளின் பெற்றோர்கள் மூவரும் விரித்த கண்களை மூடவில்லை.
அவரையே பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
வாய் மூடி, பேச வேண்டாம் என்று ஜாடை காட்டினான் மார்த்தாண்டம்.
பாட்டி தாத்தா அம்மா மூவரும் ஏன் இப்படி
உரைந்து நின்றுவிட்டார்கள் என்பதற்குக் காரணம் ஏதும் தெரியவில்லை ஜனனிக்கு.
ஜனனி தனக்குப் பின்னால் மார்த்தாண்டத்தைப்
பார்க்கத் திராணியற்று தலை குனிந்து மறைந்து நின்ற ம்ருணாளிணியை முன்னால் இழுக்க, எதிர் பாராமல் அவளை அங்கே பார்த்த
மார்த்தாண்டம் அதிர்ந்தான்.
கண் பார்வையற்ற நிலையில் அருகில் வந்தவரின்
கைகளைப் பற்றிக் கொண்டாள் ஜனனி. பற்றிய கைகளை விடுவித்து தன் கைகளால் அவள் கைகளை
இறுக்கிக் கொண்டபின்...
“ஜனனி, ‘இந்தப் பயித்தியத்தை வெச்சி என்னால மாரடிக்க முடியாது”ங்கற
வார்த்தையை நான் சொல்லியிருக்கவே கூடாது. என் போதாத காலம் என் வாயில அது போல
வந்துடுச்சு;
உங்க அம்மா. உத்தமி. எனக்காக எத்தனையெத்தனையோ
விட்டுக் கொடுத்தவங்க. கடைசியா அவங்கள இழந்துட்டு நின்னப்போதான், நான் வேலை பார்த்த பாங்க்ல வேலை மேனாஜரா இருந்த
மலர் மேடம் எனக்கு அடைக்கலம் கொடுத்தாங்க.
நடுநடுவே இரண்டு மூன்று தரம் உன் அம்மாவுக்கு
தூது விட்டப்பவும் கண்டிப்பா முறிஞ்சி போச்சுன்னு தீர்மானமாச் சொல்லிட்டாங்க.
மலர் மேடம் ஹார்ட் அட்டாக்ல திடீர்னு இறந்த
பிறகு, மார்த்தாண்டத்தை
வளர்க்கறதையே என் முழு நேர வேலையா எடுத்துக் கிட்டேன்.
ஆராய்ச்சி மாணவனா இருந்தப்ப உன்னைப் பத்திச்
சொன்னதும், நான் நடந்த
எல்லாத்தையும் அவன் கிட்டே சொன்னேன்.”
பார்வையற்ற அவர் கண்களிலிருந்து கண்ணீர்
வழிந்தது
***
கூடப் பிறக்காத அண்ணனாக இத்தனை நாள் தன்னை
கண்ணின் இமைபோலக் காத்த மார்த்தாண்டத்தை அருகில் அழைத்து அவன் கையை தன் கையால்
எடுத்தாள் ஜனனி.
அருகில் நின்ற ம்ருணாளிணியின் கையை இன்னொரு
கையால் எடுத்து இருவரின் கைகளையும் இணைத்தாள்.
எத்தனை ஆண்டுகள் ஆனால்தான் என்ன? எப்படிப் பட்ட பிரச்சனைகள் வந்தால்தான் என்ன? உண்மைக் காதலுக்கு அழிவுதான் ஏது?
அம்மா, என்னைப் பெற்றெடுத்த தாய் பெயர் மலர். உங்க கணவர் ஒரு பெரிய
கேஸ்ல மாட்டின பிறகு அந்த மன உளைச்சல்லே, உங்க கிட்டே ரொம்பக் கேவலமா நடந்துகிட்டதையும், ஆஸ்பத்திரீல உங்களை நிரந்தரமாப் பிரிய நேர்ந்த
அந்த நாளையும் சம்பவங்களையும், இதுவரை எத்தனையோ
ஆயிரம் முறை சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டிருக்காங்கம்மா...” என்று சொல்லி
வஸந்தாவின் கைகளைப் பற்றினான்.
இவரையும் என்அம்மாவையும் இணைச்சி தப்பாப்
பேசினவங்களையெல்லாம் பத்தி சிறிதும் கவலைப்படாம, பெரும் முயற்சி பண்ணி இவரை அந்த ஜோடிக்கப்பட்ட கேஸ்லேர்ந்து
விடுவிச்சி நிரபராதினு வெளிக் கொண்டு வந்த என் அம்மாவுக்கு விசுவாசமா, என்னை இவருதான் உயர்வா வளர்த்தவர்ம்மா.”
மார்த்தாண்டத்தின் கண்கள் பனித்தன.
மாப்ளே... என்று மாமனாரும் மாமியாரும்
உணர்ச்சிவசப்பட்டு முழங்க, ராஜேந்திரனின்
கையை மார்த்தாண்டம் எடுக்க, வஸந்தாவின் கையை
ம்ருணாளிணி எடுத்துத்தர, இருவரும்
சேர்ந்து அவர்களை சேர்த்து வைத்தார்கள்.
“விழாவுக்கு நேரமாச்சு கிளம்புங்க...”
விழாக் குழுத் தலைவர் வந்து பரபரப்பாய்க் கூற, அஇன்னோவாவின் முன்புறம் ஓட்டுநர் இருக்கையில்
மார்த்தாண்டம் அமர,
“ம் அவரு
பக்கத்துல போயி உட்காரு...” என்று ஜனனி உட்பட அனைவரும் ம்ருணாளிணியைப் பிடித்துத்
தள்ள அங்கே மகிழ்ச்சி சிரிப்பலையாக எழுந்தது.
பின் இருக்கையில் தாத்தாவையும் பாட்டியையும்
ஏற்றி விட்டாள் ஜனனி,
நடு இருக்கையில் நடுவில் அமர்ந்து கொண்ட ஜனனி, வலதுபுறம் அப்பாவை ஏற்றிக் கொண்டாள். அம்மா
இந்தப் பக்கம் வந்து உட்காருங்க...” என்றாள்.
பிரிந்த எல்லோரும் இணைந்து ஒரே காரில் பயணித்து, விழா மேடைக்கு முன் வந்து நின்றபோது, உலகளாவிய விருதினை விட அதிக மகிழ்ச்சியில்
திளைத்தாள் ஜனனி.
உச்ச கட்ட மகிழ்ச்சியில் ஜனனியின்
கண்களிலிருந்து, உப்புக் கடல்
பொங்கிக் கன்னத்தில் வழிந்தது...
இசைக் கடல் வேலூர் ராம்குமார் எழுதி இசை அமைத்த
‘ஜனனீ ஜெயம் நீ...’ எனும் பாடல் மேடையில் ஒலிக்க, மீடியாக்களின் நேரடி ஒளிபரப்பில் உலகெங்கும் காற்றோடு
கலந்து ஒலித்துக் கொண்டிருந்தது...
*********
ஜூனியர் தேஜ் அவர்களது 'ஜனனி..ஜெயம் நீ..' நாவலை படித்து முடித்தேன்.ஆடிசம் குறைபாட்டால் பிறந்த நாயகி,எப்படி விவசாயத் துறை விஞ்ஞானியாகி சாதித்தாள்.என்ற ஒன்லைன் கருவை அழகாகவும்,அழுத்தமாகவும் பதிவு செய்த விதம் அருமை.ஒரு குழந்தையின் முன்னேற்றத்துக்கு காரணம்,பெற்றோர்கள்தான் என்பதை ஜனனியின் தாய் வசந்தா,தாத்தா-பாட்டி கேரக்டர் மூலம் அழுத்தமாக கூறியவிதம் அருமை.ஜனனியின் குறைபாடான,'லிட்டில் ப்ரொபஸர் சிண்ட்ரோம்' பற்றிய ப்ளஸ்-மைனஸ் தகவல்களை மனநல மருத்துவர் நவீனன் விளக்கியவிதம் ரசிக்கும்படியாக இருந்தது.டாக்டர் மார்த்தாண்டம்-மிருணாளினி காதல்,ஜனனிக்காக அவர் செய்யும் நன்மைகள்,ஆணாதிக்க கர்வம் கொண்ட ராஜேந்திரன் கேரக்டர்,தாத்தா-பாட்டி கேரக்டர் என கதை முழுவதும் நிறைந்திருந்தாலும்,எனக்கு பிடித்த கேரக்டர் வசந்தாவின் கேரக்டர்தான்.போர்க்குணம் கொண்ட அவரது கேரக்டர் சிறப்பாகயிருந்தது.க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராத திருப்பம்.நாவல் முழுவதும் தங்களின் வர்ணனைகள்,புதிய விஷயங்களை மிகவும் ரசித்தேன்.முடிவில் எனது பெயரை குறிப்பிட்டு கௌரவித்தமைக்கு நன்றி சார்.இதுபோல,வாழ்வியல் கலந்து பெண்மையை போற்றும் படைப்புகள் பல படைத்திட வாழ்த்துகிறேன் சார்!





ஜனனி ஜெயம் நீ மக்கள் மனதை ஈர்த்த கதை
ReplyDelete